Saturday, December 4, 2021

கனியுமோகாதல்_43

கனியுமோகாதல்_43

அம்மாவின் தொடை மைதிலியின் கண்ணீரின் ஈரத்தை வாங்கிக் கொள்கிறது.

சிறிது நேரத்தில் விசும்பல் நின்று கண்ணீரில் கரைந்து அவள் மனம் சாந்தமாகிறது.

யாரும் ஒரே நிலையில் இருக்க முடியாதே?  அழுகையே சாஸ்வதமாக நிலை கொண்டு இருக்க முடியாதே?

எழுந்து கொள்கிறாள் விருட்டென்று.

'என்ன ஆச்சுன்னு இப்படி ஒரே அழுகை கோந்தைக்கு?  எதுக்கு அப்பாவோட சண்டை?  அம்மா கிட்ட எதையும் மறைக்காம சொல்லு.  அப்பத்தான நானும் ஏதாவது யோசிக்க முடியும் மைதிலி.  வீணா சங்கடப்பட்டுண்டு மனச வருத்திக்கறதுல ஒரு பிரயோஜனமும் இல்ல.  கொல்லப் பக்கம் போய் முகத்த அலம்பிண்டு வா.  பேசலாம்.'

அம்மாவுடைய கனிவான பேச்சு பலத்தை கூட்டுகிறது மைதிலிக்கு.

'அம்மா, அப்பா என்னதான் என்ன பத்தி நெனச்சிண்டிருக்கார்?  என்ன பேசவே விடாம கோப படறாரே?'

'ஏண்டி, இப்படி மொட்ட தாத்தா குட்டைல விழுந்த கதையாட்டம் கேட்டா எப்படி.  அப்பா காரணம் இல்லாம கோச்சிப்பாரா அதுவும் உன்கிட்ட?  என்ன நடந்ததுன்னு சொல்லு.  அப்பா கிட்ட நான் எடுத்து சொல்றேன்.  கவலைப் படாத.'

'ஒண்ணுமில்லேம்மா, நான் என்னோட வேல பார்த்திருந்த ஒரு பையனப் பத்தி அப்பாகிட்ட அடிக்கடி சொல்லிண்டிருப்பேனோனோ?  அவனப் பத்தி இன்னிக்கும் பேசும்போதுதான் அப்பாக்கு கோபம் வந்தது.'

'மைதிலி, எனக்கு ஒண்ணும் புரியல.  அப்பாவும் பொண்ணுமா ஆயிரம் பேசறேள் தெனமும்.  அதெல்லாம் எப்படி நேக்கு தெரியும் சொல்லு.'

மைதிலி பிறகு ஸ்ரீதரோடு ஒண்ணா படிச்சதிலிருந்து அப்பாவிடம் இன்று பேசியது வரை கூறுகிறாள்.  பொறுமையாக கேட்கிறாள் கௌரி.

'இதெல்லாம் இருக்கட்டும்.  ஒரே கேள்வி தான் உன்கிட்ட.  அவன பிடிச்சிருக்கா?  அவன கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணறதா.'

'அம்மா, அவன் நல்லவன்மா.  அவன பிடிச்சிருக்குங்கறதுங்கறது என்னவோ வாஸ்தவம் தான்.  ஆனா உங்க சம்மதம் இல்லாம அவன பண்ணிண்டுடுவேனா?  எனக்கு நீங்க ரெண்டு பேர்தான் முக்கியம்.'

'அவன் ஐயங்கார்னு சொன்னியே?  இதெல்லாம் ஒத்து வருமா நம்மாத்து கௌரவத்துக்கு.  எனக்கென்னவோ இதெல்லாம் சரிப்பட்டு வரும்னு தோணல.  அப்பா கோச்சிக்கறதுல்ல என்ன தப்பு இருக்கு சொல்லு.  இன்ன ஐயங்காரோட பேரன் இன்ன ஐயங்கார் புள்ள அப்படி இப்படின்னு போட்டு ஐயராத்து பத்திரிக்கை போட்டா ஊர் ஒலகம் என்ன நெனைக்கும் சொல்லு.  பத்திரிக்கைய படிக்கரவாளெல்லாம் சிரிக்க மாட்டேளா?  நீயே சொல்லு ஞாயத்த.  பொண்ண லவ்வு கிவ்வுனு போகும்படியா வளர்த்துருக்கேளேன்னு கைகொட்டி சிரிக்க மாட்டாளா சொல்லு.'

'அம்மா, நான் கூட இதையெல்லாம் மனசுல வெச்சிண்டுதானே அவனோட அப்பா கிட்ட வேண்டாம்னு சொல்லிட்டேனே.'

'இதெல்லாம் சொல்லியுமா அப்பா ருத்ர தாண்டவம் ஆடினா உன் கிட்ட?'

'அப்பா என்ன எங்க பேச விட்டா.  ஏதோ நாங்க ரெண்டு பேரும் பார்க் பீச்சுன்னு சுத்திண்டு குடும்ப மானத்த காத்துல பறக்க விட்டுண்டிருக்கறதா அப்பா வீணா கற்பன பண்ணிக்கறான்னு நெனைக்கிறேன்.  இப்பவும் சொல்றேம்மா, நீங்க கல்யாணப் பேச்ச அன்னிக்கு ஆரம்பிச்சோண்ண அவன கல்யாணம் பண்ணிண்டா நன்னா இருக்குமேன்னு மனசுல தோணினத தவிர என் கிட்ட எந்த தப்புமில்ல.  இதுதான் உண்மை.  என்ன தப்பா நெனைக்கறதில எந்த ஞாயமும் அப்பா கிட்ட இல்ல.'

'இவ்வளவு தான.  ஏதோ அப்பா சந்தேகப் பட்டுண்டு கோச்சிண்டிருக்கார்னு தோணறது.  எடுத்து நானே சொல்றேன்.  கவலப் படாத.  ஆமாம், ஒண்ணு கேட்கறேன்.  சந்தேக பட்டு கேக்கறேன்னு எடுத்துக்காத.  அந்த புள்ளையானோட அப்பா உன் கிட்ட அவன பண்ணிக்கோன்னு கேட்டதா சொன்னியே.  அது எப்படி?  அவர் ஏன் உன் கிட்ட அப்படி கேக்கணும்?'

'அவர் சாதாரணமா தான் கேட்டேருப்பார்மா.  நான்தான் அது நடக்காதுன்னு சொல்லிட்டேனே அவர் கிட்ட.  ஒருவேள நாங்க ரெண்டு பேரும் பழகறத பாத்து என்ன அவருக்கு புடிச்சு போயிருக்கலாம்.  மாட்டுப் பொண்ணா அவாத்துக்கு நான் வந்தா நன்னா இருக்கும்னு அவருக்கு தோணியிருக்கலாம்.  எனக்கு எப்படி தெரியும்.'

'அந்த புள்ளையாண்டான் உன்கிட்ட நாம கல்யாணம் பண்ணிக்கலாமோன்னு இது வரைக்கும் கேட்கலையோன்னோ?  அப்புறம் என்ன.  இது சின்ன விஷயம்.  அப்பா பொறுமையா கேட்டிருந்தா நீயே இதெல்லாத்தையும் என் கிட்ட சொன்ன மாதிரி சொல்லியிருக்கப் போற.  பரவாயில்லை.  அவர் எப்போதும் இப்படித்தான்.  அடுத்தவா பேச்ச என்னிக்கும் காதுல வாங்காமயே பேசிண்டிருப்பார்.'

'இனிமே அப்பா கிட்ட நான் பேசப் போறதில்ல.  தப்பா என்ன நெனச்சா நெனச்சிக்கட்டும்.'

'பரவாயில்ல.  உடு.  நான் பக்குவமா சொல்லிக்கறேன்.  அந்த பையனுக்கோ சரியான சம்பாத்யம் இல்ல.  ஒருத்தருக் கொருத்தர் கல்யாணத்த பத்தி பேசிக்கல.  உன் மனசுல விழுந்திருக்கு அவன பண்ணிண்டா நன்னா இருக்குமேன்னு.  அவனோட அப்பாவுக்கு இஷ்டம்.  அத அவர் உன் கிட்ட சொல்லும்போது நீ அவர் கிட்ட இது சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்ட.  நான் சரியா புரிஞ்சுண்டிருக்கேனா மைதிலி நீ சொன்னதையெல்லாம்?'

இதற்கு பதில் சொல்லவில்லை மைதிலி.  பதில் சொல்லாவிட்டால் என்ன?  அவ்வளவாக படிக்காத அம்மா இவ்வளவு கோர்வையாக சாராம்ஸத்தை சேர்த்தது ஆச்சர்யமாக இல்லையா அவளுக்கு?

'எனக்கு ஒரு வருத்தம் உன் மேல மைதிலி.  உன் கிட்ட கல்யாண பேச்சு ஆரம்பிக்கும் போதே அப்பா உன்ன கேட்டாரோன்னோ, யாரையாவது உனக்கு பிடிச்சிருக்கான்னு.  அப்பவே சொல்லியிருக்கலாம் நீ.'

'அம்மா.  நீயும் அப்பா மாதிரியே இருக்கியே.  அப்ப வரைக்கும் நான் அவனையும் என்னையும் நெனச்சு யோசிக்கவே இல்லம்மா.'

'அப்புறமாவது சொல்லியிருக்கலாமே?'

'நீ சொல்றது சரிதான்.  ஆனா நானே என் மனசுல கேள்விகள கேட்டுண்டு இது சரிப்பட்டு வராதுன்னு ட்ராப் பண்ணிட்டேன்.'

'இதுல உறுதியா இருக்கியோன்னோ?  இல்ல இப்பவும் ரெண்டாங் கெட்டான் தானா?'

இப்படி பளிச்சென்று அம்மாவிடமிருந்து கேள்வி இவ்வளவு சம்பாஷணைகளுக்குப் பிறகும் வரும் என்று மைதிலி நினைக்க வில்லை.

'இவ்வளவும் சொல்லியும் இன்னும் சந்தேகமாம்மா?'

மைதிலியின் வார்த்தைகளில் யதார்த்தம் இருந்தாலும் கோபத்தின் சாயல் இருப்பதை கௌரி கவனித்து விட்டாள்.

'ஏன் இப்படி கோச்சிக்கற.  ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா பெத்தவா கேட்கறதுல தப்பு இருக்கா என்ன?'

'நான் ஒண்ணும் கோச்சிக்கலையேம்மா?'

'சரி, அத விடு.  பெத்தவாளுக்கு தன் பெண் குழந்தைக்கு நல்ல குடும்பத்துலேந்து நன்னா படிச்ச, நன்னா சம்பாதிச்சிண்டிருக்கற நல்ல மாப்பிள்ள கெடச்சுடுத்துன்னா அத விட சந்தோஷம் என்ன இருக்க முடியும்?  அப்பா உனக்கு பார்த்து வெச்சிருக்கற வரன் அப்பேற்பட்டது.  இந்த சமயத்துல நீ அந்த புள்ளையாண்டான பத்தி பேசினத சந்தேகத்தோட பார்த்துட்டார்.  அவர் சந்தேகத்திலேயும் ஒரு அர்த்தம் இருந்திருக்குன்னு நீ பேசறதிலேந்தே தெரிஞ்சிண்டேன்.  இப்ப சொல்றேன்.  நாங்க உன்னோட விரோதி இல்ல.  எங்களுக்கு நீ நல்ல எடத்துல வாக்கப் படணும்.  அவ்வளவுதான்.  அப்பறம் பகவான் விட்ட வழி.  நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல.'

'நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியாதாம்மா.  நான் எல்லாத்தையும் மறைக்காம சொல்லிட்டேன்.  முடிவையும் உங்க கிட்டேயே விட்டுட்டேன்.  தெரிஞ்சோ தெரியாமலோ அவன மனசுல நெனச்சுட்டேன் இந்த கல்யாண பேச்சு வந்த போது.  கொஞ்சம் டைம் கொடுத்தேள்னா அவன மனசுலேந்தே எடுத்துடுவேன்.'

இதைக் கேட்டு கௌரி தனக்குள் சிரித்துக் கொள்கிறாள்.  மேலும் பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து அவளுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் அமைதியை கெடுக்க விரும்பவில்லை.

'சரி, சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ.'

'வேணாம்மா, பசிக்கலை.'

'நான் உன்ன வற்புறுத்தல.  வெறும் வயத்தோட படுத்துக்காத.  முடிஞ்ச அளவு சாப்டுட்டு தூங்கு.  எல்லாத்தையும் போட்டு கொழப்பிக்காத.  நீ சமத்துப் பொண்ணு.  எல்லாம் நல்லதா தான் நடக்கும்.முடிந்ததை சாப்பிட்டு விட்டு படுத்துவிடுகிறாள்.

பத்து மணிக்கு மேல் சுந்தரம் ஆத்துக்குள் நுழைகிறார்.  வாசலிலேயே வழி மறித்து மெல்லிய குரலில் கௌரி:

'அவளோடு எல்லாத்தையும் பேசிட்டேன்.  இப்பத்தான் தூங்கறா.  நாம ரெண்டு பேரும் நாளைக்கு பேசிப்போம்.  நீங்களும் சாப்ட வாங்கோ.  எல்லாம் நல்ல படியா நடக்கும். கவலப் படாதீங்கோ.  ஏதோ இன்னிக்கு நாள் சரியில்ல.  அவ்வளவுதான்.'

தொடரும்.....

No comments:

Post a Comment