துணை…
எல்லாரும் போய் விட்டார்கள். இவன் மட்டும் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
"செதைக்கு தீ வெச்சப்பெறவு யாரும் இங்க நிக்கக்கூடாது. திரும்பிப் பாக்காம நடக்கணும்" என்றான் வெட்டியான்.
"நாந் தீ வெக்கலியே.." என்றான் இவன்.
வெட்டியான் இவனைக் கொஞ்சம் முறைப்போடு பார்த்தான். "யார் வெச்சா என்ன.. சிதை எரியத் தொடங்கிய பெறவு யாரும் இங்க நிக்கப்படாது.."
"அது எதுக்கு?" என்றான்
"இதுக்கு நான் உனக்கு பதில் சொல்ல ஆளில்லே!" என்றான் வெட்டியான். இடுப்பு மடிப்பிலிருந்து ஒரு சாராய பாட்டிலை வெளியிலெடுத்து கொஞ்சம் போல் வாயில் கவிழ்த்துக் கொண்டான்.
"இது இல்லாட்டி எங்களுக்கே இங்க நிக்க ஏலாது.." என்றான் இவனுக்குக் காரணம் சொல்வது போல "ஒரு கொத்து மயிர் எரியறாப்பல அப்படியொரு நாத்தம் கொடலைப் புடுங்கும். எப்பேர்ப்பட்ட வாழ்வு வாழ்ந்தாலும் கடைசியில் எல்லாரும் இந்த நாத்தம் தான்!" என்றான்.
அவனுக்குள் போயிருந்த சாராயம் தத்துவம் பேசத் தொடங்கியிருந்தது.
"எவ்வளவு நேரம் எரியும்?" என்றான் இவன்.
"நீ இப்ப போப்போறியா இல்லையா?"
"இல்ல ஒனக்குத் தொணையா இந்த ராத்திரிக்கு இங்க இருக்கலாம்னு .."
"ஹாஹ்ஹாஹ்.ஹாஹ்..!" ...எனறு பெருஞ்சிரிப்புச் சிரித்தான். "எனக்கு நீ தொணையா?! பொணங்க தான் எனக்குத் தொணையா இருக்க முடியும். மனுஷங்க இல்ல!"
"பொணம் எப்படி தொணைக்கு வரும்?" என்றான்.
"வரும்! கொஞ்ச நேரம் நின்னு பாரு தெரியும்! சிதையிலேருந்து ஒவ்வொண்ணா எழுந்து நிக்கும் எனக்குத் தொணைக்கு வராப்போல! தடியால ஒண்ணு போட்டு படுக்க வைக்கணும். ஒண்ணு ரெண்டுன்னா சமாளிச்சுடலாம். சில சமயத்துலு ஒரே நாளுல ஏழெட்டு கூட வரும். அன்னிக்கு சிவராத்திரி தான். ஒவ்வொண்ணையும் தட்டிப் படுக்க வைக்கறதுக்குள்ள..
போதும் போதும் னு ஆயிடும்!"
"நீங்க ஒருத்தர் தானா இங்க?" என்றான்.
"நீ என்ன பத்திரிகை ஆளா.. கேள்வியெல்லாம் கேக்குற…?" என்றான் முறைப்பாய்.
"அப்படித்தான் வெச்சுக்க. உனக்கு துட்டு வேணும்னாலும் தரேன். இன்னைய ராத்திரிக்கு என்னைய இங்க இருக்க வுடு.."
துட்டு என்றதுமே அவன் முகம் மலர்ந்தது. "எவ்வளவு தருவே?"
"எவ்வளவு வேணும்?"
"ஐநூறு..?"
"சரி."
சந்தோஷமாய் அவனுடைய துருப்பிடித்த ச்சேரை நகர்த்தி இவனுக்குப் போட்டான். கொஞ்சம் தள்ளி தரையில் உட்கார்ந்து கொண்டான்.
"எந்தப் பத்திரிகை நீயி? தந்தியா?"
"ம்.."
"என் ஃபோட்டோ வருமா?"
"வேணும்னா போடறேன்"
"இன்னிக்கி வேணாம். நாளைக்கு நல்லா டிரெஸ் பண்ணிகினு வரேன்..அப்ப வந்து எடுத்துக்க..!"
"சரி."
"முன்னாடி கூட ஒருத்தர் ஏதோ பத்திரிகேலேர்ந்து வந்து என்னை போட்டோ எல்லாம் எடுத்துக்கினு போனாரு. எங்க கஷ்டம் எல்லாம் சொல்லி எளுதினாரு மவராசன். அதுக்கு அப்புறம் தான் கெவர்மெண்டு கொஞ்சம் கூலி உயர்த்திக் குடுத்துச்சு!"
தூரத்தில் இன்னொரு சிதை எரிந்து கொண்டிருந்தது.
"அது ஆம்பிள!" என்றான். "காலையிலேயே கொண்டு வந்துட்டாங்க. கொஞ்ச நேரத்தில் அடங்கிடும்"
"ம்."
"இப்பவெல்லாம் யாரும் ரொம்ப நேரம் வீட்ல வெச்சுக்கறதில்ல. அவங்கவங்க பொழப்பு அவங்கவங்களுக்கு! சட்டுபுட்னு கொண்டாந்து போட்டுட்டுப் போயிடறாங்க..!"
"..ம்."
"வூட்டுக்குப் போய் முழுவாமக்கூட சிலபேர் ஓட்டல்ல புகுந்து திங்கறதைப் பார்த்துருக்கேன். வவுறு ! .இந்தா எதிர்தாப்லயே ஓட்டல் இருக்கு.. உனக்கு எதுனா வேணும்னா சொல்லு... போய் வாங்கியாரேன்.."
"இல்ல எனக்கு ஒண்ணும் வேண்டாம்"
"ராத்திரி முச்சூடும் சாப்டாமயா இருப்ப.."
"பசிச்சா சொல்றேன்"
ஆண் பிணத்திலிருந்து கடும் நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. மூச்சடைப்பது போல் இருந்தது. அனிதாவும் இப்படித்தான் நாறுவாளா? எப்போதும் மல்லிகைப்பூவும் இன்டிமேட் சென்ட்டுமாக இருக்கும் அனிதா.!
"ஆம்பிளை..பொம்பிளை வாடை வித்தியாசம் தெரியுமா..?" என்றான்.
"செத்தப்றம் என்னா வித்தியாசம்..? எல்லாம் ஒண்ணு தான்!"
தன் தொழில் அனுபவம் அவனுக்கே பெருமிதத்தைக் கொடுத்திருக்க வேண்டும். மந்தகாசமாய் சிரித்துக் கொண்டான்.
வங்கியில் அனிதா இவனுக்குப் பக்கத்து கேபின். நல்ல சுறுசுறுப்பான பெண். ரொம்ப உதவிகரம். இவன் ஸ்மோக் பண்ணவோ அல்லது பர்சனல் வேலையாக கொஞ்ச நேரம் எங்காவது வெளியில் போக வேண்டியோ இருந்தால் இவன் கேபினையும் சேர்த்துப் பார்த்துக் கொள்வாள். ஆண்களுக்கு இதைப் போன்ற தோழிகள் பக்கத்துக் கேபினில் இருப்பது நல்லது தான்.
"அந்தம்மா உனக்கு என்னா வேணும் சாரு? "என்றான் வெட்டியான்.
"ஆபீசுல கூட வேலை பாத்தவங்க."
"அம்புட்டுத்தானா?" என்றான். ஒரு காதல் கதையை எதிர்பார்த்தானோ என்னவோ.
"எதுக்கு நீ வந்து அவங்களுக்கு இப்படி காவல் காத்துக்கிட்டுக் கிடக்கே?"
சரியான வார்த்தையைப் பிடித்து விட்டான். காவல் காப்பது... ஆமாம் அனிதாவின் காவலுக்காகத்தான் வந்திருக்கிறான்.
"எனக்கு சாவறது பத்திக்கூட கவலை இல்லை அருண்.. ஆனா சுடுகாட்டுல எல்லாரும் என்னை தனியா விட்டுட்டுப் போயிடுவீங்க இல்ல...அதை நினைச்சாத்தான் பயமா இருக்கு " என்றாள் ஒரு நாள்.
"ச்சீ...பைத்தியம் போல பேசாதே!"
"இல்ல அருண்..நிஜமாவே எனக்கு அந்த பயம் தான். எல்லாரும் என்னைத் தனியா விட்டுட்டு நான் மட்டும் தனியா எரிஞ்சுக்கிட்டு..! நினைச்சாலே பயமா இருக்கு அருண்.."
"பாரு..அனிதா..உனக்கு ஒண்ணுமில்ல..நீ நல்லாயிடுவே!" என்றான்
"ப்ச்.." என்று உதடு பிதுக்கினாள். "நல்லாக மாட்டேன் அருண். எனக்குத் தெரியும். ஃபோர்த் ஸ்டேஜ்..! டாக்டரே சொல்லிட்டார் இருக்கிறவரை சந்தோஷமா பார்த்துக்கோங்க என்று ! அப்புறமென்ன.. நாள் கணக்கு தான்..!"
மிக மிக வருத்தமாக இருந்தது. இருபத்தியாறு வயது அனிதா. இன்னும் திருமணமாகவில்லை. வாழ்வின் எந்த சுகந்தத்தையும் அனுபவிக்கவில்லை. அதற்குள் ஏன் இப்படியானது? இந்த ப்ளட் கேன்ஸர் எத்தனை நாள் இவளுக்குள் இருந்தது? தீர்க்கவே முடியாதபடி சட்டென்று எப்படி விசுவரூபம் எடுத்தது? எப்படி அவர்கள் பெற்றோர் தலையில் இடியாக இறங்கியது?
அலுவலக நண்பன் என்று இவனிடம் மனம் விட்டுப் பேசுவாள். மற்றவர்களை விட ஏனோ அவளுக்கு இவன் மீது அதீத நம்பிக்கை இருந்தது.. தன் கவலை பயம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வாள்.
"நான் சாவது பத்திக்கூட கவலை இல்லை அருண்.ஆனா அம்மாப்பா இதை எப்படித் தாங்கப் போகிறார்களோ என்று நினைச்சாத்தான் ரொம்பக் கவலையா இருக்கு.." என்றாள் ஒரு நாள்.
"ம்.."
"அண்ணன் அண்ணி அமெரிக்காலேருந்து வருவாங்க சரி. ஆனா இங்கயே இருக்க மாட்டாங்க இல்லை? அவங்கவங்க வேலை அவங்கவங்களுக்கு. அம்மாப்பா தான் பாவம்..தனியா! உனக்கு நேரம் கிடைக்கறச்ச நீ வந்து எங்கம்மாப்பாவைக் கொஞ்சம் பார்த்துக்க அருண்... ப்ளீஸ்..அவங்க உடைஞ்சு போயிடாம நீதான் கவனிச்சுக்கணும்.."
"என்ன அனிதா இப்படியெல்லாம் பேசறே??"
"பேசணும் அருண். இப்ப விட்டா அப்புறம் பேச முடியாமலே போயிடும்!"
ஒரு முறை மனைவியையும் அழைத்துக் கொண்டு அவளைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போனான். அனிதா அப்போது இன்னும் உருக் குலைந்திருந்தாள். இளைத்து..கருத்து..அடையாளமே தெரியாதபடி..இவன் மனைவி அவள் தலையை வருடி ஆறுதல் சொல்ல முயன்று பிறகு தானே தோற்றுப் போனாள்.
அப்போதும் ஒரு முறை அனிதா சொன்னாள். "எனக்கு சாகிறது பத்திக்கூட கவலையில்லை அருண்...ஆனா எல்லாரும் என்னைத் தனியா விட்டுப் போயிடுவீங்க இல்ல..?"
"நீ கவலைப்படாதே அனிதா.. நான் உனக்குக் துணையா இருக்கேன்.." சட்டென்று சொல்லி விட்டான். எப்படியோ வார்த்தைகள் வெளியில் வந்து விழுந்து விட்டது.
"நிஜமாவா?"அவள் கண்கள் ஒரு கணம் ஒளிர்ந்து அடங்கியது. "சே.. பாவம்.. வேண்டாம்பா..அது போன்ற உதவியெல்லாம் நான் உன்னைக் கேட்க மாட்டேன்.." என்றாள்.
அவள் கேட்காவிட்டாலும் இதோ இவன் செய்து கொண்டிருக்கிறான். இரவு பூரா அவள் உடனிருந்து .. அவள் எரிந்து பிடிமண்ணாகிறவரை காத்திருந்து..
•••
காலையில் ஆபீஸ் வந்தபோது முகப்பிலேயே அனிதாவின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது... 'எங்கள் மதிப்பு மிக்க தோழி எங்களை விட்டுப் பிரிந்தாள்..' என்ற வாசகங்களோடு.
அனிதாவின் கேபினை திரும்பிப் பார்த்தான். காலியாக இருந்தது. அவள் கூந்தலில் தொங்கும் மல்லிகைச் சரமும் சென்ட் வாசமும் கூட மிஸ்ஸிங். 'ஹய்... குட் மார்னிங் அருண்..!' என்ற அவள் குரல் இனி கேட்கவே கேட்காதோ?
வெட்டியானின் வார்த்தைகள் நினைவு வந்தது. "நாம எல்லாரும் கூட ஒரு நாளைக்குப் பிடி மண்ணு தான் சார். ஆனா அதுவரை வாழணும் இல்ல!?"
அவன் கவுண்ட்டரைத் திறந்து வரிசையில் முதலில் நின்றிருந்தவரிடம் " எஸ்..ப்ளீஸ்..?" என்றான்.
•••
பிகு: புற்று நோயால் மரணமடைந்த சில ஆண்டுகள் முன்பு மரணமடைந்த என் அலுவலகத்தோழிகள் பிரபா சுப்ரமணியத்துக்கும் வெகு சமீபத்தில் உயிர் நீத்த மேடம் இந்திரா சாமிக்கும் சமர்ப்பணம் 🙏🏻🙏🏻
No comments:
Post a Comment