Thursday, February 24, 2022

சரியானகணக்கு

சரியானகணக்கு     #சிறுகதை

வெகு நாட்களாக  பெண் ஸ்வரா விற்கு  பையன் பார்த்து ஒன்றுமே பொருந்தி வராத நிலையில், இப்போது ஹைதராபாடில் ஓரு வரன் பொருந்தி வர அதை போய் பார்த்து பேசி முடிக்கும் எண்ணத்துடன் சுஜாவும் கிருஷ்ணாவும் புறப்பட்ட இந்த ஷார்ட் ட்ரிப் தான் இந்த விமான பயணம். கிருஷ்ணாவிற்கு லீவு இல்லாத காரணத்தால் இரண்டே நாட்களில் திரும்பி வர தீர்மானித்து இந்த பயணம் மேற்கொள்ள பட்டது.

லவ் எதுவுமே இல்லை என்று ஸ்வரா சொல்லிவிட்ட காரணத்தால் ஜாதகம் பார்க்க ஆரம்பித்தாள் சுஜா.

போய் பார்த்து எல்லாமே பிடித்து போய், பையனும் பெற்றோர்களும் எதுவுமே டிமாண்ட் கிடையாது என்று சொன்னபோது சுஜாவும் கிருஷ்ணாவும் இன்னும் மகிழ்ச்சி. பையனின் பெற்றோர்களும் மிக திருப்தி அடைந்ததாகவே பட்டது. மிடில் class வரன், பையன் படித்து ஓரு தனியார் நிறுவன வேலை, அப்பா தனியார் கம்பெனியின் ஓய்வு பெற்ற ஊழியர், final படித்து கொண்டு இருக்கும் ஓரு தங்கை, housewife அம்மா.

எல்லோருக்கும் பிடித்துப்போய் நிச்சியதார்த்த நாளும் குறித்தாகி விட்டது.

திரும்பி ஊர்,வந்த சுஜா நிச்சியதார்த்த ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்த அந்த வேளையில் தான், பையன் ஸ்ரீஜனின் திடீர் suprise விசிட் வியப்பில் ஆழ்த்தியது.

'ஆன்ட்டி எப்படி இருக்கீங்க?'

'நல்லா இருக்கோம்பா, ஸ்வராவ பார்க்கணுமா, வாங்க வாங்க.'

'ஸ்வராவையும் பார்க்கணும், இங்க ஓரு வேலையா வந்தேன் 'சிரித்து கொண்டே ' உங்களையும் அங்கிளையும் பார்க்கணும் பேசணும் '.

கிடு கிடுவேன்று ஓரு sweet காரத்தை செய்து இரவு dinner ரெடி செய்ய ஆரம்பித்தாள் சுஜா.

ஸ்வராவும் ஸ்ரீஜனும் பேசிக்கொண்டு இருக்கும் போதே கிருஷ்ணாவும்  உள்ளே நுழைய வீடு களை கட்டியது.

'அங்கிள் ஆன்ட்டி ஓரு முக்கிய விஷயம் சொல்லணும். எங்க பக்கத்திலே எந்த டிமாண்டும் கிடையாது. உங்க வசதிப்படி செய்யுங்க, ஆனா ஒரே ஓரு ரிக்வஸ்ட்'....

'எங்களுக்கு ஒரே பெண் நாங்க செய்யணும்னு தீர்மானம் செஞ்சத நிறைய நல்லா கட்டாயம் செய்வோம்'

'அதுல தான் ஓரு ஓரு விஷயம் ஆன்ட்டி'

குழம்பிப்போன சுஜாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் புரியத்தான் இல்லை.

'இப்போதான் 4 வருஷமா வேலைக்கு போகிறேன் அப்பாக்கு பென்ஷன் ஒன்னும் கிடையாது, தங்கை கல்யாணத்திற்கு சப்போர்ட் பண்ணியாகணும்.'

'அதனால என்ன?' கிருஷ்ணா கேட்க

'அங்கிள் நீங்க ஸ்வராவுக்கு இப்பவே நிறைய நகை வைரம் எல்லாம் போட்டு செஞ்சீங்கன்னா அத பார்த்து என் அப்பா அம்மாவுக்கும்  தங்கைக்கு எங்கள் வசதிக்கு மீறி செய்யணும்னு கட்டாயம் தோணும். அந்த ப்ரெஷரின் ஓரு பகுதி எனக்கு தான் வரும், என்னால சமாளிக்க முடியுமான தெரியலை, அதுனால செய்யறத கொஞ்சம் கொஞ்சமா செய்யுங்க. இப்பவே எல்லாமும் வேண்டாம் '

 ஸ்ரீஜனின் இந்த தெளிவை கேட்டு வியந்து 'இப்படி கூட ஓரு பார்வை  இருக்கா!!!' அசந்து போன சுஜாவுக்கு கண்ணை செருகி தலையை சுற்றி கொண்டு வந்த அதே நேரம், தன் பெண்களுக்கும் கஷ்டப்பட்டு  நிறைய நகை போட்டு நிறைய சீர் செய்த தன் அப்பாவும், அதை பார்த்து தன் தங்கைக்கும்  தங்கள் அளவுக்கும் சக்திக்கும் மீறி  திக்கி திணறி சில வருடங்களுக்கு முன்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அகப்பட்டு கொண்ட கிருஷ்ணாவும் கண் முன்னே பரிதாபமாக  வந்து போனார்கள்.

படம் உதவி... நண்பர் Govindaraj Lakshminarayanan. நன்றி ஜி.

சுஜா கிருஷ்ணா

No comments:

Post a Comment