Sunday, December 19, 2021

கனியுமோகாதல்_75

கனியுமோகாதல்_75

அன்று இரவு ஏழரை இருக்கும்.  பக்கத்தில் இருக்கும் மாதவ பெருமாள் கோவிலுக்கு சென்ற மைதிலி இன்னும் வரவில்லை.

'என்னா, மைதிலி கிட்ட மெல்ல பேச்ச ஆரம்பிங்கோ.  அந்த ப்ரஹஸ்பதிதான் இல்லைனு ஆயிடுத்து.  இது தான் சான்ஸு.  நான் சொல்றது புரியரதா?  நீங்க உண்டு கலக்டர் ஆஃபீஸ் உண்டுன்னு கிடக்காம மைதிலி கிட்ட பேசுங்கோ.  அந்த வரனோ ரெடியா இருக்கு.  என்ன?'

'ஒத்துப்பாளா டீ?'

'எல்லாத்தையும் என்னையே கேளுங்கோ.  செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து தான் இப்படி நிக்கறோம்.  நானே அவ கிட்ட என்னடி ஏதுன்னு கேட்கலாம்னா உங்களுக்கு முணுக்குனு கோபம் வந்துடறது.  உங்களையோ தார் குச்சி போட்டுண்டே இருக்க வேண்டியிருக்கு.'

'என்னையும் அவளையும் ஏதாவது சொல்லிண்டே இருக்கணும் இவளுக்கு.  மயில் குட்டி கஷ்டத்தையும் பார்க்கணுமோன்னோ?'

முணு முணுத்துக்கொண்டே சுந்தரம் நகரும்போது மைதிலி உள்ளே நுழைகிறாள்.

'செல்லம்.  வா.  பெருமாள் தரிஸனம் நன்னா ஆச்சா?'

'ஆச்சுப்பா.  போர் அடிச்சுது.  அதான் காலாட போயிட்டு வந்தேன்.  இந்தாங்கோ துளசி.'

'சரிம்மா.  சாப்பிட தட்டெல்லாம் எடுத்து வை.  சேர்ந்து சாப்பிடலாம்.'

சாப்பிட்டு முடித்தவுடன் பெற்றோர்களின் பேச்சு துவங்குகிறது.

'புது ஆஃபீஸுக்கு ஏதாவது எடம் கெடச்சுதா?  நானும் எங்க ஆஃபீஸ் மனுஷா ரெண்டு மூணு பேர்கிட்ட சொல்லியிருக்கேன். பாரிஸ் கார்னர் கிட்ட பார்க்க சொல்லியிருக்கேன்.'

'சரிப்பா.'

'ஆச்சு குட்டிக்கு ஆஃபீஸ் கெடச்சோண்ண கல்யாணத்துல இறங்கிடலாமோன்னோ?'

'அப்பா, எனக்கு மனசே சரியில்லப்பா.  எங்க ஸீனியர் கேஸ்கள எடுத்து ஹாண்டில் பண்றது அவ்வளவு லேசு இல்ல.  நிறைய படிக்கணும்.  ப்ரிபேர் பண்ணனும்.  இவ்வளவு கஷ்டங்கள்லாம் இருக்கறச்சே எப்படிப்பா?  கொஞ்சம் தள்ளிப் போடலாம்ப்பா.  இப்ப மனசு ரொம்ப வேவரிங்கா இருக்கு.'

மைதிலி இப்படி சொல்வதை கேட்டுக் கொண்டே அங்கு கௌரி வருகிறாள்.

'மைதிலி... இப்படி எதையாவது சாக்கு போக்கு சொல்லிண்டு நீ காலம் கடத்தறது நன்னாவே இல்ல.  மனுஷா எல்லாரும் கல்யாணத்த பண்ணிண்டு தொழிலையும் பார்க்கறது இல்லையா?  ஏதாவது பைத்தியக்காரத் தனமா பண்ணிண்டு தலையில நீயே மண்ண வாரி போட்டுக்காத.  எனக்கு கெட்ட கோபம் வரும் பார்த்துக்கோ.'

'கௌரீஈஈஈஈஈ...'. சுந்தரத்தின் அதட்டல்.

'இப்படி அதட்டியே என் வாய அடையுங்கோ.  வயசு ஏறிண்டே போறது.  மைதிலி, இப்பத்தான் அவன் இல்லைனு ஆயிடுத்தோனோ உனக்கு.  பேசாம நம்மாத்துல வந்து பேசின வரனப் பத்தி சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வா.  ஏதோ பெத்தவாளால கொஞ்ச நாள்தான் பொறுத்துக்க முடியும்.  நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் எங்களால வர முடியாது.  ஏற்கனவே அவா கிட்ட பத்து நாள் நீயேதான் டைம் கேட்ட.  பையன பெத்தவா அதுக்கும் சரின்னு தலையாட்டிண்டு போயிருக்கான்னா நல்ல மனுஷாளா தெரியரா.  அந்த பையனுக்கு என்ன கொறச்சல்?  நன்னா படிச்சிருக்கான், நன்னா சம்பாதிக்கிறான், உன்ன நன்னா வெச்சுப்பேன்னு சத்தியம் பண்றான்.  கண்ணுக்கும் லக்ஷணமா இருக்கான்.  நாங்க வேணா நீ சொல்றத கேட்டுண்டு குட்டிச்சுவரா போகலாம்.  அவாளுக்கு என்ன தலையெழுத்து சொல்லு.  அவாளோட நிலைமைக்கு ஆயிரம் பொண்ணு க்யூல நிப்பா அந்த பையன பண்ணிக்க.  ஏதோ அவாளுக்கு உன்ன பிடிச்சிருக்குங்கறதால நீ அவாள இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க முடியாது....'

பொரிந்து தள்ளிக்கொண்டே போனாள் கௌரி.

'கௌரி, சித்த உன்னோட கோபத்த அடக்கிக்கறையா?  மயில் குட்டி, அம்மா கோபத்துலேயும் ஞாயம் இருக்கோண்ணோ?  வர ஞாயித்துக் கிழமை நீயே என்னோட அவாத்துக்கு வா.  உனக்கு டைம் வேணும்னு தோணித்துன்னா சம்மதத்த சொல்லிட்டு அவா கிட்ட உன்னோட ஆஃபீஸ் பிரச்சனைகள சொல்லி டைம் கேளு.  அவாளும் புரிஞ்சிப்பா.  பையன் தங்கமானவனா தெரியராண்டி.  மனசுக்கு பிடிச்சிருக்கோன்னோ அவன?  சட்டுனு சரி சொல்லிட்டு பகவான் மேல பாரத்த போடு.  பழசெல்லாம் மறந்துடு.  புது வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடு.'

மைதிலியால் பேச முடியவில்லை.  பெற்றோர்களின் இருமுனைத் தாக்குதலுக்கு பதில் வார்த்தைகளை உதிர்க்காமல் அவ்வப்போது அப்பாவை பார்ப்பதும் கை வளையல்களை ஒன்றோடு ஒன்று சேர்ப்பதும் பிறகு பிரிப்பதுமாக மனதில் ஒரு மௌன போராட்டம்.  கண்களின் ஓரங்களில் கண்ணீர் திவலைகள் வந்து வந்து அதன் சோகத்தை பார்த்துக் கொண்டது.

'அழாத செல்லம்.  அப்பா அம்மா உனக்கு நல்லதுதான் செய்வா.  வீணா மனச போட்டு அலட்டிக்காத.  நீ எங்களுக்கு ஒரே பொண்ணு.  எங்களோட உசுரே நீதான்.   பழச கிளறரேன்னு நெனைக்காத.  நீ விருப்ப பட்டவன கல்யாணம் பண்ணிக்கோன்னு தான கடைசியா சொன்னோம்.  ஏதோ பகவான் உனக்கு சோதனைய கொடுத்துட்டார்.  ஏதா உனக்கு நல்லது செய்யத்தான் பகவான் இப்படியெல்லாம் பண்ணியிருக்கார்னு நெனச்சுக்கோ.  நீ நல்ல குழந்தை.  உன்ன பகவான் கைவிட்டுட மாட்டார்.'

'மைதிலி, அப்பா இவ்வளவு எடுத்து சொல்றாரோன்னோ?  நாளைக்கேவா கல்யாணம் நடக்கப் போறது?  நிச்சயம் பண்ணனும், நாள் குறிக்கணும், சத்திரம் பார்க்கணும் ...  எப்படியும் நாலு மாசமாவது ஆகும் இல்லையா?  இந்த நாலு மாசத்துல நீ உன்னோட வக்கீல் தொழிலப் பாரு.  கல்யாண கவலையெல்லாம் நாங்க பட்டுக்கறோம்.  சமத்தோணோ, புரிஞ்சுக்கோடி.'

'கௌரி, அவ புரிஞ்சுப்பா.  நீ மேற்கொண்டு எதுவும் பேசாத.  நாம சொன்னதெல்லாத்தையும் யோசிக்க கொஞ்சம் டைம் எடுத்துக்கட்டும்.'

என்ன பேசுவது?  எப்படி பதில் கொடுப்பது?  ஒன்றும் புரியாத நிலையில் மைதிலி.  புரிந்து கொள்கிறார் அவளது நிலைமையை.

பேச்சை வேண்டுமென்றே திசை திருப்புகிறார்.

'குட்டி, நீ இன்னிக்கு தி.நகர் போனியாமே?  ட்ரெஸ்ஸெல்லாம் வாங்கினியாமே?  எங்க, காமி?'

'அப்பா, சாரியெல்லாம் இல்லப்பா.  உள் பாவடை, சாரி ஃபால்ஸ்..  பொம்மனாட்டி ஐடம் தாம்ப்பா.'

'ஏதோ அம்மா சொன்னாளே, தி.நகர்லேந்து நீ வரதுக்கு ரொம்ப நாழியாச்சுண்ணு.  இந்த பர்ச்சேஸுக்கா இவ்வளவு நேரமாச்சு?'

முரளியைப் பார்த்ததை சொல்லலாமா வேண்டாமான்னு ஒரு தயக்கம்.  பிறகு சுதாரிப்பு.

'பெத்தவா கிட்ட ஏன் சொல்லக் கூடாது?  யதேச்சையா நடந்தது அந்த சந்திப்பு.  நாம ஒரு தப்பும் பண்ணலையே இதுல.  சொல்றதுல என்ன இருக்கு?'

நடந்த்தை சொல்கிறாள் இருவரிடமும்.

'ஏண்டி, மத்யானம் முழுக்க நான் இங்க தான இருந்தேன்.  ஒரு வார்த்தை என் கிட்ட இதெல்லாம் சொல்லணும்னு தோணலையா?  அப்பான்னா உனக்கு ஒசத்தி.  நல்லத சொல்றேனேன்னோ, நான் மட்டம் தான.'

சின்ன கோபம் கௌரிக்கு.  சமையல் கட்டு பக்கம் செல்கிறாள்.

அவளை துரத்திக் கொண்டே மைதிலி அவள் தோள்களில் தன் இரு கைகளையும் போட்டு கைகளாலும் இரண்டு கன்னஙகளையும் அழுத்தி கிள்ளுகிறாள்.

'சாரி டி கௌரி.  உன் கிட்ட சொல்ல பயமா இருந்துது.  அதான்.  வேற ஒண்ணுமில்ல.'

'வலிக்கறது.  கைய எடு முதல்ல.  பரவாயில்ல.  ஏதோ நல்லது நடந்தா சரி.'

நித்திய வேலைகள் முடிந்து நித்திரைக்கு தயாரானது சுந்தரத்தின் செல்லங்கள்.

ஏதோ இனம் புரியாத குழப்பம் மைதிலிக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது இன்னமும்.  பெண்கள் மனது விரும்பியவனை விலக்குவது அவ்வளவு சுலபம் இல்லையே.

விருப்பம் ஒருவனிடம்.  மணம் மற்றொருவனோடு.  நடக்கிறதே.  நடக்கலாமே நம்மாத்துலேயும்?பரிமாற்றம் இல்லாத காதல் என்று ஜெயித்திருக்கிறது?  மனம் இரும்பாக வேண்டும்.  சொல்லத் தெரியாத ரணங்களை சில நாட்கள் கண்ணீர் மருந்திடும்.  வடுக்கள் மறைய சில மாதங்கள், வருடங்கள் ஆகலாம்.   அது புது உறவு காட்டும் அன்பிடம் மட்டுமே இருக்கிறது.

சமையல் அறையில் பாத்திரங்களை தேய்த்து அலம்பி விட்டு, அப்பாடா என்று கௌரி கால்களை நீட்டி உட்காருகிறாள்.  என்ன தோன்றியதோ என்னவோ, மைதிலி அம்மாவின் துடையில் தன் தலையை சாய்க்கிறாள்.  அம்மாவின் ஈர மடி வழிந்தோடும் மைதிலியின் கண்ணீரை பாசத்தோடு ஏற்றுக் கொள்கிறது.  அருமையான ஹேர் மஸாஜ் ஆரம்பமாகிறது.

தாயின் மடி கொடுத்த சுகம் மனதில் தெம்பையும் கொடுத்தது மைதிலிக்கு.

'ஞாயித்துக் கிழமை...? போய் பேசித்தான் பார்ப்போமே!!'

தொடரும்....

No comments:

Post a Comment