கனியுமோகாதல்_76
ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள முரளியின் இல்லம் அன்று காலை முதலே ஆவலுடன் இருந்தது அன்றைய ஞாயிறு அன்று.
'நான், என் ஆத்துக்காரியோட மைதிலியையும் அழச்சிண்டு ராகுகாலத்துக்கு முன்னாடி உங்காத்துக்கு வரோம்.'
முதல்நாள்அன்று சுந்தரத்தின் டெலிஃபோன் செய்திக்கு 'வாங்கோ வாங்கோ.. நாங்க எல்லோரும் ஆத்துல தான் இருப்போம்' என்பதோடு சீதாராமய்யர் சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.'
'பூமா, அவாள்லாம் நம்மாத்துக்கு வராளாம் டி?'
'யாரு?'
'அதான் பூமா, அந்த மைதிலி ஆத்துலேந்து.'
'என்னிக்கு?'
'நாளைக்கு ராகுகாலத்துக்கு முன்னாடி?'
'இப்படி சொன்னா எப்படி? யார் யாரு வரா? எத்தனை மணிக்குன்னு சொன்னாளா?'
'அவா மூணு பேருமே வராளாம். மணி சொல்லல. ராகுகாலத்துக்கு முன்னாடின்னு சொன்னா.'
'நீங்க வாங்கோன்னு மாத்திரம் சொல்லிட்டு ஃபோன வெச்சிருப்பேளே? எந்த விவரத்தையும் முழுசா தெரிஞ்சுக்காம... எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தான் இருப்பேளா? அந்த பொண்ணு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாளா? எதுக்காக பின்ன வரா இங்க? சரி, இல்லைங்கறத ஃபோன்லியே சொல்லியிருக்கலாமே? உங்களுக்கு தான் சமத்து பத்தாதுன்னா அந்த பிராமணனும் உங்கள மாதிரியே இருப்பார் போல இருக்கே.'
'இப்ப வேணா ஃபோன் பண்ணி கேட்கலாமா பூமா?'
'ஒண்ணும் வேண்டாம். எங்காத்துக்கார் அசமத்துன்னு அவா கிட்ட வேற காட்டிக்கணுமா? நான் இங்க தானே இருக்கேன். என் கையில ரிஸீவர கொடுத்திருக்கலாமோன்னோ? அவாளுக்கு சாப்பாடு அரேஞ்ச் பண்றதா? டிஃபனா? வெறும் மஞ்ச குங்குமமா? இத்தன நாள் தான் வழ வழா கொழ கொழான்னு இந்த சம்பந்தம் போயிண்டிருந்ததுன்னா, இப்ப கூடவா?'
'முடிஞ்சத பண்ணேன். அவா நாம அன்னிக்கு அவாத்துக்கு ஸர்ப்ரைஸா போன மாதிரின்னு நெனச்சிக்கோயேன்.'
'நீங்க பேசாதீங்கோ. நான் ஏதோ பாத்துக்கறேன். நேத்திக்கு பட்டக்கா ஏதோ ரெண்டு பக்ஷணம் பண்ணி எடுத்துண்டு வந்தா. அத வெச்சு ஒப்பேத்த முடியறதான்னு பார்க்கறேன்.'
இவர்கள் சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டே முரளி வருகிறான்.
'நான் வேணா மைதிலி கிட்ட கேக்கட்டுமா எப்ப வரேள்னு?'
'அலையாத மைதிலி மைதிலின்னு. அன்னிக்கு அவதான் ஆஃபீஸுக்கு வந்தாளோண்ணோ. அப்பவே பளிச்சுன்னு அவ கிட்ட கேட்டிருக்கலாமோன்னோ. கொடுத்த டைம் முடியலைனு ஒரு சால்ஜாப்பு. வரட்டும் அவ. ரெண்டு மொத்து மொத்தறேன்.'
'அம்மாஆஆஆஆ. பாவம்மா அவ. இப்ப என்ன, அவ எஸ்ஸு சொன்னோன்ன கார்ல எல்லாரும் போய் ஹோட்டல்ல ஒரு ட்ரீட் கொடுப்போம்.'
'பூமா, இப்பவே பார். அவ பாவம்ங்கறான்.'
'போதுமே உங்க ரெண்டுபேர் விளையாட்டும். சுத்தமா பிடிக்கவே இல்ல.'
'கூல் மா. எல்லாம் நல்லபடியா போகும். ரிலேக்ஸ் மா. நீ ஏதாவது அவாளுக்காக பண்ணி நன்னா இல்லைன்னு அத சாக்கு வெச்சு என்னை பிடிக்கலைனு சொல்லிட்டா? இதுவும் நல்லதுக்குதான், விடு.'
'பார்க்கத்தானே போறேன். இங்க வந்தோண்ண அவளோட கரண்டி ஆஃபீஸ்ல கெட்டிக்காரத் தனத்த.'
கற்பனைகளையும் ஹாஸ்யங்களையும் சேர்த்துக் கொண்டு மைதிலி சொல்லப்போகும் ஒரு வார்த்தைக்கு முன்பு தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்கிறது சீதாராமய்யர் குடும்பம்.
லஞ்ச் முடிச்சு குட்டித் தூக்கமும் குடும்பம் போட்டு எழுந்திருக்கும் போது மணி மூணு.
'அம்மா ராகுகாலம் நாலறை ஆறு தான?'
'காலண்டர ரெண்டு மூணு தடவ பார்த்துட்டு இந்த கேள்வியா? எனக்கென்னவோ பிள்ளையாருக்கு கல்யாணம் ஆகும்போது தான் உனக்கும் நடக்கும்னு தோணறது.'
'ஏய் பூமா.. பய பயங்கர டென்ஷன்ல இருக்கான். ஒரு மேட்ரிஸைட் நடந்தாலும் நடந்துடும் ஜாக்ரதை.'
'அம்மாஆஆஆ. மைதிலி அரைவ்ட் வித் பேரண்ட்ஸ்.'
'உள்ள போடா. கொஞ்சம் நல்ல வேஷ்டிய கட்டிண்டு டீ ஷர்ட்ட போட்டுண்டு ரெடியாகு. நீ ஒண்ணும் ஓடிப் போய் ஆரத்தி எடுக்க வேண்டாம். அன்னா, நீங்க அவாள அங்கேயே இருக்க சொல்லுங்கோ. ஆரத்தி எடுத்துண்டு வரேன்.'
'சரி சரி... சீக்கிரம் வா. ரொம்ப நாழி அவாள வாசல்லயே நிக்க வைக்காத. அப்புறம் பய கோச்சிப்பான் நம்மள.'
வாசலுக்கு வருகிறார்.
'வாங்கோ, வாங்கோ... வாம்மா கொழந்த. சித்த இருங்கோ. பூமா ஆரத்தியோட இப்ப வந்துடுவா.'
பெற்றோர்கள் சற்று விலகிக் கொள்கிறார்கள். ஆரத்தி வரவேற்பு மைதிலிக்கு.
மஞ்சள் கலரில் ரெண்டு இஞ்ச் அளவில் சிவப்பு பார்டரில் மைசூர் சில்க் சாரி. சின்னதாக ஒரு எம்ப்ராயடரி ஒர்க்குடன் கூடிய மேட்சிங் ப்ளௌஸ். ஆலிலை கிருஷ்ணன் டாலரோடு பளிச்சென மின்னிய ஒரு தங்க செயின் கழுத்தில். ஒரு கையில் கோல்ட் கோட்டட் லேடிஸ் வாட்ச். இன்னொரு கையில் இரண்டு தங்க வளையல்களோடு நாலஞ்சு கண்ணாடி வளையல்கள். பாந்தமாக இரண்டு காதுகளில் தோடுகள். இரண்டு முழ மல்லிகைச் சரம் கூந்தலோடு உறவாடிக் கொண்டிருந்தது.
படிக்கோலத்தின் நடுவில் ஆரத்தி கரைசலை சாய்த்து விட்டு பூமா மைதிலியிடம் கேட்ட கேள்வி: 'அன்னிக்கு பார்த்ததுக்கும் இப்போ பார்க்கறதுக்கும் எளச்சுட்ட மாதிரி தோணறதே?'
'உங்க புள்ளையையே நெனச்சிண்டு உருகியிருப்பேனோ?' இந்த பதிலை மைதிலியிடமிருந்து எதிர்பார்த்து கேட்டாளோ ஒருவேளை பூமா? இருக்கலாமே!
புன்னகையுடன் அடியெடுத்து நுழைகிறாள் மைதிலி.
தொடரும்....
No comments:
Post a Comment