பயங்கர கிலியாப் போச்சு ஸார்...!
இப்போதெல்லாம் திருட்டு பயம் காரணமாக, 'gated community' என்ற பெயரில் காலனிகள் நிறைய உருவாகியிருக்கிறது. இது மாதிரி community-கள் உருவாகும் முன், மெட்ராஸில் ஒரு சின்ன காம்பௌண்டுக்குள் நாலைந்து வீடுகள் இருந்தன.
வாஸலில் 'ஒப்புக்கு' ஒரு கூர்க்கா!
அந்த காம்பௌண்டுக்குள் ஒரு குடும்பம்! பெரியவா மேல் அளவிலா பக்தி ! வெறுமனே, வெளியே "எல்லாமே பெரியவாதான்!" என்று சொல்லிக் கொண்டு மட்டும் இல்லாமல், உண்மையாகவே பெரியவா ஸ்மரணையை, உயிர் மூச்சாகக் கொண்டவர்கள்!
ஒருநாள், ஏதோ காரணமாக, அந்த காம்பௌண்டில் உள்ள அத்தனை வீட்டினரும், சேர்ந்து எங்கேயோ வெளியூர் கிளம்பிப் போனார்கள்.
கூர்க்காவிடம் "கூடுதல்" பொறுப்பாக... நன்றாக, கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு சென்றார்கள்.
எந்த விஷயத்திலுமே அதிகமாக, ஆழமாக அதைப் பற்றியே ஸிந்தித்துக் கொண்டு இருப்பவர்களை, தேடிக்கொண்டு வருமாம் ஸந்தர்ப்பம்! அது நல்ல விஷயமானாலும் ஸரி, கெட்ட விஷயமானாலும் ஸரி!
காம்பௌண்டில், அத்தனை வீட்டிலும் ஆள் இல்லை! என்பது, ஆளில்லா வீட்டை சுரண்டிடும் "திருட்டு கும்பலுக்கு" காதில் தேனாக பாய்ந்தது!
"காலம் பொன் போன்றது!" என்பதை, பகவத் விஷயத்தில், நாம் நினைக்கிறோமோ என்னமோ? திருடுபவர்கள், காலத்தை ஸரியாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
அன்றிரவே காலனிக்குள் அந்த கும்பல் நுழைந்தது!
ஒரேயொரு "நிராயுதபாணியான" கூர்க்கா என்ன செய்ய முடியும்? அதுவும் மயக்க மருந்தை கொடுத்தபின்?
வரிஸையாக... ஒவ்வொரு வீட்டின் பூட்டையும் உடைத்து, நிதானமாக எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, கடைஸியாக... நம் பெரியவாளுடைய பக்தரின் வீட்டுக்கு வந்து பூட்டை உடைத்து உள்ளே போனார்கள்!
முதலில் நுழைந்தவன், தன்னை பின்தொடர்ந்த ரெண்டாவது திருடனையும் சேர்த்து தள்ளிக் கொண்டு.... வெளியே ஓடிவந்தான்!...
"ஐயோ!..... செத்தேன்! டேய்...! ஓடிருவோம்...டா!..."
அலறிக்கொண்டு வந்தவனைப் பார்த்த மற்றவர்களும்... ஏன் எதற்கு என்பதே தெரியாமல், அதுவரை திருடின அத்தனை ஸாமான்களையும் போட்டுவிட்டு, தலைதெறிக்க காம்பௌண்டை விட்டு, வெளியே ஓடிவிட்டார்கள்!
மறுநாள் வீட்டுக்காரர்கள் வந்த போது, காலனியே அலங்கோலமாகக் கிடந்தது! எல்லார் வீட்டு ஸாமான்களும் இறைந்து கிடந்தன!
கூர்க்கா சொன்ன அடையாளங்களை வைத்து, உடனேயே போலீஸ்காரர்கள்... அந்தத் திருடர்களைப் பிடித்தும் விட்டார்கள்!
அந்தத் திருடர்கள் எப்படி திருடினார்கள்? என்பதை அவர்களை விட்டே demonstrate பண்ணிக்காட்ட, காம்பௌண்டுக்குள் அழைத்து வந்தனர்.
"ஏண்டா... திருடின ஸாமானையெல்லாம் இங்கியே போட்டுட்டு ஓடினீங்க?..... யாருகிட்ட மாட்டப் பாத்தீங்க?..."
போலீஸ்காரர் கேட்டார்....
"ஸார்... எல்லா வீடும், கணக்கா முடிச்சிக்கிட்டோம்....! இதா..! இந்த ஊட்டுல... பூட்ட ஒட்ச்சி நொழையறாங்காட்டியும், உள்ளார ஒரு ஸெம... வயஸான தாத்தா, இந்த ஈஸிச்சேர் கணக்கா... ஒரு சேர்ல ஒக்காந்துகினு இருந்தாரு! பூட்டின ஊட்டுக்குள்ளார தாத்தா எப்டி?..ன்னு யோஸிச்சிக்கினே.... மொள்ளமா... உள்ளார கால வெச்சோமா!....
.....அந்தத் தாத்தா, டபால்னு...எந்திரிச்சு.. "டேய்!..."ன்னு.... பயங்கரமா கத்திக்கினு, அவரு கைல இருந்த 'மூங்கிக்குச்சி'ய... அப்டியே சொழட்டிக்கினு வந்தாரா...! பயங்கர 'கிலி'யாப் போச்சு ஸார்...!... வெளில ஓடியாந்துட்டோம் ஸார்..."
"எங்காத்ல... வயஸான தாத்தாவா !... அப்டி யாருமே இல்லியே!..."
வீட்டில் உள்ளவர்கள் திகைத்தார்கள்!
அந்தத் திருடர்களை, அவர்கள் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள் போலீஸ்காரர்கள்.
"அந்த தாத்தாவை பாத்தப்ப..... கொலையே நடுங்கிருச்சு ஸார்! வயஸானவரா, இருந்தாங்காட்டியும்.. அவருகிட்ட என்னமோ... பயங்கரம் இருந்திச்சு ஸார்...."
'திருட்டு' முழி முழித்துக் கொண்டு அந்த வீட்டுக்குள், மறுபடியும் 'அமானுஷ்ய' தாத்தாவை ஸந்திக்க வேண்டியிருக்குமோ? என்று பயந்து கொண்டே நுழைந்தார்கள் அந்தத் திருடர்கள்...
உள்ளே, ஒருவருமே இல்லை!
"பொய்யாடா..... சொல்றீங்க?......."
"இன்னா ஸார் ! நா..... எங்க பொய் சொன்னேன்? இதா..! அந்த தாத்தாவ.... படம் புடிச்சி.... இங்க மாட்டியிருக்காங்க பாரு... ஸார்! இவருதான்..... நேத்திக்கி அம்மாங்...கிலி பிடிக்க வெச்சாரு!...."
வீட்டுக்காரர்கள் அதிர்ச்சியில், ஆனந்தத்தில் அழவே ஆரம்பித்துவிட்டார்கள்!
ஆம்! அங்கே 'மூங்கிக்குச்சியும், கையுமாக' இந்த ப்ரபஞ்சத்தையே கட்டிக்காக்கும் பெரிய.... வயஸான.... காஞ்சித் தாத்தாதான் நின்று கொண்டிருந்தார்!
மறுநாளே காஞ்சிபுரம் சென்று பெரியவா முன்னால் "மூங்கில்குச்சி' போல் தண்டனிட்டு எழுந்தார்கள்.
"பெரியவாளோட க்ருபை! ஆத்துக்குள்ள நொழஞ்ச, திருடாளை பெரியவா வெரட்டியிருக்கேளே! 'ஆத்துல பெரியவா இருக்கேள்'-ன்னு எல்லாரோட அல்ப புத்திலயும் புரிய வெச்சுட்டேளே!... திருடனுக்கு கூட தர்ஶனம் குடுத்துட்டேளே!"
"நா..... வந்தேனா? யார் கண்டுது? ஒருவேளை... பூஜைல வெச்சிண்டிருக்கியே...! அந்த பாதுகைகளை பாத்து... பயந்துட்டானோ என்னமோ?..."
ஸ்ரீராமனுக்கு நிகராக ஹரியாஸனத்தில் அமர்ந்து அரசாட்சி செய்த ஸ்ரீராம பாதுகையும், ஶ்ரீராமனும் வேறு வேறா என்ன?
ஸம்ஸாரம் என்ற மஹா பயங்கரத்திலிருந்து நம்மை [பாது] காத்து, மோக்ஷத்தையே அனாயாஸமாக தரவல்ல "குரு பாதுகை"..... after all, திருடர்களிடமிருந்து பாதுகாக்காதா என்ன?
ஜய ஜய சங்கர...
ஹர ஹர சங்கர..
காஞ்சி சங்கர ..
காமகோடி சங்கர...
ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்...
இன்றைய நாள் எல்லாம் வல்ல நம் குருவின் திருவருளால், இனிய நாளாக அன்பு பிரார்த்தனைகள்.
No comments:
Post a Comment