🎼🎻🌹 கல்லிலே கலைவண்ணம்🌹🎻🎼
(சுஜாதா&வெங்கடேசன்) பகுதி 21இராமப்பா கோயில் சிற்ப அழகு
இவரே தொடர்ந்து பேசறார் ...
வரங்கல் பகுதியின் ஒரு ஆலயத்தின் சிற்பங்களை உண்மையாகப் பார்த்து முடிப்பதற்கு ஒரு மாதமோ அதற்கு மேலோ கூட ஆகும். ஒவ்வொரு கணுவிலும் சிற்பங்களும் செதுக்கு வேலைகளும் நிறைந்த கனவுவெளிகள் அவை
இதன் பெருமை என்னவென்றால் இக்கற்கள் நீரில் மிதக்கும் தன்மை [FLOATING BRICKS] கொண்டவை என்பதுதான். ஆயிரம் வருடங்கள் முன்பே நமது நாட்டில் இத்தகைய கலைஞர்கள் இருந்தார்கள் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். அந்த நாளிலேயே நமது கட்டிடக்கலையை மன்னர்கள் எப்படி போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனது பெருமையால் நிரம்புகிறது, எத்தகைய நாட்டில் நாம் வாழ்கிறோம் என கர்வமாகக் கூட இருக்கிறது
ஒவ்வொரு தூணிலும் நாட்டியக்கலையின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் வடித்திருப்பதைக் காணக் கண் கோடி வேண்டும். ஒரே கல்லில் எத்தனை அருமையாக பொறுமையாக செதுக்கியுள்ளார்கள் ஒரு நாள் முழுமையும் கூட போதாது அதனை கண்டு களிக்க.
நமது தென்னிந்திய மனம் கருமையின் அழகை காணப்பழகியது. செதுக்கி எடுக்கப்பட்ட அழகிய கரிய முகம் நமக்கு மானுட முகமல்ல, நம்மை ஆளும் அன்னை முகம். ருத்ரமாதேவி எப்படி இருப்பாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் கரிய ஓங்கிய உடல் கொண்ட ஒர் அன்னையாக நான் அவர்களை உருவகித்திருந்தேன். சமீபத்தில் ருத்ரமாதேவி என்று ஒரு படம் வந்தபோது அதில் வெண்ணிறமான அனுஷ்கா கதாநாயகியாக நடித்திருந்தார். நூற்றுக்கணக்கான முறை அந்த விளம்பரங்களை பார்த்தும் கூட அது ருத்ரமாதேவி என்று எனக்குத் தோன்றவே இல்லை.
ராமப்பா கோயில் தூண்களில் கரிய அழகிகளின் சிலைகளைப் பார்த்துக் கொண்டு வண்டுபோலச் சுற்றிவந்தேன். செவிகளும் தோலும் மூக்கும் நாவும் செயலிழந்துவிட விழிகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலை அது. சிற்பங்களைக் கூர்ந்து பார்க்கும் போது சிற்பங்கள் நம்மை பார்க்க ஆரம்பிக்கும் கணம் ஒன்று வரும், அதன் பிறகு சிற்பங்களிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு சிற்பமும் ஓர் உணர்வைக் கொண்டிருக்கும். அவற்றின் உதடுகளில் ஒரு சொல் உறைந்திருக்கும். அவர்களின் விழிகளில் உயிரின் ஒளி வந்து நிற்கும்
அழகிகள்! இறுகி ஒல்கிய சிற்றிடைகள்,பணைத்தோள்கள், நீண்ட பெருங்கைகள். மலரிதழ்கள் போல் நெளிந்து முத்திரை காட்டும் விரல்கள், குமிண் உதடுகள், ஒளி பரவிய கன்னங்கள், குழையணிந்த காதுகள், சரிந்த பெருங்கொண்டைகள். பெண்ணுடலின் அழகு குழைவுகளில் நதி போல. ஒவ்வொரு வளைவும் அணைத்துக் கொள்ள விரும்பும் அழைப்பு. அழகு என்றும் அன்னையின் கனிவு என்றும் ஒரே சமயம் தம்மைக்காட்டும் கற்பெண்கள்.
மானுடப்பெண்ணின் உடலில் அவ்வழகு இருக்கக்கூடும். ஆனால் எப்போதும் அல்ல. அவள் உண்பதும் உறங்குவதும் சலிப்பதும் துயர் கொள்வதும் இருக்கலாம். அவள் அழகு அவ்வுடலில் உச்சம் கொள்ளும் ஒரு கணத்தை அழியாது நிலைக்க வைத்தவை இச்சிற்பங்கள். கோபுரத்தின் கலசம் மட்டும் என மானுடப் பெண்ணை நாம் இப்படி தூய அழகு வடிவில் பார்க்க முடிவதில்லை. கலை அவளிடம் இருந்த மானுடத்தன்மை அகற்றி அவ்வழகை மட்டும் எடுத்து கல்லில் அமைத்த பின்னர் அவள் பெண்ணல்ல, தெய்வம்.
சிவனுக்கு எதிரில் ஒரு நந்தி தேவரின் சிலை மிக அழகு அதனை [ALERT NANDHI] என்று சொல்கிறார்கள். அதன் ஒரு செவி மாத்திரம் சிவனின் பக்கம் திரும்பினாற்போல் காணப்படுகிறது. அது சிவனின் கட்டளைக்காகக் காத்திருப்பதுபோல் காட்சியளிக்கிறது
பெரிய நந்தி அதன் மேல் செதுக்கியிருக்கும் நகைகளையும் மணியையும் பார்க்கவே நமக்கு நேரம் போதாது. பெரிய பிரகாரம். அந்நாட்களில் கட்டப்பட்ட உயரமான படிகள். தினமும் ஏறி இறங்கினால் போதும் நமது மூட்டுவலி துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவிடும். வயதானவர்கள்கூட ஏறி இறங்குகிறார்கள்
நடராஜ ராமகிருஷ்ணா என்பவர் எழுதிய சிவதாண்டவ நாட்டியம் மற்றும் ஆந்திர நாட்டியம் என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு அதன் நாட்டிய முத்திரைகளை வெகு அழகாக செதுக்கியிருப்பதை எத்தனை வர்ணித்தாலும் போதாது என்பதுதான் என் எண்ணம். நீண்ட நேரம் ரசித்து பார்த்த பின்பும் மனமில்லாமலே அங்கிருந்து கிளம்பினோம்.
இந்த ஆலயத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. நிச்சயமாக தனி தெலுங்கானா மாநிலத்தால் கிடைத்த ஆகப்பெரும் நன்மை இதுதான். இந்த உலக அங்கீகாரத்திற்காக உண்மையாகவே மெனக்கெட்டு இருக்கிறார்கள் இங்குள்ள மந்திரிகள். இந்த செய்தி கேட்டவுடன் மனம் துள்ளிக்குதித்தது
No comments:
Post a Comment