உறவுபோட்டமுடிச்சு_46
அடுத்த நாள் காஃபி போட்டு கலப்பதற்குள் ஞானமும் தூங்கி எழுந்து ரெடியானாள்.
'மாமி, நாளைக்கு உங்க ஆத்துக்காரரை திரும்பவும் பார்க்கப் போறேன். ஏதாவது லவ் லெட்டர் எழுதித் தாங்கோ. கொடுத்துடறேன். ஆனால் பதில் ஒரு வாரம் கழிச்சுத்தான் கெடைக்கும்.'
'அந்த கம்ப எடு. ரெண்டு போடு போடறேன் ஒன்ன. உனக்கு யார் இந்த மாதிரி பேச்செல்லாம் சொல்லித்தரா. மொதல்ல சீதா கிட்ட சொல்லி முரட்டு மீசையோட ஒரு ஆள அழச்சிண்டு வந்து ஒன் கழுத்துல முடிச்சு போட சொல்றேன். அவன் வந்து ரெண்டு அடி போட்டான்னா உன்னோட துடுக்குத்தனம் எல்லாம் பெட்டிப் பாம்பா அடங்கிடும்.'
'முரட்டு மனுஷன்லாம் வேண்டாம். உங்க பையன கட்டி வையுங்கோ. சமத்தாயிடுவேன்.' இப்படி பட்டுனு மனசுல வந்தத சட்டுன்னு சொல்ல முடியுமா என்ன?
மாமியின் வார்த்தைகளுக்குப் பிறகு இருவரும் கல கல என்று சிரித்தார்கள்.
"மாமி, நான் ஸீரியஸாதான் சொல்றேன். சாப்பாடெல்லாம் முடிச்சுட்டு நிறுத்தி நிதானமா ரெண்டு வரி எழுதிக் கொடுங்கோ. அதப் படிச்சா உடனே ஆத்துக்கு வரதுக்கு மாமாவுக்கு தெம்பு வந்துடும்.'
'அடி நீ வேற. இப்ப அவருக்கு பட்டாமணியார் உத்யோக வேலைகள்தான் மனசுல ஓடிண்டிருக்கும். இப்ப போய் என் லெட்டர கொடுத்தியானா அவர் பூவனூர்ல யாருக்கோ எதுவோ தேவை போல இருக்குன்னு நெனச்சுண்டு அத படிக்காமயே தாலுக்கா ஆப்பீஸுக்கு அனுப்பிச்சு விடுவார்.'
இதைக் கேட்டவுடன் கீதா விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.
'மாமி, ரொம்ப ஜோரா ஜோக் அடிக்கறேள்.'
'இந்தாத்துல இந்த மாதிரி சிரிப்பு சப்தம் கேட்டு எத்தனையோ வருஷங்கள் ஆச்சு கீதா. பாலாஜி வேற மெட்ராஸ் போயிட்டானா? இவருக்கு ஊர் பிரச்சனைகளும் வயல் பிரச்சனைகளும் தான் பெரிசா இருக்கும். யாரும் அநாவசியமா ஆத்துக்கு வந்துண்டு போறதும் உங்க மாமாவுக்கு பிடிக்காது. அடுப்பங்கரை, பூஜை, தோட்டம், கருப்பன் போடற சாணிய அள்றது, கருப்பன குளுப்பாட்டறது... இப்படியே என் வாழ்க்கை போயிண்டிருக்கு. உங்க அம்மா வரும்போது கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும். அவளும் கோச்சிண்டு இங்க இப்பெல்லாம் வரதில்லையா. என்னடா வாழ்க்கைனு இருக்கும்.'
'மாமி, அம்மாவுக்கு உங்க மேல கோபமெல்லாம் இல்ல. எப்பப் பார்த்தாலும் அம்மாக்கு உங்க ரெண்டு பேர் பேச்சுதான். நீங்கதான் வீணா ஏதேதோ கற்பன பண்ணிக்கறேள்.'
'சரி மாமி, நானும் கருப்பன குளிப்பாட்டிட்டு அப்படியே பம்ப் செட்டுலேயே குளிச்சிட்டு வரேன். அப்புறமா வயக்காடுக்கும் போகணும். அவா என்ன பண்றான்னு பார்த்துட்டு வந்துடறேன். வந்து பத்து நாளுக்கு உண்டான துணிமணியெல்லாம் எடுத்து வைக்கணும். நாளைக்கு செங்கிப்பட்டி போகணுமோன்னோ?
'நீ அங்க போயிட்டா கழனி வேலையெல்லாம் யார் பார்த்துப்பா?'
'ஒரு வார வேலைய சிவலிங்கத்து கிட்ட ஒப்படச்சுட்டு வரேன். பாலாஜி கிட்ட வேற சொல்லியிருக்கேன் பார்த்துக்க சொல்லி. சமாளிச்சுக்கலாம் மாமி. அந்த கவலை வேண்டாம்.'
கொல்லைப் புறம் சென்று எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு குளித்த உடம்பில் துவைத்த புடவையை சுத்திக் கொண்டு மருதாணிக் கிளைகளோடு வருகிறாள்.
'மாமி எனக்கு சின்ன உதவி. இன்னிக்கு எனக்கு மருதாணி இட்டுக்கணும்னு தோணறது. வெழுமூண அரச்சு வைக்கறேளா?'
'அதுக்கென்ன. அரச்சு வைக்கறேன். மாமா பத்துன மருதாணிய பார்த்தா சந்தோஷப் படுவா. அடிக்கடி சொல்லுவா. நீ வெச்ச செடி எப்படி வளர்ந்துருக்குன்னு.'
'மாமாகிட்ட காமிக்கவா இட்டுக்கப் போறேன்? பட்டாமணிக் கிழவியே, உன் பையன் பார்க்கணும்னு இட்டுண்டு போப்போறேன்.'
இப்படி மனதில் வந்ததை சொல்லிவிட முடியுமா? சில சந்தோஷங்கள் வார்த்தைகளில் கொட்டினாத்தான் அழகு. சில சந்தோஷங்கள மனசோடு பேசிண்டாதான அழகு.
திட்டமிட்டபடியே எல்லாவற்றையும் செய்து விட்டு மறுநாள் கீதா செங்கிப் பட்டி வரும்போது காலை மணி ஒன்பது.
'ஏன்? லேட்டாயிடுத்தா?' பாலாஜியின் கேள்வி கீதாவைப் பார்த்தவுடன்.
'மணி ஒம்பது தான. பூவனூர் பக்கமா இருக்கு? இத்தனைக்கும் ஆறு மணிக்கே ஆத்தவிட்ட கிளம்பினேனாக்கும்.'
'எப்ப வருவ எப்ப வருவேன்னு ரொம்ப நாழி நான் நெனச்சிண்டிருந்ததால ரொம்ப நாழி ஆன மாதிரி எனக்கு தோணறதுன்னு நெனைக்கிறேன்.'
'தோணும். தோணும். ரெண்டு அடி கொடுத்தா ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தான்னும் தோணும்.'
'எப்ப பார்த்தாலும் என்ன அடி ஒதை குத்துன்னு மிரட்டிண்டே தான் இருப்பியா?'
'அடடான்னு ஒடம்பு கேட்டுண்டே இருந்தா இப்படித்தான். சரி, நம்ம தமாஷ விடு. டாக்டர் மார்னிங் விஸிட் வந்தாரா?'
'அப்பாவ பாத்துட்டார். ரௌண்ட்ஸ் முடிஞ்சோன்ன கூப்பிடுவார். டெய்ஸி ஸிஸ்டர் வேற சும்மா இல்லாம நீ வரப்போறதா டாக்டர் கிட்ட சொல்லிட்டா. அநேகமா உன்ன பார்க்கணும்கறதுக்காகவாவது கூட்டுவார்.'
சொல்லி வாயை மூடவில்லை. டாக்டர் வரச் சொல்வதாக அழைப்பு வருகிறது. செல்கிறார்கள்.
'ஹலோ கீதா... நீ கீதாவாத்தான் இருக்கணும்னு ஒரு கெஸ்.'
'இல்லை டாக்டர். தப்பா போச்சே உங்க கெஸ். நான் கீதாவோட தங்கை. பேர் மாலா. டெய்ஸி ஸிஸ்டர் உங்கள கன்ஃப்யூஸ் பண்ணியிருக்காங்க.'
'சரியான பொண்ணுதான் கீதா நீ. சபேஸய்யர் உன் பேர சொல்லி சொல்லி பொலம்பறதுல அர்த்தம் இருக்கு. பை தி பை நான் டாக்டர் கீர்த்தி வாசன். இவரு டாக்டர் பசுபதி.'
வேண்டுமென்றே பெயர்களை மாற்றி சொல்கிறார்.
'போதுமே நம்ம ரெண்டுபேர் விளையாட்டும் டாக்டர். மாமா எப்படி இருக்கார்?'
'ஏன்? இன்னுமா பார்கல? வந்தோண்ணயே முரளி சாரி பாலாஜியோட அரட்டை ஆரம்பிச்சாச்சாக்கும்.'
'ஒரு விதத்துல நீங்க சொல்றது சரிதான். இப்பதான் ஊர்லேந்து வந்தேன். வாசல்ல பாலாஜி கிட்ட மாமா உடம்ப பத்தி விசாரிச்சிண்டு இருந்தேன். முந்தானா வந்தேன். மாமாவ பார்த்தேன். பரவாயில்ல உங்க ட்ரீட்மெண்டுன்னு தான் தோணறது.'
டாக்டர் கீர்த்தி வாசன் கல கல.
'சார், இவங்கதான் உங்க எடக்கு மடக்குக்கு சரியான லேடி'
'என்ன கீர்த்தி லேடின்னு சொல்லி என் பொண்ணு வயச கூட்டற. ஷீ இஸ் ஜஸ்ட் எ gகேள். இண்டெலிஜண்ட், ஸ்மார்ட் அண்ட் எ கேரிங் gகேள்.'
சொன்னவுடன் கீதாவின் முகத்தில் தெரியும் ஓரச் சிரிப்பை ரசிக்கிறார்.
'நௌ லெட் அஸ் டாக் அபௌட் உங்க மாமா. ஹி இஸ் பிக்கிங் அப் நோ டவுட். தொற்று அநேகமா போயிருக்கும். நான் எப்போதும் ஒரு கெமிஸ்ட்டை மாத்திரம் நம்பறதில்ல. நௌ தி ரிபோர்ட்ஸ் ஆர் குட். ஃபோர் ஆர் ஃபைவ் டேஸ் கழிச்சு ஒன்மோர் டைம் டெஸ்ட்டுகள் எடுத்துப் பார்த்துட்டு வீ வில் திங்க் அபௌட் ஹிஸ் டிஸ்சார்ஜ். லங்க்ஸ்ல எ ஸ்மால் போர்ஷன் அஃபெக்ட் ஆயிடுத்து பியாண்ட் ரிபேர். சினிமா பாணியில சொல்லணும்னா ஒரு ஃபிப்டீன்ஸ் டேஸ் டிலே இன் அட்மிஷன் அத தடுக்க முடியாம போச்சு. பரவாயில்ல அதனால நார்மல் லைஃப்புக்கு பிரச்சனை இல்லை. எனிவே கிராமத்துல தான இருக்கார். தட் வில் ஹெல்ப் ஹிம் மச் பெட்டர். நீங்களும் அஃப் கோர்ஸ் ஸ்பெஷல் கேர் எடுத்துக்கணும்.'
'கண்டிப்பா டாக்டர்.'
'நீ இங்க ஒரு வாரம் அவர கவனிச்சுக்க போறதா கேள்விப் பட்டேன். குட். தட் வில் ஆல்ஸோ நேரோ தி கேப் ஃபார் டிஸ்சார்ஜ். குட் லக். உன்னப் பார்த்தா என்னோட டாட்டராட்டம் இருக்கு.'
'ஆமாம். உங்களுக்கு டாட்டர் இல்லையோன்னோ அப்படித்தான் இருக்கும்.'
'தெரிஞ்சு போச்சா?'
'சும்மா ஒரு கெஸ்ஸுல அடிச்சு உட்டேன். மாட்டிண்டேளா?'
'க்ரேட் யூ ஆர். பாலாஜி யூ ஆர் ஸோ லக்கி டு ஹேவ் எ கஸின் லைக் கீதா.'
'எஸ். ஐ அம் டாக்டர்.'
தொடரும்..
No comments:
Post a Comment