Monday, February 21, 2022

கெங்கப்பா

 கெங்கப்பா(சிறுகதை)

எங்க கூட  பல ட்ரெயினீஸ் டிரெயிங்ல இருந்தாங்க. அவங்களுக்கு வேலை கத்துக்குடுக்குறது தமிழ் சொல்லிக்குடுக்குறது எல்லாம் நாங்கதான். அந்தத் தடவ கர்நாடகாவில இருக்குற பிளாண்ட்ல இருந்து 15 பேரு வந்துருந்தாங்க. அதுல கன்னடம் பேசுறவுங்க துளு பேசுறவங்க தெலுங்கு பேசுறவங்க எல்லாம்  வந்திருந்தாங்க அவங்க படிப்பு +2 தான் இங்க்லீஸ் சுமாராத்தெரியும்  அவங்களுக்கு  இங்க லோக்கல் லாங்குவேஜ் தமிழ் தெரியனும் அப்பத்தான் வேலை கத்துக்க வாங்க முடியும் அதுனால அதை கத்துக்குவாங்க...

இதுல அவங்க நம்பல குருவாநெனைச்சி  கத்துக்குவாங்க. அந்த மரியாதைய நமக்குக் குடுப்பாங்க. அப்புடித்தான் அவங்களும் வந்து டிரெயினிங் முடிச்சிட்டுப்போகும் போது சொன்னாங்க எங்க வாழ்க்கையில மறக்க முடியாதவர் நீங்கன்னு சொன்னாங்க. எல்லாரும் அப்புடிச்சொல்றதுதான். அதுல அந்த கெங்கப்பா கொஞ்சம் வித்தியாசமான ஆளு. மொரட்டு அன்பு அவனுக்கு யாராவது என்கிட்ட சண்டபோட்டாஅவங்களை அடிக்கப்போயிடுவான் சாருகிட்ட இதெல்லாம் வாணாம்னு தெலுங்கு வாசம் வீச சொல்வான்.

காலையில வந்தா நம்ஸ்காரம் சாருன்பான் என் பின்னாடியே திரிவான். அப்படி இருக்கையில டிரெயினிங் முடிஞ்சி கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு கண்ணீருடன் அண்ணகாரு.. சால தாங்குசு அண்டி நு சொன்னான். எல்லாம் சரியாகும் போய் நல்லாருப்பான்னு அனுப்பிச்சி விட்டோம்

அதுக்கு மூணுவருசம் கழிச்சி நான் அவங்க பிளாண்டுக்கு  கமிசனிங்( இயந்திரங்களைத் தயார்படுத்தும் பணி) க்கு போயிருந்தேன். அப்ப அவன் அங்க இருந்தான் என்னப்பாத்ததும் ஒரே சந்தோசம் நமஸ்காரமண்டி நூவு சைவ்க்கியமான்னு விசாரிச்சான். அப்புறம் எங்க இன்டிக்கு( வீட்டுக்கு) நூவு போஜனம் சேச ரண்டின்னு( எங்க வீட்டுக்கு சாப்பிட வரணும்) நு கெஞ்சிக்கூப்புட்டான் நானும் அந்த வார ஞாயத்துக்கெழமை வருகிறேன்னு சொல்லிட்டு மறந்துட்டேன்

ஆனா அந்தவாரம் ஞாயத்துக்கெழமை சாயங்காலம் கறாரா வந்து ரூம் வாசல்ல நின்னான். சாரு ஒஸ்த்தாவான்னு கேட்டான் நான் அன்னிக்கி சாயங்காலம் பூஜாரி கேண்டீன்ல மசால் தோசை( கர்நாடகாவில ரொம்ப நல்லாருக்கும்) ரெண்ட வாங்கி ஒரு கட்டு கட்டிருந்தேன். அவனா விடுறதா இல்ல. நான் நெலமையச்சொன்னேன். ஏற்கனவே வயிறு ஃபுல்லா இருக்குன்னு விளக்கினேன். ஆனா அவன் சொன்னான் அது கெடக்கட்டும் நீங்க இண்டிக்கு வந்துட்டு பேசிட்டு இருங்க அப்புடியே பசிச்சிறும் போஜனம் சேசிக்கலாம்னு தமிழும் தெலுங்கும் அன்பும் கலந்து சொன்னான்... வேற வழியில்ல சரின்னு அவன் வீட்டுக்குப்போனேன்

அங்க போனவன்ன சும்மா இல்லாம மொளகாபஜ்ஜி சூடாகொண்டாந்து குடுத்தான் அது மொளகாபஜ்ஜில மொளகாத்தூள் தூவி ரெடிபண்ணுனது . ஒன்ன சாப்புட்டவன்ன என் கண்கலங்கிடுச்சு காரத்துனால.ஒடனே அவன் இதுக்குப்போய் கண்கலங்குறீங்களே சாரு நோ செண்டிமெண்ட் இன்னும் ரெண்டு சாப்புடுங்க சாருன்னு சொன்னான். அப்புறம் அவன்கிட்ட தயங்கிச்சொன்னேன் ரொம்ப காரமா இருக்கு ராசா.... ந்னு .ஒடனே கையப்புடிச்சி இழுத்துட்டான் அவன் சம்சாரத்தை இங்க இருந்தே திட்டினான் தெலுங்குல... அதுவும் வந்து சாரிங்க சாருன்னு சொல்லுச்சி நான் பர்வாலேதம்மான்னு எனக்குத்தெரிஞ்ச தெலுங்குல சொன்னேன்.  அப்பூறம் டீ கொண்டாந்தான்.... அது நல்லா இஞ்சி ஏலக்காய் எல்லாம் போட்டு ஜீனி தூக்கலா குடுத்தான் .பஜ்ஜியோட காரத்துக்கு அது இதமா இருந்துச்சு.

அப்புறம் கொஞ்சநேரம் ஃபார்மலா பேசிட்டு இருந்தான். அங்க அவர் நல்லாருக்காரா இவர் நல்லாருக்காரா இப்ப அங்க எப்புடி இருக்குது எல்லாம் விசாரிச்சான்.. அப்புடியே டி வி போட்டு சார் இங்க சன் டி வி வருதுசார்ன்னு போட்டுவிட்டுட்டு சமையல் அறைக்குள்ள பொண்டாட்டிக்கு தொணையா வேலை செய்யப்போய்ட்டான்... நானும் டி.வி பாத்துட்டு இருந்தேன்...

மணி 8.45 ஆயிருச்சு நானும் சரிப்பா நான் போய்ட்டு வாறேன்னு சொல்றதுக்குக் கூப்புட்டேன் அவன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சாரு டின்னர் தயாராயிந்தி  சாப்புடு சாருன்னு கதவ தாப்பா போட்டுட்டு சொன்னான் சாப்புட்டுத்தான் போறீங்கன்னு கண்டிசனா சொல்லிட்டான் . நான் கதவிடுக்குல மாட்டிக்கிட்ட மாதிரி முளிச்சேன்  ஏற்கனவே சாப்பிட்ட  கர்நாடகா மசால் தோசையும் ஆந்திரா மொளகா பஜ்ஜியும் உள்ள  பார்லிமெண்டுல நடக்குறமாதிரி கலக்கிட்டு இருந்துச்சு. அதுல எதுவோ வெளி நடப்பு செய்ய முயற்ச்சி பண்ணுற மாதிரி இருந்துச்சு... நெழிஞ்சிக்கிட்டு இருந்தேன்.. அதுக்கு அவன் சொன்னான் சாரு இஞ்சி டீ சாப்புட்டீங்கல்ல டைஜஸ்ட் ஆயிரும்னான்  ..

கொஞ்சநேரத்துல சாரு கைகழுவிட்டு வாங்க போஜனம் சேசலாம்னு சொன்னான். நான் ஏற்கனவே சாப்புட்டதுக்கே இன்னும் கை கழுவலன்றது நாவகம் வந்துச்சு.. அதுக்கும் சேத்துக்கைகழுவிட்டு வந்தேன்...

அவன் ஒரு தட்டுக்கொண்டாந்து வைச்சி  கூச்சண்டின்னு சொன்னான். நானும் அதுக்கு முன்னாடி கூச்சினேன்( ஒக்காந்தேன்)  அப்புறம் செஞ்சான் பாரு ஒருவேலை.. உள்ளாற போய்  திருப்பதி பழைய லட்டு சைசுல மூணு உருண்டை கொண்டாந்தான். நான் அதை முன்ன பின்ன பாக்கல. என்னான்னு கேட்டதுக்கு சொன்னான்  சோள உருண்டை ரொம்ப நல்லாருக்கும் தொணைக்கி பக்கத்துல கருவாட்டுக் கொழம்புன்னு கொண்டாந்து வைச்சான் . எனக்கு கதி கலங்குச்சு அந்த கொழம்பு நெறத்தைப்பாத்து ரத்தச்செவப்புல அது இருந்துச்சு. போதாதுக்கு சோள உருண்டை அதச்செஞ்சு புளிச்ச தண்ணில ஊறவைச்சி திரும்ப அவிச்சி எடுத்துட்டு வந்து சூடா வைச்சிருக்கான்.  அது அபூர்வமானதுதான் ஆனா வயித்துல எடம் வேணுமே. நான் கண்களால் கெஞ்சினேன். அவன் அதை மதிக்கவே இல்ல  நீ சாப்புடு சாருன்னு பக்கத்துல ஒக்காந்துக்கிட்டான்...

நானும் ரொம்ப முயற்ச்சி பண்ணி ஒரு உருண்டையில பாதி சாப்புட்டு விட்டேன் மறுபடியும் கண்கலங்குச்சு. இப்ப ஒரு பக்கம் வயித்த வலி இன்னொரு பக்கம் அவனோட மொரட்டு அன்பு என்ன செய்ய . அப்புறம் அவன் கிட்ட கையப்புடிச்சி கெஞ்சி கேட்டேன் நான் எப்புடியாவது ஒரு உருண்டைய சாப்புட்டுப்புடுறேன் மீதிய மொதல்லயே எடுத்துரு ராசா என்னால சத்தியமா முடியாதுன்னு சொன்னேன். அவனும் இரக்கப்பட்டு எடுத்துட்டு கோவிச்சிக்கிட்டான் போசாரு நூவு சரியா சாப்புடலன்னு கோவிச்சிக்கிட்டான்..

ஒருவழியா அதைசமாளிச்சி சாப்புட்டேன் வயிறு பிள்ளையார்க்குமாதிரி நிக்கிது ஏற்கனவே கொஞ்சம் நமக்கு அப்புடித்தான்.. அப்புறம் கைகழுவ தண்ணி கொண்டாந்தான் அப்புறம் ஒரு தட்டுல ஸ்வீட் கொண்டாந்து வைச்சான்... சாப்புடு சாரு ஜீரணமாகுனு ரெகமண்டேசன் வேற... அப்பா ராசா என்னால சத்தியமா முடியாதுன்னு சொன்னவன்ன அதை ஒரு டப்பாவில போட்டு கொண்டாந்து குடுத்தான் நீ கொண்டு போய் சாப்புடுசாருன்னு சொன்னான். அதோட விட்டானா ஒரு டப்பாவில சோள உருண்டைய பார்சல் பண்ணிக்கொண்டாந்தான் நூவு சரியாவே சாப்புடல இது நாளைக்கி கூட சாப்புடலாம்னு அட்வைஸ் வேற ...

நான் இப்ப உண்மையில கலங்கித்தான் போய்ட்டேன். அப்ப அடுத்து ஒரு காரியம் பண்ணுனான் அவன் சம்சாரத்தக்கூப்புட்டு  வா சாரு நம்ப குரு நமஸ்காரம் பண்ணிக்கோன்னு சொல்லி தடால்னு ரெண்டுபேரும் கால்ல விழுந்துட்டாங்க. இப்ப எனக்கு உண்மையில கண்கலங்கிடுச்சு, இப்ப காரத்தினால இல்ல அவனோட எல்லையில்லாத பாசத்தினால  நான் இதெதுக்குப்பா நான் அவ்வளவு பெரிய ஆள்கிடையாதுன்னு சொன்னேன் அதுக்கு அவன் சொன்னான் சார் நூவு நம்ம குருசார் நீங்க என்ன பண்ணினீங்கன்னு ஒங்களுக்குத் தெரியாதுசாரு......  இங்க வந்ததும் தான் ஒங்க மேல இருந்த மதிப்பு இன்னும் அதிகமாயிடுச்சு. அங்கயும் ஒங்க கூட இருந்ததுனாலதான் பல நன்மைகள் .....னு கண் கலங்கினான்.... அதுமட்டும்மில்ல சார் நீங்க என் அண்ணகாருசார்....   நான் அங்க வாரதுக்கு முன்னாடிதான் என்னோட அண்ணகாரு  எங்கவீட்டுல சண்டபோட்டு எங்கயோ போயிட்டாரு. நாங்களும் எவ்வளவோ தெடிப்பாத்தும் கெடைக்கல. அங்க வந்ததும் உங்களப்பாத்ததும் என் அண்ணகாரப்பாத்துமாதிரி ஒரு சந்தோசம் சார் நெறையா நேரம் ஒங்களைப்பாத்துட்டே இருந்துருக்கேன் சாரு. ஒங்களப்பாக்கும் போதெல்லாம் என் அண்ணகாருவப்பாக்குற சந்தோசம் கெடைக்கும்


சாருன்னு கண்ணு கலங்கினான்.....

என்கண்களும் கலங்குச்சு.... கவலைப்படாதே அவர் திரும்ப வந்துருவார்னு அவனைத் தேற்றினேன்  இறந்த என் தம்பியை நினத்துக்கொண்டு.... கண்ணீர் மல்க...

அ.முத்துவிஜயன்


No comments:

Post a Comment