குடைமிளகாய் வைத்து அட்டகாசமான மசாலா தோசை
தேவையான பொருட்கள்:
🫑குடை மிளகாய் – 2, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, தோசை மாவு – ஒரு கப், சீஸ் – இரண்டு துண்டுகள். -
செய்முறை:
🫑முதலில் 2 வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
🫑 பின்னர் இரண்டு குடைமிளகாயை காய் துருவல் பயன்படுத்தி பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
🫑- பின்னர் ஒரு ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவை ஐந்து நிமிடம் நன்றாக வதங்கிய பின்னர், இவற்றுடன் துருவி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து, அடுப்பை அதிக தீயில் வைத்து, 3 நிமிடம் கலந்து விட்டாலே போதும், குடை மிளகாய் நன்றாக வெந்து விடும். பிறகு இறுதியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் கொத்தமல்லி தழை தூவி கலந்து விட்டு, இந்த மசாலாவை கீழே இறக்க வேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து, இரண்டு கரண்டி தோசை மாவு ஊற்றி, தோசை சுட வேண்டும். பிறகு அரைப் பக்க தோசையின் மீது, செய்து வைத்துள்ள மசாலாவிலிருந்து 2 ஸ்பூன் மசாலாவை எடுத்து பரப்பிவிட்டு, அதன் மீது சிறிதளவு சீஸை துருவி விட வேண்டும். பின்னர் தோசையை இரண்டாக மடித்து இரண்டு பக்கமும் நன்றாக வெந்தவுடன் சுட சுட பரிமாறி கொடுத்து பாருங்கள்.
No comments:
Post a Comment