Sunday, December 5, 2021

உறவுபோட்டமுடிச்சு_56

உறவுபோட்டமுடிச்சு_56

முதலியாரிடம் பேசிவிட்டு வெளியே வந்த கீதாவும் பாலாஜியும் நேராக சாமுண்டி தரிஸனத்திற்கு செல்கிறார்கள்.

'கேள்விப் பட்டேன் மா.  ரொம்ப சந்தோஷம்.  நான் சொன்னேனேல்யோ?  அம்பாள் மேல பாரத்த போட்டுட்டா அவ பாத்துப்பா.  ஒண்ணு கர்மாக்குண்டான நல்ல பலன கொடுப்பா.  வேற பலனா இருந்தா தாங்கற சக்திய கொடுத்துடுவா.'

'எல்லாம் அம்பாள் அனுக்ரஹமும் உங்க ஆசிர்வாதமும் தான் மாமா.  எல்லார் செளகர்யத்தையும் பாத்துண்டு ஒரு நாளைக்கு அபிஷேகம் பண்ணிடலாம் மாமா'

தரிஸனம் முடிந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வாசலுக்கு வருகிறார்கள்.

'இந்த ஊர்லதான் நான் பிறந்தேன்னு பேரு.  எனக்கு கூட இத்தன பேர இந்த சின்ன ஊர்ல தெரியாது.  அதுக்குள்ள எத்தன பேர உனக்கு தெரியறது? சர்வ சாதாரணமா ரொம்ப வருஷம் பழகுன மாதிரி எல்லார் கிட்டேயும் பேசற!  ஸிம்ப்ளி யூ ஆர் ப்யூட்டிஃபுல்.'

கொஞ்சம் இருட்டி விட்டதால் கீதாவின் கன்னத்தில் விழுந்த சிவப்பும் குழியும் பாலாஜியால் அவ்வளவாக பார்த்து ரசிக்க முடியவில்லை.

'கீதா, உன் ஃபேவரைட் சாமுண்டி கிட்ட என்ன வேண்டிண்ட?'

'நான் ஏன் உன் கிட்ட சொல்லணும்?  பிரார்த்தனைங்கறது பர்ஸனல்.  தெரிஞ்சுக்கோ.'

'ஏய் ...ஏய்... ப்ளீஸ்... ப்ளீஸ்.... சொல்லேன்.'

கொஞ்சம் பிகு.  கெஞ்சல்கள் சின்னக் கோபமாக மாறும் வரை.

'அச்சச்சோ.... இந்த பூவனூர் சின்ன ஐயாவுக்கு அடிக்கடி கோபம் வரும் போல இருக்கே.  நான்.... என்ன.... வேண்டிண்டேன்னா..'

நிறுத்துகிறாள்.  பின் நிற்கிறாள்.  அவனும் ஆசையோடு பார்க்கிறான்.

'என்னோட பாலாஜி நன்னா படிச்சு நல்ல உத்யோகம் கெடச்சு கைநிறைய சம்பளம் வாங்கிண்டு மன்னார்குடி வந்து அப்படியே என்ன தூக்கிண்டு போகணும்னு வேண்டிண்டேன்.'

'பொய் சொல்லாத.'

'அபிஷ்டு.  எதுக்கு பொய் சொல்லணும் சொல்லு.  இதத் தவிர நான் என்ன பிரார்த்தனை பண்ணியிருப்பேன்னு நெனைக்கற?'

'கண்டிப்பா பண்ணுவேன் கீதா.  கடைசியா சொன்னியே அதுக்காகவாவது.'

'அதான பார்த்தேன்.  ஐயா அந்த எடத்துக்கு வரலையேன்னு.'

இப்படி சம்பாஷணகளை நடந்துகொண்டே இருவரும் தொடர்கிறார்கள்.  

இதற்கிடையில் ஆத்துக்கு நிறைய பேர் அக்ரஹாரத்திலிருந்து வந்து போய் கொண்டிருந்தார்கள் சபேஸய்யரின் நலம் விசாரிப்பதற்காக.

உள்ளே நுழைந்தவுடன் சபேஸய்யர் பாலாஜியை கூப்பிட்டு அருகில் உட்கார சொல்கிறார்.

'சடகோபன் ஆத்துல இருந்தானா?'

'இருந்தார்ப்பா.  நெல்லு விதை சம்மந்தமா கீதா கிட்ட ஏதேதோ பேசிண்டிருந்தார்.  அப்புறம் கிளம்பிட்டோம்.  நாளைக்கு வந்து உங்கள பார்க்கறேன்னு சொன்னார்.'

'இத்தன நாழியா ஆச்சு?'

'கீதா அப்படியே சாமுண்டீஸ்வரிய பார்க்கனும்னா.'

'நல்லது.  கீதாவ ஒனக்கு பிடிச்சிருக்கா?'

'ஏம்ப்பா இப்படி கேக்கறேள்.  நம்ம எல்லாருக்குமே பிடிக்குமே அவள.'

'எங்களுக்கு பிடிக்கும்னு சொல்றதுக்கும் உனக்கு பிடிக்கறதான்னு கேட்கறதக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு?  பளிச்சினு சொல்லு.  அவள கல்யாணம் பண்ணிக்க விருப்பமா உனக்கு?'

'நிச்சயமாப்பா.  எனக்கு மனப்பூர்வமா சம்மதம் ப்பா.'

'அவளுக்கு இதுல விருப்பமான்னு கேட்டு தெரிஞ்சிண்டியா?  சங்கோஜம் இல்லாம சொல்லு.'

'கேட்டேன்.  அவளுக்கு விருப்பம்னு தான் சொன்னா.'

'சந்தோஷம்.  அத்தையோட குடும்ப சூழல்லாம் உனக்கு தெரியுமோன்னோ?  கஷ்டப்படற குடும்பம் அவாளுது.'

'தெரியும் பா.  கடைசி வரைக்கும் நன்னா சந்தோஷமா வெச்சுப்பேன் அவா ரெண்டு பேரையுமே'

'திரும்ப கேட்கறேனேன்னு நெனைக்காத.  மேற்கொண்டு என்ன பண்றதா உத்தேசம்?'

'முன்னாடியே சொன்ன மாதிரியே மெட்ராஸ் போய் படிக்கலாம்னு...'

'என்னால இன்னும் கொறஞ்சது ஆறேழு மாசத்துக்கு முந்தி அளவு வேல பாக்க முடியாதுங்கறது உனக்கு புரியும்னு நெனைக்கிறேன்.  இதப் பத்தி யோசிச்சியா?'

'அதான் கீதா இருக்காளே?  ஆஸ்பத்திரி போகறதுக்கு முன்னாடி நீங்க கேட்டதுக்கு வயலெல்லாம் தானே பார்த்துக்கறதா சொன்னாளே.'

'அவளோட அன்னிக்கு பேச்ச நான் கணக்குலேயே எடுத்துக்கல தெரியுமா.  எனக்கு நம்பிக்கை கொடுக்கறதுக்காக அவ சொன்ன வார்த்தையாதான் பார்த்தேன் அத.  அந்த பொண்ண உங்க கல்யாணத்துக்கு முன்னாடி இத பார்த்துக்கோ அத பார்த்துக்கோ எங்காத்துக்கு மாடா உழச்சு எங்கள பார்த்துக்கோன்னு சொல்றது ஞாயமா படறதா உனக்கு?  ஏற்கனவே மன்னார்குடியில வேல பார்த்துண்டிருக்கா.  அத விட்டுட்டு நம்மாத்த கவனிச்சுக்கோன்னு வற்புறுத்தறது நன்னா இருக்குமா?  அது மாத்திரம் இல்ல.  சீதா எங்க இருப்பா?   இங்கயா?  மன்னார்குடியிலியா? அவளோட உத்யோகமும் உழைப்பும் என்ன ஆகறது? அவளுக்கு ஒரே பொண்ணு இவ.  தாயையும் கொழந்தையையும் நம்ம செளகர்யத்துக்காக பிரிக்கறது பாவமா தோணலயா உனக்கு?

'அப்பா,   ஏம்ப்பா வீணா எல்லாத்தையும் நெனச்சு கவலப் படறேள்?  மன்னார்குடியில என்ன பெரிசா அவாளுக்கு கெடச்சுடப் போகறது?  இங்க வந்து நம்மாத்துல சந்தோஷமா இருக்கட்டுமோ உங்க ரெண்டு பேர் கூட.'

'அதாவது அவாள இங்கயே வரச் சொல்லி உக்காத்தி வெச்சு மூணு வேளையும் சாப்பாடு போட்டு சம்ரக்ஷணை பண்ண சொல்ற.  ஏன்னா கீதா நம்மாத்துக்கு மாட்டுப் பொண்ணா எப்பவாவது வரப் போறவ இல்லையா?  நம்ம ஸ்டேடஸ்ஸை வெச்சு அவாள பார்க்கறது மகா தப்பு.  அவா வாளுக்குன்னு தன்மானம் சுய கவுரம்னு இருக்கு பாலாஜி.  நம்மள சார்ந்து இருக்கோமேன்னு அவாளுக்கு எந்த சந்தர்பத்திலேயும் ஒரு வருத்தம் வந்துடக் கூடாது.'

'என்னப்பா நான் சாதாரணமா சொன்னா நீங்க எப்படி எப்படியோ எடுத்துக்கறேளே?'

இப்படி யெல்லாம் நீங்க பேசறது ரொம்ப கஷ்டமா இருக்கு.  நீங்க என்ன சொல்ல வரேள்.  நான் இங்கேயே இருந்துண்டு நெலத்த பார்த்துண்டு உங்களையும் கவனிச்சிண்டு இருக்கனும்னு பிரியப் படறேளா.  இப்படி உங்க மனசுல இருந்தா இப்பவே ஒப்பனாவே சொல்லுங்கோ.  அதுக்கும் தயாரா இருந்துடறேன்'

'உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வர்றது.  நீயும் கீதாவும் எப்படி ரெஸ்பான்பிளா கவனிச்சிண்டேள் நான் ஆஸ்பத்திரியில இருந்தபோது. எனக்கு உன் பொறுப்புணர்ச்சி மேல சந்தேகம்  எதுவும் இல்ல.  நான் சொல்ல வந்தது நாம செல்ஃபிஷா இருக்கோம்னு கீதா நெனச்சுடக் கூடாது.  சரி.  அது போகட்டும், கீதா மனசுல என்ன இருக்குன்னு சொன்னாளா?  இங்க இருக்கனும்னு நெனைக்கறாளா?  நன்னா உன்ன மாதிரி படிச்சு நல்ல உத்யோகமா தேடிக்கணும்னு நெனைக்கிறாளா?'

'குழம்பிண்டிருந்தா.  நான் தான் உனக்கு அப்பாதான் லாயக்கு.  அவர் உனக்கு எடுத்து சொல்வார்னு சொன்னேன்.'

'அவளோட குழப்பத்துக்கு காரணம் அவ நம்ம மேல வெச்சிருக்கற பாசம்.  இன்னொன்னு உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு இருக்கர ஆசை.  தன்னிச்சையா அவளுக்கு பிடிச்ச முடிவெடுத்தா நாம தப்பா எடுத்துண்டு ரெண்டுமே கெட்டுப் போயிடுமோங்கற பயம் கூட காரணமா இருக்கலாம்.'

'சரிப்பா, நன்னா நீங்க என்ன கொழப்பறேள்னு தெரியறது.  நீங்களே ஒரு முடிவை சொல்லுங்கோ.'

'நான் கொழப்பல பாலாஜி.  ஒரு பிரச்சனைய பத்தி யோசிக்கும் போது நாலும் யோசிக்க வேண்டாமா?  நான் உன்ன குழப்பறதா நெனச்சேன்னா நீயே நன்னா யோசி.  நாளைக்கு நாம ரெண்டு பேருமே கீதாவோட  பேசுவோம்.  நல்ல முடிவா இருந்தா ஓகே தான.'

'எந்த முடிவு எடுத்தாலும் என் படிப்புக்கு பங்கம் இல்லாம இருந்தா நன்னாயிருக்கும்?'

'உன் படிப்புல எனக்கு மட்டும் அக்கறை இல்லையா என்ன?  பார்க்கலாம்.  அம்மா கிட்ட சாப்ட வரலாமான்னு கேளு.  சாப்டுட்டு படுத்துக்கணும் போல இருக்கு.'

அப்பாவோடு பேசிய பேச்சுகள் அவன் மனதை வாட்டிக் கொண்டிருந்தன.

'இப்படி ஒரு ப்ளண்ட் லெஸன் அப்பா எனக்கு எடுப்பார்னு நான் நெனச்சு கூட பார்க்கல.  ஸம்டைம்ஸ் அவர் ஹார்ஷா இருக்கற மாதிரி தோணித்து.  மே பி , dட்யூ டு ஹெல்தாக் கூட இருக்கலாம்.'

'ஒண்ணு நன்னா புரியறது.  ஐ ஷுட் நாட் பீ ச்சைல்டிஷ் ஃப்ரம் நெள ஆன்.  நமக்கும் பொறுப்பு வரணும்.  ஒரு பிரச்சனைய தீர்க்கறதுக்கு நிறைய வழியில யோசிக்கணும் போல இருக்கு.'

சமையல் உள்ளுக்கு வருகிறான்.  அங்கே சீதா, கீதா, ஞானம் கல கல.  சிரிப்புகளும் பேச்சுகளும் அங்கு சிறகடித்துக் கொண்டிருந்தன என்பதை அவனால் உணர முடிகிறது.

அவனுடைய முகம் bபேஸ் அடித்திருந்ததை சட்டென்று கவனித்து விட்டாள் கீதா.  அவன் அருகில் வந்து 'என்ன பாலாஜி.  அப்பா ஏதாவது சொன்னாரா நாம ஒண்ணா கோவிலுக்கு போனதுக்கு?  ரொம்ப திட்டினாரா?'

'இல்ல கீதா.  நத்திங்.  எனக்குதான் உங்கள எல்லாம் விட்டுட்டு மெட்ராஸ் போகறது கஷ்டமா இருக்கு.  அத நெனச்சு தான் ....'

ஏதோ சமாளிக்கிறான் என்று புரிந்து கொள்கிறாள்.

'கீதா, அப்பாக்கு பசிக்கறதாம்.  சாப்டலாமான்னு கேட்கறார்?

'அம்மா, அப்பாக்கு கோதும உப்மா ரெடியாயிடுத்தா?'

'அஞ்சு நிமிஷத்துல சாப்டலாம்.'

'அரை டம்ளர் வேணா சுட வெச்ச மத்யான ஜவ்வரிசி பாயஸம் தரியா?  கொடுத்துட்டு வரேன்.'

'பாலாஜி.  எத நெனச்சும் கவலப் படாத.  ஐ அம் வித் யூ.'

தொடரும்....

No comments:

Post a Comment