Wednesday, February 23, 2022

கோதாவரி நதி தீரம் 25

 🎼🎻🌹 கல்லிலே கலைவண்ணம்🌹🎻🎼

(சுஜாதா&வெங்கடேசன்) பகுதி 25  ருத்ரமா தேவி 2 

அப்பறம் ருத்ரமா தேவிக்கு என்ன ஆச்சு?படத்துல வர அல்லு அர்ஜுனோட “கோன கன்னா ரெட்டி” கேரக்டர் உண்மையான்னு கேக்கறேன். 

கோன புத்தா ரெட்டிங்கற ஒரு சிற்றரசனும் கவிஞருமானவரின் மகன்தான் கோன கன்னாரெட்டி. படத்துல அல்லு அர்ஜுன் கேரக்டருக்கு ஒரு பில்டப் கொடுக்க சாகச வீரனா காட்டியிருக்காங்க. ருத்ரமாதேவியோட ஃப்ரண்ட் அன்னாம்பிகாவ கல்யாணம் செய்தவரைதான் சரித்திர உண்மை.சரி மேல பார்ப்போம். 

மக்களனைவரும் தம் அரசிக்கு அநியாயம் நேர்கிறதென்று அறிந்து உடனே கைக்குக் கிடைத்த ஆயுதங்களோடு கிளம்பி ராணிக்குத் துணையாக அணிவகுத்து நின்றனர். சமுத்திரம் போல் அலை அலையாகக் கிளம்பி வந்த ஜனத்திரளுக்கு முன் கோட்டைச் சுவரும் எதிரிப் படையும் நிற்க இயலவில்லை. பொது மக்களுக்கு ராணி ருத்ரமா தேவி மேலுள்ள விசுவாசத்தைக் கண்டு எதிரிகள் அஞ்சி ஒளிந்தனர். ஆனால் இம்முறை ருத்ரமா அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை. அவர்களைக் கொன்று போட்டு கோட்டையைக் கைப்பற்றினாள்.

உள் நாட்டுப் போர் முடிவுற்றதென்று சற்று ஆசுவாசப்பட்டாள் ருத்ரமா. ஆனால் அவள் பெண் தானே! என்று ஏளனத்தோடு வெளி நாட்டு அரசர்கள் அவளைத் துச்சமாகக் கருதி நாட்டைக் கைப்பற்ற திட்டமிட்டனர். கலிங்கர்களும் தேவகிரி யாதவ அரசனான மகாதேவனும் அவளோடு யுத்தத்திற்குக் கிளம்பினர். ஜைனர்களை உடன் சேர்த்துக் கொண்டு எட்டு லட்சம் வீரர்களோடு வந்த மகாதேவன் வரங்கல் கோட்டையை முற்றுகை இட்டான். தைரியமாக முன்னின்று யுத்தம் செய்தாள் ருத்ரமாதேவி.

பதினைந்து நாட்கள் நடந்த கடின யுத்தத்தில் ருத்ரமாவின் கையே ஓங்கியிருந்தது. எதிரிகள் புறமுதுகிட்டு ஓடினர். யாதவ அரசின் கோட்டை வரை அவர்களைத் துரத்திச் சென்றனர் ருத்ரமாவின் வீரர்கள். ருத்ரமாவின் நாட்டின் மீது போர் தொடுத்தற்கு நஷ்ட ஈடாக மூன்று கோடி தங்க நாணயங்களைக் காணிக்கை செலுத்தி ருத்ரமாவோடு நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டான் மகாதேவன். உயிரைப் பொருட்படுத்தாமல் போராடிய வீரர்களுக்கும் பொது மக்களுக்கும் அந்த நாணயங்களைப் பகிர்ந்து கொடுத்துப் பாராட்டினாள் ராணி ருத்ரமா.

அதன் பின்னர் அம்பதேவன் என்பவன் அவளை நிம்மதியாக அரச பரிபாலனம் செய்ய விடாமல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். அம்பதேவன் ருத்ரமா தேவியின் தந்தையிடம் அமைச்சராக இருந்தவரின் பேரன். எதிரி அரசர்களோடு கை கோர்த்தான். ருத்ரமா அவனையும் வென்று அடக்கினாள். ஆனால் அவனுடைய பாட்டனை நினைத்து அவனைக் கொல்லாமல் உயிரோடு நாட்டை விட்டு துரத்தினாள்.

இன்னும் சோழ, பல்லவ மன்னர்களைக் கூட வென்று ‘ராய கஜ கேசரி’ என்ற தன் தந்தையின் விருதுக்குத் தானும் தகுதி பெற்றாள். ராணி ருத்ரமா தேவி தன் அரசாட்சியில் தெற்கே காஞ்சி முதல் வடக்கே சட்டிஸ்கர் வரை மேற்கே பெடத நாடு முதல் கிழக்கே சமுத்திரம் வரை காகதீய சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரித்தாள்

மக்களின் சுக துக்கங்களை தானே நேரில் சென்றறிந்து குறை தீர்த்தாள் ராணி ருத்ரமா. மாறு வேடத்தில் சென்று நாட்டையும் மக்களையும் பெற்ற பிள்ளைகளைப் போல் காத்தாள். பல ஏரிகளைத் தோண்டி விவசாயத்திர்கு நீர் தடையின்றிக் கிடைக்க வழி செய்தாள். எந்தத் தாயும் பிரசவ காலத்தின் போது மரணமடையக் கூடாதென்று நாட்டில் எல்லா கிராமங்களிலும் பிரசவ வைத்திய சாலைகளைத் தோற்றுவித்தாள் ருத்ரமா.

. முன்னர் கணபதிதேவனிடம் தோற்ற கலிங்க அரசன் முதலாம் நரசிம்மன், தான் இழந்த மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஒரு பெண் ஆண்டு வருவதை விரும்பாமல் படையெடுத்து வந்தான்.

ருத்ரமாதேவி தன் படைவீரர்களான போடி நாயக்கர் மற்றும் புரோலி நாயக்கர் உதவியுடன் கடுமையாக போரிட்டு முதலாம் நரசிம்மனைத் தோற்கடித்தார். முதலாம் நரசிம்மனின் மகனான பானுதேவனும் தன் தந்தையைத் தொடர்ந்து படையெடுத்து வந்தான். அவனையும் போரில் வென்று காகதீய சாம்ராஜ்யத்தை வாரங்கல்லில் மீண்டும் நிலைநாட்டினார். இதைத் தொடர்ந்து மேற்கில் உள்ள தேவகிரி ராஜ்யத்தின் யாதவர்கள் காகதீய அரசின் மீது படையெடுத்து வந்தனர். தன் படை பலத்தால் யாதவ அரசன் மகாதேவனையும் போரில் தோற்கடித்தார். தெற்கில் நெல்லூரை தலைநகராகக் கொண்டு பாண்டிய மன்னர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தி வந்தனர். ருத்ரம்மா காயஸ்த ராஜ்யத்தின் மன்னன் ஜான்னிகதேவனுடன் இணைந்து பாண்டிய ராஜ்யத்தை வென்று, அங்கும் தன் ஆளுமையைப் பரப்பினார். நாற்புறமும் உள்ள எதிரிகள் காகதீய அரசின் மீது போர் தொடுத்த வண்ணம் இருந்தனர்.பல போர்களில் வெற்றிபெற்று தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய அதே வேளையில், கட்டிடக்கலையிலும் சிற்பக்கலையிலும் நாட்டம் உடையவராக இருந்தார் ருத்ரமாதேவி. 

தந்தை காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாரங்கல் கோட்டை, இவரது ஆட்சிக்காலத்தில் முடிவடைந்தது. வாரங்கல் கோட்டைப் பகுதியில் இன்றும் காணப்படும் ஒரே கல்லால் ஆன மலை, காகதீய சிற்பக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது. ருத்ரமாதேவியின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட முளிக்கநாடு, ரெனாடு, எருவா, முத்தப்பிநடு போன்ற கோட்டைகளும் கட்டிடக்கலைக்குச் சான்றுகளே! ருத்ரமாதேவியின் ஆட்சிக்காலம் காகதீய ராஜ்யத்தின் பொற்காலமாகவே இருந்தது. இன்றும் மக்கள் அவரைப் பற்றிய சந்தோஷ  நினைவுகளையே பகிர்ந்து கொள்கின்றனர். தான் பெண் என்னும் எண்ணம் என்றும்  அவரின் வெற்றிப்பாதையில் தடையாக இருந்ததில்லை. நிர்வாகத்திலும் சிறந்து  விளங்கிய அவர், நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு முன்னேற்றங்களைக்  கொண்டுவந்தார். பல யுத்தங்கள் நாட்டை சூழ்ந்தபோதும் அவரது ஆட்சிக் காலத்தில்  மக்கள் மகிழ்ச்சியாகவே இருந்து வந்திருக்கின்றனர். உலகப் புகழ்பெற்ற பயணி   மார்கோபோலோவும் ருத்ரமாதேவியின் ஆட்சித் திறமையைப் புகழ்ந்துள்ளார்.

சிவதாண்டவம் ஆடுவதில் வல்லவரான ருத்ரமாதேவி, இந்தக் கலையை போர் முறைகளிலும் கையாண்டார். வீரம் பொருந்திய இவரது இஷ்ட தெய்வம் பத்ரகாளி. மொத்தத்தில், தன்னைத் தாக்க வந்த எதிரிகளுக்கு காளி ஸ்வரூபமாகவே விளங்கினார்! இந்த ருத்ரமாதேவியின் கதைதான், இப்போது அனுஷ்கா நடிப்பில், குணசேகர் இயக்கத்தில், மும்மொழிகளில்,  பிரமாண்ட 3டி சரித்திரப் படமாக வெள்ளித்திரைக்கு வந்திருந்தது. 

இவர் கதையை முடிக்கவும் அந்த ஒத்தக்கல் மலை மேல மூச்சு வாங்க ஏறி முடிக்கறோம்.

No comments:

Post a Comment