எண்ணப்பறவை_18
பத்திரிக்கை ஆஃபீஸ் வருவதற்குள் நரசிம்மனின் வாய் பேச முடியாத அளவு தாம்பூல அடைப்பு.
சைகை காட்டி ஒரு சேரில் உட்கார சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக வாஷ் பேஸினுக்காக நடக்கிறார்.
'வெத்தல போட்டுண்டு பேசறது சிவராமனுக்கு பிடிக்காது. அதான். நான் உள்ள போய் சிவராமன் மூடு எப்படி இருக்குனு பார்த்துட்டு வரேன்.'
சிவராமன் என்று அவர் எடிட்டரைத்தான் சொல்கிறார் என்பதை புரிந்து கொண்டாள்.
சற்று நேரத்துக்கு பிறகு வெளியே வருகிறார் நரசிம்மன்.
'சொல்லிட்டேன் நீ அபிராமி ஃப்ரெண்டுன்னு. உள்ள போய் பயப்படாம பேசு.'
உள்ளே செல்கிறாள். 'மே ஐ கம் இன் சார்?'
'வாம்மா. உட்காருங்க'
'ஐ ஆம் அமுதா. ஐஜி ஆஃபீஸுல ஒர்க் பண்றேன்.'
'நரசிம்ம மாமா சொன்னார் உங்கள பத்தி. சொல்லுங்கோ நான் என்ன செய்யணும்?'
'எனக்கு தொடர்கதை எழுதணும்னு ஆசை. சின்ன சின்ன கதைகள் எழுதியிருக்கேன். ஆனாலும் ஆனந்த விகடன்ல ஒரு தொடர்கதைங்கறது என்னோட நீண்ட நாள் ஆசை, ஏன், கனவுன்னே வெச்சிக்கலாம்.'
'உங்க கதை ஏதாவது ஆனந்த விகடன்ல வந்திருக்கா இதுக்கு முன்னாடி?'
'விகடன்ல சிறுகதை ஒரே ஒரு தடவை. அப்பறம் சுரபில ஒரு கதையும் ராணியில ஒண்ணும் வந்திருக்கு. ரெண்டுமே சிறுகதைகள் தான்.'
'அந்த கதைகளோட காப்பி ஏதாவது கொண்டு வந்திருக்கேளா இப்போ?'
கொடுக்கிறாள். பார்க்கிறார். படிக்கிறார் மேலோட்டமாக.'
'குட். ஃப்ளோ நன்னா இருக்கு. நீங்க ஏன் ஆனந்த விகடன்ல சிறு கதை எழுத முயற்சி செய்யல இதுக்கு முன்னாடி?'
'நிறைய அனுப்பினேன். எல்லாம் திரும்பிடுத்து.'
'ஓ. சாரி. நூத்துக் கணக்கா தினம் வந்துண்டிருக்கா. அதான். பரவாயில்ல. இனிமேல் நீங்க அபிராமிகிட்ட கொடுத்து நரசிம்மன் மூலமா சேர்த்துடுங்கோ.'
'த்தேங்க்ஸ் சார். என்னோட கனவைப் பத்தி....' இழுத்தாள்.
'வருத்தப் படாதீங்கோ. தொடர்கதைய ஏத்துக்கறதுல நிறைய பிரச்சனைகள் இருக்கு. பிரபலமான எழுத்தாளர்கள் கதைகளுக்கு தான் மௌசு அதிகம். வாசகர்கள் அதை விரும்பி கேட்கறதால அவாளுக்குதான் முக்கியத்துவம் தர வேண்டியிருக்கு. ஒரே சமயத்துல ரெண்டு மேல தொடர்கதைகளை அனுமதிக்கறது இல்ல நாங்க. ரெண்டு கதைகளையே ஒண்ணா படிச்சுட்டு கொழம்பிக்கற வாசகாளும் இருக்கா. எனக்கு அத்யாயத்துக்கு ஏத்த மாதிரி படம் வரைய ஆர்டிஸ்ட தேடணும். எங்க கிட்ட இருக்கற ஆர்டிஸ்டுகளுக்கு வேலை சரியா இருக்கு.'
'மூணு நாலு வாரத்துக்கான ஆனந்த விகடன எப்போதும் திட்டத்துல இருந்துண்டே இருக்கும். இப்ப சரின்னு நான் உங்க கிட்ட சொன்னாலும் ஆறேழு மாசம் கழிச்சுத்தான் உங்களோட முதல் அத்யாயமே வெளி வரலாம்.'
'நிறைய சட்ட திட்டங்கள் இருக்கு வேற. தொடர் ஆறு மாசங்களுக்கு மேல போக கூடாது. நீங்க தொடர்கதைக்கு அனுபவம் இல்லாத எழுத்தாளர் இல்லையா? அதனால வேற பத்திரிக்கைல தொடர்கதைகள் நடுவுல எங்கள கேட்காம எழுதக் கூடாது. முதன் முதலா நீங்க தொடர்கதை எழுதப் போறதால எங்களோட எழுத்தாளர் ப்பேனல்ல உங்க கதைய கொடுப்போம். அவா சரின்னு சொல்லணும். இன்னும் காப்பி ரைட் வாங்கணும். புனைப் பெயருக்கும் ரைட்ஸ் வாங்கணும். இன்னும் நிறைய இருக்கு.'
மலைத்துப் போனாள். 'இவ்வளவு விஷயம் இருக்கா தொடர் கதைல.'
அவள் கண்களில் இருந்த பிரமிப்பை புரிந்து கொண்டார் சிவராமன்.
'என்ன, மலச்சு போயிட்டேளா? நான் உங்கள டிஸ்ஸப்பாயிண்ட் பண்றதுக்காக இதையெல்லாம் சொல்லல. உங்களுக்கே தெரியும் நம்ம பத்திரிக்கைக்குன்னு ஒரு பேர் இருக்கு. இவ்வளவையும் நாங்க பார்க்கலைனா பேர் கெட்டு போயிடும் இல்லையா?'
'அப்ப சிறுகதைதான் நான் விகடனுக்காக எழுத முடியுமா?'
'நான் அப்படி சொல்லலியே! தாராளமா எழுதலாம். ஆனா எங்களோட சட்ட திட்டங்களுக்கு நீங்க ஒத்துக்கணும்.'
'சரி. நான் ஏத்துக்கறேன் உங்களோட விதிகள.'
'குட். முழு கதையையும் ரெடி பண்ணிட்டு காப்பி ரைட் வாங்கறதுக்கு முன்னாடி என்ன வந்து பாருங்கோ. அப்ப சொல்றேன் மீதி விவரங்கள. எப்ப உங்க கதையை எழுதி முடிப்பீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?'
'மேக்ஸிமம் ஒன் மந்த். இஸ் இட் ஓகே சார்?'
சொன்னவுடன் ஒரு ஃபைலை எடுத்து விரல்களால் ஏதேதோ கணக்கு போட்டார்.
'சரியா இருக்கும்னு நினைக்கிறேன். தீபாவளி முடிஞ்சு ஒரு ஸ்லாட் பார்க்கறேன் முடியுமான்னு.'
'ரொம்ப சந்தோஷம் சார்.'
'நாங்க இளம் எழுத்தாளர்களுக்கு ச்சான்ஸ் தருவோம். ஆனா வாசகர்கள் எப்போதும் பிரபல எழுத்தாளர்கள் கதைகளையே கேட்கறதால எங்களால ஓரளவுக்குதான் பார்க்க முடியறது.'
'புரியறது சார்.'
'கதையை நீட்டா டைப் பண்ணி ரெடி பண்ணுங்கோ. நல்ல gகேப் விட்டு A4 பேப்பர்ல டைப் பண்ணுங்கோ. கதை எழுதறதுக்கு முந்தி, காப்பி ரைட் வாங்கறதுக்கு முந்தி யார் கிட்டேயும் உங்க கதையப் பத்தி டிஸ்கஸ் பண்றதையோ காட்டறதையோ வெச்சுக்காதீங்கோ. உங்க நல்லதுக்காக சொல்றேன். அப்புறம் உங்க கதையை யாராவது கிரகிச்சிண்டு எழுதி அவா ஃபேமஸ் ஆயிடுவா. இதுக்காகத் தான் காப்பி ரைட் அது இதுன்னு எவ்வளவோ இருக்கு.'
'இப்படியெல்லாம் இருக்குன்னு இங்க வந்துதான் தெரிஞ்சுண்டேன் சார்.'
'எல்லாமே அனுபவம் தான ம்மா. பை த பை, என்ன மாதிரி கதைன்னு தெரிஞ்சுக்கலாமா?'
'லவ் ஸ்டோரி.'
சிரித்து விட்டு, 'பெரும்பாலும் பிரபல எழுத்தாளர்கள்லாம் லவ் ஸ்டோரி எழுதினாலும் கடைசில கொஞ்சம் அவாளையும் அறியாம சோகத்த சேத்துடறா. அந்த கதைகளுக்கு வெற்றிகள் என்னவோ கெடச்சுடறது. ஆனா ஆப்டிமிஸ்டிக் ஃபீலிங்கோட எழுதினா இன்னும் நன்னா இருக்கும்ங்கறது என்னோட விருப்பம்.'
'சரி சார். அப்படியே எழுதறேன். உங்களோட டிப்ஸ் ரொம்ப ஹெல்ப்ஃபுலா இருக்கும் எனக்கு.'
'அப்புறம் இன்னோண்ணு. ஏதோ தீபாவளிய ஒட்டின்னு சொன்னதால அப்படியே எடுத்துக்க கூடாது. இந்த ஏழெட்டு மாசத்துல எவ்வளவோ எங்களுக்கு நிர்பந்தங்கள் வரலாம். புரிஞ்சிக்கணும்.'
'உங்க ஸ்டைல் ஆஃப் ரைட்டிங் நல்லா இருக்கு. கீப் இட் அப்.'
'த்தேங்க் யூ சார்'
வெளியே வந்து நரசிம்மனுக்கு ஒரு த்தேங்கஸ்.
'உனக்கு எங்க ஜாகை?'
'மேற்கு மாம்பலம் ஜெய்சங்கர் தெரு.'
'நானும் பக்கத்துல தான் அஷோக் நகர்ல தான் இருக்கேன். நன்னா எழுது. லக்ஷ்மி மாதிரி, சிவசங்கரி மாதிரி நன்னா வரணும்.'
சந்திப்பை முடித்துக் கொண்டு நேராக அபிராமியிடம் வந்து நடந்ததை ஒன்று விடாமல் சொல்கிறாள்.
'பரவாயில்லையே. சிவராமன் சார் இவ்வளவு நேரம் பேசியிருக்காரே. ஆச்சர்யம்தான்.'
'எல்லாம் உங்களால தான் அக்கா.'
தொடரும்....
No comments:
Post a Comment