Saturday, February 26, 2022

கோகினூர் வைரத்தின் கதை பகுதி 6

 🌺🌺கோகினூர் வைரத்தின் கதை பகுதி 6

ரஞ்சித் சிங் மறைவைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் பஞ்சாபை ஆள துவங்கினார். ஆனால் அரசியல் சர்ச்சைகளில் இவரும் இவருக்குப் பின் அரசரான பஞ்சாப் சிங்கத்தின் மற்றொரு மனைவியின் மகனான மன்னர் ஷேர் சிங் என்பவரும் அடுத்தடுத்து ஐந்து ஆண்டுகளுக்குள் கொலை செய்யப்பட்டு இறந்தனர். இவ்வாறு அடுத்தடுத்து ரஞ்சித் சிங்கின் அரசு வாரிசுகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட ஆளும் பொறுப்பை ஏற்றார் இளவரசர் துலீப் சிங்.

பஞ்சாபின் மன்னராக துலிப் சிங்கிற்கு முடிசூட்டிய போது அவருக்கு ஐந்து வயது தான் ஆகியிருந்தது. அவரது தாயார் இவர் சார்பாக ஆட்சி புரிந்தார். இதற்கு அரசியின் சகோதரரும் உதவி செய்தார். ஆனால் அரசி அதிகாரிகளுடன் முறை தவறிய உறவு வைத்திருந்ததாக புரளி கிளம்பியதால் ராணுவம் கட்டுப்பாடின்றி களத்தில் இறங்கியது. இந்த சூழலில் பஞ்சாப் அரசில் நிலவிய குழப்பங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்தியாவின் பெரும் பகுதிகளை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்த பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி முடிவு செய்தது. 1849 ஆம் வருடம் பிரிட்டிஷாரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக பஞ்சாப் அறிவிக்கப்பட்டது.

பிரிட்டிஷின் சூழ்ச்சி

சூழ்ச்சியின் உச்சமாக தோல்வியுற்ற நாட்டின் மன்னன் தனது மதிப்புமிக்க செல்வங்களை இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங் தனது கையில் அணிந்திருந்த உலகப்புகழ் பெற்ற கோஹினூர் வைரம் பதித்த அணிகலன் விக்டோரியா அரசியிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட்ட மன்னர் துலிப் சிங்கிற்கு வயது பத்து மட்டுமே. இந்த சதித்திட்டத்தில் தனி அக்கறை எடுத்துக் கொண்டு அதை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் டல்ஹௌசி.

கோஹினூர் வைரம் கைமாறிய விவகாரத்தில் பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனிக்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டார் துலிப் சிங். ஆங்கிலேயர் கொள்கைப்படி ஆங்கிலமும் கிறிஸ்தவ மதமும் அவருக்கு போதிக்கப்பட்டது சீக்கிய மதத்திற்கு எதிராக துலிப் சிங்கின் முடி வெட்டப்பட்டு வளர்க்கப்பட்டார். இந்திய மன்னர்களில் கிறிஸ்தவ மதத்தை தழுவிய முதல் மன்னன் துலிப் சிங் ஆவார். இதற்காக ஆண்டுதோறும் அவருக்கு சன்மானம் வழங்கி அரசு விருந்தினர் தகுதியும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் கோஹினூர் வைரத்தின் சாபம் பிரிட்டிஷார் பக்கமும் தொடர்ந்ததாக கூறப்பட்டது

இங்கிலாந்து ராணியின் மாற்று சிந்தனை

இந்தியாவிலிருந்து கடல் வழியாக கோஹினூர் வைரத்தை லண்டன் கொண்டு சென்றபோது கப்பலில் இருந்த ஆங்கிலேயர்கள் வாந்தி, மயக்கம், மலேரியா என கடும் நோய்களால் அவதியுற்றதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக வைரம் ராணி விக்டோரியாவின் கையில்  ஒப்படைக்கப்பட்ட போது பாபர் நாதிர் ஷா போல் அதன் மதிப்பை கேட்டு தெரிந்து கொள்ளாமல் அதன் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பினார் விக்டோரியா. அவரது ஆணைக்கிணங்க கோஹினூர் வரலாற்றை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கோஹினூர் வைரமானது ஒரு சாபத்தை கொண்டு வருவதாகவும் அதை வைத்திருந்த அனைத்து ராஜாக்களும் ஒன்று அவர்களின் சிம்மாசனத்தை இழந்ததாகவும் அல்லது மற்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.



No comments:

Post a Comment