ஊருக்குக் கிளம்ப துணிமணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தார்கள்..அப்பா ரூமுக்குள் எட்டிப்பார்த்து பின் மெதுவாக உள்ளே வந்தார்..
சிவா நாளக்கிக் கெளம்பறீங்களா?..
ஆமாம்பா..
ஞாயிற்றுக்கெழமை போங்களேன்..
ஏம்ப்பா..
என்னவோ..தோணித்து...
அப்பா இதுவரை எதையும் கேட்டதில்லை..சரிப்பா..சண்டேவே போறோம் என்றான்..அவர் மெதுவாகத்திரும்பி ஹாலுக்குப்போனார்..
நீங்க சொன்னது கரெக்ட்..அவரா கேட்டப்பறம் ரெண்டு நாள் இருந்துட்டே போலாம்...ஆனா..ஏன் திடீர்னு இப்பிடி கேட்டார்..
என்னவோ..மனசுல கொஞ்சம் பதட்டமாறது என்றான் அவன்..
ஒண்ணும் பயப்படாதேங்கோ..
பாக்கலாம்..
அன்று அடிக்கடி தன் மனைவியைப்பற்றி பேசினார்..கண்ணில் நீர் வந்தது..
அவனுக்கும் அம்மாவை நினைக்கும்போது கண்கலங்கியது..
இந்த அம்மா படத்தை வெளிலே போனா கலர் போட்டோவா மாத்திண்டு வந்து கொடுக்கிறியா..
அழகா இருக்கும்..
சாயங்காலம் சந்தியாவந்தனம் முடீத்து நாட்டுப் பொண்ணைக்கூப்பிட்டார்..
அம்மா இப்பிடி ஒக்காண்டுக்கோ..
ரகுவம்சசுதா பாடறியா?..அவளுக்கு லேசாக பயம் வந்தது..கணவனைப்பார்த்தாள்..
பாடு..கண்ணால் சொன்னான்...
பாட ஆரம்பித்தவள் மூழ்கிப்போனாள் நடுவில் ஸ்ரீவெங்கடேச வரும்போது அவர் பகவானுக்கு கும்பிடு போட்டுக்கொண்டார்..பாடி முடித்தாள்..அற்புதமா பாடறா...நெறய பாடு..நாலு கொழந்தேளுக்குச்சொல்லிக்குடு..
இரவு சாப்பாடு முடிந்து கீழே மெதுவாக இறங்கிப்போய் ஒரு நாலு ரவுண்டு நடந்துவிட்டு வந்தார்..
இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..
எனக்கென்னவோ பயமா இருக்கு..
எனக்குந்தான்..சாயங்காலம் பாடச்சொன்னப்போ பகவானுன்னு வேண்டிண்டேன்..
இரவு அவனுக்குத்தூக்கம் வரவில்லை..இப்படியும் அப்படியும் புரண்டு புரண்டு படுத்தான்..அவள் அவன் கையைப்பிடித்து தூங்குங்கோ..காலைல பாக்கலாம்.
அநாவசிய பயம் வேணாம்..
அவன் எழுந்து பாத்ரூம் போய்விட்டு ஹாலுக்குப் போய் அப்பாவைப்பார்த்தான்..மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது..பக்கத்தில் புதிதாக பிரேம் போட்ட அம்மாவின் படம்..வந்து படுத்துக்கொண்டான்.
காலையில் விழித்தபோது லேட்டாயிருந்தது..குழந்தையும் அவளும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்..இவன் எழுந்த சத்தம் கேட்டு அவளும் விழித்தாள்..அப்பா எழுந்துக்கலியா..
துணுக்கென்றது..ஹாலுக்குப்போனான்..அப்பா படுத்திருந்தார்..மெதுவாகக்கூப்பிட்டான்..பதிலில்லை..தொட்டான் அசைவில்லை..பின்னாலிருந்து நாட்டுப்பெண்..என்னாச்சு?
அப்பாவின் பயணம் முடிந்தது
No comments:
Post a Comment