Seruvaamani_90
பாஸ்கர் சத்யா
அன்று மாலை முழுவதும் செருவாமணி தம்பதியினரும் மூர்த்தியின் குடும்பத்தாரும் கவலையோடு இருப்பினும் களித்தே இருந்தனர்.
பேரனோடு அவ்வப்போது விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டுகள் அவர்களின் நந்தினியின் ஆரோக்யம் சம்மந்தமான கவலையை ஆற்றிக் கொண்டிருந்தன.
இரவு எட்டு மணிக்கு ராஜு நர்ஸிங் ஹோமுக்கு கிளம்ப திம்மை ராஜன் கார் அனுப்பிவிட்டான். சீக்கிரமே அனைவரும் டின்னர் முடித்து விட்டு கிளம்ப ஆயத்தமானார்கள். பாலு சற்று முன்னரே ஸ்கூட்டரில் கிளம்பி விட்டான். மற்றவர்கள் காரில்.
நமஸ்கரித்தாள் பெற்றோர்களையும் மாமனாரையும். வலிகளும் வேதனைகளும் கண்களில் கண்ணீராய் கூடினாலும் அடக்கிக் கொண்டு வாழ்த்தினார்கள்.
அவளை நர்ஸிங் ஹோம் வரை கொண்டு விட்டு வர எல்லோருக்கும் ஆர்வம். டெஸ்டு முடியும் வரை ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கவேண்டும் அவளை. தெம்பூட்டிக் கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு.
இரவு பதினோரு மணிக்கு விக்கிக்கு அன்றைய தினத்தின் கடைசி தாய்ப்பாலை தருகிறாள்.
பாலுவைத் தவிர மற்றவர்கள் விக்கியை அழைத்துக் கொண்டு திரும்புகிறார்கள். எவ்வளவோ செருவாமணி கேட்டும் பாலு தானே நர்ஸிங் ஹோமில் இரவை கழிப்பதாக கூறிவிட்டான்.
நடுநிசி பனிரெண்டு மணி அளவில் அவளுக்கு ஒரு ஊசி செலுத்தப்படுகிறது. சற்று ரிலாக்ஸாக இருப்பதற்காக. அதுவரை பாலு அவளோடு கல கல வென்று பேசிக்கொண்டு இருக்கிறான்.
அவள் தூங்கியவுடன் வெளியே ரிஸப்ஷனுக்கு வருகிறான். சற்று நேரத்தில் அவனுடைய டாக்டர் நண்பர்கள் விஷயமறிந்து. கொஞ்ச நேரம் அவள் உடல் நிலை பற்றி கொஞ்ச நேரம் ஹாஸ்பிடல்கள் சார்ந்த அரட்டைகள். விடை பெறுகிறார்கள்.
அதிகாலை ஐந்து மணிக்கு பாலு வீட்டிற்கு வந்து காலைக் கடன்களை முடித்து விட்டு இரண்டு ஃப்ளாஸ்கில் காஃபியும் ஒரு ஃப்ளாஸ்கில் பாலையும் எடுத்துக் கொள்கிறான். செருவாமணியின் பிடிவாதத்தை சமாளிக்க முடியவில்லை. அவரையும் பின் ஸீட்டில் அமர்த்திக் கொண்டு ராஜு நர்ஸிங் ஹோமுக்கு வருகிறான்.
செருவாமணியை ஹாஸ்பிடலில் இருக்க சொல்லிவிட்டு மீண்டும் மைலாப்பூர் வந்து மூர்த்தியை அழைத்துக் கொண்டு வருகிறான் நர்ஸிங் ஹோமுக்கு.
பல பேஷண்ட்ஸ் அட்டென்டண்டுகளுக்கு இப்படித்தானே ட்யூட்டி. நந்தினிக்கு பாலுவின் சேவை இன்று.
டாண் என்று எட்டு மணிக்கு டாக்டர் சுகுமாரின் கார்.
'குட் மார்ணிங் சார்'
நடந்து கொண்டே பேச்சு நந்தினி தங்கியிருந்த பிரத்யேக அறை வரும் வரை.
'எப்படி இருக்கா ஒன் ஆம்படையா? என்ன சாப்ட்டா நேத்திக்கு? பயப்படாம இருக்கா தானே?'
எல்லா கேள்விகளுக்கும் விடை தருகிறான்.
'என்னம்மா, உன் பேரென்ன, மறந்துட்டேன்.'
'நந்தினி'
'எஸ் எஸ். இனிமே மறக்க மாட்டேன்.'
'இந்தோ பார் நந்தினி. இப்ப இன்னும் சித்த நாழியில டை எக்ஸ்ரே எடுக்கப் போறேன். ஒண்ணும் பயப்பட வேண்டாம். ஒரு சின்ன ஊசி போடுவேன். ஊசி வழியா போட்ட மருந்து எங்காவது ப்ளாக் ஆகறதான்னு பார்க்க ஒரு எக்ஸ்ரே எடுப்போம். அவ்வளவுதான். ஒண்ணும் கவலப் படவேண்டாம் ரிலாக்ஸா இருக்கலாம். குழந்தைக்கு ஃபீட் பண்றதுன்னா பண்ணிக்கோ. அப்புறம் ஃப்யூ அவர்ஸ் முடியாது. ஏதாவது ஸாலிட்ஸ் சாப்புடுவானில்லையோ அவன்.'
'பாலு, ரேடியாலஜிஸ் வந்தாச்சா? வாட் இஸ் ஹிஸ் நேம் சிஸ்டர்?'
'குமரகுரு டாக்டர். கூப்பிடட்டுமா?'
'எஸ். கூப்பிடுங்கோ அவரை'
'குமரகுரு, அதானே உன் பேரு. அவங்க மதர்ஸ் ஃபீடிங் முடிச்சோண்ண பேஷண்ட ரெடி பண்ணு. ஸிஸ்டர், ரெடி பண்ணி வீல் ச்சேர்ல அழச்சிண்டு வாங்க.'
ரிஸப்ஷனில் உள்ள ஒரு ஸோஃபாவில் உட்காருகிறார்.
'உட்கார் பாலு இங்க.'
'ஐ திங்க் ஹர் ப்ராப்ளம் மே நாட் பீ ஸிவியர். மெடிஸன்ஸ் கேட்கறதுங்கறதே ஒரு குட் ஸைன். நீயே ஒரு எம்.டி. உன் கிட்ட சொல்லிண்டிருக்கேன் பாரு.'
சிரிக்கிறார்கள் இருவரும்.
'ஒன்னோட ஸன் ரொம்ப க்யூட். த்ருஷ்டி சுத்தி போட சொல்லு. ஆமாம், உங்க அப்பாவோட அங்க நின்னுண்டு பேசிண்டிருக்காரே அவர் யாரு?'
'என்னோட மாமனார்.'
'ஓ. தஞ்சாவூர் ஸ்டைல்ல இருக்காரே பட்ட பட்டையா விபூதி, எட்டு மொழம் வேஷ்டி, வாயில வெத்தல பாக்கு வேற. குட்'
'கூப்பிடட்டுமா சார்?'
'நாமளே போவோம் அவர் கிட்ட'
'ஸ்வாமி! உங்க பொண்ணு நன்னாயிடுவா. கவலப்படாதீங்கோ. டாக்டரையே மாப்பிள்ளையா வேற வெச்சிண்டிருக்கேள். பயப்படாதீங்கோ. சும்மா ஒரு சாதாரண டெஸ்டுதான். இன்னிக்கு சாயந்திரமே ஆத்துக்கு அழச்சிண்டு போகலாம் உங்க பொண்ண, என்ன புரியறதா!'
முகத்தை திருப்பிக் கொண்டு அழுகிறார் செருவாமணி.
'பொண்ணு ரொம்ப செல்லமா? நான் பார்த்துக்கறேன். ஒண்ணும் ஆகாது அவளுக்கு. நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்? கண்ட்ரோல் யுவர்ஸெல்ஃப்.'
தோளில் தட்டிக் கொடுக்கிறார் செருவாமணியை.
ரேடியாலஜிஸ்ட் குமரகுரு வருகிறான் அங்கு.
'எல்லாம் ரெடியா இருக்கு சார். பேஷண்டையும் அழச்சிண்டு போயாச்சு'
'வா பாலு. போகலாம்'
தொடரும்...
No comments:
Post a Comment