Saturday, December 4, 2021

கனியுமோகாதல்_44

கனியுமோகாதல்_44

கௌரியுடன் பேசுவதற்கு முன் மைதிலியோடு பேசுவதை தவிர்ப்பதற்காக அவள் எழுந்து கொள்வதற்குள் சுந்தரம் எழுந்து குளித்து விட்டு கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று சென்று விட்டு ஆத்துக்குள் நுழைந்தார்.

'மைதிலி ஆஃபீஸ் கிளம்பியாச்சா?'

'இப்பத்தான் கிளம்பினான்னா'

'என்ன சொல்லறா உன் பொண்ணு?'

கோபத்தில் அவருடைய மயில் குட்டி கௌரியின் பிரத்யேக பெண்ணாகி விட்டாள்.  புரிந்து கொள்ளக் கூடியது தானே.

'இன்னிக்கு ஆஃபீஸ் போறேளோன்னோ?'

'போறேன்.  மொதல்ல விஷயத்த சொல்லு.  சரிபட்டு வருவாளா இல்ல தல முழுகணுமா?'

'என்னன்னா இப்படியெல்லாம் பேசறேள்.  நன்னாவே இல்ல இது.  நான் சொல்றத பொறுமையா கேட்பேள்னா பேசுவோம்.  இல்லாட்டி எல்லாம் தலையெழுத்து படி நடக்கட்டும்.'

'தலையெழுத்துதான் அந்தர் பல்டி அடிக்கறதே.  எப்படி இருந்த பொண்ணு மைதிலி?  ஏதோ பாவம் செஞ்சிருக்கோம்.  பகவான் நேரம் பார்த்து சாத்து சாத்தறான்.  எவ்வளவு ஆச வெச்சிண்டிருந்தோம் இவ மேல.  இப்படி மண்ண வாரிப் போடறாளே?'

'கொஞ்சம் அமைதியா இருங்கோன்னா?  இப்ப ஒண்ணும் குடி முழுகிப் போயிடல.  அழுதாலும் புரண்டாலும் அவ தான்ன்னா நமக்கு எல்லாம்.  நீங்களே தைரியமில்லாம இருந்தா எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்கோ?'

'சரி சரி.  முதல்ல அவ என்ன சொன்னான்னு சொல்லு.'

'என்ன எங்க பேச உடறேள்.  பொறுமையே இல்லாம நீங்களே ஏதோ பெருசா நெனச்சிண்டு ஆடிப் போறேளே.'

'இல்ல கௌரி.  அவளுக்கு எந்த குறையும் வைக்காம வளத்தோமே.  முடியல கௌரி.  இந்த பொண்ணு நன்னா இருக்கணும்னு தான எவ்வளவோ கஷ்டங்கள நீயும் நானும் தாங்கிண்டு ....'

அவரால் வாக்கியத்தை முடிக்க வில்லை.  தலையை குனிந்து கொண்டு மனதிலிருந்து அழுகை, கண்ணீர், விசும்பல்.

'இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி இடிஞ்சு போறேள்.  தைரியமா இருங்கோன்னா.  எல்லாம் கிரஹ கோளாறுதான்.  ஏதோ நம்மாத்த அசச்சு பார்க்கறது.'

'இருந்தாலும் இப்படி ஒரு கஷ்டம் நமக்கு வரவேண்டாம்.'

'மனச திடப் படுத்திண்டு ஆக வேண்டியத பார்க்கலாம்.  பெத்துட்டோமே.'

'அவ என்னதான் சொல்றா?'

'மைதிலிக்கு அந்த ஐயங்கார் பையன பிடிச்சிருக்கு.  கல்யாணம் பண்ணிண்டா நன்னா இருக்கும்னு நெனைக்கறா.  பேசாம கல்யாணம் பண்ணி வெச்சுடலாமா?'

'ஒனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?  அவ தான் அசடாட்டம் பேசறான்னா நீ சரிங்கறையே?'

'நான் ஒண்ணும் சரின்னு சொல்லலையே.  நாம சம்மதம் கொடுத்தா நன்னா இருக்கும்னு அவ நெனைக்கிறா.  நாம என்ன பண்ணப்போறோம்ங்கறத நாமதான முடிவு பண்ணனும்.'

'நெஜமாவே அவனத்தான் பண்ணிப்பேங்கறாளா?'

'இப்ப அப்படி சொல்லல. நாளைக்கு அடம் பிடிச்சாலும் பிடிக்கலாம்.  நீங்க ஆஃபீஸ் போறேள்.  நானோ சமையல்கட்டோட இருக்கேன்.  அவா ரெண்டு பேரும் எப்படி தீர்மானம் பண்ணுவான்னு யார் கண்டா.  இப்ப சப்திக்கு வெறும் நெனப்புதான்னு சொல்றா.'

'இந்த மாதிரி கன்னா பின்னான்னு போகத்தான் அவள படிக்க வெச்சு வளர்த்தோமா?'

'பொதுவான்னா, காதல் கத்திரிக்காய்னு வந்துட்டாளே பெத்தவா கிட்ட பாதி சொல்லுவா பாதி மறைப்பா.  நாளைக்கு நாலு பேருக்கு தெரிஞ்சு மனசு கஷ்டப்படறத விட மனச திடம் பண்ணிண்டு இன்னிக்கே சரின்னுட்டா கொஞ்ச கஷ்டத்தோட நிம்மதிய தேட ஆரம்பிச்சுடலாம்.'

'அவள வெட்டிப் போட்டாலும் போடுவேன தவிர ஒருக்காலும் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்.'

'ஓ.  நன்னா இருக்குன்னா உங்க பேச்சு.  நீங்க வெட்டிட்டு ஜெயிலுக்கு போவேள்.  அப்பறம் நான் கடல்ல இறங்கி உயிர போக்கிக்கட்டுமா நீங்க இல்லாம. எதுக்கு இந்த வீணான கற்பனையெல்லாம்?  கொஞ்சம் ஆற அமர யோசிங்கோ.  எது உசிதம்னு படறதோ அந்த முடிவ அவ கிட்ட சொல்லிடுவோம்.  வளர்ந்துட்டா.  பக்குவமா சொல்லி புரிய வைப்போம்.'

'அவ கிட்ட இனிமே என்ன பேச்சு வேண்டி கெடக்கு.'

'அப்படி விட்டேத்தியாவும் இருக்க முடியாதுன்னா.  அவ சொல்றத பார்த்தா, இல்லைனா அவ சொல்றது உண்மையா இருந்தா, அந்த பையன் இவ கிட்ட இது சமாச்சாரமா ஒண்ணும் பேசலைனு தோணறது.  பார்ப்போமே.  ஒருவேள அவனுக்கு இவள கல்யாணம் பண்ற அபிப்ராயம் இல்லைனா பகவான் நம்ம பக்கத்துக்கு வந்துடப் போறார்.  அப்புறம் நாமளே அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுத்து நல்ல தனம் சொல்லி புரிய வெச்சு கல்யாணத்த பண்ணுவோம்.'

'சுத்தமா என்ன போட்டு கொழப்பற.'

'உங்களுக்கு புரியாதுன்னா இப்ப நான் சொல்றது.  நீங்க கொஞ்ச நாள் அவ கூட கல்யாண பேச்சை எடுக்காம எப்போதும் போல பேசிண்டிருங்கோ.  அவளா என்ன முடிவு எடுக்கறான்னு பார்ப்போம்.'

'ஏதோ அவனுக்கே கல்யாணம் பண்ணி வெச்சுடுங்கோன்னு ஆரம்பத்துல சொன்னியே.'

'ஆமாம்.  சொன்னேன்.  அப்படி ஒரு நிலைமை வந்தா அதுக்கும் தயாரா இருக்கணும்னு உங்களுக்கு புரிய வைக்கறதுக்காக அப்படி சொன்னேன்.  நாம மேற்கொண்டு மேற்கொண்டு அவ கிட்ட இதப்பத்தியே பேச பேச இன்னும் அவளுக்கு அவன் மேல ஜாஸ்தி ஈர்ப்பு வந்துடும்.  அப்புறம் நாமளே ஒண்ணுமில்லாத விஷயத்த பெரிசு பண்ணிடுவோம்.'

'எப்படி வளர்த்த பொண்ணு.  இப்படி போய் காதல் அது இதுன்னு சகதில விழறதே.'

'நாம பாசம் காட்டி வளர்த்ததுல ஒரு கொறையும் இல்லேன்னா.  இது பருவ கோளாறு.  இயற்கையா வர்ரது தான்.  நாம நல்லதையே நெனைப்போம்.'

'அந்த படவா ஒத்த ரூபா சம்பாதிக்கறதுக்கு இதுவரைக்கும் யோக்யதைய வளர்த்துக்கல.  அவனுக்கு போய் நம்ம பொண்ண... நெனச்சு பார்க்கவே ...'

'ஒருவேளை அவன் நன்னா சம்பாதிச்சிண்டிருந்தா ஒத்துண்டிருப்பேளா என்ன?  நம்ம பொண்ணுக்கு அப்படிப்பட்டவன்தான் கெடைக்கணும்னு விதியிருந்தா உங்களாலேயோ என்னாலையோ தடுத்துட முடியுமா?'

'மயில் குட்டி மயில் குட்டின்னு எவ்வளவு பாசமா இருந்தேன்.  இப்படி மூஞ்சில கரிய பூசறாளே.'

'உங்க சோகம் புரியறது.  எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா என்ன?  அவசர படாம அமைதியா யோசிச்சு முடிவெடுங்கோ.  இந்த விஷயத்த விடுங்கோ.  நம்ம மைதிலி நல்ல பொண்ணுதானே, படிச்சவ தான, நம்ம மேல பாசமுள்ள பொண்ணு தான.  அவளும் எல்லாத்தையும் யோசிப்பா.  அப்படி யோசிச்சு அவ முடிவெடுத்தா அது நன்னா இருக்கும்னு நாம முதல்ல நம்புவோம்.'

'அப்ப அந்த பையன் முரளியாத்துக்கு என்ன பதில் சொல்றது கௌரி.  இக்கட்டான சூழல்ல அந்த நல்ல வரன் வேற கண்ணு முன்னாடி இருக்கு.'

'முடிஞ்ச வரைக்கும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சமாளிங்கோ.  அந்த முரளி இல்லைனா ஒரு மூர்த்தி கெடைக்காமையா போகப்போறான்.  எல்லாத்தையும் போட்டுண்டு கவலப் பட ஆரம்பிச்சா பைத்தியம்தான் பிடிக்கும்.'

'ஒன்னால எப்படி இதையெல்லாம் தாங்கிக்க முடியறது?'

'வேற வழி?  நம்ம மீறி ஏதோ நடக்க ஆரம்பிச்சா ஏதோ பகவான் நம்மள சோதிக்கறான்னு புரிஞ்சுக்கணும்.  நம்ம அறிவ அந்த சமயத்துல பயன்படுத்தறத விட அவன் கால கெட்டியா பிடிச்சுண்டா அவன் கொடுக்கற கஷ்டத்த அவனே போக்கிடப் போறான்.'

'உன்ன நெனச்சா ஆச்சர்யமா இருக்கு கௌரி.  என்ன சித்த நாழில சாந்தப் படுத்திட்டியே.'

'அப்படியில்லேன்னா.  இந்த மாதிரி நேரங்கள்ல ஆம்ளைகள் ஒடஞ்சு போயிட்டா நாங்க எங்க போறது.  நீங்க எதுவும் யோசிக்காம தடால் புடால்னு எடுக்கற முடிவு என்னையும் தான பாதிக்கும்.  திரும்பவும் சொல்றேன்.  அமைதியா இருங்கோ.  பகவான நம்புங்கோ.  நல்லதே நடக்கும்.'

'நான் இன்னிக்கு ஆஃபீஸ் போகல டி.  மனசே சரியில்ல.'

'இங்க இருந்து என்ன பண்ண போறேள்? அங்கேயாவது நாலு ஃபைல பார்த்துண்டு நாலு மனுஷா கிட்ட பேசிண்டு ஒரு டைவர்ஷன் கிடைக்கும்.  வீணா மனச போட்டு அலட்டிக்காம எப்போதும் போல இருங்கோ.'

அவர்களுக்கு தற்போது இது மட்டுமே தேவை... அலட்டிக் கொள்ளாமல்...மனதை வேதனைப் படுத்திக் கொள்ளாமல்... பெண்ணின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இறைவன் பக்கம் சற்று திருப்பி.

காதல் வயப்படுவது வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம்.  ஆனால் அது பெற்றோர் மனங்களை வேதனைப் படுத்தாமலும் இருக்க வேண்டுமே?  அவர்கள் அதை அங்கீகரிக்கும் விதத்தில் காதல் எப்போதும் இருக்க முடியுமா என்ன?

தொடரும்....

No comments:

Post a Comment