கோவை கலாச்சாரம்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்துவமான கலாச்சாரம் இருக்கும்.
ஆனால் கோயம்புத்தூர் கலாச்சாரம் ரொம்பவே தனித்துவம் வாய்ந்தது என்பேன்.
நான்பிறந்து தொட்டிலில் படுத்து பாயில் வளர்ந்து ஆளானதெல்லாம் சென்னையில்.
அங்கெல்லாம் பேச்சில் ஓரளவு மரியாதை இருந்தாலும் கொஞ்சம் ராங் சைடில் குத்தினாலே முதல்வன் வடிவேலு மாதிரி வசைச் சொற்கள் சரமாரியாக வந்து விழும்.
ஆனால் கோவையில் நீங்கள் பச்சையாக தப்புசெய்தாலும் “ஏனுங்க பாத்து போக்கூடாதுங்களா? வண்டி இடிச்சிரிக்குமுல்லீங்க?” என்பதுதான் அதிகபட்ச எதிர்ப்பாக இருக்கும்.
சிறிய ஊர் என்பதால் அநேகமாக ஒருவரை ஒருவர் அறிந்திருப்பர். இதனால் வீட்டை விட்டுக் கிளம்பினாலே பத்து பேரையாவது “சௌக்யங்களா? புள்ளைங்க( புள்ளை என்றால்
பெண்குழந்தை என்பதை சென்னைத் தமிழர்கள் அறியவும்) நல்லா இருக்காங்களா? பையன எந்தக் காலேஜ்ல சேத்தீங்க? என்று ஆரம்பித்து நாத்தனார் மாமியார் மற்றும் குடும்பத்தினரை விசாரித்தாக வேண்டும்.
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் பலருக்கு பிறந்தகம் மாதிரி. சமைக்க போர் அடிக்கிறதா போங்க அன்னபூர்ணாவிற்கு. நாலு நண்பர்களுடன் பழங்கதை பேசணுமா போங்கள் அன்னபூர்ணாவுக்கு. வியாபாரம் முடிக்கணுமா அன்னபூர்ணா செல்லவும். விருந்தினர்களை உபசரிக்கணுமா அதுவும் அங்குதான். காரணங்கள் பல ஆனால் செல்லுமிடம் ஒன்றே. ஆனால் நம்மூர் சரவணபவனில் சிறிய தோசை பெரீய பில்லு அன்னபூர்ணாவில் பெரீய தோசை ஆனால் சரியான பில்லு.
இங்கு எல்லோரும் அண்ணாதான் எல்லோரும் அக்காதான் எனக்கு நீங்கள் அக்கா உங்களுக்கு நான் அக்கா. “அண்ணா கடை வீதிக்கு போகணுங்கண்ணா. வருவீங்களாண்ணா?”
“ஒக்ககாருங்கக்கா கடைவீதிலெங்கக்கா?”
( கவனிக்கவும்: முதலில் உட்காரச்சொல்லி பின்னர் போகுமிடம் விசாரித்தல். )
அந்த ஊர் பெண்கள் ஆண்கள் அனைவரும் ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். இரண்டுக்கு இரண்டு சதுர அடியானாலும் அதில் ஒரு அழகான கடையோ இல்லை தொழிலோ நடக்கும். எந்தப் பெண்களும் சும்மா வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தா மாதிரி எனக்குத்தெரியவில்லை.
அதே போல அவர்கள் அணியும் ஆடைகள் காலையில் போட்ட உடை சாயந்தரம் கிடையாது.
பழமுதிர்நிலையம் போனாலும் சரோஜாதேவி மாதிரி மேக்கப்போடதான் போறது. நாம சென்னை ஞாபகத்துல பெப்பரப்பே என வீட்டில் போட்டுக்கொண்டிருந்த உடையோடு போனால் நமக்கு நாமே திட்டத்தில் நாக்கப் பிடுங்கிக்க வேண்டியதுதான்.
கல்யாணங்களில் விதவிதமான போலி நகைகளும் உண்டு 22 காரட் காசுமாலைகளும் உண்டு
நம் சென்னையில் மிஞ்சிப் போனால் நாலு நெக்லஸை வைத்து வண்டி ஓட்டிவிடலாம். ஆனால் இங்கு அந்தப் பருப்பு வேகாது.
நாலுநாளைக்கொரு கல்யாணம்நடக்கும். அதே மனிதர்கள் எல்லாக் கல்யாணங்களுக்கும் வருவார்கள். எனவே நீங்கள் வைத்திருக்கும் ஊசிப்போன செகப்புக்கல் நெக்லஸை ரெண்டாவது கல்யாணத்தில் பார்த்தால் ஜாதிப்ரஷ்டம் செய்யப்படும் வாய்ப்புண்டு.
போலி நகையானாலும் அதை விளம்பரப் படுத்தும்முறையிலதான் அதற்கு மரியாதை. “ எங்கக்கா இந்த டிஸைன் கெடச்சுது? குயீன்ஸுங்களா? இல்லீங்கக்கா இப்போ புதுசா போனவாரம் ஒப்பணக்கார வீதில தெறந்துக்கற கடையில வாங்கினதுங்கக்கா. ( அது அநேகமாக அவருடைய சொந்தக் கடையாகக்கூட இருக்க வாய்ப்புண்டு. ஈசி விளம்பரம்)
மொத்தம் மிஞ்சி மிஞ்சிப் போனால்20 கி மீ சுற்றளவுள்ள ஊர். ஆனால் ஆர் எஸ் புரத்திலிருந்து 5 கி மீ தள்ளி உள்ள வடவள்ளிக்கு போகணும் என்றால் “ ஐயோ எங்கீயோ இருக்குங்களே ரொம்ப தூரமாச்சுங்களே “ என்று வியப்பதைப் பார்த்தால் நம்ப போரூர்லேர்ந்து பாரிஸ் போறதைச்சொன்னா மயக்கம் தெளிய இரண்டுநாளாகுமோ?! என்று சந்தேகம் வரும்.
சனி ஞாயிறுகளில் கோயம்புத்தூர் மொத்தமும் ப்ரூக்ஃபீல்ட் மால் இல்தான் சங்கமம்.
காலை நேரங்களிலும் சாயந்தர வேளைகளிலும் ரேஸ் கோர்ஸ் பார்க்கில் குதிரை ஓடாது ஆனால் மனிதர்கள் அனைவரும் நடந்து கொண்டே இருப்பார்கள்.
கோயம்புத்தூர் வானிலையைப்பற்றி அவர்களுக்கு இருக்கும் பெருமை சொல்லி மாளாது. கொஞ்சூண்டு வெயில் அடித்தாலும் என்னவோ சகாராப் பாலைவனத்து வெயில் மாதிரி உஸ்உஸ் என்று சலித்துக் கொள்வதும் குளிர் வந்ததும் ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு அலப்பரை பண்ணுவதும் 365 நாளும் வெயிலைத்தவிர ஏதும் அறியாத நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
சிறுவாணித்தண்ணி முதல் கோணியம்மன் கோவில் வரை பெருமைப் பட இவர்களுக்கு பலப் பல காரணங்கள் உண்டு. நமக்கு நேரமில்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
கோயம்புத்தூருக்கும் எனக்கும் தாய்வழி உறவு என்பதால் எனக்கும் இந்தப் பெருமையில் பங்கு உண்டு.
ராஜி நீலகண்டன்.
No comments:
Post a Comment