🎼🎻🌹 கல்லிலே கலைவண்ணம்🌹🎻🎼
(சுஜாதா&வெங்கடேசன்) பகுதி 20 நரசிம்ம மலையும் ராமப்பா சிற்பக்கலையும்..
காளி கோயிலை விட்டு மனசில்லாம கிளம்பி நரசிம்மர் மலை மேல ஏறறோம்.
இருட்டுல மனுஷாளே இல்ல. ஹோன்னு மலை இருக்க மேலேர்ந்து நரசிம்மர் வாவான்னு கூப்பிடறார். எதிர் கடைல பழம் வாங்கிண்டு பட்டர் எப்ப வருவார்னு கேக்கறோம். போங்க வருவார்னு சொல்ல எங்களுக்கு முன்ன பேண்ட் போட்டுண்டு ஒருத்தர் வேகமா ஏறறார்..மேலே யாரையும் காணோம்.பாண்ட் போட்டவரும் காணோம். கோயில் மூடியிருக்க பாறைகள்ளாம் இருட் டுல ராட்சசா மாதிரி நிக்க,வா போயிடலாம்கறார்.
திடீர்னு ஒரு பாறை மறைவிலேர்ந்து பேண்ட் போட்டவர் பஞ்ச கச்சத்தோட வெளி வந்து தீபம் ஏத்தப்போறேன் வெய்ட் பண்ணுங்கோங்கறார்.
கொஞ்ச நேரம் கழிச்சு மணி சத்தம் கேட்டு உள்ள போறோம். பாறை இடுக்குல நரசிம்மர் தீப வெளிச்சத்துல அருள் பாலிக்கறார்.
தெலுங்குல தன் பூர்வீகம் தமிழ் நாட்டு வந்தவாசி பக்கம்னும் இங்க செட்டிலாகி காளிகோயில் வரும் பக்தர்கள் இங்கயும் வருவான்னும் சொல்லி துளசி தீர்த்தம் தரார்.
மறுபடி ரூம் கீதாபவன் சோளாபூரி,ன்னு அன்னிக்கு நாள் கழியறது.
மறுநாள் கார்த்தால ரொம்ப நுணுக்கமான ஒரு கோயிலுக்கு போறோம்..அதை ரசிக்க கலைக்கண் வேணும். நான் பேசறேங்கறார். அதனால
இனி இவர்….பேசுவார்.
அடுத்த நாள் 60 கி மீ பயணித்து நாங்கள் சேர்ந்த இடம் இராமப்பா கோவில்.
வரங்கல்லில் இருந்து மாலை கிளம்பி பாலாம்பேட் என்ற கிராமத்தில் இருக்கும் ராமப்பா ஏரிக்கு அருகே உள்ள ராமப்பா கோயில் சென்றோம். வரங்கல்லில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இது. சின்னஞ்சிறு கிராமம் இது. வழிகேட்டு வழிகேட்டுச் சென்றோம். ருத்ராம்பா உருவாக்கிய ராமப்பா ஏரி கடல்போல வரவேற்றது.
வழியெங்கும் கூட்டம் கூட்டமாக எருமைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றார்கள்.
ராமப்பா கோயில் எனப்படும் கோயில் ரேச்சால ருத்ரன் என்ற சிற்றரசனால் கட்டப்பட்டது. இவன் முதலாம் கணபதி தேவருக்கு கீழே இருந்தவன். அக்கோயிலில் உள்ள சிவன் பெயர் ராமலிங்க சுவாமி. ராமேஸ்வரத்து தெய்வம்தான். ”நம்ம ஊர் ராமேஸ்வரமா?” என்கிறாள். நமக்கு காசி எப்படியோ அபப்டித்தான் வடக்கே ராமேஸ்வரம்” என்றேன்.
இந்த பயணத்தில் இதுவரை பார்த்த சிற்பங்களில் உச்சம் என்பது ராமலிங்கசாமி கோயில்தான். என் நோக்கில் இந்தியாவின் முதன்மையான சிற்ப அற்புதம் என்றால் இந்த கோயிலின் முக மண்டபம்தான். அடுத்தபடியாக பேலூர்-ஹளபீடு சிற்பங்களைச் சொல்லலாம். கன்னங்கரிய கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த மண்டபம் ஒரு மாபெரும் நகை.
ஒரு கைவிரல் நுனிகூட விடப்படாமல் சிற்பங்கள். வழக்கமாக இத்தகைய பேனல் சிற்பங்கள் தனித்தனியாக முழுமை கூடாமல் இருக்கும். ஆனால் இங்கே ஒவ்வொரு சிற்பமும் ஒரு தனி கலைச்சாதனை என்று சொல்லத்தக்க அளவுக்கு அதிநுண்மை கொண்டது. இந்த ஒரு மண்டபத்திலேயே பற்பல ஆயிரம் சிற்பங்கள் உள்ளன.
இடம் மாறி இடம் மாறி மல்லாந்து படுத்து அந்தச் சிற்பங்களை பார்த்து பார்த்து திகட்டி சலித்து மீண்டும் தாகம் கொண்டு மீண்டும் பார்த்து அது ஒரு மீளமுடியாத அவஸ்தை.
அந்த ஒரு மண்டபத்தை சாதாரணமாக ரசிக்கவே ஒரு நாள் முழுக்க போதாது. சிவபெருமானின் நடன நிலைகள். அவரைச் சூழ்ந்து பிற தெய்வங்கள். நடன மங்கையர். இசைக்கலைஞர்கள். அந்த மண்டபமே தெய்வங்களும் தேவர்களும் மானுடரும் சேர்ந்து கொண்டாடும் ஒரு பெரும் கலைத்திருவிழாபோல் இருந்த்து.
ராமப்பா கோயிலின் வெளியே மேல்கூரை வளைவுக்கு அடியில் உள்ள கரியகல் மோகினி நாகினி சிலைகள் ஒவ்வொன்றும் பெரும் கலைப்படைப்புகள். இதற்கு அப்பால் ஒரு க்லையே இந்தியாவில் இல்லை என்ற பெரும் பிரமிப்பை உருவாக்குபவை.
பித்து பிடிக்க வைக்கும் ஒரு அபூர்வமான காட்சிப்பெருவிருந்து இந்த ஆலயம். இந்திய நாட்டில் ஒரே ஒரு கலைச்சின்னம் மட்டும் எஞ்சினால் போதுமென்றால் இதை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் வழக்கம்போல கைவிடப்பட்டு கிடக்கிறது இந்த இடம். சிற்பங்களை பயணிகள் உடைத்துப்போட்டால்கூட கேட்க யாருமில்லை
முதல் முதலாக ஒரு சிற்பியின் பெயரில் அழைக்கப்படும் கோவிலாம் இது. இதனுள் உறையும் ஆளுயுர சிவலிங்கத்தின் பெயர் ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர். இதனைக் கட்டிமுடிக்க அந்த சிற்பிக்கு 40 வருடங்கள் ஆனதாக வரலாறு சொல்கிறது, சிவப்பும் வெள்ளையும் கலந்த கற்களால் [SAND STONES ]கட்டப்பட்ட கோவில்.. இதன் ஆலயசிகரம் மட்டும் முழு வெள்ளைக் கற்களால் ஆனது
ராமப்பா கோயில் இந்தியாவின் மாபெரும் கலைப்பொக்கிஷங்களில் ஒன்று. வரங்கல் அமைந்துள்ள நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கோயில்கள் அனைத்துமே கரிய சலவைக்கல்லால் கட்டப்பட்டவை. தார் உருக்கி வடித்தது போன்றிருக்கும் சிற்பங்கள். ஒளியில் மின்னும் கருமுத்து போன்ற பெண்கள். கரிய உலோகத்தில் செதுக்கி எடுத்தது போன்ற ஆலயங்கள் ஒவ்வொன்றையும் பிரம்மாண்டமான ஆபரணங்கள் என்று தான் சொல்ல முடியும்.
இவர் சன்னதம் வந்தது போல எதோ சொல்லிண்டிருக்கார். அந்த நடனப்பெண் என்னைப்பார்த்து கண்ணடித்து சிரிக்கிறா…
No comments:
Post a Comment