Sunday, February 20, 2022

மாவடு

 #பொது

.. மாவடு கண்ணல்லவோ

மைனாவின் மொழி அல்லவோ

..மாவடு என்பது பிஞ்சு மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகையான ஊறுகாய், இது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். மாவடுவில் உள்ள தண்ணீர் உப்பு, விளக்கெண்ணெய், மசால் மற்றும் மாங்காவில் இருந்து வெளியேறும் நீர் கலந்த கலவை, மிக அருமையான ருசியில் மணமாக இருக்கும். வடு மாங்காய் ஒரு பருவகால உணவு, பிஞ்சு மாங்காய் கோடைகால தொடக்கத்தில் மட்டுமே கிடைக்கும். வடு மாங்காய் தயிர் சாதம் மற்றம் பருப்பு சோறுடன் உண்ண பொருத்தமாக இருக்கும்.

.இப்போ மாவடு சீசன் தொடக்கம்

உதிர்ந்த வடுவை வட உலுக்கி எடுத்த வடு நன்றாக இருக்கும்

நான் சென்னைல இருந்தப்ப ருமானி அதாவது உருண்டை வடு வாங்கி மாவடு போடுவேன்…..

கல்கத்தாவிலிருந்து அப்துல் கலாம் (டெல்லி)வரை நான் போட்ட மாவடு பறக்கும்….

இப்ப அதை விரும்பிய சொந்தங்கள் மறைந்து விட்டனர்…..

எனக்கு என் பெண்சென்னைலேர்ந்து மாவடு போட்டு அனுப்பறா

.இது தான்  கால சுழற்சி…..

நான் மூட்டை கணக்கில் தான் வாங்குவேன்

இப்பல்லாம் எனக்கு ஒரு பாட்டில் தான் கிடைக்குது😢😢

மாவடு இருந்தா இன்னும் ஒரு புடி தச்சி மம்மு உள்ளே போகும்

.சென்னைல இருக்கற மத்யமர் மாவடு போட்டாச்சா?

மாவடு போட சின்ன டிப்ஸ் இதோ…..

தேவையான பொருட்கள்

சிறிய வடு மாங்காய் – 1/2 கிலோ

மிளகாய் பொடி – 1/4 கப்

கடுகு பொடி – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கல் உப்பு – 1/4 கப்

மாவடு செய்முறை

முன் தயாரிப்பு

அனைத்து மாங்காயையும் தண்ணிரில் நன்றாக கழுவிக்கொள்ளவும்.

ஒரு காய்ந்த துணி கொண்டு, மாங்காயில் ஒட்டியிருக்கும் தண்ணீரை துடைத்துக்கொள்ளவும்.

கடுகை எண்ணெய் ஊற்றாமல் சிறிது வறுத்து, மிக்சியில் அரைத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.

ஊறவைத்தல்

கழுவிய மாங்காய் அனைத்தையும் ஒரு கண்ணாடி / பீங்கான் / பிளாஸ்டிக் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

அதில் கல் உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக குலுக்கவும்.

இதே பாத்திரத்தில் மாங்காயை 5 நாட்கள் ஊறவிட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரண்டு முறை நன்றாக குலுக்கி விடவும்.

மாங்காயில் இருந்து தண்ணீர் நன்றாக வெளியேறும்.

மாங்காய் நன்றாக சுருங்கி விடும்.

ஊறுகாய் தயாரித்தல்

மாங்காய் ஊறிய உப்பு தண்ணீர் கலவையை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.

அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்திருக்கும் கடுகு பொடி சேர்க்கவும்.

மசாலாவை நன்றாக கலந்து, மாங்காயுடன் சேர்க்கவும்.

மாங்காய் மற்றும் மசாலா நன்றாக கலக்கும்படி கலக்கவும்.

மறுபடி 5 நாட்கள் இதை வைத்திருக்க வேண்டும்.

மாங்காய் நன்றாக சுருங்கி விடும்.

வடு மாங்காய் ஊறுகாய் தயார்.

இந்த ஊறுகாயை தயிர் சாதம் அல்லது பருப்பு சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

கூடுதல் குறிப்புகள்

கல் உப்பை பொடித்து போட்டால் எளிதாக கரையும்.

மாங்காய் உடம்பிற்கு உஷ்ணம் அதனால் மாவடு தயாரிக்க விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் சூட்டைத் தணிக்கலாம்.

பாரம்பரிய சமையலில் விளக்கெண்ணெய் தான் பயன்படுத்துவர்.

 கடுகு சுவை பிடித்தால் இன்னும் அதிகம் கூட சேர்க்கலாம்.

ஊறுகாயை கண்ணாடி/ பீங்கான்/ பிளாஸ்டிக் ஜாடியில் சேமித்து வைக்கலாம்.

ஊறுகாய் எடுக்க பயன்படுத்திய கரண்டியை அதிலே வைத்தால், ஊறுகாய் கெட்டுவிடும்.

யார் யார் மாவடு போட்டுட்டீங்க….

போட்டவங்க பிடிச்சவங்களுக்கு பார்சல் பண்ணலாமே….

No comments:

Post a Comment