🎼🎻🌹 கல்லிலே கலைவண்ணம்🌹🎻🎼
(சுஜாதா&வெங்கடேசன்) பகுதி 21 கலைதாகமும் பசி தாகமும்...
கோயில்ல ஒரு சிலை பக்கத்துல என்னை ஒரு போட்டோ பிடிக்கறார். சிலைகளை சுத்தி சுத்தி வநதீகளே இப்பதான் நான் கண்ல தெரியறேனாங்கறேன்.
பகல் பூரா கலை தாகத்தோட இவர் அலைஞ்சதுல சரியா சாப்பிட ஓட்டல் எங கேன்னு தெரியல. ஒரு காலத்துல தலைநகரா இருந்து இன்னிக்கு குக்கிராமமா மாறிப்போன கங்கை கொண்ட சோழபுரம் மாதிரி பெரிய ஓட்டல் எதுவும் கண்ல படலை. ஒரு கூரை போட்ட ஓட்டல் வாசல்ல வெங்கடாஜலபதி படம் இருக்கேன்னு போனா அங்க உள்ள முட்டை அடுக்கி இருக்கு. வேகமா வெளிய வந்து கொஞ்சம் பழம் வாங்கிண்டு டீ கடைல டீ வாங்கி சாப்பிடறோம்.
சூரியன் அஸ்தமனமாகி தூரத்துல கோயில் மின் விளக்குல ஜொலிக்கறதுல வயத்து பசிய,திரும்பி ஊர் போற கவலையைகொஞ்சம் மறந்து ஆயிரம் வருஷம் பின்னால போய் குதிரைகளோட குளம்பலியோட காகதீய ராஜ்யத்துல சஞ்சரிக்கறோம். பார்த்திபன் கனவு பொன்னன் வள்ளி மாதிரி யாராவது கேப்பை கூழோ கம்பு அடையோ வச்சுண்டு கூப்பிடுவாளோன்னு ஏக்கமா பார்த்துண்டு வரேன். ரோடோர இட்லிக்கடை தெலுங்கு ஆயாக்கள்தான் பச்சை முளகா சட்னியை வச்சுண்டு கூப்பிடறா...
இவர் தொடர்ந்து பேசறார்….
ராமப்பா கோயிலிலிருந்து நாங்கள் திரும்ப வரங்கலுக்கு வருவதற்காக வந்து சாலையோரமாக நின்றோம் . இன்று கூட தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது ஆந்திரப்பகுதிகளில் பேருந்துகளை நம்பிப் பயணம் செய்வதென்பது நம்மை பெரிய இக்கட்டுகளில் மாட்டி விடக்கூடியது. சற்று நேரம் நின்றபிறகு தெரிந்தது, பேருந்துகள் வராது என்று. அங்கே தனியார் வண்டிகளை கைகாட்டி நிறுத்தி ஏறிக்கொள்ள முடியும்.
ஒருலோடு ஆட்டோ குலுங்கி ஒலியெழுப்பியபடி வந்தது. கைகாட்டியதும் நிறுத்தி, “எங்கு செல்ல வேண்டும்?” என்று கேட்டார். வரங்கல் என்றதும் “வரங்கலுக்கு இது போகாது வழியிலேயே நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள். அங்கே வேறு வண்டிகள் உண்டு.” என்றார். “பஸ் உண்டா?” என்று நான் கேட்டேன். “பஸ் இந்நேரத்தில் இருக்காது. வேன்கள் வரும் நீங்கள் ஏறிக்கொள்ளலாம். அதுவரைக்கும் போவதற்கு 15 ரூபாய் “என்று அவர் தெலுங்கில் சொன்னார்.
நாங்கள் லோடு ஆட்டோவின் பின்பக்கம் ஏறிக்கொண்டோம். நாங்கள் மட்டுமே இருந்தோம். . மிகப்பழைய வண்டி ஒரு ரங்கராட்டினத்தில் செல்வது போல அல்லது ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருப்பது போல உடற்பயிற்சி செய்யவைத்தது என்னை. சற்று நேரத்தில் வண்டியை நிறுத்தி புளியமரத்தடியில் காத்து நின்றிருந்த ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டார்.
அவள் பாய்ந்து ஏறி எங்கள் முன்னால் அமர்ந்த போதுதான் சரியாக அவளைப்பார்த்தேன். ஒரு கணம் திகைத்துவிட்டேன். ராமப்பா கோயிலில் நான் பார்த்த அதே கற்சிலை. கன்னங்கரிய பளபளப்புடன் கன்னங்கள். கனவு நிறைந்த விரிந்த கண்கள். கனத்த குழற்சுருள். இறுகிய நீண்ட கழுத்து. உருண்ட கைகள். சிற்றிடை…அதற்கு மேல் பார்க்க முடியாதபடி தொடையை நிமிண்டுகிறாள். என்னவள்…
அவளும் என்னுடன் இறங்கிக் கொண்டாள். ”நீ இங்கா இறங்க வேண்டும்?” என்றேன். ”இல்லை.நான் வேறு வண்டி பிடித்து போய் கொள்கிறேன். இங்கிருந்து இந்த இருளில் நீங்கள் வண்டி பிடித்து வரங்கல் செல்வது கஷ்டம் நான் ஏற்றிவிடுகிறேன்” என்றாள்.
நான் மறுத்தும் எங்களுடன் நின்றுகொண்டள். இன்னொரு வண்டி வந்ததும் அவளே கைநீட்டி எங்களை ஏற்றிவிட்டு வரங்கலில் இறக்கிவிடும்படி சொன்னாள். நான் அவளிடம் விடைபெற்றுக் கொண்டேன்.
வழிப்போக்கர்களைப்போல நமக்கு அணுக்கமானவர்கள் எவருமில்லை. அவர்களை நாம் மீண்டும் சந்திக்கவே போவதில்லை என்றால் அவர்கள் வெறும் மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள்.
என் உள்ளத்தில் அவளுக்கு ’ருத்ரமாதேவி’ என்று பெயரிட்டேன். கடைசி வரை அவள் பெயரை நான் கேட்டுத்தெரிந்து கொள்ளவே இல்லையே என்று நினைக்கும் போது சுரீர் என்று தொடையில் மீண்டும் வலி….
இனி இவள்….
யாரோ ஒரு தெலுங்குக்காரி கிட்ட, அசடு வழிஞ்சுண்டு வந்தது, போதும்னு சொல்லி
ரூமுக்கு வரோம்.கீதா பவன்ல பெசரட் தோசை,சோளா பூரி சாப்படறோம் ..நாளைக்கு ராத்திரி ட்ரெய்ன் ஏறனும்னு நெனவு படுத்தறார்.
கனால மகா காளியும் இராமலிங்கேஸ்வரரும் உக்ரகமா டான்ஸ் ஆட நரசிம்மர் ஜட்ஜா உக்காந்துண்டு இருக்க சித்தேஸ்வரரும் பத்மாக்ஷியும் பெசரட் தோசை சாப்ட்டுண்டே வேடிக்கை பார்க்க திடீர்னு தெலுங்குக்காரி ருத்ர தாண்டவம் ஆடறதை இவர் ரசிச்சுண்டு பாக்கறார். முழிப்பு வரது.ரூம் பாய் வெந்நீர் பக்கெட்ல வச்சுட்டு கதவ தட்டிட்டு போறான்.
இன்னிக்கு 1000 வருஷத்துக்கு முன்னால காகதீய ராஜ்யத்துக்கு போகப்போறோம் சீக்கரம் ரெடி ஆகணும்கிறார்.
கீதா பவன்ல இட்லி காபி சாப்பிட்டு ஷேர் ஆட்டோல வாரங்கல் கோட்டை போகணும்கறார். இது போஸ்ட் ஆஃபீஸ் வரைக்கும்தான் அப்பறம் வேற ஆட்டோங்கறான். எங்கயோநிறுத்தி இன்னொரு ஆட்டோலேறிண்டு கோட்டைக்குள்ள ருத்ரமகா தேவியா உருமாறி நுழையறேன்…
No comments:
Post a Comment