Saturday, December 4, 2021

உறவுபோட்டமுடிச்சு_47

உறவுபோட்டமுடிச்சு_47

டாக்டரைப் பார்த்து விட்டு மீண்டும் ரிஸப்ஷனுக்கு வந்து உட்காருகிறார்கள்.

'என் கிட்ட ஏதாவது ச்சேன்ஜ் தெரியாதா?'

'குறிப்பா ஸ்பெஷலா கண்ணுக்கு தெரியல.  எப்போதும் போல அந்த ப்யூடிஃபுல் ஐஸ்.  பம்ளிமாஸ் கன்னம்.  செக்கச் செவேன்னு இருக்கற உதடு,....'

'ஏய்....  உன்னால கண்டு பிடிக்க முடியாது.  இந்தா பார்த்துக்கோ.'

இரண்டு உள்ளங்கைகளையும் அவனுக்கு முன் முகம் பார்க்கும் கண்ணாடியைப் போல காட்டுகிறாள்.

'ஒண்டர்ஃபுல் கீதா.  ரொம்ப நன்னா பத்திருக்கு.  கையைக் கொடு.  நன்னா பார்க்கிறேன்.'

'கைரேகை ஒண்ணும் பார்க்க வேண்டாம்.  இப்ப பார்க்கற சேப்பு கலர் கையை பிடிச்சிண்டு பார்த்தாலும் அதே கலர்ல தான் தெரியும்.'

'சரி சரி.... ஒருநாள் உன் கைய பிடிக்கத் தானே போறேன்.  ரொம்ப த்தேங்க்ஸ் கீதா.  இவ்வளவு ஹெக்டிக்லுயும் மறக்காம எனக்காக போட்டுண்டு வந்துருக்கியே.  உனக்கு ஒண்ணு தெரியுமா.  நம்மாத்து தோட்டத்துல நான் நொழஞ்சோண்ண மருதாணி செடிதான் கண்ணுல படும்.  அப்பா என்ன அதோட ப்ரான்ச்சங்கள ட்ரிம் பண்ணி விடுடான்னு நெறைய தடவ சொல்லியிருக்கா.  நான் குழிய தோண்டி நீ சின்ன வயசுல உன் பிஞ்சுக் கையால, அண்டர்லைன் த வோர்ட், பிஞ்சுக் கையால நட்டதாலேயோ என்னவோ.  வெட்ட மனசே வராது.  நீ, நான், அத்தை மூணு பேரும் நம்மாத்து கார்டன்ல விளையாடினது, பம்ப் செட்டுல விழற தண்ணிய எரச்சு விளையாடுனது அப்படியே திரும்ப திரும்ப ஞாபகம் வந்துண்டே இருக்கும்.  கையில நாலு காசு சம்பாதிச்சோன்ன முதல் வேல அந்த கார்டன இன்னும் பிரமாதமா பண்ணனுங்கறதுதான் என்னோட ஆசை.'

'ம்ம்ம்... அப்பறம்?'

'மெட்ராஸ்ல நான் இருக்கும்போது கூட நம்ம தோட்டத்தையும் மருதாணி செடியையும்தான் அடிக்கடி நெனச்சுப்பேன்.  மருதாணி வளர வரை நீயும் வளர்ந்துண்டு வர மாதிரி ஒரு ஃபீல்.  தட் இஸ் பியாண்ட் டிஸ்க்ரிப்ஷன் ரியலி.  சொன்னா சிரிக்க கூடாது.  நிறைய தடவை மருதாணி செடி காத்துல ஆடும்போது புடவைத் தலைப்பு அசையற மாதிரி கூட நெனச்சுப்பேன்.'

அவன் சொல்ல சொல்ல சிறு வயது நினைவுகள் அவளையும் சூழ்ந்து கண்கள் ஒரத்தில் கண்ணீரை நிரப்பி விட்டது.

தலையைக் குனிந்து கொண்டே அவன் கேட்டபோது மறுத்த அவளுடைய மருதாணிக் கைகளை நீட்டுகிறாள்.

'இட்ஸ் ஓகே கீதா.  கண்ணியத்தோடயும் கௌரவத்தோடயும் பண்ற காதல்ல ஸ்பரிஸ சந்தோஷம் தேவையே இல்ல. நெனச்சுண்டா மனசுல வந்து ஒக்கார்ந்துக்கப் போற. கல்யாணம் ஆகற வரைக்கும் கனவு ஸீன்கள் தான் த்ரில்லா இருக்கும்.  உன் போக்கு படியே உன்ன லவ் பண்றதுலேயும் ஒரு சுகம் இருக்கு கீதா.'

ஏக்கங்கள் இல்லாத காதல்ல ஒரு சுகமும் இருக்காது. அவனும் கொஞ்சம் எமோஷனலாகத் தான் இருந்தான்.  பேச்சை திசை மாற்ற வேண்டும் என்று கீதா நினைத்தாள்.

'வா பாலாஜி, அப்பாவ பார்க்கலாம்.'

சபேஸய்யர் இருக்கும் ஸ்பெஷல் வார்டுக்கு வருகிறார்கள் கீதாவும் பாலாஜியும்.  அங்கிருந்த டெய்ஸி அவர்களை வரவேற்று பிறகு டாக்டர் சொன்ன மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை விளக்குகிறாள்.  கொஞ்சம் கொஞ்மாக கொடுக்க சபேஸ்யருக்கு கொடுக்க வேண்டிய திட உணவுகள் பற்றியும் நேரம் தவறாமல் உட் கொள்ள வேண்டிய மாத்திரைகளையும் ஜூஸ் வகைகளையும் பற்றி வகுப்பு எடுக்கிறாள் டெய்ஸி ஸிஸ்டர்.

'நன்னா புரிஞ்சுது ஸிஸ்டர்.  நான் தான் வந்துட்டேனே.  மாமாவ நீங்க சொல்லிக் கொடுத்தா மாதிரி பார்த்துக்கறேன்.  ஏதாவது சந்தேகம் வந்தா உங்கள கூப்படறேன்.'

'சரி ஸிஸ்டர்.  நான் மத்த பேஷண்டுகள பார்த்துட்டு வரேன்.  அவர் இருமும் போது நீங்க மறக்காம மொகத்த மூடிக்கணும்.  அடக்கடி சோப்பு போட்டு நல்லா கை கழுவணும்.  அப்பாக்கு தொத்து தான் இல்லைனு டாக்டர் சொன்னாரேன்னு கேர்லஸ்ஸா இருக்க கூடாது.'

'எஸ் ஸிஸ்டர்.  புரிஞ்சது.  அப்புறம் சாயந்திரமா இவர் ஊருக்கு கிளம்பிடுவார்.  ஒண்ற மணிக்கு சாப்பிட போவோம்.  அப்புறம் என்ன நீங்க கீதான்னே இனிமே கூப்படலாம்.'

கிளம்புகிறாள் டெய்ஸி.

'மாமா... யார் வந்திருக்கேன் சொல்லுங்கோ?'

'எனக்கா .... தெரியாது.. கீதா .... சீதாவோட பொண்ணு.'

'யூ லுக் குட் மாமா.  படுத்துண்டே இருக்கேளே.  ஜம்முன்னு எழுந்து உட்காந்து என்னோட பேசுங்கோ.  கம் ஆன்.  பாலாஜி, நீ அந்த பக்கமா போய் நின்னுக்கோ. அவரா எழுந்துக்க முடியலைன்னா ஹெல்ப் ஹிம்.'

லேசான பாலாஜியின் சப்போர்டில் எழுந்து உட்கார்ந்து விடுகிறார்.  கைத்தட்டுகளுடன் ப்ரமாதம் ஸர்டிஃபிகேட்டும் கீதாவிடமிருந்து பெறுகிறார். கொஞ்சம் மூச்சிரைப்புக்குப் பிறகு ஒரு பெருமித சிரிப்பு அவரிடமிருந்து.

'ரிலாக்ஸ் மாமா.  எக்ஸலெண்ட்.  நாளைலேந்து நடக்க ஆரம்பிக்கணும்  சொல்லிட்டேன்.  முடியும் உங்களால.  பட்டாமணியார் வேலையெல்லாம் அப்படியே இருக்கோன்னோ.  நன்னா எழுந்து உட்கார்ந்து நிமிர்ந்து எக்ஸர்ஸைஸ் பண்ணினேள்னா இந்த வாரத்திலேயே பூவனூர் கிளம்பிடலாம்.'

தலையை ஒரு சிறு குழந்தை ஆட்டுவது போல ஆட்டி சந்தோஷத்தை தெரிவிக்கிறார்.

'இன்னும் அஞ்சு நிமிஷம் கழிச்சு bப்ரீத்திங் பயிற்சி என்ன?  இப்ப ரெண்டு துண்டு ஆப்பிள் சாப்பிடறேளா?  பாலாஜி, ஆப்பிள அரையா பண்ணேன்.'

பாலாஜி கொண்டுவந்த துண்டுகளின் தோலையும் சீவி இன்னும் முட்டைகோஸ் நறுக்குவதைப் போல நறுக்கி ஒரு சிறு கிண்ணத்தில் போட்டு ஸ்பூனையும் அதில் வைக்கிறாள்.

'இதெல்லாம் எப்ப கத்துண்ட?'

'மன்னார்குடியில எங்காத்துக்கு பக்கத்துல நடேச தாத்தான்னு ஒருத்தர் பெட் ரிடனா இருந்தார்.  அந்தாத்து மாமி அவர கவனிச்சிண்டத பார்த்திருக்கேன்.  நானும் அப்பைக்கப்ப அந்த மாமிக்கு  கூட மாட ஒத்தாச பண்ணினதுல கத்துண்டது தான்.'

'தேமேனு நீ டாக்டருக்கு படிக்க ட்ரை பண்ணியிருக்கலாம்.'

'நானு?  டாக்டர்?  காசில்லாத வாளுக்கெல்லாம் எல்லாமே கனவு தான் பாலாஜி.  இந்த மாதிரி ஹாஸ்பிடல் ஸர்வீஸ் பண்ணும்போது ஒரு டாக்டர் ஃபீலிங் வந்தாலே அதுவே டாக்டருக்கு படிச்ச மாதிரி.'

'ஆனா நீ எல்லாத்துலேயும் அசத்தர டீ.  டாக்டர்னோன ஞாபகம் வர்றது.  அந்த பசுபதி டாக்டர சூப்பரா மடக்கினியே.'

'சில டாக்டர்கள் எல்லாம் தங்கள ரிலாக்ஸ் பண்ணிக்கறதே நம்மள மாதிரி அஸிஸ்டண்டுகள் கிட்ட சிரிக்க சிரிக்க பேசித்தான்.  சும்மா சொல்லக் கூடாது.  அவர் மருத்துவம் பார்க்கறத விட நோயாளிகள உற்சாகப் படுத்தியே காப்பாத்திடுவார்.  என்னால ஏதோ அந்த டாக்டருக்கு கொஞ்சம் உற்சாக படுத்த முடிஞ்சுது இன்னிக்கு.  அந்த இன்னொரு டாக்டர் அநியாயத்துக்கு அடக்கம்ப்பா.'

'ரொம்ப எக்ஸ்பர்ட்டாம் கண்டேஜியஸ் டிஸீஸ்கள ஹாண்டில் பண்றதுல.'

'நம்மள பயமுறுத்தாம லிமிட்டடா தான் மாமா ஒடம்ப பத்தி சொன்னா ரெண்டு பேரும்.  ஐ திங்க், அவாளுக்கு ரொம்ப டஃபாதான் இருந்திருக்கும் போல இருக்கு மாமாவ காப்பாத்தினதுல.'

பேச்சு ஸ்வாரஸ்யத்தில் மாமாவிற்கு ஆப்பிள் கொடுப்பதை மறந்தது ஞாபகம் வர மாமா அதைத் தானாகவே சாப்பிட முயற்சித்து இங்குமங்கும் சிந்தியிருப்ப்பதைப் பார்க்கிறாள்.

'ஓ.....  ஃபோ....  ஸாரி மாமா.  பசிக்கறதா மாமா.'

சிந்தியவற்றை அள்ளி விட்டு அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு மீதி அரைப்பழத்தை நறுக்கத் துவங்குகிறாள்.

'ஏன் கீதா, பெட்டுல தான சிந்திருந்தது.  அதையே கொடுத்திருக்கலாமே.'

'இல்ல பாலாஜி.  சாதாரண டைம்னா அவர் இஷ்டம்.  ஆனா உடம்பு சரியில்லாதவா கிட்ட நாம அப்படி செய்யக் கூடாது.  மன ரீதியா அவாளுக்கு எந்த கஷ்டமும் கொடுக்கப்படாது.'

தன்னோடு சிறுமியாக ஓடி விளையாடிக் கொண்டிந்தவள் தான் மெட்ராஸ் சென்று படித்து வந்த காலத்தில் கீதா தன்னை இப்படி உயர்த்திக் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது பாலாஜிக்கு.

புதிதாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை மாமாவுக்கு அருகில் இருந்து ஊட்டிய பிறகு அவர் உட்கார்ந்த நிலையில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை சொல்லித் தருகிறாள்.

'பாலாஜி, இந்தா இது உனக்கு.' என்று மடித்திருந்த காகிதத்தை அவனிடம் கீதா கொடுக்கிறாள்.

'கண்டிப்பாக இது செக் லிஸ்டாகத்தான் இருக்கும்' என்று நினைத்துப் பிரிக்க அதே.

சிரிக்கிறான் வாய் விட்டு.  காரணம் புரியாமல் ஏன் சிரிக்கிறாய் என்றவளுக்கு பழைய செக்லிஸ்ட் கதையை சொல்லி சிரிக்கிறான்.

'உனக்கு அட அடான்னு வருதா உடம்பு.  லவ் லெட்டர் கேட்குதாக்கும் உடம்பு.  மொதல்ல மேல படிச்சு உருப்படற வழியப் பாரு.  அதுலதான் நம்மளோட எதிர்காலமே இருக்கு தெரியுமோன்னோ?'

'அடியே பரதேவதை.  உன் லக்சர ஆரம்பிக்காத.  உப்பு சப்பு இல்லாத காதல் கதையா போச்சு நம்ம கதை.'

சிரிக்கிறாள்.  சபேஸய்யர் காதுகளுக்கு அவ்வளவாக இவர்கள் பேச்சுக்கள் விழவில்லை என்றாலும் இருவரிடத்தும் உள்ள ஒரு நெருக்கத்தை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது.

'கீதா, நாம சாப்டுட்டு முடிச்சோண்ண அங்கேர்ந்தே நான் பூவனூர் கிளம்பறேன்.'

'ஏன் பாலாஜி?  எதுக்கு வெயில்ல போகனும்?  சாயந்திரமா வெயில் தாழ போலாமே?'

'இல்ல கீதா.  அம்மா வேற தனியா இருப்பா.  நாளைக்கு மன்னார்குடி போய் அத்தைய பார்த்துட்டு வரலாமோன்னு யோசிக்கிறேன்.'

'அவசரப் பட்டு அம்மா கிட்ட எதுவும் சொல்லிடாத.  நானே பக்குவமா சொல்லிக்கறேன்.'

'ஏன், எனக்கு பக்குவம் பத்தாதா?'

'அப்படி இல்ல பாலாஜி.  ஏற்கனவே ஒரு சின்ன ஃப்ரிக்ஷன் இருக்கு உங்க அம்மாக்கும் எங்க அம்மாக்கும்.  இப்ப ஏதாவது சொல்லி தப்பா போயிடக்கூடாது பாரு.  அதான்.'

'சரி.  நான் நம்ம விஷயத்த பத்தி பேசாம ஜாக்ரதையா பேசறேன்.  ட்ரஸ்ட் மி.

சாப்பாடு முடிந்து பஸ் ஸ்டாண்ட்.  தஞ்சாவூர் பஸ் நிற்கிறது ரெடியாக.

'இந்த பஸ் வேண்டாம்.  நெக்ஸ்டுல போ பாலாஜி.'

வயல் சமாசாரங்கள் ஓடுகின்றன சிறிது நேரம் இருவரிடத்தும்.  அடுத்த பஸ் வருகிறது.  

மருதாணிக் கையசைப்பு முடிந்தவுடன் பாலாஜியின் சிந்தனைகள் இந்த முறை பஸ் பயணத்தோடு ஒட்டிக் கொள்கிறது.

ஆஸ்பத்திரிக்கு திரும்பி வந்த கீதாவுக்கு ஒரு ஸர்ப்ரைஸ்.  ரிஸப்ஷனில் ராமநாதனும் பவானியும்.

தொடரும்...

No comments:

Post a Comment