Saturday, February 26, 2022

கல்மரம்

 ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வரவர முநயே நம:

* கல்மரம் *

கழனிச் சாலையில் நடந்து போகயில் இந்த பாதி முழங்கை அளவுள்ள கல்மரத்துண்டு கண்ணில் பட்டது. இதை, பல கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மரங்கள் மண்ணில் புதைந்து அழுந்தி படிம கற்களாக மாறிப்போதல் என்று அறிவியல் சொல்கிறது. ஆங்கிலத்தில் Tree Fossil என்பர். அறிவியல் படி இந்த கல்மரத்துண்டு 350 மில்லியன் வருடங்களுக்கு முந்தையது. அதாவது 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மரம்! சதுர்யுக கணக்குப் போட்டால்  சற்றேறக்குறைய 81 சதுர்யுகங்களுக்கு முன்பு வாழ்ந்த மரம். (இதில் யுகசந்தி கணக்கு வேறு) ஒரு சதுர்யுகம் 43,20,000 வருஷங்கள் என்றால் கணக்குப் போட்டுகொள்ளுங்கள். இது இந்த கல்மரத்தின் தற்கால அறிவியலின் படியான காலக்கணக்கு வயது. இந்த காலக்கணக்கீடு படியே எடுத்துக் கொண்டாலும் இந்த மரம் உயிருடன் இருக்கும் போது அந்த சதுர்யுகத்தில் பகவான் நிச்சயம் ஏதாவது ஒரு அவதாரத்தில் நடையாடி இருந்திருப்பானே! அப்போது என்ன அவதாரத்தில் இருந்தானோ யாரறிவார்? மச்சமா? கூர்மமா? வராகமா? நரசிம்மமா? யாருக்குத் தெரியும் அவனைத் தவிர! 

ஏன், இந்த கல்மரம் அதன் ஜீவித காலத்தில் பகவானின் திருக்கண்களின்  பார்வையோ அல்லது திருக்கர ஸ்பர்சமோ கூட பெற்ற மரமாயிருக்கலாமே என்பதை நினைத்துப் பார்க்கையில் ஏதேதோ உணர்வு எழுந்து உடலின் மயிர் கால்கள் குத்திட்டு நின்றது. திடீரென ஏனோ ஸ்ரீ நைமிசாரண்ய திவ்யதேசம் நினைவுக்கு வந்து மனம் முழுக்கப் பரவியது. ஏனெனில் பகவான் நைமிசாரண்யத்தில் மரங்களாகவே ஸேவை சாதிக்கிறான் என்பர் பெரியோர். மீதியை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். அதனால் சாலையில் கிடந்த அந்த கல்மரத்துண்டை எடுத்து ஏரிக்கரையின் ஒரு பனைமரத்தின் அடியில் இருந்த ஒரு புதரில் எழுந்தருளப் பண்ணி திருபல்லாண்டும் ஸேவித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வேறு என்ன செய்ய?

நீங்கள் எப்போதாவது இது போன்ற கல்மரப்படிமத்தை பார்க்க நேர்ந்தால் ஸ்ரீ நைமிசாரண்ய திவ்யதேசத்தை நினைத்துக் கொண்டு பல்லாண்டு பாடிவிடுங்கள். நம்மால் அதைத்தானே செய்ய முடியும்?!

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம்



No comments:

Post a Comment