Sunday, February 27, 2022

கோகினூர் வைரத்தின் கதை பகுதி 7

 🌺🌺கோகினூர் வைரத்தின் கதை பகுதி 7

ஆனால் கோஹினூர் வைரத்தை ஒரு பெண் வைத்திருந்தால் மட்டுமே அதன் சாபம் பலிக்காது என ராணி விக்டோரியாவிடம் தெரிவித்தனர். இதனால் பிரிட்டிஷார் விழிப்புடன் இந்த சாபத்தில் இருந்து விலகி அதனை பெண்கள் மட்டுமே அணிய வேண்டும் என்று முடிவு செய்தனர். இதனால் ராணி விக்டோரியாவிடம் வழங்கப்பட்ட கோஹினூர் வைரத்தை தனது மணிமகுடத்தில் பாதிக்கும் அளவிற்கு வெட்டி அதில் பதித்து அணிந்து கொண்டார். இதனால் 186 கேரட் இடையில் இருந்த கோகினூர் வைரம் 105 கேரட் ஆக குறைந்தது. ராணி விக்டோரியாவுக்குப் பிறகு அவரது மூத்த மகனான ஏழாம் எட்வேர்ட் மன்னனின் ராணியான அலெக்சாண்ட்ரியாவின் மகுடத்தில் அது பிரகாசித்தது.

பின்னர் விக்டோரியாவின் பேரனான ஐந்தாம் ஜார்ஜ் மன்னனாக அவரது மனைவி முதலாம் எலிசபெத் மகுடத்தில் 1937இல் அது ஒளி வீசியது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் தற்போதைய ராணியான இரண்டாம் எலிசபெத்தின் தாயார் தான் முதலாம் எலிசபெத். 2002ஆம் ஆண்டு எலிசபெத் மறைந்தபோது அவரது சவப்பெட்டியின் மீது கோஹினூர் வைரம் பதித்த மகுடம் வைக்கப்பட்டது. லண்டனில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான மக்கள் அதனை பார்த்தனர். கோஹினூர் வைரத்தை அனைவரும் கடைசியாகப் பார்த்த தருணம் அதுதான்.

கோஹினூரை மீட்கும் முயற்சி

பின்னர் கோஹினூர் பதிக்கப்பட்ட ராணியின் மணிமகுடம் இரண்டாம் எலிசபெத் வசம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொது லண்டனில் உள்ள அரச குடும்பத்திற்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் கோகினூர் வைரம் வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் காலனி ஆட்சி நடந்தபோது பல்வேறு நாடுகளிலும் பிரிட்டிசார் கொள்ளையடித்த அரிய வகை விலை உயர்ந்த பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடையவே நமது நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களை பற்றி நாட்டு மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் கோஹினூர் வைரத்தை மீட்க முயற்சிகள் செய்தாலும் அது பலிக்கவில்லை.

இந்தியாவின் மதிப்புமிக்க பெருமைமிக்க கருவூலம் கோஹினூர் வைரம் என்றாலும் அதை இங்கிலாந்திடம் இருந்து மீட்பதில் சிக்கல்கள் இருக்கிறது. கோஹினூர் வைரத்தை மீட்பது ஒரு நாட்டின் அருங்காட்சியகத்தில் இருக்கும் கற்சிலைகளை மீட்பது போன்று சாதாரணமான செயல் இல்லை. இங்கிலாந்து அரசியின்ன் மணி மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரத்தை பெயர்த்தெடுத்து கொடுக்கச் சொல்வது நடக்காத செயல். 2010ல் இந்தியா வந்த அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கோஹினூர் வைரம் இங்கிலாந்திற்கு தான் சொந்தம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

காலனி ஆதிக்கத்தின் போது கொண்டு சென்ற பொருட்களை ஒவ்வொரு நாட்டினருக்கும் திருப்பிக் கொடுத்தால் அரச குடும்பத்திற்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் ஒரு பொருளும் இருக்காது என்றும் கூறினார் இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளும் கோஹினூர் வைரத்தை சொந்தம் கொண்டாடி வருகின்றன. தாலிபான் கூட தங்களுக்கு சொந்தமான கோஹினூர் வைரத்தை ஒப்படைக்க வேண்டுமென ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் கோஹினூர் வைரத்தை சொந்தம் கொண்டாடி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் வாதம் பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.



No comments:

Post a Comment