Thursday, February 24, 2022

எண்ணப்பறவை_17

எண்ணப்பறவை_17

மறுநாள் 12G.  அபிராமியும் அமுதாவும் வழக்கம்போல பஸ்ஸில் ஒன்றாக ஏறுகிறார்கள்.

'அமுதா, என் மேல கோபம் இல்லையோன்னோ?  இருந்தாலும் நான் உன் மேல அவ்வளவு உரிமை எடுத்துண்டிருக்க கூடாது.  என்னவோ தோணித்து.  பட படன்னு பேசிட்டேன்.  என் மேல வருத்தமில்லையே?'

'ச்சே ச்சே.  என்ன அக்கா இப்படியெல்லாம் பேசறேள்?  நான் உங்கள ஃப்ரெண்டுக்கு ஒரு படி மேல தான் நெனச்சு பழகிண்டு இருக்கேன்.  நீங்க வேற குமுதா வேற இல்ல எனக்கு.'

'அது கிடக்கட்டும்.  எப்படி போயிண்டிருக்கு உங்க ஐத்த மவன் கதை?'

'நீங்க சொன்னதுக்கப்பறம் வேற கதை எழுதலாம்னு தான் தோணித்து.  அப்புறம் என்னவோ இதையே கன்டின்யூ பண்ணலாம்னு...'

'தப்பில்ல அமுதா.  ஆனா கற்பனையை ரொம்ப வளர்த்துண்டு இருக்க கூடாது.  பின்னாடி ஏதாவது டிஸப்பாயிண்ட்மெண்டுன்னு வந்தா, ஐ மீன் ஒரு வேளை வந்தா, அதுலேந்து வெளியே வரணும் இல்லையா.  அதான் கொஞ்சம் எடுத்து சொன்னேன்.'

'அக்கா, முந்தாநாள் ராத்திரி ஒக்காந்து எழுதினேன் நீங்க அன்னிக்கு கொடுத்த டைரில. படிச்சிட்டு சொல்லுங்கோ எப்படி வந்திருக்குன்னு.'

'உனக்கு என்ன... பிரமாதமாத்தான் எழுதியிருப்ப.  இன்னிக்கு நரசிம்மன் வந்தா புதன் கிழமை நீ அவரை பார்க்க ஏற்பாடு பண்ணட்டுமா?'

'சரி அக்கா.  இந்த கதைக்கு நீங்க தான் நல்ல பேரா வைக்கணும்.'

இசெபெல் ஹாஸ்பிடல் ஸ்டாப்பிங் அவர்களை பிரித்தது பஸ்ஸிலிருந்து.

ஆஃபீஸ் வந்தாள்.  க்ரைம் மீட்டிங் கெடுபிடிகள் வாசலிலேயே தெரிந்தது.  நிறைய இன்ஸ்பெக்டர்களின் தலைகள்.  நிறைய பேர் மறைவிடங்களில் பேசிக்கொண்டும் ஊதிக் கொண்டும்.

தெரிந்த மீசை உருவங்கள் வாசலிலேயே அவளுக்கு வணக்கம் வைத்தன.

'என்ன மேடம், எங்க ஊர் பக்கம் ஃபேமிலிய அழச்சிண்டு ஒரு தடவை வாங்க.  நிறைய கோவில்லாம் இருக்கு.  தரிசனங்களுக்கு நான் ஏற்பாடு பண்றேன்.'

டிஸ்ட்ரிக்ட்ஸுகளில் இருக்கும் பலர் இவளிடம் உதவிகள் கேட்டு தொடர்பு கொண்ட போதெல்லாம் உதவியிருக்கிறாள்.  ப்பி எஃப் லோன் வரல, அலவன்ஸ் வரல, ஹவுஸிங் லோன் வரல, ட்ரான்ஸ்ஃபர் கேட்டு ஆர்டர் வரல...இப்படி ஏதாவது.  இவளும் அந்தந்த செக்‌ஷனில் விவரம் கேட்டு சொல்லுவாள்.

'அமுதா மேடம் மாதிரி ஒரு ஹெல்பிங் ஹாண்ட் நம்ம சீஃப் ஆஃபிஸுல பார்க்கவே முடியாது.'

'என்ன மேடம், கல்யாண சாப்பாடு எப்ப போடுவீங்க.  மறக்காம நோட்டீஸ் வைக்கணும் எங்களுக்கெல்லாம்.'

'பையனப் பத்தி விசாரிக்கணும்னா சொல்லுங்க.  சித்த நாழில அக்கு வேற ஆணி வேறையா விசாரிச்சு கேரக்டர் ஸர்டிஃபிகேட்ட கொடுத்துடறோம்.'

ஒரு வழியாக எல்லா அன்புத் தொல்லைகளையும் தாண்டி ஸீட்டுக்கு வந்தாள்.

'மேடம் டிஐஜி ஐயா வந்துட்டாரு.  உங்கள ரெண்டு தடவை கேட்டாரு வந்துட்டீங்களான்னு.'

அங்கிருந்த பானையிலிருந்து ஒரு ஜில் தண்ணீர் குடித்து விட்டு கட்டபொம்மனை பார்க்க சென்றாள்.

'வாங்க அமுதா மேடம்.  நேத்திக்கி ஐஜியும் நானும் பேசிகிட்டு இருந்தோம்.  உங்களத்தான் புகழ்ந்து தள்ளிட்டாரு.  அவரோட கேம்ப் க்ளர்க்கா உங்கள மாத்திக்கலாமான்னு கேட்கிறாரு.'

'வேண்டாம் சார்.  இப்படியே உங்க கீழயே இருக்கேன்.'

'பயப்படாதீங்க.  அவர் சொன்னதை தான் சொன்னேன்.  க்ரைம் மீட்டிங் முடிஞ்சோண்ண என்னோட கேம்ப் விவரங்கள பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்.'

மூன்று மணிக்கு அபிராமியிடமிருந்து ஃபோன்.

'அடியே லஞ்ச் டயத்துல உன்னோட கதைய படிச்சேன்.  பொளந்து கட்டிட்ட.  என்ன ப்யூட்டிஃபுல் நடை.  ஏன் பேரெல்லாம் மாத்திட்டே.  அப்படியே இருந்திருக்கலாமே.'

'தலைப்பை பத்தி யோசிச்சேளா?'

'யோசிக்கல.  அதுக்கென்ன அவசரம்.  எழுதிண்டே வா.  பின்னாடி பார்த்துக்கலாம்.'

'நரசிம்மன் சார் வந்தாரா இன்னிக்கி பேங்குக்கு?'

'வந்தார்.  புதன் கிழமையே அவரோட எடிட்டர் கிட்ட அழச்சிண்டு போறேன்னு சொல்லியிருக்கார்.'

'ரொம்ப தேங்க்ஸ் அக்கா.  உங்க ஆஃபீஸுக்கு அஞ்சரை மணிக்கு வந்து அந்த டைரிய வாங்கிக்கறேன்.  இன்னிக்கும் எழுதணுமே.'

புதன் கிழமை ஆஃபீஸ்ல ஒர்க் இருந்தா?  ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை அமுதா.  கேஷுவல் லீவ் அப்ளை செய்தாள்.  கட்டபொம்மன் டேபிளில் கடிதத்தை சேர்த்தாள்.

'புதன் இன்னிக்கு மறக்காம பத்து மணிக்கே வந்துடு.  பத்தரைக்கு நரசிம்மன் வந்திடுவார், என்ன?'

'சரி அக்கா.  அன்னிக்கு லீவ் போட்டுட்டேன்.  அப்புறம் கதையோட தலைப்பு மறக்காதீங்கோக்கா.'

சொன்னபடி பத்து மணிக்கே பேங்குக்கு வந்து விட்டாள்.  என்றுமில்லாத அளவு ஒப்பனை.  ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷனைப் பதிக்க என்னவோ பொதுவாக எல்லோரும் ஆர்வம் காட்டுகிறார்கள்... உடையில், ஒப்பனையில், உடல் மொழியில்!

அபிராமியிடம் வந்ததை சொல்லிவிட்டு ரிஸப்ஷன் ஹாலில் அமர்கிறாள்.

கண்களில் ஒரு ஏக்கம் கலந்த திரு திரு.  அவன் வருவானா இன்றும்?  வந்தால் என்ன பேசுவது?  ப்ரியாவைப் பற்றி, ப்ரியா சொன்னதைப் பற்றி...

கண்கள் மட்டும் தேடுவதை நிறுத்தாமல் சிந்தனைகள் மட்டும் அவனோடு.

'அன்னிக்கு இங்க தான் உட்கார்ந்தேன்.  இப்படித்தான் போனான்.'

அந்த ஸென்ட் வாசமும் அவள் எண்ணத்தில் விழுந்து அவள் உதடு விரிந்து மூச்சிற்குள் அனுப்புகிறது.

'நீ தானே அமுதா?  அபிழாமி ஃப்ரெண்ட்?'

புரிந்து கொண்டாள்.  மயக்கத்திலிருந்து அவளை மீட்ட குரல் நரசிம்மனுடையது என்று.  வயிறு பெருத்த ஆஜானுபாவ தோற்றம்.  வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். மயில்கண் வேஷ்டி ஜிப்பா.  தோள் மேல் ஒரு சிறிய டர்க்கி டவல். வெத்தலை சீவல் பன்னீர் புகையிலை மொத்தமாக gக்ரைண்ட் ஆகிக் கொண்டிருந்தது அவர் வாயில்.

'எஸ் ஸார்.  ரொம்ப சந்தோஷம் உங்கள பார்த்ததுல.'

'அபிழாமி சொன்னா.  எங்க எழிட்டர் முஷுடு.  நா பாழ்த்து வழந்தவன்தான்.  அவன் மாட்டேன்னா என்ன கோழ்ச்சிக்க படாது.  பேஷி பாப்போம்.  என்ன கெழம்பலாமா?'

'இருங்கோ அக்கா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன்.'

அபிராமி கேபினுக்குள் செல்லும் போதே ஒரு எக்ஸைட்டட் படபடப்பு.

'ஆல் தி பெஸ்ட் அமுதா.  தைரியமா பேசு.'

ஆட்டோவில் ஏறும்போதே 'அச்சாஃபீஸ் ஆட்டோதான்.  காஷெல்லாம் தர வேண்டாம்.  ஏழு'

'கேஷவா கெழம்பலாமாடா?'

தொடரும்...

No comments:

Post a Comment