பட்டுப்பாவாடை
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து இறங்கியதுமே நல்லிக்குப் போகவேண்டும் என்று சொன்ன மனைவி வித்யாவை அதிசயமாகப்பார்த்தான் வெங்கட். வித்யாவின் அப்பா தன் பிள்ளைக்குடும்பத்தோடு சென்னையில்தான் இருக்கிறார். வித்யாவின் அம்மா ஜானகி சென்ற வருடம் இறைவனடி சேர்ந்தாள். அவரின் வருஷாப்திகத்தை முன்னிட்டுதான் வெங்கட் வித்யா குடும்பத்தினரின் சென்னை விஜயம்.
வந்ததோ ஒரு வார விடுமுறையில், இதில் அவர்கள் இருந்த ஊரான திப்பிராஜபுரத்திற்கு வேறு போகவேண்டும் என்று அடம்பிடித்தாள். இப்பொழுது அங்கு வித்யாவின் சொந்தக்காரர்கள் யாருமில்லை. தெரிந்தவர்கள் யாரவது இருக்கிறார்களா என்றுகூட உறுதியாக தெரியாது. அப்படி இருந்தும் எதற்காக போகவேண்டும் என்று நினைக்கிறாள் என்று வெங்கட்டிற்கு புரியவில்லை. குழந்தைகள் அனிருத்தையும், அக்ஷிதாவையும் சென்னையிலேயே விட்டுவிட்டு இவர்கள் இரண்டு பேரும் மட்டும் போவதாக திட்டம்.
சென்னையிலிருந்து கிளம்பியதிலிருந்தே வித்யா அதிகம் பேசவில்லை. அவள் நினைவுகள் வேகமாக பயணித்து. முப்பது வருடங்களுக்கு பின்னோக்கி நகர்ந்தது. அப்போது அவளுக்கு பத்து வயதிருக்கும் அண்ணா ரகு அவளைவிட நான்கு வயது மூத்தவன். வித்யா உள்ளூர் பள்ளியிலேயே படிக்க அண்ணா வலங்கைமானில் படித்துக்கொண்டிருந்தான்.
அவர்கள் இருந்த அக்ராஹாரத்தில் அநேகம்பேர் வசதியானவர்களாக இருந்தார்கள் நவராத்தியில் ஒன்பது நாளும் ஒன்பது பட்டுப்பாவாடைகள் கட்டிக்கொள்ளும் வசதிபடைத்த குழந்தைகள் இருந்தார்கள். இவளிடம் புதுசே ஒன்றோ இரண்டோதான் இருக்கும் பட்டுப்பாவாடைக்கு எங்கே போவாள். ஜானகியும் பெண்ணிற்கு இருப்பதைவைத்து வித விதமாக கிருஷ்ணன், ராதா ஆண்டாள் என்று அலங்கரிப்பாள். ஆனாலும் வித்யாவிற்கு தன்னிடம் பட்டுப்பாவாடை இல்லாத குறை பெருங்குறையாக இருக்கும்
வித்யவின் அப்பா ராமநாதனுக்கு பெரிய உத்யோகம் எல்லாம் இல்லை . ஊரிலிருக்கும் மற்றவர்களைப்போல் நிலபுலன்களோ சிட்டி யூனியன் பேங்கிலோ, ராமன் & ராமனிலோ, S R V S லோ வேறு அரசு நிறுவனங்களிலோ பெரிய உத்யோகமெல்லாம் இல்லை. , வார, மாத இதழ்களை வாங்கி சர்குலேஷன் நடத்தினார், காஸ் சிலிண்டர்கள் வாங்கி வருவது, மற்றும் அக்ராஹாரத்திலிருப்பவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வலங்கைமானிலிருந்தும் சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலையிலிருந்தும், கும்பகோணத்திலி ருந்தும் வாங்கிவருவது இதுதான் வேலையே. பெரிய வருமானமில்லை. அம்மா ஜானகி சமையல் வேலைக்கு ஒத்தாசைக்குப்போவாள். அருகிலிருக்கும் ஊர்களுக்கும்தான். வீட்டு செலவை சமாளிப்பதே பெரும்பாடு இதில் பட்டுப்பாவாடைக்கு எங்கே போவார்கள்.
ஜானகியின் அப்பா வீடு வசதியானது. ஜானகி அம்மாவை சிறு வயதிலியேயே இழந்திருந்தாள் கும்பகோணத்தில் இருக்கிறது, ஜானகியின் அப்பா புகழ்பெற்ற வக்கீல். இராமநாதன் தூரத்து சொந்தம்தான். ஜானகி இராமநாதனை விரும்பி அப்பாவின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்துகொண்டாளாம். அதனால் அவர் திரும்பியே பார்ப்பதில்லை. பெண் செய்தது தவறு என்று எண்ணி நீதிபதியாக மாறி கடுமையான தண்டனைக்கொடுத்துவிட்டார். பிறந்தகத்திலிருந்து ஜானகிக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை.
அக்ராஹாரத்தில் மாமிகள் இவர்கள் காதுபடவே பேசுவார்கள், ஜானகிக்கு ஏண்டி தலையெழுத்து. பொழைக்கத்தெரியாத இந்த ராமநாதனை நம்பி வந்து தானும் கஷ்டப்பட்டு குழந்தைகளையும் கஷ்டப்படுத்தறா. ஆனால் கொழந்தேள் ரெண்டும் புத்திசாலித்தனத்துலே தாத்தாவை உரிச்சுவச்சிருக்கு. எப்படி படிக்கறதுகள் பாரேன் என்று சொல்வார்கள். ஜானகி காதில் வாங்காதது மாதிரி இருந்துவிடுவாள். யாரேனும் முகத்திற்கு நேரே கேட்டால் மட்டும், எனக்கென்ன மாமி சந்தோஷமாதானே இருக்கான். காசு பணம் இருந்ததாதான் சந்தோஷமா என்ன என்று கேட்பவர்கள் வாயை அடைத்துவிடுவாள். வருடங்கள் நகர்ந்தது அன்று வித்யா வீட்டுக்குள் நுழையும்போது அம்மா அப்பளம் இட்டுக்கொண்டிருந்தால், வீட்டு வேலையில் உதவும் வேம்பு பெருக்கிக்கொண்டிருந்தாள்.
என்னடி இப்ப வந்திருக்க பள்ளிக்கூடம் லீவா என்று கேட்டவள் வித்யா விஷயத்தை சொன்னதும் அவளை தனியே உட்காரவைத்து வாசல் தெளித்து கோலம் போட்டாள். வித்தியாவிற்கு தனியே உட்கார்ந்திருப்பது போர் அடிக்க ஆரம்பித்தது. மீண்டும் வந்தது பட்டுப்பாவாடை ஆசை. அவளோடு படிக்கும் சுதாவைப்போல நீலக்கலர் பட்டுப்பாவாடையும் தாவணியும் போட்டுக்கொண்டு தலையில் பூ தைத்து கும்பகோணம் போய் போட்டோ எடுக்கவேண்டும் என்று ஆசையாக இருந்தது. என்ன நீலம்டி சுதா இது இவ்ளோ அழகா இருக்கு என்று வித்யா கேட்டதும் சுதா பெருமையாக சொன்னாள் ‘இது ஆனந்தா புளூ’ என்று. அம்மாவிடம் தயங்கி தயங்கி சொன்னாள். வாங்கித்தரேன் என்று சொன்ன ஜானகியைப்பார்த்து வித்தியாவிற்கு ஆச்சரியம். சும்மா இருந்த மூன்று நாட்களிலும் ஜானகியை கவனித்தால் வித்யா. அம்மா சும்மாவே இல்லை. காலையிலிருந்து இரவு வரை ஓயாத வேலை. வித்யாவிற்கே அம்மாவைப்பார்க்க பாவமாக இருந்தது.
மூன்றாம் நாள் புட்டு பண்ணினாள். அம்மாவும் அப்பாவும் கும்பகோணம் போய்விட்டு, பட்டுக்கு புகழ்பெற்ற திருபுவனமும் வந்தார்கள். வரும்போது அவர்கள் கையில் பட்டுப்பாவாடை. வித்தியாவிற்கு தாங்க முடியாத சந்தோஷம். ஆனந்தா நீலத்தில் கருநீலமும் ஊதாவும் கலந்த நிறத்தில் பார்டர் போட்ட பட்டுப்பாவாடை. அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. நிமிர்ந்தவள் அம்மாவைப்பார்த்து அதிர்ந்தாள். அம்மாவின் மூக்குத்தியைக் காணோம். அதற்கு பதில் ஒரு குச்சி இருந்தது அழகான மூக்குத்தி. பிறந்த வீட்டை விட்டு வெளியேறும்போது மற்ற எல்லா நகைகளையும் கழட்டிக்கொடுத்த ஜானகி மூக்குத்தியை மட்டும்தான் கழட்டவில்லை. அது ஜானகியின் அம்மாவின் மூக்குத்தி
வித்தியாவிற்கு எல்லாம் புரிந்து போனது. பாவாடை வாங்கியதற்கான ரசீது, அடகு வைத்தற்கான ரசீது எல்லாம் இருந்தது. அனைத்தையும் தூக்கிக்கொண்டு தெரு முனையில் நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த அண்ணாவை நோக்கி மூச்சிரைக்க ஓடினாள். எப்படியோ அண்ணா கெஞ்சி கூத்தாடி பாவாடையை கடையில் திரும்பக்கொடுத்து மூக்குத்தியை திரும்ப வாங்கிக்கொண்டு வந்துவிட்டான். அப்பொழுது ரகுவிற்கு வயது 17 தான். ஜானகி குழந்தைகளை கடிந்துகொண்டாள். அதற்கப்புறம் வித்யா மறந்தும் கூட பட்டுப்பாவாடை வேண்டும் என்று கேட்டதில்லை.
ஆயிற்று வருடங்கள் ஓடிற்று. வித்யாவின் பெண் அக்ஷயா பெரியவளாகிவிட்டால் என்று தெரிந்ததும் அக்ஷயாவின் மாமி -ரகுவின் மனைவி அவளுக்கு ஆசையாக பட்டுப்பாவாடை வாங்கி அனுப்பியிருந்தாள். அம்மா போனதிலிருந்தே பழைய ஞாபகங்கள். மன்னி வாங்கி அனுப்பிய பட்டுப்பாவாடையைப்பார்த்ததும் வித்யா அவளாகவே இல்லை. ஏதோ திரும்பவும் திப்பிராஜபுரத்திற்கு போகவேண்டும் போல்தோன்றியது.
ஊரில் நுழைந்ததிலிருந்தே திரும்பிய இடமெல்லாம் அம்மா இருப்பது போல் பிரமை, அக்ராஹாரத்தின் கடைசியில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு போனாள், சிவன் கோவிலுக்கும் போய் அர்ச்சனை செய்தாள். பிரகாரத்தை சுற்றும்பொழுது ஒரு வயதான பாட்டி பெருக்கிக்கொண்டிருந்தாள். நெருங்கிப்பார்த்தால் வேம்பு.
முதலில் வேம்புவிற்கு அடையாளம் தெரியவில்லை. அடையாளம் தெரிந்ததும் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஜானகியம்மா மவராசி, உங்கம்மா பணக்கார வீட்டிலிருந்து வந்தாலும் அதைப்பத்தி நினைச்சுப்பாக்காம உங்களையெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தா. கல்யாணத்துக்கு முன்னாடி நான் கும்பகோணத்தில்தான் இருந்தேன். உங்க தாத்தா வீட்டுக்கு வேலைக்கு போயிருக்கேன். உங்க அம்மா அவ்வளவு செல்லமா வளந்தவங்க.
நானும் வாக்கப்பட்டது திப்பிராஜபுரம். உங்க அம்மா படற கஷ்டத்தை பாக்கமுடியாம அவங்க வேணாம் வேணாம்னு சொன்னாலும் வீட்டில வேலை செய்வேன். அம்மாவோட கஷ்ட நஷ்டம் தெரிஞ்சதால் நான் எனக்கு காசுக்குடுன்னு கேட்டதே இல்லை. அதையெல்லாம் மனசுல வெச்சுகிட்டு புள்ள சம்பாதிக்க ஆரம்பிச்சதும் எனக்கு மாசா மாசம் பணம் அனுப்பினாங்க.
மேலே சொல்ல முடியாமல் அழுதாள். ஜானகியம்மா போயிட்டாங்கன்னு நினைச்சேன், பாத்தா உங்க அண்ணன்கிட்டேருந்து ஒரு வருஷமா பணம் வந்திட்டிருக்கு. என் புள்ளை மரம் ஏறப்போனப்ப விழுந்து முதுகுல அடிபட்டு முன்ன மாதிரி வேலைக்கு போக முடியலை. மருமக வீட்டு வேலை செய்யறா. உன்குடும்பத்தால தான்மா எங்க குடும்பம் பசியில்லாம இருக்கு என்றாள் நெகிழ்ச்சியுடன். அம்மாதான் சொல்லவில்லையென்றால் இந்த ரகுவுமா என்று நினைத்துக்கொண்டாள். அப்புறம் வேம்பு அவர்களை தங்கள் குடிசைக்கு அழைத்துப்போனாள். வேம்புவின் பேத்திக்கு 12 வயதிருக்கும். வாங்கிக்கொண்டு போன ஆனந்தாக்கலர் பட்டுப்பாவாடையை வேம்புவின் பேத்திக்கு கொடுத்தாள். அம்மா இன்னமும் திப்பிராஜபுரத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள் என்ற தெளிவு பிறந்தது. மன நிறைவோடு சென்னை திரும்பினாள் மீண்டும் கலகலப்பாக பேசத்தொடங்கிய வித்யா.
எழுதியவர்
சாந்தி சத்யா
தன் படம் கொடுத்து உதவியவர்
அன்றைய
B. Bhuvaneshwari
இன்றைய
Bhuvaneshwari Keerthivasan
By Ms. Kausalya
No comments:
Post a Comment