Sunday, December 5, 2021

உறவுபோட்டமுடிச்சு_55

உறவுபோட்டமுடிச்சு_55

சாப்பாட்டு கடை முடிந்து சந்தானம் சென்றவுடன் வாசல் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வருகிறாள்.

சபேஸய்யர் படுத்தவுடன் தூங்கியாச்சு.  சீதாவும் ஞானமும் பேசிக்கொண்டே கண் அசந்தாச்சு.  பாலாஜி ஏதோ யோசிப்பதும் பிறகு பேப்பரில் எழுதுவதுமாக இருந்தான்.

படுக்கலாம் என்று நினைத்தவளுக்கு கருப்பனின் மணியோசை.

'உன் மேல பாசத்த வெச்சது தப்பா போச்சே.  கிட்டத்தட்ட என்ன கைக் கொழந்த காரியாட்டமே ஆக்கிட்டயே.  ஒரு நிமிஷம் என்ன தூங்க விடறியா?'

மனதில் முணு முணுத்துக் கொண்டே கருப்பனிடம்  போகிறாள்.  

'என்னடா இப்படி உடம்ப பண்ணிண்டு இருக்கியே?  கார்த்தால தான உடம்பெல்லாம் தொடச்சு விட்டேன்.  போடா.  முதல்ல உனக்கு கல்யாணம் பண்ணி உனக்கு பக்கத்திலேயே அவளையும் கட்டிப் போடணும்.  அவளுக்காகவாவது நீ உன்ன நீட்டா வெச்சிப்ப.'

சாணியைப் போட்டு அதை உடம்பு முமுவதும் அப்பிண்டு வாலெல்லாம் வரக்கு வரக்குன்னு போய் கீதாவைப் பார்த்து ஈஈஈ ன்னா அவளுக்கு கோபம் வருமா வராதா?

சிமெண்ட் தொட்டிலேந்து அலுமினிய அண்டாவில் தண்ணீர் எடுத்தது வருகிறாள்.  வசதிக்காக தன் புடவையை சற்று தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு கருப்பனை சுத்தம் செய்கிறாள்.

அப்போது கீதாவைத் தேடிக் கொண்டு பாலாஜி அவளைப் பார்க்க வருகிறான்.

'என்ன பண்ணிண்டிருக்க?'

'ம்ம்ம்.. பார்த்தா தெரியல?  கருப்பன் உடம்பெல்லாம் அசிங்கம் பண்ணிண்டிருக்கான்.  உன்ன மாதிரியே அசடு.'

'நான் எப்ப டி அசடா இருந்தேன்?'

'இந்த ஆராய்ச்சி இருக்கட்டும். அந்த பத்ம விஜயம் மாமாக்கு கடுதாசி எழுதிண்டிருந்தியா இத்தனை நாழி.'

'இல்ல கீதா.  ஆஸ்பிடல் கணக்கெல்லாம் ட்டாலி பண்ணிண்டிருந்தேன்.  அப்பா எடுத்த பணத்துக்கு கணக்கு எழுதலைனா கோச்சிப்பா, அதான் கையோட எழுத ஆரம்பிச்சேன்.'

'ட்டாலி ஆச்சா?'

'இல்ல கீதா.  முன்னூறு ஒதைக்கறது.'

'என் செலவுக்காக ஆஸ்பத்திரியில கொடுத்தியே.  மறந்து போச்சா?'

'எஸ்.  ஐ gகாட் இட்.'

'ஹலோ.  நீ ஒண்ணும் gகாட்டல.  நான் ஞாபகப் படுத்தினேனாக்கும்.  நானும் வந்து கணக்கு பார்த்து மீதிய கொடுக்கறேன்.'

'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.  மீதி உன் கிட்டேயே இருக்கட்டும்.  வட்டியும் அசலுமா எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும்.'

'ஏய்....ஆரம்பிச்சுட்டியா?'

அப்போது சட்டென்று ஞாபகம் வர, இடுப்பில் சொருகிய புடவைக் கொசுவத்தை தளர்த்தி சரியாக்கிக் கொள்கிறாள்.

'பத்ம விஜயம் மாமாக்கு லெட்டர் போடவே இல்லையா வந்ததுலேந்து?'

'நீதான் பார்க்கறையே. மெட்ராஸ்லேந்து வந்ததுலேந்து எப்படி இருந்தோம்னு '

'இன்னிக்காவது உடனே பதில் போடு.  தப்பா எடுத்துக்கப் போறார்.'

'நானே ரெண்டு நாளுல அப்பாகிட்ட சொல்லிட்டு மெட்ராஸ் போகலாம்னு இருக்கேன்.  மார்க் ஷீட் வாங்கணும்.  மேல படிக்க அப்ளை பண்ணனும்.'

'நான் கூட மன்னார்குடி போகணும்.  ஸ்கூல் வேற பத்து நாளுல தொறந்துடுவா.  அடுத்த வருஷ படிப்புக்கு வேற ஏற்பாடு பண்ணனும்.  அப்பாவ இப்படியே விட்டுட்டு போகவும் முடியாது.  வயல் வேலை இருக்கு.  மாமி வேற தனியா கஷ்டப்படுவா.  என்ன பண்றதுன்னே கொழப்பமா இருக்கு பாலாஜி.  மாமா கவல சித்த ஓஞ்சுதேன்னு பார்த்தா இந்த கவலையெல்லாம் தலையில வந்து ஒக்காந்துக்கறது.'

'மன்னார்குடி உத்யோகத்துல உனக்கு என்ன பெரிசா கெடச்சுடப் போறது.  தேமேனு நீயும் அத்தையும் பூவனூர்லியே ஆத்த பாத்துண்டு இருந்துடுங்கோளேன்.'

'நன்னா இருக்கே பாலாஜி நீ பேசறது.  ஊர் உலகத்துக்கு யார் பதில் சொல்றது?  எங்க தன்மானம் இத ஏத்துக்காது.  ஏற்கனவே பூவனூர்ல அரசல் புரசலா பேச ஆரம்பிச்சுட்டா.  கல்யாணத்துக்கு முன்னாடியே வந்து நான் இங்க வந்த ஒக்காந்துட்டேனாம்.'

'யார் என்ன பேசினா என்ன?  நம்ம ரெண்டு பேராத்துக்கும் புரிஞ்சா போறாதா?  நீ மன்னார்குடி போயிட்டா இங்க ரெண்டு பேரும் கஷ்டப் படுவாளே.  அத யோசிச்சியா.  நான் வேற மெட்ராஸ்ல இவா நெனப்பாவே இருக்கணும்.'

'இந்தாத்துலேயே இருக்கலாம்.  ஆனா எனக்கும் படிப்பு, உத்யோகம், உயர்வுன்னு இருக்கில்லையா?  சாதாரணமா வீட்டு வேலை செஞ்சிண்டு ஆத்த மட்டும் கவனிச்சிண்டு காலத்த ஓட்டற எண்ணம் எனக்கில்ல.'

'நீ இங்க எல்லா செளகர்யத்தோட தான இருக்கப் போற?  அதான் நாங்க எல்லாரும் இருக்கோமே.  விட்டுடுவோம உன்னையும் அத்தையையும்.'

'அதுக்கே இல்ல பாலாஜி.  இந்த நம்பிக்கைய பத்தியே நான் பேசல.  புரிஞ்சிக்கோ.'

'சரி.  இந்த டாபிக்க விடு.  அப்பா என்ன சொல்றார்னு பாரு.  அவர் சொன்னா நீ எஸ் சொல்லப் போற.'

'அப்பறம் நீ கொஞ்சம் தஞ்சாவூரோ கும்பகோணமோ போய் அப்பாக்கு டாய்லட் ச்சேர் உடனே வாங்கிண்டு வரணும்.  மாங்குட்ட ஸைடு அவர் போயிட்டு வரதல்லாம் இம்ப்பாஸிபிள்.  உடனே ஒரு டாய்லட் கட்டறதுக்கு ஏற்பாடும் பண்ணிடு.  எனக்கே இதுக்காக அங்கேயும் இங்கேயும் போறதெல்லாம் கஷ்டமா இருக்கு.'

'நானே யோசிச்சிண்டிருக்கேன் இதப் பத்தி.'

'அப்புறம் அப்பா ஆத்துக்குள்ள நடக்க ஸ்லிப்பர் ஸெட்ஸ்.'

'அதுக்கென்ன, வாங்கிடலாம்.'

'டாக்டர் என்ன சொன்னார் டிஸ்சார்ஜ் ஆகும்போது ?'

'அப்பா டெய்லி முட்டை சாப்படணுமாம்.' 

'அட ராமா.  அப்பா ஒத்துப்பாரா?'

'நீதான் சம்மதிக்க வைக்கணும்.'

'சொல்றேன்.'

'அப்பறம் பசும்பால் சாப்ட சொல்றார்.  அதுவும் ஒரு மாட்டுப் பாலா இருந்தா பெட்டர்னு சொல்றார்.'

'நானே இப்பத்தான் யோசிச்சிண்டு இருந்தேன். இந்த கருப்பனுக்கு ஒரு gகேர்ல் ஃப்ரெண்ட் வாங்கினா தேவலைனு.  பேசாம ஒரு கறவ பசுவ வாங்கிடலாமா?"

'இருக்கற வேலை போறாதுன்னா?'

'சமாளிச்சுக்கலாம்.  அப்பாகிட்ட சொல்லிட்டு வாங்கிடு.'

'பசுவ வாங்கி கொடுத்தா நீதான் இங்க இருந்துண்டு கவனிச்சுக்கணும்.'

'இது ஒண்ணு இருக்கோ?'

'சாயந்திரம் ஒண்ணா பெரிய கோவிலுக்கு போகலாம்னு சொன்னியே?'

'ஆத்துல பெரிய கோயில்னு சொல்ல வேண்டாம்.  எதுக்கு நீயும்னு மாமி கேட்டுட்டா?  நான் உன்ன அழச்சிண்டு முதலியாராத்துக்கு போய் நெல்லு விதை பத்தி பேசிட்டு வரதா சொல்றேன்.  முதலியாராத்துக்கு போயிட்டு அங்கேந்து கோவிலுக்கு போகலாம்.'

'ஓ.  இப்படியெல்லாம் கூட கணக்கு பண்ணுவியா?'

'அப்படியா?  வேணாம்ப்பா.  நீ ஒண்ணும் வேண்டாம்.  நானே போயிக்கறேன்.  ஏதோ மாட்டுக் கொட்டகையா பார்த்து பேசறையேன்னு பாவப்பட்டு கோவிலுக்கு கூப்ட்டா... ரொம்பத்தான்.'

'கோச்சிக்காத கீதா.  இவ்வளவு அறிவு பூர்வமா யோசிக்கறையேன்னு சும்மா கிண்டல் பண்ணினேன்.  எத்தன மணிக்கு நான் ரெடியாகணும்.'

'ஒண்ணும் ரெடியாக வேண்டாம்.  நகரு.  நான் உள்ள போகனும்.' 

'ராதே உனக்கு கோபம் ஆகாதடி..'

அவன் பாட்டுக்கு சிரித்துக் கொண்டே கீதா முன்னால் வர சோக முகத்துடன் பாலாஜி பின்னால் தொடர்கிறான்.

மாமா மாமியிடம் சொல்லிவிட்டு பாலாஜியோடு மாலை ஐந்து மணிக்கு முதலியார் வீட்டுக்கு வருகிறாள் கீதா.

'வா வா வா ..... கீதாப் பொண்ணு' என்று வாயார சொல்லிக் கொண்டே பிரம்மாண்டமான வாசல் கதவுக்கே வருகிறார் சடகோப முதலியார்.

'வா தம்பி.. அப்பா நல்லா இருக்காரா?  இன்னிக்கு தான வந்திருக்கார்.  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டும்.  நாளைக்கு வந்து பார்க்கிறேன்.'

'மாமா, நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி.'

'அத விடும்மா.  என்ன பெரிசா செஞ்சுட்டேன்.'

'அப்பறம் நம்ம நிலத்த நல்லா உழுதாச்சு.  இந்த வாரத்திலேயே நெல்லு மணி தெளிச்சுடலாமா?'

'கீதா, மத்யானம் நம்ம நிலத்துப் பக்கம் போயிருந்தேன்.  பிரமாதமா இருந்தது.  நல்லா வேலை வாங்கியிருக்க.  இவ்வளவுதாம்மா.  இப்படியே கண்ணும் கருத்துமா ஒவ்வொண்ணும் பாத்துகிட்டா எல்லாத்தையும் நல்லா கத்துக்கலாம்.   மண்ணு நல்லா பிரண்டிருக்கு.  விதை தெளிக்க சரியான நேரம் தான்.  உங்க மாமா கிட்ட கேட்டு நல்ல நாள் ரெண்டு நாள் முன்னாடி சொல்லு.  அஞ்சாறு ஆளையும் கொடு.  ரெடி பண்ணி கொடுத்துடறேன்.'

'இனிமே தான் வாங்கணுமா?'

'நல்லா கேட்ட போ.  வந்த மணிகள தண்ணில போட்டு மிதக்கற மணிகள களஞ்சு எடுத்துட்டு நல்ல மணிகள ஊற வெச்சு ரெடியாயிருக்கு.  இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.  அதுக்கு தான் ஆளுங்க வேணும்னு சொன்னேன்.'

'சரி மாமா.  சிவலிங்கத்து கிட்ட சொல்றேன்.'

'நீயும் வந்து பாரு.  எப்படி ரெடி பண்றாங்கன்னு.  ஒரு எக்டேருக்கு அறுபது கிலோ விதை.  உங்க மாமா சொல்லியிருக்காரில்ல.'

'எழுபது கிலோன்னாரே மாமா.'

'உன் கைராசிக்கு அறுபதே போதும்மா.  ரெடி பண்ணியிருக்கிற விதை மூட்டைங்க நல்ல தரத்தோட இருக்கு.  ரெம்ப பதர் கூட இல்ல.'

'மாமாவோட நிலத்துக்கு மொத்தம் எவ்வளவு கிலோ விதை வேணும்?'

'என்ன மறந்துட்டியா?  மொத்தம் பத்து வேலிதான.  உனக்கு புரியர மாதிரி அறுபது ஏக்கர்.  கணக்கு பண்ணினா உத்தேசமா இருபத்தஞ்சு எக்டேர்.  நீயே இப்படி கணக்கு பண்ணிக்கோ.'

'சரி மாமா.  இப்ப புரிஞ்சுது.  இனிமே மறக்க மாட்டேன்.'

'விதை நேர்த்தி பண்ணும்போது நீயும் பக்கத்தில இருந்து கத்துக்க.  அதுக்கு உண்டான உயிர் உரமெல்லாம் கூட ரெடியா இருக்கு.  பஞ்சகவ்யம் மாத்திரம் தான் பத்தாது போல இருக்கு.  அதையும் வாங்கி கொடுத்துடறேன்.'

'எனக்கும் விதை நேர்த்திய பார்க்க ஆசையா இருக்கு.  கண்டிப்பா வந்து பார்க்கறேன் அங்கிள்.'

'நீ கெட்டிக்கார பொண்ணு. உங்க மாமாவோட நோட்ஸ்களையும் நல்லா படிச்சிட்டு அதையும் எடுத்துட்டு வா.  சபேசன நாளைக்கு நான் வந்து பார்க்க வரும்போது மீதி பேசிக்கலாம்.'

'அப்ப நாங்க வரோம் அங்கிள்.  கோவிலுக்கு வேற போயிட்டு போகணும்.'

'எங்க வீட்டுக்கு மொதல் மொதல்ல வந்திருக்க. டீயாவது சாப்டுட்டு தான் போகணும்.'

'இன்னொரு டவுட்டு அங்கிள்.  கிச்சலி சம்பா விதைகள்தான.'

'சபேசன் வேற போடமாட்டான்.  நீ வேணா சும்மா ரெண்டு ஏக்கருக்கு ஸாம்பிளுக்காக மாப்பிள்ள சம்பா போட்டு பாக்கறையா.  விளச்சல் நல்லா தூக்கும்.  அதுவும் கைவசம் ரெடியா இருக்கு.'

'மாமாகிட்ட கேட்கறேன்.'

'என்ன பாலாஜி.  நீயும் களத்துல குதிக்கறையா?'

'யப்பா.  வேணவே வேணாம்ப்பா எனக்கு.   தலைய சுத்துது நீங்க பேசும்போதே.'

கலகலப்போடு தேநீர் பருகிவிட்டு கிளம்புகிறார்கள் அவர் வீட்டில் உள்ளவர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு.

தொடரும்..

No comments:

Post a Comment