# *16. மழை பிரயாணம் (சிசீ 9)* #ganeshamarkalam
அரக்கோணம் ரயில்வே டேசன் எப்பப் பாத்தாலும் ஜன சந்தடியோடத்தே. நானும் சுந்தரியும் சாயங்காலமே வந்து இங்கே ஒளிஞ்சுக்கிடலாமுன்னி. ஆனா எங்க அதிர்ச்டம் அம்புட்டு கூட்டத்தைக் காணலை. மளை வேற கொட்டீட்டுக் கிடக்கு.
எப்படிநாச்சியும் யார் கண்ணுலேயும் அம்புட்டுக்கிடாம சென்னைக்குப் போயிடணும். எங்களுக்கு வந்திட்ட நிலமைப்போல யாருக்கும் வரக்கூடாதின்னு அந்த லச்சிமிநரசிம்மப் பெருமாளத்தான் வேண்டிக்கிட்டம். எங்களைத்தான் கை விட்டுட்டாரே! அப்படி இன்னும் யாரையும் செய்துடாதேன்னு, எங்களோட மட்டும் நிறுத்திக்கிடுன்னு.
எங்கூர் சோமசமுத்திரம், ஷோலிங்கருக்கு வடக்கே 2 கிலோமீட்டர். கிராமந்தேன். குடிசைல சின்னதா பேங்குல லோன் வாங்கி அதுல வாங்கிப்போட்ட மெசீன் வச்சிட்டு பிளாஸ்டிக் பைங்க செஞ்சு வித்திட்டு. அரக்கோணம், வேலூர் பக்கமாப் போனா ப்ளாஸ்டிக் குமிளுங்க மொத்தமா வாங்கிட்டு வந்து என்ன கலர் வேணுமோ அத்தையு கலந்து மெஷீனுக்குள்ள – மாவுமில் கணக்காட்டியும் மேலே ஃபன்னல் வச்சிருக்கும் அத்துல - கொட்டீனா இந்தப் பக்கம் நீளமா குழாய் கணக்கா வந்துடிம். அத்தை எம்புட்டு சைஜுக்கு வேணுமாலும் டைய மாத்திபோட்டு செஞ்சுகிடலாம். 100 பைங்க சைஸுக்கு தகுந்தாப்போல 10ரூ, 20ரூன்னு வித்திடலாம். மூலப்பொருள் கரென்ட் சிலவு, வண்டிச்சத்தம் போக கையில தினம் 200ரூ தங்கும். நானும் சுந்தரியும்தானே, சமாளிச்சுக்கிடுவம்.
அதுபாவம் பிள்ள அக்கம்பக்கத்தில் பத்துப் பாத்திரம் தேய்ச்சு கூலிவேலைங்க கிடெச்சா அத்தையும் பாத்திட்டு மாசம் பொறந்தா 5000 கொண்டுவரிம். நான் ஒரு 8000. ஆனா இந்த கிராமத்துல எம்புட்டு வீட்டுல வேலைக்கு ஆள் வச்சுக்கிடுவாக? இல்லை கூலி வேலைத்தான் சுளுவா கிடெச்சிடுதா? போன வருசம் பிளாச்டிக் பயன்பாட்டை மொத்தமா ஒளிச்சுக் கட்டிப்பிடணிம்னி எங்களை மாதிரி சிறுதொளில் செய்யரவங்க வவுத்துல சமமட்டியால ஒரு அடி போட்டிட்டாய்ங்க. பெரீய ஊருல யாரி எங்க என்னத்தை செஞ்சு விக்கராய்ங்கன்னு கண்டுபிடிக்க முடியலை எங்கூர்ல நாமட்டுந்தானே சுளுவா நோட்டீஸ் அனுப்பிட்டாக. அந்த பேங்கு மேனேஜர், லோன் கொடுத்த பெரியவரு போட்டுக் கொடுத்திருப்பாரின்னு பட்டிச்சு.
கையில் செஞ்சு வச்சத விக்க முடியாம யாரும் வாங்கிக்கிட மாட்டேன்ட்டாக – 1 மூட்டை உள்ளே 3000 கட்டு, 800ரூபாய்க்கு விக்கிம் அப்படியே கிடக்குது. குமிழிங்க ஒரு மூட்டை. வாங்கின இடத்துல திருப்பிக் கொடுத்தா பாதி விலையாவது கிடைக்கும். மூணுமாசமா சோத்துக்கே கடன் வாங்கித்தே வண்டி ஓட்டிட்டி. மின்னமே சுந்தரிக்கு உடம்புக்கு முடியாமப் போனப்ப வாங்கின கடன் திருப்பித் தர முடியல. 3 வட்டிக்கு சோளிங்கரில் ஒரு அடகுக் கடைக்காரவுக கொடுத்தாக. வட்டி போய்ச் சேரலைன்னா வூட்டுக்கு ஆள அனுப்பிச்சுடிவான். ரெண்டுவாடியா வந்தப்ப மிரட்டீட்டுப் போரப்ப சுந்தரியவே ஒரு தினுசாத்தான் நோட்டம் விட்டிட்டுப் போயிருக்கான். அப்ப நா வீட்டுல இல்ல. இவ சொல்லுதா. அடகு வைக்கன்னு ஒண்ணுமேயில்ல. என்ன செய்ய? ஏளையாப் பொறந்து ஏளையாத்தே சாவணம்னு எள்தியிருக்கு. நடூல எம்புட்டு கஸ்டங்க அனுபவிக்கணமோ அனுபவிச்சுட்டித்தே.
இனிம ஓட்டவே முடியாத மெசீனை பேங்குக்காரவுகளே வச்சுக்கிடட்டும், வாங்கின கடனுக்கு பதிலான்னா “இந்த மெஷீனால இனிமே பிரயோசனமேயில்லை கந்தசாமி, பழைய இரும்பு விலைக்குத்தே போகும். யாராவது எங்ஜினீயருங்க இத்தை வச்சு வேர எதுநாச்சியும் பொருள் உற்பத்தி செய்யராப்புல செய்ய முடிஞ்சிச்சின்னா கேட்டுப் பாத்துக்க, எனக்குத் தெரிஞ்சங்க இருக்காக அனுப்பி வைக்கரேன்”. அப்படிச் சொன்ன மானேஜரு அதுக்குப் பதிலா அரசாங்கத்து ஆளுங்க கிட்ட நான் ப்ளாஸ்டிக் பை உற்பத்தி செய்யுதேன்னு போட்டுக் கொடுத்திட்டாரு. என்னல்லாம் மனுஷங்க இந்த பூமில!
சுத்தரிக்கும் எனக்கும் அந்த நரச்சிம்மப் பெருமாள விட்டா கதியில்லை. ஊருக்குள்ள லச்சமிநரசிம்மர் மலைமேலேவும். அவரண்ட முறையிட்டுப் பாப்பம்னிதான் இப்படி ஒரு இக்கட்டு வந்ததும் சுந்தரியும் நானிம் படிபூச செஞ்சிட்டே 1300 படீங்களையும் ஏறிப்போய் கும்டீட்டு வந்தம். மனசிக்கு நிம்மதியா இருந்திச்சுன்னுதே சொல்லோணம். ஆனா ஒண்ணும் விடிவுகாலமே போறக்கல. அப்பத்தான் தோணிச்சு ஊரவிட்டே ஓடிட்டா என்னன்னி. கண்காணாத இடத்துக்குப் போயிடலாம், புதுசா வாள்கை எதுநாச்சியும் துவங்கிக்கிடலாமின்னு. கடன் கொடுத்தவக தேடிட்டு வர முடியாத இடமா யோசிச்சு ராவொட ராவா இங்கிட்டேந்து கிளம்பிட்டா போகப் போக எதுநாச்சியிம் உபாயம் வரும் அதுபடி செஞ்சுகிடலாமின்னு.
“சரி சாமானெல்லாம் கட்டி வை நாபோய் பஸ் ஸ்டாண்டுல எந்த பஸ் எங்கிட்டுப் போராப்புல இருக்கின்னு விசாரிச்சிட்டு வருதேன்”. சுந்தரி கேக்குது “என்ன சாமாஞ்சசட்டு இருக்கி நாம அள்ளிட்டு போக? எல்லாத்தையிம் காலிசெஞ்சிட்டா பாக்கரவங்க நாம ஓடிட்டம்னி நினக்க மாட்டாவகளா. கிடக்கட்டிம் நாம கிளம்பிடுவம்.” அதுவிம் சரித்தான். மண்ணன்ணை அடிபம்ப் அடுப்பு, ஒரு இலுப்பசட்டி, அலும்னிய பாத்திரங்க, அவளுக்கு 2 புடவை என்னுது ஒரு ஹாஃப் டிராயரும் 2 லுங்கியும் ஒரு பேன்ட் சட்டையும். சுவத்துல நரச்சிம்மப் பெருமாள் படம். அது மட்டும் பெரீசா. கடன்வாங்கி ஓட்டீட்டிருந்த மெசீனு அப்படியே கிடக்கட்டிம், அத்த தூக்க முடியாது, ஓரமா வெள்ள சாக்குப் பையுல பிளாஸ்டிக் பைங்க விக்காம. சுந்தரி என்னத்த எடுத்து வச்சுக்கிடுதோ அது போதும். கைச்சிலவுக்குன்னி 780ரூவா இருக்கி. பஸ் சத்தம் போவ 2நா சாப்டுக்கிடலாம் அதுக்குள்ள எதுநாச்சியும் வளி பிறகாமலான்னி பட்டிச்சி
பஸ் ஸ்டாண்டுக்கு வந்தப்ப சாயங்காலம் மணி 5. தெரிஞ்சவன் ஒருத்தன் அரக்கோணம் போக டெம்போவுல லோடு ஏத்திட்டு நிக்கான். பாக்குதேன். சுமதி தியேட்டர் வாசல்ல ஒரு டீக்கடைல. “என்ன கந்தசாமி? சினிமா பாக்கலாமின்னு வந்தீயா?” மாநாடுன்னி சிம்பு படம் போட்டிருக்காக. சினிமாக்கெல்லாம் காசி சிலவளிக்க ஏது சக்தீ? “என்னையிம் எம்பொஞ்சாதியையும் அரக்கோணத்துல விட்ரியா?” இவங்கூட போய்ட்டா காசு தரவேணாம். “ அப்ப வா. கிளம்பிட்டே இருக்கன். டீக்குடிச்சிட்டா போயிரலாம்”. “அச்சச்சோ, நான் வீட்டுக்குப் போயி சுந்தரிய இட்டாரணமே!” “அதுக்கென்ன வா நம்ப வண்டீலவே போலாம்”. நல்லவன். வீட்டுக்குப் போனதும் சுந்தரி ஒரு வெள்ளத் தூக்குப்பையில துணிங்கள வச்சிட்டு என்ன நினைச்சிச்சோ அந்த பிளாஸ்டிக் பைங்க வச்சிருந்த வெள்ளச்சாக்கையிம் ஏத்தீகிட்டா. “இத்தை யாரிநாச்சியும் வாங்கிக்கிட்டா கையுல காசு கிடைக்கும். சிலவுக்காகும்க”.
அரக்கோணம் 30கிமீதூரம், இவன் பாட்டுப் பாடிட்டே 1 மணில கொண்டாந்து விட்டிட்டான். “எங்க இறக்கி விடோணிம்? சொல்லு”. “ரயிலடி”. செஞ்சிட்டு சீக்கிரம் ஊர் திரும்பி வந்திடுங்கன்னிட்டுப் போரான். அவன் மனசுக்குள்ள என்ன ஓடுச்சோ!
நிறைய ரயிலுங்க வந்திட்டும் போயிட்டும். என்ன செய்யன்னி தெரியாம 3வது ப்ளாட்பாரத்துல உக்காந்துகிட்டம். மளை ஆரம்பிச்சிச்சு. எளுந்து மொத பிளாட்பாரதுக்கு ஏன்னா அங்கேதான் கூரை இருக்கி. அப்பிரவி ரெண்டு சாதாரண டிக்கெட் ஆவடிக்கு எடுத்து வச்சுக்கிட்டன். 15ரூபாய். காலேல லோக்கல் போவுதாம். அதுதான் சீப்பாப் பட்டிச்சு. ஓரமா படுத்துகிட்டு தூங்கியாச்சி. சுந்தரியும் பசிக்கிதுன்னு சொல்லல, நானும் எதுநாச்சியும் சாப்பிடிதியான்னி கேக்கவுமில்ல. நாளைக்கு ஊர்போய் சேர்ந்தி பாத்துக்கிடலாம்.
காலேல லோக்கல் வண்டி. வியாபாரிங்க ஏறிக்கிட வேனுக்கு கிட்டக்கப் போனா ப்ளாட்ஃபாரதுல 2 போலீஸ்காரவுக. நாங்க ஏறிக்கிட்டதும் கூடவே ஏறிட்ட ரெண்டு ஆளுங்களையும் அவுங்க கொண்டு வந்த 4 வெள்ளச்சாக்குப் பைங்கள ஏத்திகிட உதவி செய்யுதாக. போலீஸ்காரவுக உதவும்படி அந்தாளுங்க பெரீய ஆளுங்கலான்னா இல்ல. ரெண்டுபெரும் பாத்தா காலிப்பசங்க கணக்கா. அரசியல்வாதீங்களுக்கு அடியாள். சாமான ஏத்திட்டு போலீஸ் இறங்கிப்போக அப்பத்தான் கவனிக்குதே அவுங்க வச்சிருந்த 4 சாக்கு பைங்களும் நாங்க வச்சிருந்தது போலவே. சுந்தரி சும்மா இல்லாம “என்ன அண்ணே நீங்களூம் எங்களைப் போலவே பிளாஸ்டிக் பைங்க செஞ்சு வியாபாரம் செய்யுதீங்களா?”
அவ கேட்டதை எதிர்பாக்காம முறைச்சிட்டே “உனக்கென்ன போச்சு. உன் வேலையப் பாத்திட்டு கிட!”. கூட இருந்தவன் சும்மா இருடான்னு அவனை கண்ணாலவே அதட்டீட்டு “அமாம் தங்கச்சி நீயுமா? உம்பையுல பைங்கள வச்சிட்டு கிளம்பிட்ட? இப்பெல்லாம் விக்க முடியல, அரசாங்கத்துல கட்டுப்பாடு போட்டிருக்காய்ங்க அதே சென்னையுல போய் வித்திட்டு காசு பாக்கலாமேன்னி”. “நாங்களும் அதுக்குத்தேன் போய்டிருக்கம்”. சொல்லீட்டு சுந்தரி திரும்பிகிட்டா. இப்பப் பாரு, வியாவாரத்துல போட்டி
ஒக்கட்டீ டொக்கட்டீன்னு ரயிலு போயிட்டிருக்கு. எப்படியோ சோலிங்கர்லிருந்து தப்பிச்சுட்டம், நாமளா திரும்பிப் போனாத்தே கடன் கொடுத்தவங்க கையுல ஆம்பிடுவம், எங்கிட்டாச்சியும் செட்டிலாகிட்டம்னா புதுவாள்கை அமைச்சுக்கிடலாமின்னு பட்டிச்சு.
மோகூரு தாண்டல அடியாட்களுக்கு போன் வருது. அங்கிட்டாப்புல என்ன பேசுதாக? தெரியல இங்கிட்டிருந்து இவுக சொல்லுதாக “எல்லாம் சரியாப் போகுதுண்ணே ஒண்ணும் பிர்ச்சனையில்ல. ஆமாம் வந்து ஏத்திக் கொடுத்திட்டு போனாங்க. இன்னும் 1அவருல சென்னை வந்துடுவம். சாமானை இறக்கிட்டு பிளாடாரத்துலவே வெயிட் செய்யுதம்”. முதலாளி விசாரிக்காகன்னு நினைச்சுகிடுதேன். மணவூரில இன்னொருக்கா போன். செஞ்சி, பனம்பாக்கத்துல ஒருக்கா. ஈகாட்டூருல ஒருக்கான்னு போன் வந்திட்டே! எடுத்தா இவன் அத்தையே சொல்லுதான். ஒருக்கா அங்கிட்டிருந்து என்ன கேட்டாகன்னு இவன் 5 மூட்டன்னுதான். இதை கேட்டிட்டிருந்த சுந்தரி 5 இல்லண்ணே 4. ஒரு மூட்டை நாங்க கொண்டாந்தது”. “ஆமாமில்ல!” இவன் போன் போட்டு 4 மூட்டைன்னு. சுந்தரி சிரிச்சிட்டா. “விட்டா நம்முதையும் சேத்து இறக்கிட்டுப் போயிடுவாக!”
வெளீய நல்ல மளை. வண்டி லேட்டா போயிட்டிருக்கு. நமெக்கென்ன அவசர ஜோலி? 15ரூபாய்க்கு ரெம்ப நேரம் ரயில் பிரயாணம் செஞ்சிட்டிருக்கலாம். இப்பத்தைக்கு யாரிம் நம்பள தொரத்திட்டு வரக்காணம். திருவள்ளூர் வந்ததும் வண்டிய 20நிமிசம் அப்படியே போட்டிட்டான். இவிங்க ரெண்டுபேரும் கீள இறங்கி என்னாச்சின்னு பாக்குதாக. எதுக்கால வந்திட்டிருந்த வண்டீங்கேல்லாம் மளைன்னால லேட்டாப் போகுதாம். பேஸின் ப்ரிட்ஜ் கிட்டக்க தண்டவாளத்துல நீர் தேங்கிக் கிடக்காம். தகவல் வருது. வண்டி கிளம்பியதும் பாக்குதம் சாப்பாட்டுக் கைப்பக்கம் புட்லூர் ஏரி ரெம்பி வளிஞ்சிட்டு.
அப்பிரவு செவ்வாய்ப்பேட்டை வேப்பம்பேட்டு திருநின்றவூர்னு டேசனுங்க ஒவ்வொண்ணா நத்தை கணக்கா வந்திட்டும் போய்டும். பட்டாபிராம் வந்ததிம் இன்னொருக்கா போன் அடிக்கி. யார் போன்? என்னண்டையொ சுந்தரியாண்டையோ போனா இருக்கி? ஒருக்கா இவ வேலைபாக்குத வீட்டுல பாத்திட்டு கையுல ஆசையா பிடிச்சுப் பாத்ததோட சரி. “நாமும் ஒண்ணூ வாங்கி வச்சுக்கிடணும்.” ஒருக்கா நாங்க உல்லாசமா இருந்தப்ப பேசிக்கிட்டமே தவிர அதுக்கெல்லாம் கொடுப்பினை கிடையாது. அடிச்சது அடியாளுங்க ஒருத்தனோட போன். “என்னடா இன்னும் எம்புட்டு நேரமா காத்திட்டிருக்க?” சத்தமா ஒரு குரல் காதில் விள அவன் ஸ்பீக்கர்ல போட்டிட்டான்னு இன்னொருத்தன் அத்தை பிடிங்கி அமுக்க சத்தம் அடங்கிச்சி. “வந்திட்டிருக்கம் பட்டாபிராம் வந்திட்டமண்ணே! என்னத்த செய்ய ட்ரெயின் லேட்டாப் போகிட்டிருக்கி. பெரியண்னன் MLA கிட்டச் சொல்லி வேகமா ஓட்டச் சொல்லூங்க”. சொல்லீட்டுச் பெரீசா சிரிக்கான் ஜோக் அடிச்சிட்டாப்புல. கூடயிருந்தவன் “ட்ரெயினெல்லாம் பெரியண்ணண் சொல் பெச்சக் கேக்காது!”
ட்ரெயின் ஹிந்து காலேஜ் வந்ததும் நிப்பாட்டிட்டான். “பக்கத்துல விளிஞ்சியம்பாக்கம் ஏரி ரெம்பி உடெச்சிட்டு ரயில் பாதைல வெள்ளக்காடா ஓடிட்டிருக்கு. கொஞ்ச புரவுதான் வண்டிய எடுப்பாக. ஆவடி போக நேரமாவும்.” பிளாட்பாரத்துல போயிட்டிருந்த யாரோ தகவல் சொல்லுதாக. அப்பத்தான் சுந்தரி சொல்லுதா “நாம சாமானை எடுத்திட்டு இங்கேயே இறங்கிடலாமா? மளை கம்மியாப் படுது.” “இங்கே இறங்கி என்னத்தை செய்ய?” ஆவடீல என்னத்தை செய்யப் போகுதீக? அதயே இங்கே செய்துகிடலாம்” கீழே நின்னிட்ருந்த அவிங்ககிட்ட “நாங்க வரங்க!”. மருவாதைக்கி சொல்லீட்டு நாங்க இறங்கிப் போவுதம். எங்கிட்டாச்சியும் மளைக்கு நின்னிட்டு என்ன செய்யலாமின்னு யோசிப்பம். சுந்தரிக்கு ஒரு டீயும் பன்னும் வாங்கித் தாரணம். ஒண்ணுமே வேணிம்னி கேக்காது. அப்பிரவு இந்த ப்ளாஸ்டிக் பையுங்களை வித்துக் காசாக்கிட்டா நல்லது. இந்த மூட்டய தூக்கிட்டு எம்புட்டுட்தே திரிய?
பிகு: சென்னை சென்ட்ரல் புறநகர் சேவை ரயில் நிலயத்துல ஒரு போலீஸ் ஜீப்போடா 4 ஆட்கள். அரக்கோணத்துல ரெண்டு ஆட்கள் காவலோட ஏத்தி விடப்பட்ட மூட்டைகளை வந்து சேர்ந்ததும் ஏத்திட்டு MLA ஹாஸ்டலுக்கு கொண்டுபோய் சேர்க்கராங்க. பெரியண்ணன் தன் ஆட்களிடம் எல்லா மூட்டையும் பிரிச்சு உள்ளே இருப்பத பத்திரப்படுத்த சொல்லுகிரார். 2000ரூ கட்டு, மூட்டைக்கு 200 வீதம் 4 மூட்டை. ஆனா பிரிச்ச ரெண்டாவது மூட்டையில் வெறும் ப்ளாஸ்டிக் பைகள். நூறுநூறா எண்ணி நூல் கயித்தால் கட்டி அளகா அடுக்கி.
No comments:
Post a Comment