மாசி மகம்
---- ரமணி
மாசி மகம். ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரை ஜகஜ்ஜோதியாய் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் சில நாட்களுள் ஒன்று. இன்று அன்பில் சுந்தரராஜப் பெருமாளும் உத்தமர்கோவில் புருஷோத்தமரும் வந்து இங்கு அமர்ந்து கொள்ளிடத்தைப் புனிதப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
திருமங்கை மன்னன் படித்துறையில் இறங்கி, இரண்டு அல்லது மூன்று இன்ஸ்டால்மெண்ட்களாய் விளக்கு மினுக்கித் தத்தளிக்கும் கொள்ளிடத்து நீரோட்டத்தை ஊடுருவி நனைந்து சில்லிடும் பின்பனிக்கால இள இருட்டில் பெருவெட்டு மணலில் கால் புதைத்து ஆடி ஆடி நடந்து அந்த வடிவழகிய நம்பியையும் புருஷோத்தமனையும் ஸேவித்த பழையகால ஞாபகங்கள் காலையிலிருந்தே ஒருவிதமான கிறக்கத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது.
இப்போது கொள்ளிடத்தில் நீர் தள்ளி பிரம்மச்சாரியின் உடம்பில் பூணல் போல ஓடுகிறது. சின்னச்சின்னக் கூட்டமாய் பக்ஷிகள் வானத்தில் பூத்தெளித்தாற் போல பறக்கின்றன.
நேற்றே " ராக்கொண்டு வந்த " பெளர்ணமியின் விசேஷச் சந்திரன் ஒரு நாள் தேய்மானத்தோடு கீழ் வானத்தில் அஸ்வின் போட்ட டாப் ஸ்பின் போல கருஞ்சிவப்பில் சோம்பல் முறித்துக் கொண்டு சாவகாசமாக இரவு ஏழேகால் மணிக்கு உருண்டெழுகிறது. பின் சுறுசுறுப்பாகி, தங்கம் பூசிக்கொண்டு கொள்ளிடப் பெருவெளியில் மேகக் குறுக்கீடற்ற வானின் இடத்தையெல்லாம் பாரதி சொன்னது போல வந்து தழுவும் இந்த இரவின் எழிலுக்காகத்தான் கடவுள்கள் கூடக் கொள்ளிடக் கரையில் வந்திறங்கியிருக்கிறார்கள்.
எனக்கு இந்த சமயத்தில் ஒரு இருபது வருடக் காட்சிகள் கொள்ளிடத்தின் மேற்குக் கரைதாண்டி நிழலாடுகின்றன.
எத்தனையோ பெளர்ணமி இரவுகளில், இந்தப் பெரு ஆற்றின் மணலில் கால்கள் அரக்கி அரக்கி நடந்துகொண்டோ, இல்லை அமர்ந்தோ, சில நேரங்களில் படுத்துக்கொண்டோ நக்ஷத்திரங்களின் நிலவு மங்கச்செய்த கண் சிமிட்டலைப் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன்.சாதாரணமாக பகலின் உச்ச வெய்யிலில், தண்மை கரைந்துபோய், வெது வெதுப்பாகக் கொள்ளிடத்தின் பளிங்கு நீர் முழங்கால் நனைக்க ....பத்தடி தாண்டிய பின், அந்த தென்றல் மணல் பொறிகள் ஒட்டிக்கொண்ட கால்களைத் தீண்டும் நேரம் பாரதி நினைவுக்கு வருவான். மினுக்கிக் கொண்டிருக்கும் நக்ஷத்திர சரசங்களோடு மனசை லேசாக்கி அள்ளிக்கொண்டு போகும் மென்காற்று வேறு உலகில் நம்மைத் தள்ளிவிடும்
மேல் வானில் இதற்கெல்லாம் ஒற்றை சாட்சியாக இந்தத் தினங்களில் தன் வெள்ளிக் கண்களை விரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிருந்த வியாழனோ இன்று அவசர அவசரமாக மேற்கில் சூரியன் விழுந்த அரைமணிக்குள்ளேயே மறைந்துவிட்டான்.
இப்போது, ராமாயண காலத்து அரக்கனின் skeleton ஐ நிறுத்திவைத்தது மாதிரி மின்சார/ செல்போன் கோபுரங்கள் புருஷோத்தமனைக் கண்டு அலமலர்ந்து நிற்கிறது.
தண்ணீர் இல்லை என்றால் என்ன? வடிவழகிய நம்பி இங்கு வந்து குளிர்ந்திருக்கிறானே? என்று பாழாய்ப்போன மனது சமாதானம் செய்துகொள்கிறது
மாலிக்காஃபூரின் படைகள் சிதைத்துச் சிதறித்தெளித்த ரத்த வாடையும் எத்தனையோ மகான்களின் திவ்யப்ரபந்த உருக்கமும் கலந்து காலத்தில் உறைந்துகிடக்கும் நாட்களின் உன்னத சாட்சியாக ...... நீண்டு கால சர்ப்பமாய் நகர்ந்துகொண்டிருக்கும் கொள்ளிடம் எவ்வளவு பொருத்தமான இடம் இந்தச் சுந்தரமான கடவுள்களின் வருடாந்திர மீள் நினைவுகளுக்கு..! பந்தங்களும் ப்ரபந்தங்களும் நிறைந்திருந்த மணல்வெளியில் இப்போது, வண்ணக் குழல்விளக்குகள் கரகரக்கும் ஜெனரேட்டர் உபயத்தில் எரிகின்றன.
பொறிகடலையோடு பலாப்பழ வாசனையும் பூர்வ ஜன்ம வாசனையை இழுத்துக்கொண்டு வருகிறது. பலூன்களும் பஞ்சு மிட்டாயும் கூர் கீறலில் தாமரை இதழ்களாய்ப் பிரிந்த மாங்காயும் எல்லா வயதினரையும் வசீகரிக்க....மணல் மணத்தோடு இவை கலந்து பக்திக்கு வேறு வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் , கொள்ளிடத்து மணலில் பதிந்த ஸ்ரீராமானுஜுருடையதும் மற்றும் ஆழ்வார் ஆச்சார்யர்களினுடையதுமான பாதச்சுவடுகளைத் தேடி அலைகிறது என் மனம்.
No comments:
Post a Comment