Nithya Sundaram
🌺🌹🌹🌺
#முதலிலேயே சொல்லிடறேன்... Dieting பண்றவா என்னை மன்னித்து விடவும்..நான் தேவையானதை மட்டும் routine ஆகச் சாப்பிடுபவள்.. நான் பார்த்த,சந்தித்த இந்த அனுபவத்தை மட்டுமே இங்கு பகிர்கிறேன்...
வீட்டிற்கு போன சனிக்கிழமை சென்னையிலிருந்து என் பிள்ளையின் நண்பன் ஒருவனது அம்மா, அப்பா ஏதோ கல்யாணத்துக்கு வந்தவா மறுநாள் காலை இங்கு வந்துட்டு அவாளுக்கு சாய்ங்காலம் ட்ரெயின் என்பதால் இங்கிருந்து ஸ்டேஷன் போறோம் என்றார்கள்...அவர்களை என் மகன் மட்டுமே அறிவான்..
நானும் சரி...அவா கல்யாண ஆத்துல இருந்து வரதால அவாளுக்கு என்ன பிடிக்கும், என்ன சமைக்க என்று என் மருமகளிடம் கேட்டு வைக்க சொன்னேன்.
அவர்கள் சாதமே சாப்பிட மாட்டாளாம்..காய்கறி, சுண்டல், தேங்காய் பால்,கூட்டு ,சாலட், fruits இதெல்லாம் தான் சாப்பிடுவாளாம்னு...
இதென்னடா வம்பா இருக்கு... சப்பாத்தி,மில்லட்...?
மருமகள் அவசரமா அதையும் கேட்டேன்.. அதெல்லாம் சாப்பிட மாட்டாளாம்... ஆனால் தேங்காய் கறில நிறைய சேப்பாளாம்..ஆனா தேங்காயோட வெளிப்புற கருப்பு கூடவே கூடாது ன்னு வேற...
காஃபி,டீ...ம்ஹும்...டீ கூட எப்பவாவது தானாம்...
அடப்போடா என்னத்த சமைக்க என்று தானே நினைக்கிறீர்கள்...பாயாசம்,வடை, sweet உடன் அறுசுவை சமையல் சமைக்கறதெல்லாம் ஜுஜுபி..
பெண்டு கழண்டுடுத்து எனக்கு...
இதுல வேற காலை ஏழுமணிக்கே வந்துட்டா...
எங்காத்துல என்னையும்,என் கணவரையும் தவிர மத்தவா ஏழரைக்கு மேல தான் கண்ணே திறப்பா.. காலைல மூணு மணிக்கு தான் படுக்கவே போறா வேலை வேலைன்னு...
என் பிள்ளை அரைக்கண்ணைத் திறந்து வரவேற்ற நிலையில் அவா கிட்ட யாரு உக்காந்து பேச...என் பிள்ளை தான் பாவம் மாட்டிண்டான்..
இதுல நான் எங்காத்துக்காரர்ட்ட ரகசியமா இன்னிக்கு நம்ம எல்லாருக்கும் சாதமும்,புளிசேரியும் தான்.. அதான் ஈஸி ன்னு முதலிலேயே சொல்லிட்டேன்..
வந்தவா கிட்ட காஃபி,டீ ஏதாவது....
அவா கிட்ட கேட்டதும்,அவா பாயாத குறையா," No no no... nothing..only hot water"
நான் சத்தம் காட்டாம என் கணவருக்கு இரண்டாம் காஃபி நீட்டினேன்..
ஒன்பது மணிக்கு இட்லி சாப்பிடலாமே... சும்மா formality க்கு கேட்டுண்டே இவருக்கு தட்டில் சூடா இட்லி,மி.பொடி போட்டு கொடுக்குமுன்,அவா கிட்ட ஓட்ஸ் கஞ்சி குடிக்கறேளான்னு கேட்டேன்..
ஏன்னா டயட்னா ஓட்ஸ் வரணுமே...
அவா,"ஓட்ஸ் இருக்கா...குடிக்கலாமே..அப்புறம் மெதுவா பதினொண்ணரைக்கு சாப்டா போறும்"..
எனக்கு, "என்னாது...மெதுவா பதினொண்ணரைக்கா...ஈஷ்வரா..." ன்னு மைண்ட் வாய்ஸ்...
ஆச்சு.. அந்த மாமி நடுவுல வந்து வெந்த வேர்க்கடலை சாப்பிடுவோம்..னு...வேற ஞாபகப்படுத்தினா..
மூணு தேங்காய் கருப்பு வராம துருவி,அதுல ஒரு தேங்காய், பால் எடுத்து நாட்டு சர்க்கரை, ஏலம் சேர்த்து இளஞ்சூடுல காய்ச்சி இறக்கினேன்..
முட்டைக்கோஸ் கறி நிறைய தேங்காய் போட்டு...
ஒரு மீடியம் காலிஃப்ளவர், ஏழெட்டு பேபி கார்ன் வேகவைத்து உப்பு போட்டு வெறும் ஆலிவ் ஆயிலில் மிளகு பொடி போட்டு கறி...
நாட்டு புடலங்காய் பாசிப்பருப்பு, தேங்காய் போட்டு கூட்டு...
பச்ச வேர்க்கடலை உப்பு போட்டு வெந்த சுண்டல்...
தக்காளி,வெள்ளரி,வெங்காயம், காரட் போட்டு சாலட்...
பிரக்கோலி plain சூப், ஆப்பிள்,ஆரஞ்சு,பப்பாளி,watermelon, வாழைப்பழம், பேரீச்சை எல்லாம் போட்டு ஃப்ரூட் சாலட்...
இடுப்பு ஒடிஞ்சுடுத்து...
ஒரு வழியா அவாள உக்காத்தி ஏழெட்டு பவுல் ,ஸ்பூன் போட்டு, தேங்காய் பால் சகிதம் வச்சுட்டு,என்னவருக்கு சாதம்,கறி போட்டு குழம்பு பரிமாற ஆரம்பித்தேன்.
அந்த மாமா,மாமி இவரிடம்,"நீங்க சாதம் சாப்பிடுங்கோ... நாங்க டயட் சாப்பாடுதான்" என்றாரே பார்க்கணும்....
எனக்கு உங்க டயட்ல தீய வைக்கன்னு வாய்வரை வந்ததை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன்...
இதுல வேற என் மருமகளிடம்,"நாங்க இப்பல்லாம் இப்படியே
சிம்பிளா சாப்பிட்டு பழகிட்டோம்.கல்யாண சாப்பாடெல்லாம் ஒத்துக்கறதில்லை"
பத்து நிமிடத்தில் சாப்பிட்டு முடித்த என் கணவரிடம்," நீங்க எங்களுக்காக வெயிட் பண்ண வேண்டாம் சார்..செளகர்யமா இருங்கோ"ன்னு சொல்ல இவரும்," நீங்க நிதானமா கேட்டு வாங்கி பொறுமையா சாப்பிடுங்கோ"ன்னு சொல்லிட்டு குட்டித் தூக்கத்துக்கு போய்ட்டார்.
இவர்கள் ஒன்றரை மணி நேரம் ஆற அமர சாப்பிட்டு பின் ரெஸ்ட் எடுத்தார்கள்...
பின் நாலு மணிவாக்கில் டீ தரவான்னு கேட்டப்போ, வேண்டாம் னு சொல்லவே, சாய்ங்காலம் எதுவும் குடிக்க மாட்டேளான்னு என் பிள்ளை அப்பாவியாய் கேட்க,அவரோ வெறும் இளநீர் தான்....பதிவா ஒருத்தன் கொண்டு தருவான்னு சொல்ல,இவன் காரெடுத்துண்டு இளநீருக்கு அலைஞ்சு வாங்கி வந்து கொடுத்தான்..
அப்புறம் வற்புறுத்தி ட்ரெயினுக்கு கேப்பை தோசை, தேங்காய் சட்னி கையில் கொடுத்து விட்டேன்...
அதுல இருந்து யாராவது டயட் சாப்பாடுன்னு சொன்னாலே காண்டாயிடுவேன்..
உங்களில் யாராவது இருந்தால் முதல்லயே சொல்லிடுங்கோ.. நான் போடற நளபாகத்தை சாப்பிடறதானா ஓகே...அதவிட்டுட்டு டயட் மெனு னா நீங்க வரச்சே முன்னாடியே வெளில கிளம்பிடுவேன்..
#நித்யா சுந்தரம்
No comments:
Post a Comment