Friday, February 18, 2022

பரிசுப் புராணம்

 என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள் 

                                                        பரிசுப் புராணம்.

கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டைக் கட்டிப்பார்!! என்று ஓர் சொல்வடை உண்டு. அதோடு கல்யாணத்துக்கு பரிசு கொடுத்துப் பார் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பரிசு ( இதை ஓதியிடுதல் , மொய் எழுதல் என்றும் சொல்வார்கள் ) கொடுப்பதற்கு முன் எவ்வளவு விஷயங்கள் ! என்ன ? எவ்வளவு ? போன்ற கேள்விகளுக்கு சரியான சமாதானம் சொல்லிக் கொண்டு பரிசு வழங்க வேண்டும். இது திருமணங்களுக்கு மட்டும் அல்ல. எந்த விழாவுக்கும் பொருந்தும்.

ஒரு பரிசு கொடுப்பதற்கு முன் எவ்வளவு யோசிக்க வேண்டுமாகியிருக்கின்றது.? நம் தகுதிக்கு குறையாமலும் , பெறுவோர் அதற்கு உரிய தகுதி உடையவரா என்றெல்லாம் யோசிக்கின்றோம். அந்த பரிசு அவர்களால் விரும்படுமா? அவர்களுக்கு அது உபயோகப்படுமா என்று கூட யோசிக்க வேண்டும். 

முன்பெல்லாம் இவ்வளவு யோசிப்பதில்லை. ஒவ்வொரு சீசனில் ஒரு பொருள் இதற்கென்றே அமைந்தாற் போல இருக்கும். அறுபது வருடங்களுக்கு முன் எவர்சில்வர் பாத்திரங்கள் பிரபலமான சமயத்தில் அவையே பெரிதும் பரிசாக வழங்கப்பட்டது. குறிப்பாக ஜெக் எனப்படும் ( Jug ) அவற்றில்தான் எத்தனை சைஸ். எத்தனை மாடல்?

ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்த பட்சம் இருபது ஜக்குகள் பரிசாக வந்து சேரும். சுவர்கடியாரங்கள் , பிளாஸ்க் , போட்டோ பிரேம் , மேஜை விளக்குகள் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை.

அதில் பாதியாவது வேறு ஒரு சந்தர்பத்தில் பரிசாக அளிக்கப்படும். இப்படியாக ஒருவர் கையிலிருந்து இன்னொருவர் கை என்று மாறி அதன் பயணம் முடிவடையாத ஒன்றாக இருக்கும். பின்னர் எவர்சில்வர் குடங்கள் வசதி உள்ளவர்கள் வெள்ளிக் குடங்கள்…

இப்படி பரிசாகப் பெறும் தொகை அல்லது பொருட்களுக்கு ஒரு முன் கதைச் சுருக்கமோ அல்லது பின் கதைச் சுருக்கமோ உண்டு. எனக்கு இது பரிசாக வந்தது என்றால் , அப்படி கொடுத்தவருக்கு நான் முன்பு பரிசளித்திருக்க வேண்டும் . அல்லது இனி பரிசளிக்க வேண்டும். இதற்காகவே அப்படிப் பெறும் பரிசுகள் ஒரு நோட்டுப் புத்தகத்தில் பதியப்படும். அது பத்திரமாக பாதுகாக்கப் படும் . பின் நாட்களில் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் தொகையை முடிவு செய்ய ஒரு தஸ்தாவேஜாக விளங்கியது.

ஆனால் பிரபலமானவர்கள் பரிசு கொடுக்கும் பொழுதும் , பரிசு பெறும் பொழுதும் மேற் சொன்ன எதுவும் பொருந்தாது. 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்பொதுவாக தங்க ஆபரணங்கள் கொடுப்பது வழக்கம். சிலரை அவர் தோட்டத்துக்கு சென்று பத்திரிக்கை கொடுக்கும் பொழுது அங்கேயே பரிசுகள் கொடுப்பது வழக்கம். காலம் சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் பரிசுப் பொருட்கள் மிக விலை உயர்ந்ததாக இருக்கும் என்று சொல்வார்கள். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பரிசுகளும் அப்படியே.

கலைஞர் புத்தகங்களை கொடுப்பதும் , திரு.ச்வகுமார் தானே தீட்டிய ஓவியங்களயும் , 

திரு. பார்த்திபன் நிகழ்வுக்கு பொருத்தமான , வித்தியாசமான பொருட்களை தருவது வழக்கம்.

திரு. சோ இதைப் பற்றி சொல்லும் பொழுது தனக்கேற்பட்ட அனுபவத்தைச் சொன்னது 

“ ஒரு கல்யாணத்துக்கு போய் கவரில் ஐம்பது ரூபாய் வைத்து கொடுத்தேன். அதைப் பெற்றுக் கொண்டவர் உடனே பிரித்து பார்த்து அவ்வளவுதானா ? என்றார். அவர் என்னிடம் இன்னும் அதிகம் எதிர்பார்த்தார் போல! நான் உடனே அதையும் வாங்கி பாக்கெட்டில் வைத்து கொண்டேன்.”  என்கின்றார். கலைஞர் வீட்டு திருமணத்துக்கு போய் சமஸ்கிருதத்தில் வாழ்த்தி ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார்.

திருமணம் , குடும்ப நிகழ்வுகளைத் தாண்டி பரிசுகள் பொது நிகழ்வில் கொடுக்கப்படும்

பரிசுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

 செல்வி ஜெயலலிதா கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு நடந்த விழாவில் அவர் அளித்த செங்கோலும் , அறிஞர் அண்ணா கலைஞருக்கு அணிவித்த மோதிர பரிசும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. அண்ணாமலை வெற்றிவிழாவில் ரஜினி

கொடுத்த தங்கச்சங்கிலிகள் அப்பொழுது பெரிதும் பேசப்பட்டது. துண்டுகள் , சால்வைகள் , மலர் கிரீடம் , பண முடிப்பு , புத்தகங்கள் இப்படி எத்தனையோ..

ஆஸ்கார் பரிசு கலைஞர்களின் உயர்ந்த பரிசாக கருதப்படுகின்றது.

ஒரு கிராமத்தின் கதை திரைப்படத்துக்கு பரிசு வழங்க வேண்டி இருந்த பொழுது அந்த திரைப்படம் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது என்று சொல்லி கலைஞர் பரிசினை அளிக்க மறுத்ததும் , 

திருவிளையாடல் பட வெற்றிவிழாவில் நாகேஷுக்கு கேடயம் பரிசாக வழங்கப்படாமல் தவிர்க்கப் பட்டதும் பல காலம் பேசப்பட்டது.

வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு சிங்கம் பரிசளித்த எம்.ஜி.ஆர்  கோவிலுக்கு யானை பரிசளித்த சிவாஜி என பரிசுகள் வரலாறு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது.

நம் நாட்டில் பரிசுகளைத் தவிர்க்கவும் என்று அழைப்பிதழில் என்று குறிப்பிடுவது சிலர் வழக்கம். ஆனால் மேல் நாடுகளில் தங்களுக்கு எந்த பொருளை பரிசாக கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டாம். அந்த பொருளை ஒருவர் மட்டுமோ அல்லது சிலருடன் சேர்ந்தோ அந்த பரிசினை வழங்குவார்களாம். இந்த முறை சிறந்த ஒன்றே. எல்லோரும் ஒரே மாதிரி பொருளை ( குக்கர், ஜக் ) கொடுப்பதை தவிர்க்கலாம். உபயோகமான பொருட்களை கொடுக்கலாம்.

திருச்சி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எந்த நிகழ்வானாலும் ஓதி இடுவது அல்லது மொய் எழுதுவது ₹10 மட்டுமே. Not a pie more or less. அது மட்டுமல்ல. நிகழ்வுக்கு வரமுடியாதவர்களுக்கு கேரியரில் வீட்டுக்கு சாப்பாடு அனுப்பி வைப்பது வழக்கம்! 

இந்த மொய்ப்பணம் நடுத்தர குடும்பங்களுக்கு மிக முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகின்றது. அநேகமாக திருமண மண்டபத்தை காலி செய்யும் முன்னர் இந்த தொகையில் இருந்தே பல செலவுகளுக்கு தொகை பட்டுவாடா செய்யப்படுகின்றது.

முன்பெல்லாம் வங்கிகளில் Gift Cheque வாங்கி தருவது பிரபலமன ஒன்று. வங்கிகள் இதற்கு கட்டணம் வசூலிக்க மாட்டார்கள். பின்னர் வங்கிகள் இதனை நிறுத்தி விட்டன. அதையே அமேசான் போன்றவை கிப்ட் வவுச்சர் என்று செய்கின்றன. 

எம்.ஜி.ஆ. ஆர் சிறு சேமிப்பு திட்டத்தின் தலைவராக இருந்த கால கட்டத்தில் தமிழக அரசின் சேமிப்புன்பத்திரங்களை பரிசாக கொடுக்கும்படி பிரசாரம் செய்ய அப்படியே பலரும் செய்தார்கள்.

அலுவலகங்களில் ஒரு பரிசளிக்க , எல்லோரிடமும் வசூலிக்கும் பொறுப்பை ஒருவர் ஏற்றுக் கொள்வார். அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வசூல் செய்து பரிசுப் பொருள் வாங்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார். அவர் வந்தாலே வந்துட்டாண்டா என்று சலித்துக் கொள்பவர்களும் , தொகையை சொல்லிவிட்டு சம்பளத்தில் தருகின்றேன் என்று தவணை சொல்பவர்களும் உண்டு.

இந்த நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்க ஒரு தொகையை மாதாமாதம் வசூலித்து அதிலிருந்து கொடுப்பது வழக்கமாக உள்ள அலுவகங்களும் உண்டு.மொய் எழுதும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒருவர் வசூல் செய்ய ஒருவர் பதிவு செய்து கொள்ள , இன்னொருவர் ஒலி பெருக்கியில் அறிவிப்பது ( அண்ணன் கோவில்பட்டி மிராசு மாப்பிளை….க்கு வெள்ளி குடம் .. )

மாமா சீர் ஆயிரம் கட்டி வராகன் என்று கட்டியம் சொல்லி ஒரு பவுன் பரிசு கொடுப்பதும்

முதல் நாளே வரவேற்பு நிகழ்ச்சியில் வரிசையில் நின்று கொடுப்பதும்

 முகூர்த்தம் முடிய , முடிய மணவறையை நோக்கை படை எடுப்பதும்

மைக் வைத்து அறிவித்து கொடுப்பதும்

மொய் என்றாலும்  ஓதி இட்டாலும்  ரொக்கமாய் தந்தாலும் பொருளாய் கொடுத்தாலும்  அது கொடுப்பவர் , பெறுபவர் இருவருக்குமே சந்தோஷத்தை கொடுக்கும்

மொய் ( மெய் ) இன்பம்! 

சாரதி

15/02/2022

No comments:

Post a Comment