முற்பகல் செயின்..23
By N Krishnamurthy
ஆதித்யா
"அதே திருவாசகத்திலிருந்து மற்றொரு பாடலை நான் சொல்லி விளக்குவேன்" என்று
என்ற பாடலை சொல்லி சிறிய விளக்கம் கொடுத்ததும் திகைத்துப்போன கூட்டம் அடுத்தவினாடி கரகோஷம் எழுப்பியது.
'செம்மையே ஆய சிவபதம்' பற்றி அவன் விளக்கிய விதம் அங்கிருந்தவர்களை கவர்ந்தது.
தேன்மொழி தான் சொன்ன பிடித்தப்பத்திலிருந்து இன்னொரு பாடலை ஆதித்யா சொன்னதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தாள்.
பிறகு அந்தக் குழுவில் இருந்த குணசேகரன் நன்றி நவில பின்னர் அடுத்த கூட்டம் எப்பொழுது என்று நாள் குறிக்கப்பட்டு முடிவடைந்தது.
எல்லோரும் மதிய உணவை அருந்த டைனிங் டேபிளுக்கு சென்றார்கள். அப்பொழுது ஆதித்யா தேன்மொழியை நமச்சிவாயத்திற்கும், கோமதிக்கும் அறிமுகப்படுத்தினான். நமச்சிவாயம் அவளை பார்த்து "ரொம்ப நல்லா பேசறம்மா. தமிழ் இவ்வளவு சரளமா வரதுக்கு என்ன காரணம்" என்று கேட்டார். அதற்கு அவள் "எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி ஜில்லா. எங்க அப்பா சுப்பிரமணிய பிள்ளை தமிழ் வாத்தியார். எங்கள் குடும்பத்தில் என்னையும் சேர்த்து நாங்க ஐந்து குழந்தைகள். என் அண்ணன் சந்திரசேகரன் திருநெல்வேலியில் ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். எனக்கு அடுத்த இரு தங்கைகள், கடைசியில் ஒரு தம்பி.
எங்கள் தந்தை எங்கள் எல்லோருக்கும் சிறுவயதில் இருந்தே தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமானவர் பாடல்கள் போன்றவற்றில் பயிற்சி கொடுத்திருக்கிறார். நான் வேலை காரணமாக சென்னை வந்த போதிலும் தினமும் காலையில் அந்த பாடல்களை சொல்லி வருவதால் அவை என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டன. இதனாலே என்னால் சுலபமாக தமிழும் பேச முடிகிறது" என்ற நீண்ட விளக்கம் கொடுத்தாள். தான் கேட்காமலேயே தன் குடும்பத்தை பற்றி கூறிய அவளது சாமார்த்தியத்தை நமச்சிவாயம் ரசித்தார்.
பின்ன கோமதி அவளிடம் " உன் அண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சாம்மா" என்று கேட்டாள். அதற்கு தேன்மொழி" இல்ல பாட்டி. எங்க வீட்ல இன்னும் யாருக்கும் கல்யாணம் ஆகல. எனக்கு திருமணம் ஆன பின்னர் தான், தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அண்ணன் சொல்கிறார்" என்று கூறினாள்.
" உனக்கு என்னம்மா வயதாகிறது" என்று கேட்டாள் கோமதி. அவளது கேள்வியின் உள்ள அர்த்தத்தை புரிந்து கொண்ட தேன்மொழி கன்னம் சிவக்க " இன்னும் ஒரு மாதம் போனால் எனக்கு 21 வயது முடிகிறது" என்றாள். மனதிற்குள் கணக்கு போட்டு பார்த்த கோமதி
" பரவாயில்லை. ஆதித்யாவுக்கும் இவளுக்கும் மூன்று வயது வரை வித்தியாசம் இருக்கிறது" என்று நினைத்துக் கொண்டாள்.
பின்பு எல்லோரும் உணவருந்த தலைப்பட்டார்கள் உணவு அருந்தி முடிந்ததும், நமச்சிவாயம் தேன்மொழியை பார்த்து " எங்க வீட்டுக்கு ஒரு நாள் வந்துட்டு போம்மா" என்று கூறினார். " சரி தாத்தா. நிச்சயம் வருகிறேன்" என்றாள் தேன்மொழி. உடனே ஆதித்யா தேன்மொழியிடம் " அந்த ஒரு நாள் ஏன் நாளையாக இருக்கக் கூடாது"என்று கேட்டான். அதற்கு தேன்மொழி அவனிடம் "நாளை எனக்கு ஒண்ணும் தலை போற வேலை இல்லை. உங்களுக்கு பரவாயில்லை என்றால் நாளைக்கே நான் வருகிறேன்" என்று கூறினாள். அதற்கு கோமதி "ரொம்ப நல்லதா போச்சும்மா. நாளைக்கு குளிச்சிட்டு நேர எங்க வீட்டுக்கு வந்துடு. எங்க வீட்ல காலையில டிபன், மத்தியானம் சாப்பாடு எல்லாம் முடிச்சுட்டு சாயங்காலம் நீ ஒன்னுடைய ஹாஸ்டலுக்கே திரும்பி போய்விடலாம்" என்று கூறினாள். " சரிங்க பாட்டி .நான் அப்படியே செய்கிறேன்" என்று சொன்னாள் தேன்மொழி. பின்பு அவள் அவர்களிடம் இருந்து விடை பெற்று ஹாஸ்டலுக்கு செல்ல ஆட்டோ பிடித்தாள். ஆதித்யா அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு, ஒரு டாக்ஸி பிடித்து, வீடு போய் சேர்ந்தான்.
No comments:
Post a Comment