8. மழை மோகம் (சிசீ 9) #ganeshamarkalam
மழைக்காலம்னாலே மனசு அலைபாயும். சிலருக்கு சோகமா ஃபீல் ஆலாம். சிலருக்கு அதுவும் தமிழ்நாட்டுக்காராளுக்கு வருஷம்பூரா தண்ணீர் கஷ்டங்களும் வெக்கயுமா கடந்து வந்தவாளுக்கு குளுகுளூன்னு குதூகலமா இருக்கலாம். எனக்கு மழைக்காலத்திலும் ஷாப்பிங் செய்யப் பிடிக்கும். ஏன்னு தெரியலை. கவலைப் படவுமில்லை.
மழையானாலும் வெளீல கிளம்பிப் போணம். குடைய வாகா பிடிச்சுண்டு கட்டிண்ட புடவைய நாசூக்கா சேர்த்து ஒரு கையில் ஃபால்ஸ்கூட நனைஞ்சுடாம, அதே சமயத்தில் வழுக்கி விட்டுடாம பாத்துப் பாத்து நடந்து தெருக்களில் யாரெல்லாம் என்ன செய்யரான்னு பாத்துண்டே கடைகளை சுத்துவது பிடிச்சிருக்கு. கொட்டோ கொட்டூன்னு கொட்டித்துன்னா கஷ்டம். நீர் தேங்கிண்டு, கால் வைக்கும் இடத்தில் என்ன ஆபத்து இருக்குன்னு தெரியாம. போன வருஷம் அப்படித்தான் திநகரில், வடக்கு உஸ்மான் சாலையில் ஆபீஸுக்குப் போயிட்டு போயிண்டிருந்த இளம் வயசுப்பெண் ஒருத்தி தொறந்து வச்சிருந்த மேன்ஹோலுக்குள் சுழிச்சுண்டே ஓடின தண்ணீரை சட்டை செய்யாம கால் வைக்க க்ஷணமா காணாமப்போய், பூமாதேவி சீதைய ஸ்வீகரிச்சுட்டாப்போல. 2நா கழிச்சு மழைநீர் வடிஞ்சதும் பாடிய துழாவி எடுத்த செய்தி எல்லாரையும் உலுக்கிப் போட்டதே!
வானிலை அறிக்கையப் பாப்பேன், மழைன்னு ஊர்ஜிதப் படுத்திண்டு குடையோட கிளம்பிடுவது வழக்கம். சீசன் முடிஞ்சும் கடைசியா இன்னும் கொஞ்சம் பெஞ்சுட்டுப் போரேனேன்னு போயிண்டேயிருக்கும் மேகம் பொழிஞ்சிண்டிருக்கப்போ செய்யும் ஷாப்பிங்கின் சுகமே அலாதி.
என்னைப் போலவே வைதேகி. “மொத கோஸ் கொட்டித் தீத்து அடுத்த லோ ப்ரெஷர் ஃபார்ம் ஆகிண்டிருக்க, இன்னைக்கு நாளைக்கும் மிதமா மழைனு அறிக்கை விட்ருக்கான் இன்னைக்கு ஷாப்பிங்க் போலாமாடீ சுகந்தீ?” போன் செஞ்சா. அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் நான் 3ஆவது மாடி அவள் 8ஆவது. “இஃப் யூ ஆர் கேரன்டீயிங்க் ரைன், தென் ஐ ஏம் கேம்”. ஜோரா ட்ரெஸ் செஞ்சுண்டு கிளம்பியாச்சு.
அஷோக் பில்லர்லேந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் போகும் அம்பேத்கர் ரொடில் ஜெயின் ஆகான்ஷா. ஊருக்குள் மொதல்ல வந்த ஜெயின் அப்பார்ட்மென்ட். அப்பரம் நிறைய வந்தாச்சு. பாஷா இல்லைன்னாலும் சென்ட்ரல். மழைத் தூரலில் அப்படியே நடந்து ப்ரிந்தாவன் ஸ்ட்ரீட் போயிடலாம். அங்க ஷேர் ஆட்டோ கிடைக்கும் பாண்டிபஜாரில் எங்கேயாவது இறங்கி காலாரா விண்டோ ஷாப்பிங்க் செஞ்சுண்டே வந்தா கண்ணுக்குப் பிடிச்சதை வாங்கிப் போட்டுண்டு. எனக்கும் வைதேகிக்கும் இதுதான் வாங்கணும்னு இல்லை. ஆனா வரச்சே ரெண்டு கையிலேயும் நிறைய பைகளோட ஆட்டோவில் ஏறிண்டுதான் வருவம்.
ஷாப்பிங்க் தவிர, மழையில் வம்பளத்துண்டே போவதும் அப்படியே பேச்சு வாக்கில் எங்களை அண்டியிருக்கும் சிலபல பிர்ச்சனைகளை அலசுவதும் நன்னா இருக்கு. வைதேகி என்னைவிட வளவள. எங்காத்து மாமா சொல்லுவர், “உனக்கு சரியான ஜோடி”.
அப்பார்ட்மென்ட் அசோஸியேஷன் மீட்டிங்கில்தான் இவளை மொதல்ல சந்திச்சேன். பேஸ்மென்ட்ல் ஒரு ஜிம் இருக்கு. நன்னா வச்சிருக்கா. எப்பப் போனாலும் ஆம்பள பசங்கதான். சிலருக்கு வேண்டப் பட்டவா தெரிஞ்சவானு அப்பார்ட்மென்டை சேராதவாளும் வரானு கம்ப்ளெயின்ட். குழப்பம். வைதேகி எழுந்துண்டு பலமா கைதட்டி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தத பாக்கணும். “தினம் கார்த்தால 9க்கு மேல ஜிம் இஸ் ரிசெர்வெட் ஃபார் விமன். எனி அப்ஜெக்ஷன்?” எவனும் வாயத் தொறக்கலை. “ஜிம் யூஸ் செய்ய ஐடி கார்ட் சிஸ்டம் வரணம். வெளீலேந்து வரவா மாசம் இத்தனைன்னு கட்டிடணம்” இவள் சொல்ல எல்லாத்தையும் பும்பூம் மாடுபோல் தலைய ஆட்டிண்டே எல்லாரும் ஒத்துண்டா. அடுத்த எலெக்ஷணில் இவளை ஜாயின்ட் செக்ரடரியா அப்போசிஷன் இல்லாம தெர்ந்தெடுத்துட்டம்.
காதுகிட்ட “இந்த ஆம்னாட்டிகளை அடக்கி வைக்கணம்னு எங்கம்மா சொல்லிருக்கா”. தன்னை அறிமுகப்படுத்திக்க நானும் அவளையும் அவள் செய்கையையும் ஆமோதிச்சு பாராட்ட அன்னீலேந்து நெறுங்கிய இணை பிரியாத தோழிகளாகிட்டம். பழப்பழக இவளோட விருப்பமான பொழுது போக்குகளும் தெரியவர இப்படி மழையில் சேர்ந்து சுத்த ஆரம்பிக்கன்னு போன 4 வருஷமா நடந்திண்டிருக்கு. இன்னுமிவளைப் பத்தி பலது தெரிஞ்சுக்கணம்கிராப் போல் வைதேகி இன்டரெஸ்டிங்க் பெண்மணி.
ஆத்துக்காரர் ரெயில்வேயிஸில் இருந்துட்டு வாலன்டரி வாங்கிண்டுட்டராம். அவரோட வயசான அப்பா அம்மா ஸ்ரீரங்கத்தில் இவள் மச்சினனோட இருப்பதால் அங்கே அடிக்கடி போய் பாத்துட்டு வருவர். அப்படிப் போரச்சேல்லாம் இவள் தனியா எங்காத்துக்கு வந்துடுவள். நான் சமைச்சு வச்சதில் பாதிக்கு மேல் காலிசெஞ்சுட்டு உனக்கு ராத்ரீக்கு நான் ஸ்விக்கீல ஆர்டெர் செய்யரேன்னு செய்வள். இவளுக்கு குழந்தைகள் கிடையாது. அதனால் செமிப்பு அதிகம். இந்த ஃப்ளேட் தவிர கோயமுத்தூர்ல ஒரு வீடும் அங்கேந்து வாடகையும் வரது. சிலவுன்னு பார்த்தா மனசுக்குப் பிடிச்சதை ஷாப்பிங்க் செய்வதுலேயே.
இந்த வாரம் வைதேகியாத்தில் அவர் ஸ்ரீரங்கம் போயாச்சு. வர 5 நாளாகும். கார்த்தால ட்ரெட்மில் செஞ்சுட்டு எனக்கு போன் பண்ணினா. கிளம்பி ரத்தினம்மாள் தெருவில் வந்திண்டிருக்கம். மழை. ஆஹான்னு குடைய விரிச்சாச்சு. மழை பெய்யரச்சே பைக் வாசிகள் ரோட்டில் கம்மி. அதனால் தெகிரியமா இவள் காலார நட்ட நடு ரோடில் நடப்பா. இந்தத் தெரு ஒன்வேயா வேற ஆகியாச்சா எதுத்தாப்போல் ஏதாவது வந்தா நகந்து வழிவிடலாம்னுட்டு ஹாய்யா பேசிண்டே போய்ண்டிருக்கம். நேரப் போன தாம்பையா தெருவில் திரும்பி ப்ரிந்தாவன் ஸ்ட்ரீட் சப்வே. அங்கே ஷேர் ஆட்டோ வருவான். இந்தண்டை போனா ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினியோடது
“ரஜினி எவ்ளோ காசு வச்சிப்பார்டீ சுகந்தி?” “எனக்கென்ன தெரியும்? 500கோடியா? ஒரு படத்துக்கு 70 வாங்க ஆரம்பிச்சு ரெம்ப வருஷமாச்சு. படையப்பாக்கு அப்பரம் காசு மழைதான்”. “அத்தனை காசு நம்பளுக்கும் இருந்தா எத்தனை ஷாபிங்க் செய்யலாம்?” ஆஹான்னு பட்டது. தங்கக் குடை பிடிச்சுண்டு போய்ட்டு வரச்சே கன்டெயினர் லாரீல போட்டு எடுத்துண்டு வரணம். ஆனா காசு எவ்ளோ இருந்து என்னத்தை பண்ண? உடம்புக்கு முடியலை. செக்கப், சர்ஜரீன்னு. காசை மட்டும் வச்சிண்டு பாடாவதி படத்தை ஓட வைக்க முடியுமா? காசுனால ஆரோக்கியத்தயும் நீடிச்ச சந்தோஷத்தையும் வரவழைச்சுக்க முடியாதுடீ!”
ஆகக்கூடி இந்த டாப்பிக் இப்படியாக முடிக்கப்பட்டது. ஏன்னா வைதேகியோட மாமனார் மாமியார் மிடிள் கிளாஸ் குடும்பம்னாலும் 90+ இன்னும் கல்லுமாதிரி நடமாடிண்டு ஆத்துக்கு வரவாளையெல்லாம் எழுந்து நின்னு ஆசீர்வாதம் செஞ்சுண்டு. இங்கே வந்திருந்தப்போ நானும் நமஸ்காரம் பண்ணப் போயிருந்தேன். இருந்தாலும் எங்க ரெண்டுபேருக்கும் காசுமேல் மோகம் குறைஞ்சுடலை. தோலில் தொங்கற பையில் ஒரு 3000 இருக்குமா? டெபிட் கார்ட் இருக்கு. 23ஆயிரம் அக்கவுன்டில். விட்டுக் கடன் அடைச்சாச்சு ஆனா பென்ஷன் பணத்தில்தான் பூவா. நமக்கும் யாராவது ரெம்ப வேண்டாம் 2 கோடி தரேன்னா நடிக்கப் போயிடலாம். என்னமா சந்தோஷமா இருக்காப்போல் தினம் தினம் நடிக்கரம்! அப்ளாஸ் அள்ளும்.
ஷேர் ஆட்டோ ஏறரச்சே ட்ரைவர் தெரிஞ்சவன் கேக்கரான் “ஏம்மா இம்புட்டு மழையிலும் குடையப் பிடிச்சிட்டு கிளம்பிட்டீங்க?” எனக்கு மின்னாடி வைதேகி “நாங்க கிளம்பலைன்னா உனக்கு வருமானம் ஏது? தெருவப் பாத்து ஜாக்கிரதையா ஓட்டு. சப்வேல தண்ணீர் இருந்தா இறங்காதே.” அந்தண்டை போனதும் இங்கேயே இறங்கிக்கலாம்டீ, GRT போலாம்.” என்ன இவள் நகை ஷாபிங்கா? என் மனசில் ஓடும் எண்ணங்களை புரிஞ்சிண்டு “வாடி சும்மா.” வடக்கு உஸ்மான் ரோடு ஆரம்பத்தில் பாலத்துக்கு அடீல மெட்ரோ ஷூக்கு எதுக்கால நகைக்கடை. நேர வைர செக்ஷண் எங்கேன்னு விசாரிக்கரா.
எனக்குத் தெரியும் நகைக்கடைல விண்டோ ஷாப்பிங்க் செய்யன்னு பலபேர் வரா. அவா கொடுக்கர டீ இல்லை கூல்டிரிங்க்ஸ் குடிச்சிண்டே செக்ஷன் செக்ஷனா சுத்தலாம். வேணும்னா வெள்ளீல எதாவது சின்னதா வாங்கிக்கலாம். சொப்பு மாதிரி கிண்ணி ஆயிரத்தில் அடங்கும். பாப்பம். அடுத்த மாசம் இவரோட சொந்தத்தில் ஒரு கல்யாணம். வச்சுக் கொடுக்க ஆகும். சின்னதா கிஃப்ட் பேக் செஞ்சு தந்துடலாம். என்னமோ ஏதோன்னு ஆசையா அவா பிரிச்சு ஐயே இதுதானான்னு கண்டுபிடிக்கக்குள்ள நாம சாப்டூட்டு ஆத்துக்கு வந்துடுவம். 2 மணிநேரம் 1 ஃபேன்டா, 2 காபிக்கப்பரம் அதுதான் செஞ்சம்.
வெளீல வந்தா இன்னும் மழைவிடலை. “வாடீ போதீஸ் போலாம்” சரீன்னு மறுப்புச் சொல்லாம கூட வந்தா. அங்கே ட்ரயம்ப் உள்ளாடைகள் எங்கே கிடைக்கும்னு விசாரிச்சுண்டே போய் சட்டுபுட்டுன்னு 2 செட் வாங்கிண்டா. வெவ்வேற கலரில். ஒவ்வொண்ணூம் 800+. “அமேஜானில் சீப்பா இருக்குமேடி?” “அந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் என்னடீ மஜா? லூஸா நீ?” “ரெண்டு போதுமா?” “இன்னும் ரெண்டு வேணும். அதுக்கு மழை நிக்கரத்துக்குள் அடுத்த வாரமும் வரலாம்! இன்னைக்கு இன்னும் ஒண்ணு பாக்கி வா பக்கத்துல சுந்தர் மெட்டல்ஸ் போணம்”
அந்தக் கடைக்கு நான் ஃபர்ஸ்ட் போரேன். இரும்புச் சாமான் வாங்கப் போராளான்னு யோசிச்சிண்டே போனா சென்னை சில்க்ஸ் தாண்டினதும் வந்தது. 3 மாடீல நிறைய சமாச்சாரங்கள், வீட்டுக்கு அத்தியாவசிய சமாச்சாரங்கள், மெட்டல், பிளாஸ்டிக்குன்னு. அழகழகா சம்படங்கள், துணி உலத்த கம்பீ, ஃப்ரிட்ஜுக்குள் வச்சுக்க டுப்பர்வேர் மாதிரி மாடுலர் பர்த்தன். பாத்ததெல்லாம் நம்மாத்ல இருந்தா எவ்ளோ நன்னா இருக்கும்னு கொண்டுவந்த ஒரு கட்டைப் பை நிறைய சிலதை வாங்கி அடச்சுண்டாச்சு. இப்போ எங்க ரெண்டு பேர் கையிலேயும் ரெவ்வெண்டு பை. குடை பிடிச்சுக்க ஒரு கை மூணாவதா இருந்தாத் தேவலையோன்னு. அதான் காளி, துர்கை அவதாரங்களுக்கு 8லேந்து 18 கை வரைக்கும் வச்சிண்டிருக்கான்னு பட்டது.
வெளீல வந்துட்டு ஆத்துக்கு நடந்தே போலாமா இல்லை ஆட்டோ பிடிக்கலாமான்னு யோசனை. “ஏண்டி ஒண்ணுமே சாப்பிடலையே?” நாந்தான் ஞாபகப் படுத்தரேன். “வா உஸ்மான் ரோடுல சரவணபவன் இருந்ததே அவனை தள்ளீவிட்டூட்டு அங்கே முருகன் இட்லீக் கடை வந்தாச்சு போனா ஸ்னேக்ஸ் கிடைக்கும்.” எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கா. சரவண தெரியும் அது முருகனா மாறிட்டது இவளுக்கு தெரிஞ்சிருக்கு! போனம். போரப்பவே “நான் மைசூர் போண்டா நீ?” “நான் பஜ்ஜீ இல்லை கட்லெட்”
ரெங்கநாதன் தெரு முட்ர இடத்தில் வழிய மறிச்சுண்டு ஏழைப்பெண் கைய நீட்டி யாசகம். 3 நாளா மழைம்மா, மாங்கா பத்தை கடை போட முடியலை, ஒண்ணும் வியாபாரம் ஆலை. குடுத்தீங்கன்னா ஒருவேளை சாப்டுக்கிடுவேன்.” 10ரூபாய்த்தாளை கொடுத்தேன். கட்லெட் சாப்பிடரச்சே மனசுக்குள் குடைச்சல். 10 ரூபாயில் அவள் என்ன செய்வா?
“மழைன்னா எத்தனை பேருக்கு சங்கடமும் வருத்தமும் பாத்தியாடீ வைதேகி? நாம கொண்டாடுவதை அவா எப்படி எதிர்கொள்ளரான்னு நினைச்சுப் பாக்கத் தவறிட்டம்.” “உண்மைதான். மழைன்னு அறிவிப்பு வந்ததும் எத்தனையோ லட்சக் கணக்கானவாளுக்கு அவா தினப்படி சம்பாத்யம் கெட்டுப்போரது நமக்கு யூகிக்க முடியலை. அதுலேந்து அவா மீண்டு வர வாரங்களாகும். அதுமட்டுமா, ஆட்டோ, டேக்ஸி ஓட்டரவா என்னமோ ஜாஸ்தி சார்ஜ் செய்யரான்னும் மழைய தங்களுக்கு சாதகமா பயன்படுத்திண்டு பொதுமக்களை ஃப்ளீஸ் செய்வான்னும் சொல்லுவம், ஆனா மழையில் அவா வாகனம் கெட்டுப்போவதும், ரெம்பவே கம்மியாத்தான் சவாரி வருவதும் மறந்துடுவம். விளைஞ்ச காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு போகமுடியாம, போனது விக்கப்படாம கெட்டுப்போகி. முக்கியமா தலைக்கு மேல் கூரையில்லாதவா படும் பாடு?”
“பணக்காராளும், நடுத்தர வர்க்கமும்கூட அடடா இன்னைக்கு அத்தச் செய்யலாம் இத்தப் பண்ணலாம்னு இருந்தம் கெட்டுப்போச்சேன்னு அங்கலாய்ப்பம்.” என் பங்குக்கு நான்
“ஆமாம் சுகந்தி, மழைன்னா யாருக்கும் மோகமில்லை. வெய்யல் தண்ணீக் கஷ்டம்னெல்லாம் புலம்பிட்டு நாமளே சின்னத் தூரல்னதும் குடைய விரிக்கரம். ஒரு சிலர் நம்மைப்போல் ஜாலியா சுத்தக் கிளம்பரமே தவிர 98% நனைஞ்சுடப் பிடாதுன்னு. அப்போ மழைய யாரும் விரும்பலைன்னு வச்சுக்கலாம்”
“விவசாயிக்கு டயத்துக்கு பெய்யர மழைக்குமேல மட்டும் மோகம். அதுவே காலம் தவறி தறிகெட்டுப் பெஞ்சா கோவம். ஆனா பூமியில் எல்லாம் தழைத்தோங்க பொழியும் மழைய மழைக்காகவே மோகிக்கக் கத்துக்கணம்” வைதேகி சொல்ல நான் கேட்டுண்டே வெளீல வந்தம். மழை நின்னாப்போல். “வாடி இன்னிக்கு ஷாப்பிங்க் முடிஞ்சது”
10 தப்படி நடக்கலை சடசடன்னு திரும்ப பிடிச்சுண்டது. “வைதேகி! வந்தது வந்தம் சென்னை சில்க்ஸில் எதாவது புதுசா வச்சிருக்கானா பாக்கலாம்.” ஆமாம்னு ஆமோதிச்சுண்டே மோகத்தோட வந்தா.
No comments:
Post a Comment