தேர்மிட்டாய்
******
தேர் மிட்டாய் கடையை பார்த்ததும்,அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!நண்பனே! என்று பாடத் தோன்றியது.
எங்கள் ஊர் மேச்சேரியில் பத்ரகாளியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றம் செய்துவிட்டால், அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் நிறைய மக்கள் வந்து போவார்கள்.
மாசி பவுர்ணமி அன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும் தேரில் பத்ரகாளியம்மனை பார்க்கும் பொழுதே பக்திப் பரவசம் மனதில் ஊற்றேடுக்கும்.
தேரின் மேல் மக்கள் எல்லாம் நவதானியங்கள்,காசுகள் எடுத்து வீசி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.
தேர்த் திருவிழா என்றாலே மாட்டுச்சந்தை மிகவும் பிரபலமான ஒன்று.
வெளியூர்களில் இருந்தெல்லாம் மாடுகளை கொண்டு வந்து இங்கே சந்தை போடுவார்கள்.
ஊருக்குள் எங்கு திரும்பினும் மாடுகள்தான்,மாடுகள் சாணம் இடுவதை அள்ளி கொண்டு அதை எல்லாருடைய சுவற்றிலும் பவுர்ணமி நிலவு போல் வட்ட வட்டமாக வறட்டி தட்டி வைத்திருப்பார்கள்.
எப்படியும் திருவிழா முடிவதற்குள் ஆறு மாதங்களுக்கு வருவதைப்போல வறட்டியை சேமித்து வைத்துக்கொள்வார்கள்.
ஒரு மாதம் வரை நடக்கும் கட்டபொம்மன் கூத்து இங்கே மிகவும் பிரபலம். மாலையில் என்ன கூத்து என்று காலையில் இருந்தே மாட்டு வண்டியில் விளம்பரம் செய்வார்கள். நல்லதங்காள், அர்ச்சுனன் தபசு, அரிச்சந்திரன் கூத்துகள் மிகப் பிரபலம்.
பொம்மையின் கையிலே கயிறுகளை கட்டி வசனத்திற்கு தகுந்தார்போல் ஆட்டி வைப்பதுதான் கட்டபொம்மன் கூத்து. கூத்தில் கோமாளி பொம்மை செய்யும் சேட்டை மிகவும் பிரபலம்,சிரிப்புக்கு என்றே சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம் அது.
கூத்தை பார்ப்பதற்கு என்றே பாய் எடுத்து கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்து வருவார்கள்.
விடிய விடிய கூத்தை பார்த்து கொண்டு மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
ஊர் சந்தை மைதானத்தில் குடை ராட்டினம், ரங்கராட்டினம் அதில் அமர்ந்து சுற்றி வருவதில் மக்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.
தேர் திருவிழாவில் முக்கியமான ஒரு பங்கு வகிப்பது தேர் மிட்டாய் கடைகள்.
வண்ண வண்ண சர்க்கரை பாகால் செய்த மிட்டாய்கள், தேரை போல அடுக்கி வைத்திருக்கும் அழகு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
அதில் முக்கியமான ஒரு சுவையான பதார்த்தம் ஜிலேபி எனலாம் வெளியே மொறுமொறுப்பாக
உள்ளே தேன் ஊற்று சாறு வடிந்து கொண்டிருப்பது போல இருக்கும்.
இனிப்பும் புளிப்பும் கலந்த நிறைந்த சுவை தரும் ஜிலேபியை இன்று நினைத்தாலும் நாவை விட்டு போவேனா என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
தேர் திருவிழாவின் இறுதி நாளாக நிகழ்ச்சியின் சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கும். பத்ரகாளியம்மன் தாய்வீடான பொங்கப் பாலியில் இருந்து ,இரவில் தொடங்கிய பத்ரகாளியம்மன் மெரவனை அதிகாலை சந்தைப்பேட்டை மைதானத்திற்கு வந்து சேரும் .
அதைக் காண என் தாத்தா காலை ஐந்து மணிக்கெல்லாம் என்னை சந்தைப்பேட்டை மைதானத்துக்கு கூட்டி வந்து விடுவார்.
அம்மன் மெரவனை அருகில் வந்ததும் பெரிய பெரிய வான வெடிகள் வானில் வர்ணஜாலம் நிகழ்த்தும்.
மேளதாளம் முழங்க,அலங்கரிக்கப்பட்ட குதிரை நடனம் ஆடியபடி அற்புதம் நிகழ்த்தும்.
வீட்டுக்கு திரும்பும்போது என் தாத்தா தேர் மிட்டாயும் ஜிலேபியும் வாங்கி கொடுத்து விடுவார்.
என் கையில் இனிப்போடு வீட்டுக்கு வந்தது இன்றளவும் மறக்க முடியாது இவ்வாறாக
இனிதே முடியும் எங்கள் ஊர் தேர் திருவிழா.
என் நினைவில் நின்றவைகளை நினைவுக்கு எட்டிய வரை எழுதி இருக்கிறேன்.
இதில் ஏதேனும் நான் தெரியாமல் பிழையாகக் குறையாக சொல்லி இருந்தாலும் நிகழ்வுகளை சொல்லாமல் விட்டிருந்தாலும் பெரியவர்கள் என்னை மன்னிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேச்சேரி சவுண்டப்பன்
No comments:
Post a Comment