🎼🎻🌹 கல்லிலே கலைவண்ணம்🌹🎻🎼
(சுஜாதா&வெங்கடேசன்) பகுதி 19 மகா காளி
ஹனம் கொண்டாவுக்கும் வாரங்கல்லுக்கும் நடுவுல ஷேர் ஆட்டோ நிமிஷத்துக்கு ஒன்னு ஓடிண்டு இருக்கு...எங்க வேணாலும் ஏறி இறங்கலாம். 15- 30 தான் சார்ஜ் ..காளி கோயில் ரவுண்டானால எறங்கி நடந்து போறோம். வழில ஒரு அனுமார் கோயில் ட்ரஸ்ட். தங்கறதுக்கு ரூம் இருக்கு. இங்க கூட தங்கியிருக்கலாமேன்னு தோண்றது.
அதை தாண்டி ஒரு நரசிம்மர் மலை கோயில் வரது வரச்சே பாத்துக்கலாம்னு நடக்கறோம். கடைசில பத்ரகாளி கோயில் ஒரு பெரிய ஏரிக்கரைல இருக்கு.
கோயிலும் பிரமாண்டமாதான் இருக்கு..
கோயில் சுவரில் உள்ள எழுத்துக்களின்படி,
ஆந்திர தேசத்தின் வெங்கி பகுதியை வென்றதன் நினைவாக , சாளுக்கிய வம்சத்தின் இரண்டாம் புலிகேசி அரசனால் கி.பி 625 இல் கட்டப்பட்டதாக போட்டிருககு.
காகதீய ராஜாக்கள் பின்னர் கோயிலை ஏத்துண்டு பத்ரகாளி தேவியை தங்கள் "குல தேவதை" என்று வழிபட்டார்களாம் .
கோயிலை ஒட்டி கணபதி தேவரால் ஒரு ஏரியும் கட்டப்பட்டதாம். தில்லியின் முஸ்லீம் ஆட்சியாளர்களிடம் காகத்திய வம்சம் தோற்க , கோயில் அதன் முக்கியத்துவத்தை இழந்தது.
காகத்தியர்கள் அல்லாவுதீன் கில்ஜியுடன் போர்நிறுத்தம் செய்து, படையெடுக்காமல் இருக்க மகா காளியோட இடது கண்ணா இருந்த கோகினூர் வைரத்தை வழங்கினார்களாம் . அவர் தனது அடிமையும் தனிப்பட்ட நம்பிக்கையாளருமான மாலிக் குஃபூரை தனிப்பட்ட முறையில் வைரத்தை எடுத்துச் செல்ல அனுப்பினார். (இந்த காளி மாதாவிடமிருந்து தொடங்கும் கோஹினூர் வைரத்தின் கதையையும் இது சென்றவர்களுக்கு ஏற்பட்ட துரதிஷ்டங களையும் இன்று எங்குள்ளது என்பதையும் தனி பதிவாக பின்னர் பதிகிறேன்)
1950 ஆம் ஆண்டில், ஸ்ரீ கணேஷ் ராவ் சாஸ்திரி என்ற ஒரு தேவி உபாசகர் மற்றும் குஜராத்தி தொழிலதிபர் ஸ்ரீ மகன்லால் இருவராலும் கோவில் புதுப்பிக்கப்பட்டது. பத்ரகாளி தேவி, மகன்லால் சமேஜாவை கனவில் ஆசிர்வதித்து, கோயிலைப் புதுப்பிக்க அருள்பாலித்தாராம்.
காளி என்றால் பயங்கரமாகத்தானே நாம் ஊகிப்போம். ஆனால் இங்கு அம்மனோ கருணை ததும்பும் முகத்துடன் கம்பீரமாக பல்வேறு ஆயுதங்களுடன் காட்சியளிக்கிறாள். கணபதி, நாகவடிவில் சுப்ரமண்யஸ்வாமி சிவன் என தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர். அருகிலேயே அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீ சிரடி சாயிபாபா கோவில் மிக அருமை.
அம்மா காளீ நீ கிருஷ்ணரோட சகோதரின்னு படிச்சிருக்கேன். அப்படீன்னா நீயும் வைஷ்ணவப்பெண்தானே?ன்னு நினைச்சிக்கறேன்.
கோவிலை ஒட்டினாற்போல் பெரிய ஏரி.. இந்த ஏரி ஏற்பட்டு 800 வருடங்கள் ஆகின்றன. காக்கதீய வம்சத்தைச் சேர்ந்த ரேச்சால ருத்ரய்யா தம்பதியினரால் 1213ல் நிறுவப்பட்ட இந்த பெரிய ஏரியில் இன்றளவும் நீர் வற்றாமல் இருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம். படகு சவாரியும் நடைபெறுகிறது. சுற்றிலும் பசுமை கொஞ்சுகிறது. சுற்றுச்சூழல் பாழாகாமல் பாதுகாத்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.
கற்களால் ஆன பத்ரகாளி தேவியின் உக்கிரமான கண்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை ஏந்திய எட்டு கரங்கள். பத்ரகாளி தேவியின் வாகனம் - கருவறைக்கு எதிரே சிங்கம் வைக்கப்பட்டுள்ளது. கோயிலில் த்வஜஸ்தம்பம் மற்றும் பலிபீடம் உள்ளது.
கோயிலுக்கு பக்கத்தில் அம்மனுக்கு சார்த்திய படவைகள் விற்பனைக்கு இருக்கு. பத்ராசலம் மாதிரி இங்க ஒரு நூல் புடைவை வாங்கிக்க சொல்றார். புரட்டிப்பார்த்ததில் பெரும்பாலும் சின்தெடிக்தான் இதை உடுத்திண்டா எனக்க. உடம்பு எரியும்கறேன். தரிசனம் முடிந்து கோயில் பின்னால ஏரிக்கரையைஒட்டி உக்காரரோம். எதொ ஸ்கூல் டூர்ல பசங்க சுத்திப்பார்க்கறதுகள். அமைதியான சூழல்ல நான் தேசிகர் ஸ்லோகம் க்ரூப்ல போட ஆடியோல சொல்றேன்.
மாலை மங்கி மரங்கள்ல கலர் லைட் வெளிச்சத்துல மனசு மயங்கறது..
No comments:
Post a Comment