Friday, February 18, 2022

செருவாமணி 89

Seruvaamani_89

பாஸ்கர் சத்யா


பீரிட்டு வந்த அழுகை.  தற்காலிக ஜலதோஷத்தை கொடுக்கும் அளவிற்கு.

நந்தினியின் கையை சற்று முரட்டுத்தனமாக இழுத்து அவளை மார்பிலே சாய்த்துக் கொள்கிறான்.  அவனுடைய ஒரு கை அவள் முதுகில் இதமான தடவலுடன்.

'ரிலாக்ஸ்.  ரிலாக்ஸ் நந்தினி.'

அவளுடைய அப்போதைய அழுகையின் அர்த்தத்தை ஓரளவு அறிந்தவனாக அவளை தேற்ற முயற்சிக்கிறான்.

'உனக்கு ஒண்ணும் ஆகாது.  நாங்க இருக்கோம்.  இட்ஸ் ஜஸ்ட் எ டெஸ்டு.  சந்தேகத்தை நாங்க போக்கிக்கறதுக்காக.  எப்ப மெடிஸன்ஸ்ல ரெஸ்பான்ஸ் இருக்கோ, அப்பவே ப்ராப்ளம் தீர்ந்துடுத்து.  தலைக்கு மருந்து கொடுக்கறதுக்கு முன்னாடி, நாங்களும் டெஸ்ட் எடுத்து பார்க்கறது நல்லது இல்லையா.  அதுக்குதான் இந்த டெஸ்ட்.  யூ வில் பீ ஆல்ரைட்.  நானும் டெஸ்ட் எடுக்கும்போது டாக்டர் சுகுமார் பக்கத்திலேயே இருப்பேன்.  நத்திங் டு ஒர்ரி.  வீ ஆர் கோயிங் டு லிவ் டுகெதர் ஃபார் மெனி மெனி இயர்ஸ்.  பிலீவ் மீ.'

அவன் அணைப்பினில் ஆறுதல் மட்டுமே இருந்தது.  ஆறுதல் கிடைத்து ரிலாக்ஸ் ஆனவுடன் அவளுடைய நடுக்கம் ஸ்பரிஸத்தில் பயணித்தது.

'வேண்டாம் நந்தினி.  யூ நீட் ஸம் ரெஸ்ட் நௌ.  அநாவசியமா உடம்புக்கு அழுத்தம் கொடுக்க கூடாது.  லெட் அஸ் பார்ட்'.

'நோ, ஐ நீட்.  ஐ நீட் நௌ.'

ஸ்பரிஸங்கள் மருத்துவத்துக்கு அடிமையாவது இல்லை.

இருட்டோடு இருட்டாக இருந்த சின்ன குண்டு நைட்லேம்ப் இப்போது பிரகாசித்துக் கொண்டிருந்தது.  வெட்கம் எழுந்து அணைத்தபின் ரத்த நாளங்களின் கபடி ஆட்டம்.

மணி அறியா களைப்புத் தூக்கம்.

காலை மணி மூன்றரை.  மூர்த்தி வைத்திருந்த அலாரம்.  அவருக்கும் அன்று இரவு சரியான தூக்கமில்லை.  ஏதேதோ நினைவுகளில் சம்பாஷணைகள்.. செருவாமணியோடு, நந்தினியோடு, பாலுவோடு, தையுவோடு, ஓரிரு முறை கபாலீஸ்வரரோடு.  மனம் சிந்திக்க துவங்கிவிட்டால் கற்பனையில் சம்பாஷணைகளை துவங்கிவிடும்.

நாலேகாலுக்கு கார் வந்துவிடும்.  அதற்குள் காலைக் கடன்கள்.  குளிக்காமல் கிளம்புவதால் கொஞ்சம் ஸென்ட்.  அங்குமிங்கும் ஜிப்பாவில்.

'எதற்கு வீணாக அவர்களை எழுப்பணும்?  புரிதலுக்காக உறங்கியிருக்கிறார்கள் பாலுவும் நந்தினியும்.  தூங்கட்டும்.  வாசலை வெளியிலிருந்தே பூட்டிக் கொண்டு கிளம்புவோம்.  ஆச்சு, சம்பந்திகளை அழைத்துக் கொண்டு ஆறு ஆறரைக்கெல்லாம் வந்துவிடப் போகிறோம்.  எதற்கு வீணாக அவர்களை எழுப்பி...'

வாசலை பூட்டிக் கொண்டு வாசலிலேயே காத்திருக்கிறார் காருக்காக.

இதோ திம்மைராஜன் கார்.  ஒயிட் அம்பாஸடர்.  ட்ரைவரை அனுப்பாமல் அவனே வருகிறான்.

'என்னடா திம்மை.  நீயே வந்துட்டியா?'

'ட்ரைவர் தூக்க கலக்கமா இருந்தான்.  அதான் நானே..  கிளம்பலாமா ஐயா?'

'அஞ்சு மணிக்கு வருது ட்ரெயின்.  சில சமயம் நாலே முக்காலுக்கே வந்துடும்.  அதுக்காக அவசரப் படவேண்டாம்.  நிதானமா ஓட்டு.'

சரியாக அவர்களை ரிஸீவ் பண்ணும் போது ஐந்து.

'வாங்கோ, வாங்கோ.  ரெண்டு லக்கேஜை என் கிட்ட கொடுங்கோ.  பரவாயில்ல, நான் தூக்கிக்கிறேன்.'

செருவாமணி மூர்த்தியே நந்தினி உடம்பைப் பற்றி பேசுவார் என நினைத்து, பொறுமை இழந்து விட்டார்.

'நந்தினி இப்ப எப்படி இருக்கா.  அத முதல்ல சொல்லுங்கோ.'

'சொல்றேன் சொல்றேன்.  திம்மை, நேரா வண்டிய மௌண்ட் ரோடு ஆனந்த விலாஸ்ல நிறுத்துடா.  காஃபி சாப்டுட்டு ஆத்துக்கு போகலாம்.'

'சௌகர்யமா இருக்கா உங்க நந்தினி.  நன்னா ஆயுடுவா.  கவலப் படாதீங்கோ.  காஃபி சாப்டுண்டே விலாவாரியா சொல்றேன்.'

இங்கிதத்தோடு ஹோட்டலின் கடைசி டேபிளில் உட்கார்ந்தான் திம்மைராஜன்.

எல்லாவற்றையும் சொன்னார்.

'சந்தேகத்துக்காக தான் இந்த டெஸ்ட்.  கவலப் படும்படியா ஒண்ணும் இல்ல.  வீணா கொழந்த கிட்ட கேள்வியெல்லாம் கேட்டு அவள பயமுறுத்தாதீங்கோ.'

'சம்பந்தி, எனக்கொரு வருத்தம்.  நீங்க ரெண்டு பேரும் டாக்டரா இருந்துண்டு இப்படி ஆச்சேன்னு தான்...'

'ஆனது ஆச்சு மாமி.  இப்ப போய் அதெல்லாம் பேச வேண்டாம்.  நல்ல டாக்டர் கொழந்தைய பார்த்துட்டு வரார்.  நன்னா குணப்படுத்திடுவார்.  என்ன நம்புங்கோ.'

'சேத்தியா தோப்புல அவ விழுந்தோண்ணயே பக்கத்துல ஒரு டாக்டர் கிட்ட காமிச்சிருக்கணும்.  தப்பு எங்க பேருலேயும் இருக்கு...'

செருவாமணி இப்படி சொல்லி விட்டு அழுகிறார்.

'இப்ப ஒண்ணும் ஆகிடல.  ஆகவும் ஆகாது.  தைரியமா இருங்கோ.  கற்பகாம்பா இருக்கா.  அவ பார்த்துப்பா அவள'.

அப்பு முதலி தெரு வீட்டிற்கு வந்தபோது ஆறரை மணி.  வாசலில் நந்தினி கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

'கோந்த.. எப்படிடா இருக்க.  வேலக்காரா இல்ல.  நீ ஏண்டா கஷ்டப் பட்டுண்டு கோலம்லாம் போட்டுண்டு..'

'பேரன் தூங்கிண்டிருக்கானா?  மாப்ள இல்ல?'

'அப்பா முதல்ல உள்ள வாங்கோப்பா.'

திம்மை ராஜன் லக்கேஜுகளை உள்ளே வைத்து விட்டு விடை பெறுகிறான்.

தொடரும்...

No comments:

Post a Comment