Saturday, February 26, 2022

திருமண்டங்குடி ரெங்கநாதப் பெருமாள் திருக்கோயில்

 திருமண்டங்குடி, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதார ஸ்தலம், ரெங்கநாதப் பெருமாள் திருக்கோயில். ஸ்ரீரங்கத்தைப் போலவே நீரினால் சூழப்பட்ட க்ஷேத்திரம், நின்ற திருக்கோலத்தில் ரெங்கநாதரை இங்கு மட்டுமே காணலாம். வேண்டிய வரத்தை வழங்கும் ரெங்கநாதர் என்று அறியப்படுபவர், வரம் தரும் பெருமாள் என்றும் அறியப்படுகிறார்.

விப்ர நாராயணன் என்னும் நாமத்துடன் வாழ்ந்த ஆழ்வார், 14ஆவது வயதில், பாகவதர்களின் பாத தூளியே சிறந்தது என்ற உணர்வுடன், தமது பெயரை தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்று மாற்றிக் கொண்டார். ஸ்ரீரங்கத்தில் நந்தவன சேவையில் ஈடுபட்ட இவர், 55 பாசுரங்கள் அரங்கனுக்காக மட்டுமே பாடியவர். இதனால் அரங்கனுக்கு இந்த ஆழ்வாரின் மீது அதீத பாசம் எழ, அதன் விளைவாக ஆழ்வார் இரண்டு வரம் கேட்டார்: (1) நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்க வேண்டும், (2) தரிசிப்பவர்களின் இன்னல்களை நீக்க வேண்டும்.

கள்ளழகரும் வேங்கடநாதரும் இங்கே ஆழ்வாருக்கு அருகில் காட்சி தருகின்றனர். ரெங்கனுக்கு வழங்கும் திருப்பள்ளியெழுச்சி தங்களுக்கும் வேண்டும் என்று விரும்பியதால், ஆழ்வாரின் கூற்றிற்கு ஏற்ப, இவர்கள் இங்கே ஆழ்வாருக்கு அருகில் எழுந்தருளியுள்ளனர். 

புள்ளபூதங்குடி என்னும் திவ்ய தேசத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளபோதிலும், பெரும்பாலான பக்தர்கள் ஏனோ இங்கே செல்வதில்லை. இங்குள்ள பட்டர் மிகுந்த ஆர்வத்துடன் பக்தர்களை வரவேற்று அனைத்து விளக்கங்களையும் வழங்குகிறார். திவ்யதேசத்தை தரிசிப்பவர்கள் இதுபோன்று ஆழ்வார்களின் இடங்களையும் தரிசித்தால் சிறப்பாக இருக்கும்.








No comments:

Post a Comment