ஃபிளைட் நம்பர் 605 - கட்டுரை சுஜாதா
(குமுதம் வார இதழில் வந்தது)
புதன் கிழமை, பிப்ரவரி பதினைந்தாம் தேதி, 1990. பம்பாயிலிருந்து பெங்களூருக்கு ஏறக்குறைய வந்து சேர்ந்துவிட்ட ஏர்பஸ் விமானம் ஃபிளைட் நம்பர் 605. மத்தியானம், நீல வான வெய்யிலில் புத்தம் புது விமானம். இதோ ரன்வேயைத் தொடப் போகும் போது, ரன்வே விளிம்பு அருகில் ஏர்போர்ட்டுக்கு வெளியே விழுந்து, செல்லகட்டா என்ற ஒரு வறண்ட குளத்தின் வரப்பின் மேல் பட்டு ஒரு முறை எம்பிக் குதித்து, இரண்டு இஞ்சின்களும் கிழிந்து தீப்பந்தம்போல உருள, ப்ளாஸ்டிக்கும் வயிற்றில் இறக்கையில் இருந்த எரிபொருளும் கோஷ்டியாக எரிந்து அழிந்தது. அதனுள் 139 பிரயாணிகள், நான்கு கைக்குழந்தைகள், பைலட், கோபைலட், ஹோஸ்டஸ் பெண்கள் ஜந்து பேர்.
86 பேர் க்ஷண காலத்தில் மரணம். பைலட், கோபைலட் இருவரும் இரண்டாகத் துண்டிக்கப் பட்டு உட்கார்ந்த இடத்திலேயே இறந்து போயினர். விமான முன்பக்கத்திலிருந்த ஏர்ஹோஸ்டஸ் இருவரும் இறந்தனர்.
பின்பகுதியிலிருந்த பிரயாணிகளும் சிப்பந்திகளும் தான் பிழைத்தனர். பிழைத்தவர்களில் சிலர் காயம் பட்டனர். சிலர் விசில் அடித்துக் கொண்டு ஸ்தலத்திலிருந்து நடந்து சென்று ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய் விட்டனர்.
முன்பகுதி துரதிருஷ்டர்கள் வெந்து செத்தனர். நாட்டின் மிகப் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அஷோக் பிர்லாவும், மனைவியும் த்ரீ எம். கம்பெனியின் தொழிற்சாலை துவக்க விழாவுக்கு வந்து கொண்டிருந்தனர். இருவரும் இறந்து போனார்கள். செமினாருக்கு வந்திருந்த ஜப்பானியர்களில் நால்வரில் மூவர் சிகரெட் பிடிப்பவர்களாக இருந்ததால், பின்இருக்கைகள் 'ஸ்மோக்கிங்' பகுதி கொடுக்கப்பட்டு பிழைத்தார்கள். இனிமேல் சிகரெட் குடிப்பதைச் செத்தாலும் - ஸாரி - உயிருள்ளவரை நிறுத்த மாட்டேன் என ஒரு ஜப்பானிய சபதம். (இப்போது எந்த விமானத்திலும் இந்த வசதி இல்லை என்பதை அறிக).
மரணம் யாரைத் தொட்டது, யாரை விட்டது என்று வரையறை இல்லாமல் ஒரு அபத்தமான தேர்வு. ஒரு குழந்தை பிழைத்தது. ஒரு குழந்தை வெந்தது. ஒரு தாய் பிழைத்தாள், ஒரு தாய் மார்புடன் இணைந்த குழந்தையுடன் ஸீட்டிலேயே இறந்தாள்.
சாயிபாபா தரிசனத்துக்கு வந்திருந்த இரு வெளிநாட்டுப் பயணிகள் விபத்தில் பிழைத்தது அவர் மகிமையால் என்று உடனே ஒய்ட்ஃபீல்டு போக அவசரப்பட்டார்கள். கனடா தேசத்து இந்தியத் தம்பதிகள் விபத்திலிருந்து தப்பித்து அவசர போட்டோ எடுத்தார்கள்.(டைம் பத்திரிகை யில் வரலாம்)
டெலிவிஷன்காரர்கள் சகட்டு மேனிக்கு வீடியோ எடுத்து விசுவாசமாக ராத்திரி லோக்கல் நியூஸில் காட்டினார்கள். இந்திய டெலிவிஷன் சரித்திரத்தில் அத்தகைய கோரக் காட்சிகளை இதுவரை பார்த்திருக்க முடியாது.ஒரு போலீஸ்காரர் கருகிய கைக்குழந்தையைப் பொம்மை போல ஒரு கையால் தூக்கிக் காட்ட, ஸ்ட்ரெச்சரில் பிணத்தைக் கசிவுகளுடன் 'டைட்க்ளோஸப்' காட்டிவிட்டு பல்வேறு நிலையில் மடக்கியும் மடிந்தும் இறந்த நிலையில் உறைந்த கருகல்களைக் கடை பொம்மைகள்போல் அவர்கள் எடுத்து வருவதைச் செய்தி ஆரம்பத்திலும் இறுதியிலும் சந்தேகத்துக்கு இரண்டு முறை காட்டினார்கள். ஆட்டானமி என்றால் இப்படியா! அதுவும் ராத்திரி சாப்பாட்டு வேளையில் !
விபத்துக்களைக் காட்டுவதில் நளின நாசூக்கு வேண்டும் என்பதை தூரதர்ஷன் கற்றுக் கொள்ள வேண்டும். ஏர்இண்டியா 'கனிஷ்கா' ஜம்போ அயர்லாந்து விபத்தைக் காட்டியபோது பி.பி.ஸி கடலில் மிதந்த ஒரு விளையாட்டுப் பொம்மையை மட்டும் காட்டியது. ஆயிரம் சோக வார்த்தைகள் பேசியது.
அடையாளம் கண்டுபிடிக்க முடியாத உடல்களை விக்டோரியா ஆஸ்பத்திரியில் வேதம்,குரான், குர்பானி, பைபிள் படித்துவிட்டு வில்சன் கார்டன் மின் சுடுகாட்டில் மந்திரிகள் மலர் வளையங்களுக்குப் பின் எரித்தார்கள். உறவுக்காரர்களைப் பம்பாயிலிருந்து இலவச டிக்கெட் கொடுத்து ஏர்லைன்ஸ் வரவழைத்திருந்தது.(சில உறவுக்காரர்கள் விமானத்தில் வர மறுத்தனர்.)
விபத்துக்குக் காரணம் பற்றிப் பலதும் பேசிக் கொள்கிறார்கள். காப்டனும் உதவிக் காப்டனும் ரொம்ப அனுபவஸ்தர்கள். தப்பாக ஏதும் பண்ணியிருக்கச் சான்ஸே இல்லை. வானிலையைக் குறை கூற கூற முடியாது.
சிலவேளை உஷ்ண வித்தியாசங்களால் காற்றின் படிமங்களில் ஒரு சீவல் இருக்கும். மாட்டிக் கொண்டால் விமானம் தொப்பென்று விழலாம் என்று ஒரு சித்தாந்தம்.
ஏர்பஸ் லேட்டஸ்ட் விமானம்(ஏ.320). கம்ப்யூட்டரால் 'ஃப்ளை பை வயர்' என்ற முறையில் இயங்குவது. கம்ப்யூட்டர் ஏதாவது தப்பு செய்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஒரு கம்ப்யுட்டருக்கு மூன்று கம்ப்யூட்டர்கள் வைத்திருப்பார்கள். மூன்றுக்கும் ஆணை போய் சுதந்திரத் தீர்மானத்துக்கு வந்து மூன்றும் ஒத்துப் போனால்தான் பைலட்டின் ஆணையை செயல் படுத்தும்.
தப்பித் தவறி மூன்றில் ஒன்று பழுதாகி இருந்தாலும் மற்ற இரண்டும் ஒத்துப்போனால் மெஜாரிட்டி டிஸிஷன் எடுக்கும். மூன்றுமே ஒத்துப் போகவில்லையென்றால் பைலட்டுக்கு, ' பாருப்பா எங்களுக்குள் ஒற்றுமையில்லை. நீயே பார்த்துக் கொள்' என்று பதவியை அவனிடம் கொடுத்து விடும். இத்தனை ஜாக்கிரதை அம்சங்கள் வைத்திருக்கிறார்கள். பைலட் தப்பாக ஆணை கொடுத்திருந்தால் கூட கம்ப்யூட்டர் அதைச் செயல்படுத்தியிருக்காது.
கம்ப்யூட்டருக்கு ஏதாவது ஒரு திடீர்க் கிறுக்கு வந்ததா? அல்லது 'லேட்டஸ்ட் இஸ் நாட் த பெஸ்ட்' என்பது போல் இத்தனை நவீனமான விமானத்தை நம்மால் பராமரிக்க முடியவில்லையா? அண்மையில் ஏர்லைன்ஸ் இஞ்சினியர்கள் அதிகப்படியாக பிரான்ஸில் பயிற்சி கேட்டது நினைவிருக்கலாம்.
என்னதான் ஆச்சு ?
விமானத்தின் வால் பகுதியில் பத்திரமாக வைத்திருந்து நீக்கப்பட்ட 'காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர்' பைலட் பேசியதையெல்லாம் பதிவு பண்ணியிருக்கிறது. டிஜிட்டல் பிளைட் டேட்டா ரிக்கார்டர் பிரயாணத்தின் முழு ஜாதகத்தைப் பதிவு பண்ணியிருக்கிறது. இரண்டிலும் பொதிந்திருக்கும் ரகசியங்களை வெளிநாட்டுக்கு (கனடா) அனுப்பி வாசித்து அர்த்தம் பண்ணிக் கொள்ளும் வரை 'எக்ஸ்பிரஸ்' போன்ற பத்திரிக்கைகள் தினம் தினம் காரணத்தை மாற்றிக் கொண்டே வரும்.
(லேட்டஸ்ட் : ராஜீவ் தான் எல்லாவற்றிற்கும் காரணமாம். அவர் காலத்தில் தானே விமானம் வாங்கினார்கள்?) பிரஞ்சுக்காரர்கள் வந்து அது மனித தப்பு என்று நிரூபிக்க முயற்சிப்பார்கள். வியாபாரம் படுத்து விடுமே !
என்னதான் காரணம் என்பதை அறியும் வரை நாம் வாங்கின 12 விமானங்களும் பம்பாயிலும் டில்லியிலும் தடையுத்திரவினால் மூக்கோட்டைகளில் சிவப்புப் பிளாஸ்டிக் பொருத்திக் காத்திருக்கின்றன.
'புதிய பறவைகள் !'
பி.கு.1 : போன ஞாயிற்றுக்கிழமை நான் பம்பாய்க்கு விமானத்தில் போய்த் திரும்ப வேண்டியிருந்தது. பங்களூரில் வந்து விமானம் தரை தொட்டதும் விமானத்தின் உள்ளே வெள்ளைக்கா்ர்கள் அனைவரும் கைதட்டினார்கள்.
பி.கு.2 : பன்னிரண்டாம் தேதி பங்களூருக்கு அருகே ஒரு கோரமான பஸ் விபத்து நிகழ்ந்தது. அதில் அடிபட்டவர்களுக்குக் கைச் செலவுக்கு ரூபாய் 500 ம், செத்துப்போனவர்கள் குடும்பத்துக்குத் தாராளமாக தலா ரூ.2500 ம் கொடுக்கப்பட்டது.
ஏர் பஸ் பயணிகளுக்கு ஆளுக்கு ஐந்து லட்சம். இறந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே !!a
No comments:
Post a Comment