Sunday, December 19, 2021

அம்புலு

 # *17. அம்புலு (சிசீ 9)* #ganeshamarkalam

எங்காத்துல நாந்தான் எல்லாருக்கும் முன்னாடி எழுந்து குளிச்சூட்டு வாசத் தெளிச்சு கோலம் போடணும். அப்பரம் பாலக் காய்ச்சி டிக்காக்ஷண் போட்டு வச்சிண்டு இவாள்லாம் ஒவ்வொருத்தரா எழுந்து வரப்போ சூடா காபிய கலந்து எடுத்துண்டு போய் நீட்டியாணம். இல்லைன்னா எங்காத்து மாமாக்கு அசுரக் கோபம் வந்திடும்.

இவான்னா? என் மாமியார், எம்பொண் +2 படிக்கரா அவள். அப்பப்போ என் நாத்தனார் அவாத்துல கோச்சுண்டு இங்கே வந்து கேம்ப் போட்டிருந்தாள்னா அவளயும் சேர்த்துண்டுடணம். ஆனா வாசலுக்குப் போனதும் எனக்குத்தான் எங்காத்தில் மொதமொத தர்மசம்வர்த்தினித் தாயார் சன்னிதிக்கு போர வழீலயிருக்கும் ராஜ கோபுர தரிசன கிடைக்கும். அதுனால இதெல்லாத்தையும் பொறுத்துண்டுடுவேன். 

கீழமாட விளாகத்துலதான் எங்காம். சூரிய வெளிச்சம்னு 5 மணிக்கு என்னத்தை, ஆனா அந்த வெளிச்சத்தில் பெயின்டே கண்டிராத அந்த கோபுரம் தரும் மன ஆறுதலுக்கு ஈடு இணையில்லை. தாயார இத்தன பக்கத்துல வச்சிண்டு நான் எதுக்கு கவலைப் படணம்? என்னதை பெரீசா சங்கடங்கள் வந்துடப்போரதுன்னு படும். அதுனாலயே சித்தே அசதியா பட்டாலும் சிலுப்பிண்டு எழுந்துண்டுடுவேன். ஓசைப்படாம என் பாயச் சுறுட்டி வச்சுட்டு கதவைத் தொறந்துண்டு- இவர் தூக்கம் கெட்டுடப் பிடாது பாருங்கோ.

அதுக்கப்பரம் ஒவ்வொண்ணா. காபிக் கடை, டிப்பன் கடைன்னு முடிஞ்சு துவைச்சுக் காயப் போட்டு சமையலுக்கு எல்லாம் பங்கிடு செஞ்சுண்டு உக்காந்தா 1 மணிவரைக்கும் வேல நெட்டித் தள்ளும். பார்வதிய ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டா சித்தே நிம்மதி. அவளுக்கு மத்தியானத்துக்குன்னு என்னவாவது ஸ்பெஷலாக் கெட்டு எடுத்துப்பள். மாமியார் புஜை புன்ஸ்காரம்னு படுத்தி எடுப்பள் இவருக்கு தஞ்சாவூர் கோர்ட்டுக்கு போயாணம். வக்காலத்து செய்யரர். சில ஸமயம் 2 மணிக்கு வந்து சாப்பாட்டுக்குன்னு நிப்பர். அவருக்கில்லைன்னாலும் மாமியாருக்கு வக்கணையா செய்தாணம். சாயங்காலம் 4 மணிக்கு ஆரம்பிக்கும் டிப்பன் கடை. அப்பரம் ராத்ரிக்கு சமையல். இந்தாத்தில் என்னைத் தவிர யாரும் கார்த்தால மிஞ்சினத ராத்திரி போட்டுக்க மாட்டா. நான்தான் வீணாப்போரதேன்னு வச்சிண்டு மண்டணம். அப்பரம் ஊரப் போட்ட மாவ கல்லுரலில் அரைச்செடுத்து வச்சு, காய்ஞ்ச துணிய மாடீலெந்து கொண்டுவந்து மடிச்சு வச்சுன்னு பல வேலைகள். பட்டியல் போட்டு சொல்ல சமயமில்லை.

அம்புஜாக்ஷின்னு எங்கப்பா ஆசையா பேர் வச்சு முழுசா வாய் நிறைஞ்சு கூப்பிடுவர். திருமாணிக்குழி பொறந்தாம் இப்ப யாருமில்லை. அகத்தை அப்பா தர்மத்துக்கு எழுதி வச்சுட்டர். அதில் எங்காத்து மாமாக்கு அசாத்திய கோபம். செய்தி தெரிஞ்சதுமென் கன்னத்தில் ஓங்கி ஒண்ணு வச்சர். “என்ன இப்படி செஞ்சுபுட்டான் உன்னப்பன்?” வசவு. பன்ருட்டீலேந்து கடலூர் போர வழீல கொள்ளிடக் கரையில் வரும் அருள்மிகு வாமனபுரீஸ்வரர் சமேத அம்புஜாக்ஷி அம்மன் கோவில். “வசதியான குடும்பம் திருவையாத்தில் வீடு இருக்கு, தஞ்சாவூர் கோர்ட்டில் ப்ரேக்டீஸ் செய்யரர் ராஜா மாதிரி இருக்கார் உன்னை நன்னா வச்சுப்பா!” தேடிப்பிடிச்சு கல்யாணம் செஞ்சுவச்சா. அந்தக் காலத்துலேயே 100 பவுனுக்கு நகை. அதைத்தவிர வைரத்தோடு மூக்குத்தி, தங்க ஒட்டியாணம், கொலுசெல்லாம்.

குடுத்தனம் வச்சதுந்தான் இவாத்து வண்டவாளமெல்லாம் வெளிச்சத்துக்கு வந்தது. ஒருக்கா அப்பா என்னைப் பாக்க வந்தவர் “சந்தொஷமா இருக்கியாடீ செல்லம்?” “இருக்கேன்பா!” அப்போ “அம்புலூ!”ன்னு கூப்பிட்டுண்டே எங்காத்துக்காரர் வரர். அம்புஜாக்ஷிய அம்புலுவாக்கிட்டவாளாத்தில் நான் எத்தனை சந்தோஷமா இருப்பேன்னு குறிப்பறிஞ்சு போன அப்பா “ஆத்துக்குப் வந்ததும் படுத்த படுக்கையாப் போனர்!” அம்மா சொன்னா. அப்பரம் 2 வருஷத்தில் ஒவ்வொருத்தராப் போய்ச் சேர்ந்தா. அப்பாவுக்கு தன் சொத்து இந்த வக்கீலுக்குப் போயிடப் பிடாதுன்னு.

இவாத்துல கொடுமைப் படாத நாட்களே இல்லைங்கலாம். ஆ ஊன்னா அடிக்கக் கிளம்பிடுவர். கட்டிண்டு வந்தவள ஆசையும் பாசமுமா வச்சுக்கத் தெரியாதா? இளம் வயசுலக் கூடவா! இவரம்மா சொல்ரா “அவன் சுபாவம்டீ, அவன் அப்பாக்கிட்டேந்து வந்திருக்கு. அவனும் சித்தே அப்படித்தான்” என்னமோ பெருமையான விஷயம்போல். “உள்ளுக்குள் தீசாங்கு தெரியாதுடீ எம்புள்ளைக்கு”. பொம்மனாட்டிய கை நீட்டி அடிப்பது எந்த விதத்துல நியாயம்? போகப்போக புரிஞ்சிக்கரேன் என்னைப்பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி போட்டுத் தந்ததே என் மாமியாரும் நாத்தனாரும்தான்னு.

அன்னைக்கு வாசல்ல ஃப்ரெஷா கீரை வித்துண்டு போரான். 2 கட்டு வாங்கினா மசிக்கலாமேன்னு. உள்ளேந்து “அங்கே என்ன அத்தனை நாழியா?” அதட்டலான தொனி. ஐயாரப்பன் முருகன் சன்னதீல அர்ச்சனை செய்யர குருக்களுக்கே காதில் விழராப்போல. சட்டுன்னு சில்லரையத் தந்துட்டு கீரக்கட்ட எடுத்துண்டு உள்ளே வரேன். நாத்தனார் என்னையே வச்சகண்னை எடுக்காம பாத்துண்டு. “முழியப் பாரேன், இப்படியா வம்பளந்துண்டு நிப்பா?” முணுமுணுக்கரா. அந்தண்டை பூஜை அலமாரியத் தொறந்து வச்சிண்டு சுலோகம் படிக்கும் மாமியார் மோவாய தோளில் இடிச்சுப்பத ஓரக்கண்ணால பாத்துண்டே அடுக்களைக்குள் போரேன். குரல் கொடுத்தது எங்காத்து மாமாதான். 

ஞாயித்துக்கிழமை கச்சேரி இல்லை. சிலர் டிஸ்கஷணுக்காக ஆத்துக்கே வந்துடுவா. அவா திண்ணைல இருக்க ஒவ்வொருத்தரையா உள்ளே வரவழைச்சு பேசுவர். வந்தவாளுக்கு ஏதாவது குடிக்கக் கொள்ள வேணுமான்னு நான்தான் போய் கேட்டுண்டு வந்து செஞ்சு தரணம். அதுல வேண்டப் பட்டவா அத்தனை இல்லாதவான்னு 2 ரகம். வேண்டப் படாதவா வந்து பேசிண்டிருக்கப்போ “காபி சாப்பிடரேளா”னு கேட்டுடப் பிடாது. அதே சமயத்தில் சிலருக்கு உபசாரம் பலமாயிருந்தாணம். குழம்பிப் போவேன். நான் தவிப்பதை அவரோட அம்மா ரசிச்சிண்டு.

ராத்ரி ஆச்சுன்னா இவருக்கு கட்டில்ல எல்லாம் வசதிப்படுத்தித் தந்தாணம். ஆரம்பத்துலேந்தே கட்டிலுக்கு பக்கத்துல கீழே பாய விரிச்சுத்தான் படுத்துப்பேன். நமநமத்துதுன்னா “மேலே வாடீ”ம்பர். எங்கப்பா வாங்கித் தந்த கட்டில். சிங்கிளா டபுளானு புரிஞ்சுக்க முடியாத கட்டில். புதுமண தம்பதிகள் நெறுக்கமாத்தான் இருப்பானு ஒண்ணரை அப்பெல்லாம் பிரஸித்தம். மனுஷணுக்கு மிருகவெறி. இல்லைன்னா ஒண்ணுமே வராது. கல்யாணமான புதுசுல இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சுக்கரத்துக்குள்ள பார்வதி பொறந்துட்டா. இன்னதுன்னு தெரிஞ்சிண்டப்பரம் மனசுக்குப் பிடிச்சாப்போல ஒண்ணுமே நடக்கலை. பார்வதி பெரியவளானதும் ‘வயசுப்பொண்ண வச்சிண்டு நீ கட்டிலுக்கு மேலெல்லாம் வரேண்டாம்’னுட்டர். அவரால முடியாமப் போயாச்சுன்னு புரிஞ்சிண்டேன். 40 வயசுலேவா முடியாமப் போகும்? நல்லதுக்குத்தானு விட்டூட்டேன். அந்த சமாச்சாரம் நம்ப வாழ்க்கையில் இல்லைன்னு மனசத் தேத்திண்டு இந்த மனுஷன் பண்ணின அட்டூழியங்களை பொறுத்துக்க வேண்டிய அவசியம் இல்லாமப் போனதும் நல்லதாத்தான் பட்டது. இல்லைன்னா இவர் செஞ்சதை பொறுத்துண்டு செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தினதை சகிச்சிண்டு

ஆனா பாழ் மனசு கேக்கரதா என்ன? மனசு ஏங்கினப்போல்லாம் அத்தை பையன் ஆரவாமுதன் ஞாபகம் வரும். கட்டுக் குடுமியோட ராஜா மாதிரி இருப்பன். கிராப் வச்சுண்டா ஜெமினி கணெசனேதான்

அத்தை என்னை மாட்டுப்பொண்ணா அழைச்சிண்டு போயிடலாம்னு ஒத்தைக் காலில் நின்னா. அத்திம்பேரப்போல ஆரவாமுதனும் புரோகிதம். வசதியில்லை. அதுமட்டுமில்லை சொந்தத்துக்குள் மாட்டேன்னுட்டு எங்கப்பா பிடிவாதம். வாக்கப்பட்டுப் போகும் இடம் தள்ளீ இருக்கணம், அத்தை கண்ணில் படாமனு திருவையாத்து வரனை இழுத்துண்டு வந்து யார் பேச்சையும் கேக்காம.

ஸப்தஸ்தானம் எங்கூரில் உத்ஸவம். இந்துர்லேந்து சுவாமி புறப்பட்டு 7 ஸ்தலங்களுக்கு ஊர்வலமாப் போய்ட்டு வரும். எங்காத்துலேந்தே ரிஷபவாகன புறப்பாடு பாக்கலாம். அக்கம் பக்கத்துலேந்து திருவிழா பாக்கலாம்னு வரவா எங்காத்து திண்ணையிலதான் சிரமபரிஹாரம். தண்ணிர் பந்தல் வச்சு நீர்மோரும் பானகமும் தருவது வழக்கம். உள்ளே எல்லாத்தையும் கலந்து அண்டாவத் தூக்கிண்டு வந்து வச்சுடுவேன். விநியோகத்துக்கு இவர் 2ஆளைப் போடுவர். பலபேர் வந்து போர இடத்துல நான் சிங்காரிச்சிண்டு நிக்கப் பிடாதாம். கதவிடுக்குலேந்து என் மாமியார் எல்லாம் நல்லபடியா நடந்தாரதான்னு.

படிச்சு டிக்ரீ வாங்கலாம்னு நான் வச்சிருந்த ஆசைய எங்கப்பா சிலாகிச்சுப் பேசுவதோட நிறுத்திண்டு சட்டுபுடுன்னு கரைசேர்க்கணம்னு பறந்தடிச்சுத் தொறத்தாம இருந்திருந்தா இன்னைக்கு எங்கேயோ நன்னா இருப்பேன். BA,BEd முடிச்சிருந்தா கடலூரில் ஸ்கூல் டீச்சரா புடவையை அழகா சுத்தீண்டு குடைய பிடிச்சிண்டு போய் குழந்தைகளோட பழகி சந்தோஷமா. அத்தை பையனை கல்யாணமும் செஞ்சிண்டு. 10ஆவது படிக்கரச்சவே “இதுக்கே உங்காத்துக்காரருக்கு வக்காலத்தில் ஒத்தாசை செய்யலாம்டீ, கொடுத்து வச்சவள். மேற்கோண்டு படிக்க ஆசைன்னா படிக்க வைக்கரம்னு மாப்பிள்ளையாத்தில் சொல்லிட்டா!” இது அம்மா தரப்பு ஆர்க்யுமென்ட்.

நடந்தது என்ன? வந்ததுமே மாமியார் சொல்லிட்டா “தினப்படீக்கே 9 கஜம்தான் உடுத்திக்கணம். பதவிசா நடந்துக்கணம். எங்க எல்லாரையும் பாத்துக்க வேண்டியது உன் கையிலேதான் இருக்கு” படிப்பு எங்கிர பேச்சுக்கே வழிவிடலை.

எனக்கு ரெண்டு நாத்தனார். மூத்தவள் கல்யாணம் நிச்சயமாச்சு. நான் சீராக் கொண்டுவந்த நகையில் பாதி அவளுக்கு கொடுத்து அனுப்பி வச்சர் வக்கீல். இது எந்த சட்டப்படி நியாயம்னு பிடிபடலை. தாலிச் சரடு, ஒரு ரெட்டை வடம், காலில் கொலுசை விட்டூட்டு மிச்சத்தை ரெண்டாவது நாத்தனார் தன் சீராக் கொண்டுபோயாச்சு. ரெட்டைவடம் எப்படித் தப்பிச்சதுன்னா நான் அதை பாயோட சேர்த்து சுத்தி வச்சதில்தான். மூத்தவள் சித்தே என்னண்டை பிரியமா இருப்பா. ஆனா பாருங்கோ மொத ப்ரஸவத்தில் காம்ப்ளிகேஷணாம் சுளுவா போய்ச் சேர்ந்துட்டா. அவா மனுஷாளோட போக்குவரதுது இல்லை. ரெண்டாமவள் திருத்துறைப்பூண்டீல வாக்கப் பட்டுப் போனவள் அப்பப்போ ஏதாவது சாக்குச் சொல்லிண்டு பொறந்தாத்துக்குப் வருவள். வந்தா 15நா இருந்துட்டு போவள். அவளுக்கு குழந்தை பாக்கியமில்லை. எனக்கு பார்வதி பொறந்ததும் மாமியாரோட செர்ந்துண்டு “ஆண் வாரிசா எங்கண்ணாவுக்கு பெத்துப் போடத் தெரியலை!” வாய்கிழிய ஆஸ்பத்ரீலேந்து ஆத்துக்கு வரக்குள்ள. “நீ ஒரு பொண்ணையாவது பெத்துக் காமிடீ!” சொல்லலாம்னு பட்டது. காதில் விழுந்தா இவர் பச்சை உடம்புன்னும் பாக்காம அடிக்கக் கிளம்பிடுவர், அசகாய சூரர்!

பார்வதி கைக்குழந்தையா இருகச்சே போலியோ ட்ராப்ஸ் தரணம்னு என்னையும் குழந்தயையும் தஞ்சாவூர் அழைச்சிண்டு போனர். அப்படி 2 மூணு தடவை எங்கேயோ போனது மட்டும்தான். வேகமா இவர் பாட்டுக்கு மின்னாடி போவர். நான் கைக்குழந்தையோட பின்னாடியே கையில் சாமான் பையோட ஒடணம். ஒருக்கா அப்படித்தான் இவர் போய் பஸ்ல ஏறிண்டுட்டர், கிளம்பிடுத்து. அடுத்த ஸ்டாபிங்ல என்னைக் காணம்னு கண்டுபிடிச்சு இறங்கி திரும்பி நடந்து வந்து ரோட்டுலேல்லாரும் பாக்கராளேன்னு பாக்காம கத்தக் கிளம்பினர்.

பார்வதி 10ஆவது முடிச்சுட்டா. நிறைய படிக்கணம் அம்மான்னு சொல்ரா. “உன்னப்பாவண்டை வசதியில்லாம இல்லைடீ, எங்காப்போல அவர் நினைக்க மாட்டர், அவரண்டை பேசு”. “ராத்திரி பெசினா. “அதெல்லாம் எதுக்கு? கல்யாணத்த பண்ணிக்கோ. எங்கூட ப்ராக்டீஸ் செய்யும் சுந்தரேசன் பையன் BABL முடிக்கப் போரான் உனக்கு பாந்தமா இருப்பன்”. இவளோ அழக்கிளம்ப சமாதானப் படுத்தி தூங்கப் பண்ணினேன். யோசிக்கரேன்

எனக்கு நேர்ந்துட்ட வாழ்க்கை எம்பொண்ணுக்கு நேரப் பிடாது. ஆரவாமுதனுக்கு ஒரு கடிதாசு எழுதி வச்சு பார்வதிய பையில் வேணும்கிரதை எடுத்துக் கொடுத்து, மாமியார் கொல்லப்பக்கம் தோட்டத்துக்கு பொயிருக்கரப்போ அழச்சிண்டு போய் பஸ் ஸ்டாண்டில் கடலூருக்கு பஸ்ஸேத்தி விட்டூட்டேன். “கடலூர்ல இறங்கிட்டு திருமாணிக்குழீக்கு பஸ் பிடிச்சுப் போயிடுடீ. உன்னை அவன் தன் பொண் மாதிரி பாத்துப்பன். லெட்டரில் எல்லா விபரமும் கொடுத்திருக்கேன்”. சரீம்மான்னு  கிளம்பிப்போனா என் வாழ்க்கையில் இருந்த ஒரே ஒரு பிடிமானமான அவள்.

திருவையாத்து பஸ் ஸ்டாண்டுலேந்து ஆத்துக்கு கோவிலுக்குள்ளால வரச்சே தர்மசம்வர்தினி தாயார் சன்னதிக்கு மின்னாடி நின்னுண்டு தீர்மானமா – “என் பொண்ணுக்கு நீதான் இனிமேல் அம்மாவா இருக்கணம். அவளோட கூடவே நீ போ!” போவள். போயிருப்பள். நம்பிக்கை இருக்கு.

விஷயம் தெரிஞ்சுபோய் ஆத்துல அடி உதை. 3 நாளைக்கு சங்கிலியால கட்டிப் போட்டு வச்சிருந்தா. சாப்பாடு தண்ணீர் கொடுக்கலை. ஆனமுட்டும் மிரட்டினா. பொண்ணை எங்கே அனுப்பிச்சேன்னு சொல்லவேயில்லை. எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சாதிச்சேன். அப்பரம் மாமியார்காரி “இவளைக் கட்டிப் போட்டு வச்சா ஆத்துக் காரியத்தை யார் செய்வா, யார் நமக்கு பொங்கிப் போடுவா?” லாஜிக்கா பெசவே விடுபட்டேன். வக்கீல் எல்லா தெரிஞ்சவாளுக்கும் சொல்லி பொண்ணத் தேடிண்டிருந்தர்.

No comments:

Post a Comment