Thursday, February 24, 2022

திருநனிபள்ளி நற்றுணையப்பர்

 l: இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்

 தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு என்றும் ஸ்வாமி துணை நிற்பார் 🙏

சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்கள்

106. திருநனிபள்ளி

சிவஸ்தலம் பெயர்

திருநனிபள்ளி (தற்போது இத்தலம் புஞ்சை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது)

இறைவன் பெயர்

நற்றுணையப்பர்

இறைவி பெயர்

மலையாள் மடந்தை, பர்வதராஜ புத்திரி

தேவாரப் பாடல்கள்

சம்பந்தர்

காரைகள் கூகைமுல்லை

அப்பர் 

முற்றுணை யாயினானை

சுந்தரர் 

ஆதியன் ஆதிரையன்

எப்படிப் போவது

மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலை மார்க்கத்தில் உள்ள திருசெம்பொன்பள்ளி சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தூரத்தில் இத்தலம் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில்
புஞ்சை (திருநனிபள்ளி)
கிடாரங்கொண்டான் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609304
தொடர்புக்கு: 04364 - 283188

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

பாலையாக இருந்த இவ்வூரைச் சம்பந்தர் பதிகம் பாடி, நெய்தல் நிலமாக்கிப், பின்னர் மருத நில வளம் பெறுமாறு செய்தார்.

திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம் திருநனிபள்ளி. சம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான அருளால் பெற்றாளம் பெற்றதையும் கேள்விப்பட்ட அவ்வூர் அந்தணர்கள் சம்பந்தர் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் என்று கோரினர். அதற்கு இசைந்த திருஞானசம்பந்தர் தன் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தார். ஆளுடைய பிள்ளையார் கால்கள் நோக நடப்பதைக் கண்ட அவரது தந்தை சிவபாத இருதயர் ஞானசம்பந்தரை தனது தோளில் அமர்த்திக் கொண்டு சென்றார். தந்தையால் இது தான் திருநனிபள்ளி தலம் என்று கூற "காரைகள் கூகைமுல்லை களவாக ஈகை" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து இறைவனை வணங்கிப் போற்றினார். இப்பதிகமே பாலை நிலமாக இருந்த திருநனிபள்ளயை அவ்வூர் வாழ் மக்கள் வேண்டுகோளின்படி நெய்தல் நிலமாக மாற்றியருளிய பதிகம் என்று கூறப்படுகிறது. தனது தந்தை தோள் மீதமர்ந்து திருநனிபள்ளி அடைந்ததை சம்பந்தர் தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.

கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்

படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்

இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் இசையா லுரைத்த பனுவல்


நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே

பொழிப்புரை :

கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும்

உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும்

பதியின்கண் நால்வேத, ஆறங்கங் களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய  ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப் பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும்.

சம்பந்தர் தேவாரம்*

திருநனிபள்ளி திருக்கடைக்காப்பு

[2/84/1-3 - 22/02/2022]

குறிப்பு: பொன்செய் என்று தற்காலத்தில் வழங்கப்படும் இத்தலம் மயிலாடுதுறைக்கு அருகே செம்பனார்கோயிலுக்கு வடகிழக்கே 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

கவுணியர் குலத்தில் உதித்த காதலனுக்கு வேறுபல காப்பு மிகை என்று நீறுதிரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்த பண்புடைத் தாயாராம் பகவதி அம்மையார் அவதரித்த திருத்தலம் இந்நனிபள்ளியாகும்🙏🏻

உவமையிலாக் கலைஞானம் உணர்வறிய மெய்ஞானம் பெற்ற தவமுதல்வர் சம்பந்தப் பெருமான் திருக்கோலக்காவினை வணங்கி இருந்த நாட்களில் திருநனிபள்ளி அடியார்கள் சம்பந்தப்பிள்ளையாரின் திருமுன் பணிந்து திங்கள் கொழுந்தணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே எழுந்தருள வேண்டும்🙏🏻 என்று பணிந்து நின்றனர்

உடன் நனிபள்ளி நோக்கி புறப்பட்ட புகலிவித்தகரின் பாத தாமரைகள் நோவது கண்டு மாதவம் செய்த தாதையாராம் சிவபாதவிருதையர் பிள்ளையாரை அணைத்துத் தூக்கி தோளின் மீது இருத்தி நடந்தனர்🙏🏻👨‍👦

புகலிவேந்தர் திருநன்னிபள்ளியை நெருங்கும் சமயம் வான் அணையும் மலர்ச்சோலை தோன்றுவது எப்பதி?? என்று வினவ

பானல் வயல் திருநன்னி பள்ளி எனத் தாதையார் சொலக்கேட்ட கழுமலவேந்தர் காரைகள் கூகை முல்லை என்று எடுத்து நனிபள்ளி போலும் நமர்காள் என்று அடியார்களை நோக்கி பாடியப் பதிகப் பாடல்கள் இவை

நாரியோர் பாகர் வைகும் நனிபள்ளி உள்குவார் தம் பேரிடர் கெடுதற்கு ஆணை நமதே என்று பதிகப்பலன் கூறி திருக்கடைக்காப்பு சாத்திய இப்பதிகத்தில்தான் பிள்ளையார் முதன்முறையாக ஆணைநமதே என்று இறையருளுக்கு சான்றளிக்கிறார்கள்

ஆணை நமது என்ற பிள்ளையார் என்றே சோழர்காலக் கல்வெட்டுகள் பல திருஞானமுண்ட செல்வரை குறித்து மகிழ்தல் ஈங்கு நோக்கத் தக்கதாம்

அத்தர் பியன்மேல இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் என்று திருக்கடைக்காப்பு பாடலில் தாம் தந்தையின் தோளில் அமர்ந்தபடி பாடிய பதிகம் இது என்று பெருமான் காட்சி பதிவும் செய்வது எண்ணி எண்ணி இன்புறத் தக்கதாம்🙏🏻

பண்: பியந்தைக் காந்தாரம்

பாடல்

காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச்

சூரைகள் பம்மிவிம்மு சுடுகாடமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்

தேரைகளாரை சாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள

நாரைகள் ஆரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்

சடையிடைப் புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணி அயலே

இடையிடைவைத்ததொக்கு மலர்தொத்து மாலை யிறைவன் னிடங்கொள் பதிதான்

மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து மணநாறு நீலம் மலரும்

நடையுடை யன்னம்வைகு புனலம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள்.

பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபா டிலாத பெருமான்

கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை யிடமாய காதல் நகர்தான்

வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் விடுபோ தலர்ந்த விரைசூழ் நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்

பொருள்

நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை, ஈகை, படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச் சூரை செறிந்த சுடுகாட்டை விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய சோலைகள் சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை மிதித்துத்துள்ள, அதனைக் கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும் நனிபள்ளி அது போலும்

சடையிடைப்புக்கு ஒடுங்கியுள்ளதாய்த் தங்கிய கங்கையையும், வளரும் பிறையாகிய கண்ணியையும், இடையிடையே விரவிய கொத்தாகிய மாலையையும் உடைய இறைவன் இடங்கொண்டருளும் பதி, மடையிடையே வாளைமீன்கள் துள்ள, முகிழ்த்துள்ள வாய் விரிந்து மணம் வீசும் குவளைமலர்களுடையன வாய் நடையில் சிறந்த அன்னங்கள் வாழும் நீர்நிலைகளை உடைய தோட்டங்கள் சூழ்ந்த நனிபள்ளியாகும்.

அடியவர்கள் தங்களுக்குக் கிடைத்த மலர்களைக் கொண்டு வழிபட அதனை ஒழியாது ஏற்றருளும் தலைவனும், கருங்குவளைமலர் போலத்தனது கண்டம் நிறம் உறுமாறு விடத்தை உண்ட காளையும் ஆகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், வண்டுகள் தங்கித் தேன் உண்டு விட்ட வெறுமலர்களோடு கூடி விசைத்து எழும் கொம்புகளில் விரியும் பருவத்துள்ள மணம் பொருந்திய மலர்களின் தேன் உண்டு அகஇதழ்களில் வண்டுகள் உறங்கும் பொழில்களை உடைய நனிபள்ளியாகும்

 #திருச்சிற்றம்பலம்

#திருஞானசம்பந்தர்

             பொற்றாளம் பெற்றது:

#########################

உமையம்மையார் அளித்த ஞானவாரமுதம் உண்டு திரு நெறிய தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்து மறுநாட் காலையில் துயிலுணர்ந் தெழுந்து நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கிப் போற்றி, சீகாழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை உடையவ ராய் அத்தலத்தை அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று `மடையில் வாளை` எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தைத் தம் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். 

கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம் பந்தருக்கு அளித்தருளினார். 

#ஞானசம்பந்தர் அத்தாளத்தைத் தலை மேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரையாக இது அமைந்தது.

திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீகாழி திரும்பிய ஞானசம்பந்தர் நேரே ஆலயம் சென்று `பூவார் கொன்றை` எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடிப் போற்றித் தம் மாளிகையை அடைந்தார்.

          திருநனிபள்ளி யாத்திரை:

     #########################

ஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த நனிபள்ளியிலுள்ள அந்தணர்கள், அவர் மூவாண்டில் சிவஞானம் பெற்றதையும் சிவபிரானால் பொற்றாளம் அருளப் பெற்றதையும் கேள்வியுற்றுத் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டுமென ஞானசம் பந்தரை வேண்டினர். 

அதற்கு இசைந்த ஞானசம்பந்தர் தோணிபுரத்து இறைவரை வணங்கி விடைபெற்றுத் தாமரை மலர் போன்ற தம் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தருளினார். 

ஆளுடைய பிள்ளையார் அடிமலர் வருந்தக் கண்ட சிவபாத இருதயர் ஞானசம்பந்தரைப் பிறர் தூக்கிச் செல்வதை விரும்பாது தாமே தன் திருத்தோளில் அமர்த்திக் கொண்டு செல்வாராயினார். 

நனிபள்ளியை அணுகிய நிலையில் ஞானசம்பந்தர் `எதிரே தோன்றும் இப்பதியாது` எனக் கேட்கத் தந்தையார் `அது தான் நனிபள்ளி` எனச் சொல்லக் கேட்டுக் `காரைகள் கூகைமுல்லை` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து வணங்கிப் போற்றி அவ்வூரின் அருகிலுள்ள தலைச்சங்காடு, சாய்க்காடு, வெண்காடு முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு மீண்டும் சீகாழிப் பதிக்குத் திரும்பி னார்.

 வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி, ஞானசம்பந்தர் வரவால் நெய்தலாய்ப் பின் மருதமாயிற்று. இது ஞானசம்பந்தர் வரலாற்றில் அமைந்த இரண்டாவது தல யாத்திரை யாகும்.

சில நாட்கள் கழித்து ஞானசம்பந்தர் மயேந்திரப்பள்ளி, குருகாவூர், முல்லை வாயில் முதலிய தலங்களைச் சென்று வணங்கி மீண்டார். இது மூன்றாவது தலயாத்திரை.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் தொடர்பு:

திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறை வனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீகாழிப் பதியை அடைந்தனர். 

அவ்விருவரின் வரவறிந்த ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீல கண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து இன்புறுத்தும் பணியை மேற்கொண்டார். 

திருஞானசம்பந்தர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றார். தென் திசைவாயில் வழியே ஆலயத்தினுட்சென்றுபேரம்பலத்தை வணங்கிக் `கற்றாங்கு எரியோம்பி` `ஆடினாய் நறுநெய்` என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார். 

அத்தலத்தில் தங்குதற்கு மனமின்றி திருவேட் களத்தில் தங்கியிருந்து நாள்தோறும் தில்லைக் கூத்தனை வழிபட்டார். அங்குத் தங்கியிருக்கும் நாட்களில் திருக்கழிப்பாலை, திருநெல் வாயில் முதலிய தலங்களை வழிபட்டார்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் தில்லையின் மேற்றிசையில் வெள்ளாற்றின் கரையிலுள்ள தலங்களை வழிபட வேண்டுமென வேண்ட ஞானசம்பந்தரும் அதற்கிசைந்து புறப்பட்டார். எருக்கத்தம் புலியூரை அடைந்தவுடன் `இத்தலம் அடியேன் பிறந்த தலம்` என யாழ்ப்பாணர் கூறக்கேட்டு மகிழ்ந்து திருக்கோயிலுக்குச் சென்று பதிகம் பாடிப்பரவினார்.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

தலம்: திருநனிபள்ளி

நான்காம் திருமுறை

திருநேரிசை

புலர்ந்தகால் பூவும் நீருங்
  கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால்
  வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரைய னாக்கிச்
  சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த
  நனிபள்ளி அடிக ளாரே.

நாவுக்கரசர் திருநனிபள்ளி போந்து,  பெருமானைப் போற்றித் திருப்பதிகம் பாடுகின்றார்.

திருநனிபள்ளி

திருஞானசம்பந்தரின் தாயார் பிறந்த தலம்.

தம் தந்தையின் தோளில் மேலிருந்து பிள்ளையார் பதிகம் பாடிய தலம்.

பாலையாக இருந்த நனிபள்ளியை நெய்தலாக பிள்ளையவர்கள் பதிகம் பாடி மாற்றினார்கள்.

சுந்தரரும் பாடியுள்ளார்.

திருஆவுடையார் கோயில் கொடுங்கையும், திருநனிபள்ளி கோடிவட்டமும்,  போரூர்ச் சிற்பங்களும்  திருவீழிமிழலை வௌவானத்தி மண்டபமும் சிறப்பு வாய்ந்தன.

மேலும் இத்திருப்பதிக 5 ஆம் பாடலில் நாவேந்தர், " வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாறே"  எனச் சமணர்கள் தமக்குக் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றினை அமுதாக்கிய வரலாற்றின் அகச் சான்று இத்தலத்திற்கு உரியது.

பதிகம்:

பத்துமோர் இரட்டி தோளான் பாரித்து மலையெடுக்கப்
பத்துமோர் இரட்டி தோள்கள் படருடம்பு அடரவூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற்கு அருள் கொடுத்தார்
பத்தர்தம் பரவி யேத்து நனிபள்ளிப் பரமனாரே.

பொருள்:

இருபது  தோள்களுடைய இராவணன் ஆரவாரித்து கயிலை மலையை எடுக்க முற்பட  அவனின் அனைத்து தோள்களும் அடரும்படி தன்விரலை ஊன்றிய பின்னர்,  அவனிசைத்த சாமவேத மறை கீதங்களைக் கேட்டுப் பரிவுடன் அருள் பாலித்தவர் சிவன்.

அவர் அடியார்களால் போற்றிப் புகழப்படும் திருநனிபள்ளி பரமனாரேயாவர்.

திருச்சிற்றம்பலம்.

கோவில் அமைப்பு: மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் ஒன்று என்ற் சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே ரிஷப வாகனத்தின் மீதமர்ந்த சிவன் பார்வதி, மூஞ்சூறு வாகனத்தின் மீதமர்ந்த விநாயகர், மயில் வாகனத்தின் மீதமர்ந்த முருகப் பெருமான் ஆகியோர் சுதைச் சிற்பங்கள் வடிவில் காட்சி அளிக்கின்றனர். உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணையப்பர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். கோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளன. கோவிலின் கருவறை நல்ல வேலைப்பாடுடையதாக அமைந்துள்ளது. இறைவன் நற்றுணையப்பர் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலங் காட்டிய கல்யாண சுந்தரேசர் கோயில் உள்ளது.

இங்கு பர்வதராஜபுத்திரி, மலையான்மடந்தை என்ற திருநாமத்தில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் அருளுகிறார். உட்பிரகாரத்தில் நால்வர், விநாயகர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. மகாமண்டபத்தில் நடராசர் சபை உள்ளது. அத்துடன் "நனிபள்ளி கோடி வட்டம்" என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோயில் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 7-ம் நாள் முதல் 13-ம் நாள் வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாணசுந்தரரை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், நற்றுணையப்பரை வணங்கினால் செல்வ செழிப்பு, குழந்தைகளின் படிப்பு சிறக்கும் என்பதும் நம்பிக்கை.

சிறப்புகள்

திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் அவதாரப் பதி.

இது, இப்பொழுது, புஞ்சை எனப்படுகிறது.

சோழர் காலக் கல்வெட்டுகள் 17ம், விஜயநகர அரசின் ஒன்றும் ஆக 18 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

#ஆணைநமதுஎன்ற_பிரான் திருநனிபள்ளி தலம் திருஞானசம்பந்தர் அம்மையார் அவதரித்த தலம்..

அந்த தலத்து திருகடைக்காப்பு செய்யுலில் "ஆணை நமதே" என்று ஞானசம்பந்தர் குறித்துள்ளார்.

"நடுஇருள் ஆடும் எந்தை நனிப்பள்ளி உள்க வினைகெடுதல் ஆணை நமதே"

என்கிறார்.

இங்கே ஒப்புமைக்காக மேலும் ஒன்றையும் சிந்திக்கலாம்.

திருமறைகாட்டில் தங்கி இருந்த திருஞானசம்பந்தரை மங்கையர்கரசியார் மதுரைக்கு வர விண்ணப்பிக்கிறார்.

ஞானசம்பந்தர் மதுரைக்கு புறப்பட எண்ணும்போது உடன் இருந்த அப்பர் சுவாமிகள்,  நாளும் கோளும் நன்றாக இல்லை ; எனவே புறப்படுதல் வேண்டா என தடுக்கிறார்.  

பிள்ளையார் "வேயுறு தோளிபங்கன்..." என தொடங்கும் கோளறு திருப்பதிகத்தை அங்கு மொழிகிறார்.

இப்பதிகத்திலும்

"ஆனசொல் மாலைஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே"

என்று பதிவு செய்கிறார்.


பிள்ளையார் ஒருவர்தான் "ஆணை நமது" என்று பாடிய பெருமான்.


ஏனெனில் அவர் இறைவனுடைய குமாரர் என்ற மகன்மை நெறியில் நின்று உய்ந்தவர் ஆதலின் உரிமையோடு உரைக்கிறார்.


மூன்றாம் திருமுறையிலும்...

"திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே."

என்றும்,  திருவேதிக்குடி பதிகத்தின் நிறைவு பாடலிலும் "ஆணை நமதே" என உரைக்கிறார்.

"வேதிகுடி யாதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே."

இவற்றால், திருஞானசம்பந்தரை "ஆணை நமதென்ற பிரான்" என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.

தருமை ஆதீன பதிப்பு 

"பன்னிரு திருமுறை விளக்கம்"

புத்தகத்திலிருந்து.....சிவ சிவ திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய சிவயநம சிவயநம

தினமும் சொல்ல 1000 கோடி கோவிலுக்கு சென்ற பலன் கிடைக்கும்



No comments:

Post a Comment