Saturday, December 4, 2021

உறவுபோட்டமுடிச்சு_48

உறவுபோட்டமுடிச்சு_48

ரிஸ்ப்ஷனில் உட்கார்ந்திருந்த பவானியையும் ராமநாதனையையும் பார்த்து விட்டு அவர்களிடம் வருகிறாள் கீதா.

'வாங்கோ பெரியம்மா.   வாங்கோ பெரியப்பா.  பாவம் இந்த வேகாத வெய்யில்ல வந்திருக்கேளே.  சாயரக்ஷயா வந்திருக்கலாமே.'

'இனிமே என் சகோதரனப் பார்க்க உன் கிட்ட டைம் கேட்டுண்டு வரோம்.'

சாதாரணமாக ஆதங்கத்துடன் கேட்ட கேள்விக்கு இப்படி ஒரு பதில் பவானியிடமிருந்து கீதா எதிர்பார்க்கவில்லை.  இருந்தாலும் மாமாவைப் பார்க்க வந்திருப்பவர்களோடு ஏன் வீண் வாதம் செஞ்சு அவா மனச காயப் படுத்தணும்னு தனக்குள்ளே சொல்லிக் கொள்கிறாள்.

'நீ கீதா தான? சிவாஜி ரெட்ட வேஷம் போடற மாதிரி பூவனூர்லயும் இருக்க.  செங்கிப் பட்டியிலேயும் இருக்கயே.  நிறைய வித்தையெல்லாம் கத்துண்டிருக்கியே இந்த சின்ன வயசுக்குள்ளேயே.'

எப்படி வேணா பேசலாம்னு மனசுல நெனச்சிண்டு வரவா கிட்ட வம்பு தும்பு இல்லாம பேசறது அவ்வளவு எளிதா என்ன?  இருப்பினும் வாரத்தைகளை அடக்கிக் கொள்கிறாள் கீதா.

'கொஞ்ச நாளா பாலாஜி இங்கேயே இருக்கான் பெரியம்மா.  சரியா அவனுக்கு தூக்கம் இல்லாம சாப்பாடு இல்லாம கஷ்டப் பட்டுண்டு இருந்தான்.  அதான் நான் கொஞ்ச நாள் பார்த்துக்கறேன்னு சொல்லி அனுப்பிச்சேன் அவன பூவனூருக்கு.  இப்பத்தான் கிளம்பறான்.'

'தஞ்சாவூர்ல இருக்கற இந்த அத்த ஞாபகம் அவனுக்கு வரவே வராதோ?  நிம்மதியா அங்க வந்து சாப்ட்டு தூங்கி பண்ணியிருக்கலாமோன்னோ?  சரி சரி ....  உன் கிட்ட இதெல்லாம் சொல்லி கோச்சிண்டு என்ன பிரயோஜனம்?  யார் பொறுப்பா எல்லாத்தையும் கவனிச்சுக்கறாளோ அவா பேச்சத்தான குடும்பம் கேட்க வேண்டியிருக்கு?'

பவானியின் பேச்சுகள் எல்லாம் புரிகிறது.  குதர்க்கங்கள் அந்த பேச்சுக்களில் கலந்திருப்பதும் தெரிகிறது.  கீதா வாயாடி தான்.  துடுக்கு தான்.  அரை வக்கீல் தான் வாதாடறதுல.  ஆனாலும் மாமா குடும்பத்தில் குழப்பம் தன்னால் வந்துவிடக் கூடாது என்று பெரியம்மாவுடனான தன் பேச்சுகளில் கவனம் வைக்கிறாள் கீதா.

'என் போக்குக்கு ஏதாவது சொல்லப் போய் அது பெரிசா மாறி ஏற்கனவே வருத்தமா இருக்கற மாமா குடும்பத்துக்கு எதுக்கு பிரச்சனை.  ஏதோ பெரியம்மாவுக்கு எங்களோட ஏழ்மை ஒரு எகத்தாளம்.  இருந்துட்டு போகட்டுமே.'

அதுவரை மெளனமாக இருந்த ராமனாதன் பேச்சை ஆரம்பிக்கிறார்.

'ஏம்மா?  மாமா இப்ப எப்படி இருக்கார்.  இப்ப பார்க்க முடியுமோ அவர?'

'விஸிடிங் அவர்ஸ் நாலு மணிக்குத் தான்.  இருந்தாலும் ஸ்பெஷல் வார்டு தானே.  ஸ்டாஃப் நர்ஸ் பழக்கம் தான்.  ஒரு வார்த்தை அவ கிட்ட சொல்லிட்டு உங்கள வந்து அழச்சிண்டு போறேன் பெரியப்பா.'

சொல்லிவிட்டு வார்டு பக்கம் செல்கிறாள்.  அந்த நேரத்திலும் தம்பதியினர் தங்களுக்குள் பேச்சை தொடர்கின்றனர்.

'பார்த்தேளான்னா.  நான் தான் சொன்னேனே.  சபேசன் உடம்ப சாக்கா வெச்சிண்டு எப்படி நிர்வாகம் பண்றா பாருங்கோ.  நம்மாத்து பொண்களுக்கு இந்த சாமர்த்தியம் வருமோ?  சுட்டு போட்டாலும் வராது.'

'புரியறது பவானி.  ஆனா நீ இப்பவே இவ்வளவு கவலப்பட வேண்டாம்.  நான் தான் சொன்னேனே நான் பார்த்துக்கறேன்னு.  நீ இப்படி வார்த்தைகள இப்பவே கொட்டிட்டா நான் போடற திட்டமெல்லாம் வேஸ்டா போயிடும்.'

டெய்ஸியிடம் சம்மதம் கேட்டுவிட்டு பெரியப்பாவிடம் வருகிறாள் கீதா.

'மாமாக்கு தொத்து இருக்கறதால உங்க ரெண்டு பேரையும் கர்சீஃப கட்டிண்டு வர சொன்னா நர்ஸ்.  அங்க இருக்கற குழாய்லயும் கா கால்கள அலம்பிட்டு வரச் சொன்னா.'

நர்ஸ் சொன்னதாக சொன்னால் கேட்பார்கள் என்ற கீதாவின் கணக்கு சரியாக இருந்தது. அப்படியே செய்து விடு வார்டு உள்ளே வந்தார்கள்.

'சபேஸன், எப்படி இருக்க? தெரியறதா நாங்க யார் வந்திருக்கோம்னு?'

'வா...... பவானி.... வாங்கோ.... மாப்ள.   எதுக்கு ... பாவம்....சிரமப் பட்டுண்டு.'

விட்டு விட்டு மூச்சிரைக்க இப்படி பேசினாலும் தன் சந்தோஷத்தை முகத்தில் காட்டினார்.'

'சபேசா.  இந்த அக்கா ஒருத்தி தஞ்சாவூர்ல இருக்காங்கரதே மறந்துட்டியே.  ஒரு வார்த்த சொல்லியிருந்தா எல்லா சௌகர்யமும் பண்ணி கொடுத்திருப்போமே?'

மாமாவிடமிருந்து அதற்கு எந்த வித பதிலும் வரவில்லை.

'கீதா.....'

'என்ன மாமா?  என்ன வேணும் சொல்லுங்கோ?'

'இங்க ... கொஞ்சம் ..... கிட்டக்க ... வா.'

வருகிறாள் மாமா விற்கு அருகில்.

'மாப்ள.... இவளுக்கு .... ஏதாவது ... உங்க சிபாரிசுல .... நல்ல வேலையா .... வாங்கி .... தரேளா?'

'மாமா.  ஏற்கனவே பெரியப்பா சொல்லியிருக்கா.  கவர்மெண்ட் வேலையே வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கா.  மொதல்ல உங்க உடம்பு.  அப்புறம் தான் எல்லாம்.'

'சபேசா.  நீ இதப்பத்தி எல்லாம் கவலப் படாதே.  கீதா யாரு?  நம்மாத்து பொண்ணு.  அவளுக்கு வேல வாங்கித் தர்றது என் பொறுப்பும் கடமையும்.  ஏற்கனவே இவ உத்யோக விஷயமா கலெக்டர் கிட்ட பேசியிருக்கேன்.  என்னிக்கு கீதா தஞ்சாவூருக்கு வந்தாலும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை அவ கையில கொடுத்துடுவேன்.  சந்தோஷம் தான உனக்கு இப்ப?'

'நான் .... உயிரோட..... இருப்பேனோ... மாட்டேனோ.... நீங்க தான்... மாப்ள .... இவள நல்ல .....நிலைமைக்கு .... கொண்டு வ.......வ.... வரணும்.'

'சபேசா, நீ நன்னா இருப்ப.  கொழந்த நன்னா உத்யோகம் பார்க்கறத நீ பார்க்கத்தான் போற.'

'அம்மா கீதா, உங்க மாமா சொன்னத கேட்டியோன்னா?  மாமா டிஸ்சார்ஜ் ஆனோண்ண என்ன வந்து தஞ்சாவூர்ல பாரு. ஆர்டர வாங்கிக் கொடுத்துடறேன்.  அத எடுத்துண்டு மாமா கிட்ட காமி.'

'சரி பெரியப்பா.'

'வேல கெடச்சோன்ன எங்களை மறந்துட மாட்டியே?  இந்த கையால எத்தனையோ பேருக்கு வேல வாங்கி கொடுத்துருக்கேன்.  ஆனா எல்லாரும் வேலை கெடச்சோன்ன ஒரு த்தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டா.  அந்த அளவுக்குத்தான் இந்த காலத்துல நன்றியும் விஸ்வாசமும்.  நான் உன்ன சொல்லல.  உன்ன பத்தி நன்னா தெரியுமே எங்களுக்குத் தான்.  ரங்கன் செத்துப் போனோண்ண உங்க மாமா செஞ்ச உதவிய மனசுல வெச்சிண்டு இப்ப என்னமா நன்றிய காமிச்சிண்டு இருக்க மாமா குடும்பத்துக்கு?'

'கீதா.... வந்தவாளுக்கு .... அங்க .... இருக்கற..... பழத்த ..... நறுக்கி .... கொடு.'

'சபேசன்.. அதெல்லாம் வேண்டாம்.  நாங்க கொண்டு வந்திருக்கிற பழங்கள நீ வாங்கிக்கோ.'

'கீதாக்கு .... வேலை ...... வாங்கி தரேன்னு .....சொன்னேளே.... அதுவே .... மனசு .... நெறஞ்சு.... இருக்கு.'

'கீதா.  உங்களுக்கெல்லாம் என்ன உதவி வேணும்னாலும் சங்கோஜப் படாம கேளுங்கோ.  நான் தஞ்சாவூர்ல இருக்கறதுக்கு உன்னையெல்லாம் மெனக்கட வெச்சிருக்கவே வேண்டாம் கீதா இவாள்லாம்.  என்ன பவானி, கிளம்பலாமா?'

'சபேசா.  நாங்க கெளம்பறோம்.  மன்னார்குடியில இருக்கரவ மாத்திரம் உன் சகோதரி இல்லை.  தஞ்சாவூர்ல ஒருத்தியும் கடலூர்ல ஒருத்தியும் இருக்கோம்.  தம்பிக்கு ஒண்ணுன்னா நாங்களும் வருவோம்.  ஏதாவது சொன்னாத் தான எங்களுக்கு தெரியும்?'

'உங்களுக்கு தான பெரியம்மா முதல் முதல்ல மாமா உடம்ப பத்தி தெரியும்.  அப்படியிருந்தும் என்ன வேணும் ஏது வேணும்னு கேட்டுண்டு ஒண்ணும் நீங்க வரவே இல்லையே.  இப்பத்தான எட்டிப் பார்க்கறேள்?'

இப்படி பேசணும்னு நினைத்த கீதா ஒன்றும் பேசாமல் தன்னை அடக்கிக் கொண்டாள்.

அவர்கள் இருவரையும் ஆஸ்பத்திரி வாசலில் அவர்கள் நிறுத்தியிருக்கும் கார் வரை வந்து வழி அனுப்பி விட்டு ரிஸப்ஷனில் சற்று உட்கார்ந்து சிந்திக்கிறாள்.

'என்ன காரணமாக இருக்கும்?  பெரியம்மாவுக்கு என் மீதும் அம்மா மீதும் இவ்வளவு கோபம் இருக்க என்ன காரணம்.  நாங்க ரெண்டு பேரும் எந்த கெடுதியுமே இவாளுக்கு பண்ணலையே?  இப்படியா குத்தி குத்தி....  ஒரு பக்கம் என்னடான்னா பெரியம்மா என்ன பேச்சால ரணமாக்கறா.  இன்னொரு பக்கம் என்னடான்னா பெரியப்பா நான் அவர் கிட்ட கேட்காமலே எனக்கு வேலை வாங்கித் தர முனைப்பா இருக்கா.  இந்த பணக்காரள புரிஞ்சிக்கவே முடியலப்பா.'

சிறிது நேர மனவோட்டத்திற்குப் பிறகு வார்டுக்கு வருகிறாள்.

'கீதா...அவா....... போயாச்சா?'

'போயாச்சு மாமா'

'உங்க ...பெரியம்மா ....அப்படி... பேசினாளேன்னு .... வருத்தப்படாத.  உன் மேலையும்..... உங்க அம்மா..... மேலையும் .... பாசமா நான்.... இருக்கேன்னு ....அவளுக்கு .... சித்த .... பொறாமை ... சரியாப் போயிடும்..... நீ பெரியப்பாவ .... கெட்டியா ...... பிடிச்சிண்டு ஒரு .....அரசாங்க வேலைய வாங்கிண்டுடு.  பெரியம்மா.... பேச்சையெல்லாம்... காதுலேயே போட்டுக்காத.  கஷ்டங்களையே.... பார்க்காதவா..... சித்த.... கர்வத்தோட தான் ....இருப்பா.'

'மாமா எனக்கும் ஒரு வருஷ படிப்பு இருக்கு.  உங்க உடம்பு சரியாகட்டும்.  போய் பார்க்கிறேன்.

நிறைய பேசினார் விட்டு விட்டு.  க்ஷீணமான குரலில்.  உடம்பை சிரமப்படுத்திக் கொண்டு.  கீதா எவ்வளவு சொல்லியும் கேட்காமல்.

'பவானி பேசுனது உன் மனச எப்படி பாதிச்சிருக்கும்னு எனக்கு தெரியும்.  இப்படி பேசும்போது  இக்னோர் பண்ணினாலே போதும். வார்த்தைக்கு வார்த்தை சண்டை போட்டா இழப்புகள் தான் மிஞ்சும்.'

'நம் கோபம் முழுசும் கழுத்துக்கு கீழ தான் இருக்கணும்.  மொகத்துல வந்துட்டா எதிராளி நம்மள எமோஷன வெச்சே ஜெயிச்சுடுவா.'

'நாம படற அவமானங்கள்லாம் நாம முன்னேர்ற வரைக்கும் தான்.  நம்மளோட வளர்ச்சி அவாளோட வாய தானாவே அடைக்க வெச்சுடும்.  அதுவரைக்கும் நமக்கு தேவை ஒண்ணே ஒண்ணுதான்.  பொறுமை.'

'பவானி உன் கிட்ட எதுக்காக குதர்க்கமா பேசறான்னு சொல்லவே மாட்டா. நீயா நேராவே கேட்டாலும் மாட்டா.  உன் மேல எந்த தப்பும் இல்லைனா ஏன் அவ சொல்றதுக்கு வருத்தப் படணும்.  நீ வருத்தப் பட்டுண்டு கொழம்பனும்னு நெனச்சுதான் பேசறா.  நாம அத கண்டும் காணாம போனா அப்புறம் அவ கொழம்ப ஆரம்பிச்சுடுவா.'

'உள் மனசுல எத வெச்சிண்டு பவானி பேசறாங்கறது அவ சொல்ற வரைக்கும் நீ எதுக்கு கவலப் படணும் சொல்லு.  அவளால ரொம்ப நாள் சொல்லாம இருக்க முடியாது.'

படுக்கையிலே இருந்து கொண்டு இவ்வளவு விஷயங்களை மாமா கவனித்திருப்பது கீதாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

'உங்க தாத்தா, அதான் என்னோட அப்பா பத்து வேலி நிலத்த கொடுக்கும் போது எனக்கு விவசாயம் பத்தி ஒண்ணும் தெரியாது.  அப்புறம் எனக்குள்ள ஒரு வெறி.  இந்த நிலத்துல சம்பாதிச்சு தான் சகோதரிகள் கல்யாணம் என் கல்யாணம் எல்லாமே நடந்தது.  ஆர்வத்தோட உழைச்சா பலன் இல்லாம போகாது.'

'பவானி ஆத்துக்காரர் வாயிலேயே வந்துடுத்து  உனக்கு வேல வாங்கித் தரேன்னு.  இப்ப போய் பவானி மேல இருக்கற கோபத்த காமிச்சா நமக்கு தான் கிடைக்கற நல்ல சந்தர்பம் போகும்.'

'இப்பெல்லாம் விவசாயம் பண்றது அவ்வளவு வருமானம் கொடுக்கற தொழில் இல்ல.  ஏற்கனவே உழறவாளுக்கு தான் நிலம் சொந்தம்னு சட்டம் வந்தாச்சு.  என்னோட நல்ல மனசுக்காக அதிகாரிகள்லாம் நம்ம நிலத்துல கைய வைக்காம இருக்கா.  அவா ஃபைல கையில எடுக்கறதுக்குள்ள பாலாஜி ஏதாவது வேலைல கால ஊணிடனும்.'

'நீ கெட்டிக்கார பொண்ணு.  பொறுமைய மாத்ரம் கொஞ்சம் கூட்டிண்டியேனா உன்ன யாராலும் ஜெயிக்க முடியாது.'

மாமாவிடம் தான் எத்தனை அனுபவங்கள்? அவர் பேசப் பேச அசந்து தான் போய்க் கொண்டிருந்தாள்.

அவர் மனதைச் சுற்றியும் ஆனந்தம் நிரம்பிக் கொண்டே இருந்ததை கீதாவால் உணர முடிந்தது.

'ரொம்ப நாழியா பேசிண்டே இருக்கேளே மாமா.  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்கோளேன்.  நான் போய் சீதாராமய்யர் கடையில உங்களுக்கும் எனக்கும் இட்லி வாங்கிண்டு வரேன்.  அப்புறம் அவர் கடைய சாத்திண்டு போயிடுவார்.'

'நான் இங்கதான இருக்கப் போறேன்.  சித்த ரெஸ்ட் எடுத்துண்டு பேசுங்கோளேன்.  நான் இட்லி வாங்கிண்டு வந்தோண்ண மாமா, மூச்சுப் பயிற்சி ஆரம்பிக்கலாம்.  நானும் உங்களோட சேர்ந்து செய்யப் போறேன்.'

தொடரும்....

No comments:

Post a Comment