Tuesday, February 22, 2022

கோதாவரி நதி தீரம் 24

 🎼🎻🌹 கல்லிலே கலைவண்ணம்🌹🎻🎼

(சுஜாதா&வெங்கடேசன்) பகுதி 24 ருத்ரமா தேவி 

சரி அனுஷ்கா நடிச்ச ருத்ரமாதேவி சினிமா கதை உண்மையாங்கறேன். சினிமாக்காக கொஞ்சம் சரடு விட்டாலும் உண்மையில் ஒரு வீரப்பெண்ணுன்னு கதை சொல்றார். 

தெலுங்கானா மாநிலத்தில் இன்று வாரங்கல் என்று 

அறியப்படும் ஒரகலுவை தலைநகராகக் கொண்டு காகதீய ராஜ்யத்தை மன்னன் கணபதி தேவன் ஆண்டு வந்தான். கணபதி தேவனின் மகளே ருத்ரம்மா. ஆண்வாரிசு இல்லாத மன்னன், பண்டைக்கால முறைப்படி தன் மகளுக்கு ருத்ரதேவா என்று ஆண் பெயர் சூட்டி வாரிசு ஆக்கினான். பெண்ணை வாரிசாக அறிவித்ததை பலரும் எதிர்த்தனர். 

ஆண்பிள்ளை இல்லாத காரணத்தால் கணபதி தேவர் தன் மூத்த மகளான ருத்ரமாம்பாவை ருத்ரதேவர் என்று பெயர் சூட்டி ஆண் மகவு போலவே வளர்க்கலானார். சிறு பிராயம் முதலே குதிரையேற்றம், வாட் பயிற்சி, விற்பயிற்சி போன்றவற்றில் தேர்ந்து ருத்ரமா தேவி சிறந்த வீரனைப் போல் திகழ்ந்தாள்.

ருத்ரமகாராஜா என்ற பெயரில்  அரசாட்சி விவகாரங்களை தந்தை கணபதி தேவரிடமிருந்து நன்கு கற்றறிந்த ருத்ரமாதேவி திருமண வயதை எட்டினாள். சாளுக்கிய அரசன் இந்துசேகரனின் புதல்வன் சாளுக்கிய வீரபத்ரனுடன் மகளின் திருமணத்தை முடித்தார் கணபதி தேவர். அதன் மூலம் சாளுக்கிய ராஜ்யத்துடன் உறவும் பாதுகாப்பும் கிட்டியது.

ருத்ரமா தேவிக்கும் ஆண் வாரிசு உருவாகவில்லை. அவள் கணவன் தன் மற்றொரு மனைவிக்குப் பிறந்த மகனை இளவரசனாக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால் ருத்ரமா, தன் மகள் வயிற்றுப் பேரன் பிரதாப ருத்ரனை தத்து எடுத்து அவனை இளவரசனாக்க முடிவு செய்தாள். அதை விரும்பாத ருத்ரமாவின் கணவன் அவளுக்கு விரோதியானான்.

வயது முதிர்ந்து வந்த கணபதி தேவர் மகள் ருத்ரமா தேவியை அரச சிம்மாசனத்தில் ஏற்றிப் பார்க்கத் துடித்தார். ஆனால் அவர் தம்பிமார்களும் சில மந்திரிகளும் ஒரு பெண்ணை அரியணையில் அமர்த்தி அவள் கட்டளைக்கு அடி பணிவதை விரும்பவில்லை.

இது தான் சமயம் என்று ஜைன மதத்தினர் கலவரத்தைத் தூண்டினர். கிராம கரணம் வேலை பார்த்தவர்களுள் பலர் ஜைன மத்தவராக இருந்தனர். அவர்கள் கிராம மக்களிடம் வசூலித்த தொகையை அரசு பொக்கிஷத்திற்கு அனுப்பாமல் ஏமாற்றினர். அதுவரை வம்ச பாரம்பர்யமாக வந்தது கர்ணம் பணி. அதற்கான கணக்கு வழக்குகளை சொல்லிக் கொடுக்கும் பள்ளிக் கூடங்களை ருத்ரமாதேவி கிராமங்களில் நிறுவியதோடு பொதுமக்களை அதில் பயில்வித்து அவர்களை கர்ணம் பணிகளில் நியமித்து பெரும் புரட்சி செய்தாள். அதன் மூலம் மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றாள்.

ருத்ரமா தேவி மகாராணியாக அரியணை ஏறுவதை விரும்பாமல் கூடவே இருந்து குழி பறித்த ஹரி ஹர தேவர், முராரி தேவர் போன்றவர்களின் கொட்டாதை அடக்கி அவர்களைத் துரத்தியடித்தார் கணபதி தேவர். பின்னர், ருத்ராம்பாவுக்கு 1261ல் ருத்ர மகாராஜா என்று பட்டப் பெயரோடு பட்டாபிஷேகம் செய்வித்தார் கணபதி தேவர்.

1266ல் ருத்ரமாவின் கணவன் மரணமடைந்தான். அடுத்த ஆண்டே தந்தையும் கண் மூடினார். அதோடு உள்நாட்டு, வெளிநாட்டு விரோதிகளோடு எந்நேரமும் போராட வேண்டியிருந்தது. ராணி ருத்ரமா அவை அனைத்தையும் தன் வீரத்தாலும் சமயோஜித புத்தியாலும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெற்றாள்.

‘மொகலிசர்ல’ என்ற ஊர்லிருந்த தன் குல தெய்வம் ஏகவீர தேவி ஆலயத்திற்கு ருத்ரமா தேவி வழிபாட்டிற்குச் சென்றிருந்த போது அதற்காகவே காத்திருந்த ஹரிஹர தேவர், முராரி தேவர் இருவரும் மீண்டும் சூழ்ச்சி செய்ய முற்பட்டனர். தாம் ரகசியமாகச் சேர்த்த படையுடன் வந்து காவலர்களைக் கொன்று கோட்டைக்குள் புகுந்து கதவைச் சாத்தினர்.

ஆலயத்திலிருந்து திரும்பிய ருத்ரமாவுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. இயல்பாகவே தைரிய சாகசம் நிரம்பிய ராணி ருத்ரமா அஞ்சவில்லை. கோவிலுக்குத் தம்மோடு வந்த படை வீரர்கள் அளவில் குறைவு. மொத்த படையும் கோட்டைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. என்ன செய்வதென்று ஆலோசித்து உடனே ஒரு தீர்மானத்திற்கு வந்தாள். பொது மக்களிடம் செய்தி தெரிவிக்கும்படி ஆணையிட்டாள். 

கோட்டையை பார்த்து முடிச்ச கையோட எதிரே ஒரு பார்க் இருக்குன்னு போறோம்.  

இதோட கதையை நிறுத்துட்டு என்ட்ரன்ஸ் டிக்கட் வாங்கிண்டு வரேன்னு சஸ்பென்சா நிறுத்திட்டு போறார்.



No comments:

Post a Comment