Friday, January 5, 2024

திருச்சி கதைகள்-6

 திருச்சி கதைகள்-6

(அல்லூர் அக்ரஹாரம்)

திருச்சி ஜீயபுரம் பகுதி மற்றும் சுத்துப்பட்டு ஊர்களிலிருந்து புனித சூசையப்பர் (St Joseph's) பள்ளிக்கு சக மாணவர்கள் தினமும் டிரெயினிலோ  பஸ்ஸிலோ வருவார்கள்.. ‘ஏன்டா லேட்டு?’ என ஹெட் மாஸ்டர் கேட்டு முடிக்கும் முன் பஸ்ஸு/ட்ரெய்ன் லேட்டு ஃபாதர்’ டக்கென பதில் வரும். திருச்சியின் சிறப்பு என்னவென்றால் நகரிலிருந்து (சத்திரம் பஸ் ஸ்டாண்டை விட்டு) 2,3 கிலோ மீட்டரை தாண்டியதும் முழுக்க கிராமிய மணம் தான். 

ஜீயபுரம், முத்தரசனல்லூர், அல்லூர், உத்தமர்கோவில், கம்பரசம்பேட்டை, வாளாடி, லால்குடி, பேட்டவாய்தலை (அம்மன் கோவில்), குணசீலம்(பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்), சமயபுரம், மன்னச்சநல்லூர், திருப்பறாய்த்துரை என திருச்சியை அடுத்த அழகிய ஊர்கள். கரி மற்றும் புகையை கக்கியபடி ஈனசுரத்தில் உய்ய்ய்யென மூச்சிரைக்க ஒரொரு ஸ்டேஷனிலும் டிரெயின் நிற்கும். ஃபோர்ட் மற்றும் பாலக்கரை தாண்டி ஜங்ஷன் நெருங்கும்போது இஞ்சின் டிரைவரும் கார்டும் மட்டுமே டிரெயினில் இருப்பார்கள். 

சின்ன வயதில் அம்மா ..'குறும்பு செஞ்சேன்னா திருப்பளாய்த்தொரை ஹாஸ்டல்ல விட்டுடுவோம்.. அங்க உனக்கு மொட்ட அடிப்பாங்க.. கக்கூஸ நீ தான் கழுவனும்.. காலைல நாலு மணிக்கு எழுப்புவாங்க' போன்ற மிரட்டல்கள் நினைவுக்கு வந்தது...

மாட்டுச்சாணம், செம்மறியாட்டு  வாசனையுடன் அழகான கிராமங்கள். பச்சை பசேலென வயல்கள், ஒருபுறம் நம் கூடவே பயணிக்கும் காவிரி அல்லது கொள்ளிடம்..பஸ்ஸிலிருந்து திரும்பி பார்த்தால் எப்போதும் தெரியும் மலைக்கோட்டை, மறுபுறம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்..

பஸ்ஸில் பயணிக்கும்போது ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நாம் பார்க்கும் இளநீர், நுங்கு விற்பவர்கள், ரோட்டை ஒட்டிய சிறிய குடிசை வீடுகள், வீட்டு வாசலில் கயிற்று கட்டிலில் பெருசுகள், பக்கத்தில் கட்டப்பட்ட சிறிய ஆடுகள், ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாட்டுடன் பாய்லர் டீ, போண்டா வடை டீக்கடைகள், அருகே பரோட்டா ஸ்டால், நடுநடுவே wine ஷாப்புகள், பூக்கடை, திடீரென்று ஒரு பிள்ளையார் கோவில், அதை அடுத்து 'குமரிக்கோட்டம் -MGR படத்துடன் சினிமா கொட்டகை, ராஜா பல் மருத்துவமனை, லக்ஷ்மி மருந்தகம், தூரத்தில் ஏதோ ஒரு கோவில் கும்பாபிஷேக ஒலிபெருக்கியிலிருந்து கே.பி.சுந்தராம்பாள் குரல்..அடடா கிராமத்து அழகே தனி..

ஒரொரு ஸ்டாப்பிலும் நின்று செல்லும் ஒரு மணி நேர பஸ் பயணம் ரம்மியமாக இருந்தது. போகும்போது ரோட்டின் ஒருபக்க கடைகளை ரசித்தது போல, திரும்ப வரும்போது மறுபக்க கடைகளையும் மறக்காமல் வேடிக்கை வேண்டுமென முடிவு செய்தேன். 

ஒரு வழியாக நாம் போக வேண்டிய அல்லூர் வந்து சேர்ந்ததும் பஸ்ஸை விட்டிறங்கி சரிவான ரோட்டில் நெறுஞ்சி முட்களை சரக்கென மிதித்தபடி நடக்க ஆரம்பித்தேன். மெயின் ரோட்டில் இருந்து 50 மீட்டர் தாண்டி தூரத்தில் அக்ரஹாரம். கோடியில் மரங்களுக்கு நடுவே கோவில். கோவிலுக்கு இரு புறமும் சரிவான ஓட்டு வீடுகள்.. சில மொட்டை மாடியுடன் கூடியது. 

திருச்சி ICWA சாப்ட்டரில் கூட படித்த நண்பன் வீடு அதில் ஒன்று. சாணம் தெளித்த வீட்டு வாசலில் காலையிலிட்ட கோலம் பூசனிப்பூவை ஜாக்கிரதையாக மிதிக்காமல் படியேறினேன். எவர்சில்வர் தம்ளரில் அவர்கள் கொடுத்த மோரு ஜில்லென்று தொண்டைக்கு இதமாக இறங்கியது. நண்பனின் அம்மா, அப்பா மற்றும் பாட்டி எல்லோரும் அன்புடன் வரவேற்க 'ஸ்ரீதர் இப்போ பாம்பேல வேல பாக்கறான்' போன்ற சம்பிரதாயங்களுக்கு பின் குறுகலான படியில் ஏறி தலை இடிக்காமல் குனிந்து மாடி ரூமுக்குள் நாங்கள் நுழைய, அவனது அம்மா எங்கள் பின்னால் ஓடி வந்து கொடியில் உலர்த்தியெடுத்து சேரில் பரத்திக்கிடந்த துணிகளை அள்ளியெடுத்துக்கொண்டு கீழே விரைந்தார்கள். பழுப்பு கறை வேஷ்டியை தளர்த்தி கட்டிக்கொண்டு ‘அப்பறம்? சொல்லுடா!’ என்ற நண்பனுடன் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அறையின் மூலையில் அக்கவுண்ட்ஸ் புத்தகங்கள்.. காலி காபி டபரா. 

அடுப்பிலிருத்த பால் மற்றும் டிகாக்‌ஷன் வாசனை மெல்ல வர, கீழே இருந்து 'அண்ணா காபி ரெடி!' என்ற தங்கையின் குரல் கேட்டு நண்பன் ஓடிப்போய் கொண்டு வந்த காபி அருமை. 'இந்த தடவையும் 2nd க்ரூப் போய்டுத்து.. பயோ டேட்டா தர்றேன்.. பாம்பேல சீ.ஏ இன்டருக்கு வேலை கெடைக்குமில்லியா? .அப்பா பென்ஷன் பத்தாது, தங்கை வேற இருக்கா.' நண்பனின் தொண்டை லேசாக கரகரத்தது. 

சட்டென எங்களுக்குள் கொஞ்சம் நேரம் மௌனம் ..

மாலை விடை பெற்று கிளம்பும்போது நண்பனின் அம்மா, தங்கையின் முகங்களில் ஒரு ஏக்கம்..எதிர்பார்ப்பு... மாவட்ட கருவூலத்திலிருந்து ரிடையரான அப்பா கையில் விசிறியுடன் ஈசிச்சேரிலிருந்து கூச்சத்துடன் எழுந்துகொண்டார். மெயின் ரோடு வரை நண்பன் கூட வந்து, பிறகு பஸ் வந்ததும் விடை பெற்றுக்கொண்டோம். 

படிக்கும்போது இருந்த அந்த குறும்பான பேச்சு, சிரிப்பு , கிண்டல் எல்லாவற்றையும் அவன் தொலைத்திருந்தான். 

பஸ்ஸில் திருச்சி திரும்பும்போது நான் அந்த கிராமத்து ரோட்டோர கடைகளை மறுபடியும் ரசிக்கவில்லை.....

பென்சில் ஓவியத்துடன்...

(சீதாபதி ஶ்ரீதர்)

#திருச்சிகதைகள்  மீள்

No comments:

Post a Comment