Saturday, December 4, 2021

உறவுபோட்டமுடிச்சு_54

உறவுபோட்டமுடிச்சு_54

நோய் தொற்றை குணமானாலும் உடம்பு பாதியாகித்தான் சபேஸய்யர் செங்கிப்பட்டி ஆஸ்பத்திரியிலிருந்து வரப்போகிறார் பூவனூருக்கு. 

டென்ஷனுடன் அங்கைக்கும் இங்கைக்குமாய் அலைந்து கொண்டிருந்தாள் கீதா காலை முதலே.

'மாமி, இந்த அலமாரிலதான தோச்சு உணத்தின bபெட் தலகாணி உறையெல்லாம் இருக்கு?'

மாமா படுக்கும் பெட் தலகாணி எல்லாத்துக்கும் இன்னிக்கு தீபாவளி.  அவைகள் போட்டிருந்த மழைய ட்ரெஸ்களையெல்லாம் களைந்து விட்டு புது ட்ரெஸ்கள் போட்டுக கொள்கின்றன.

bபெட்டுக்கு பக்கத்துல ஒரு ஸ்டூல வெச்சாச்சு.  'டானிக்க இந்த பக்கமும் வெந்நீர் சொம்பை இங்கேயும் வெச்சுட்டா மாமாக்கு செளகர்யமா இருக்கும்.'

'பிரம்பு நாற்காலி வேண்டாம்.  மாமாவுக்கு எப்பையாவது உட்காரணும்னு தோணித்துதுன்னா ஈலி ச்சேர் போறாது?'

'உட்காந்துக்க எழுந்துக்க சப்போர்ட்டா ஒரு கொடைக் கம்ப அவர் எடுக்கர மாதிரி தலைமாட்டு பக்கமாவே வைக்கலாம்.  ஊணிண்டு உட்கார எழுந்திருக்க செளகரியமா இருக்கும்.'

'கட்டிலையே கொஞ்சம் நகர்த்தி ஃபேனுக்கு நேர போடலாமா?  குளுருமா?  குளுர்ந்தா போத்திக்க கம்பளி இருக்கான்னு கேட்கணுமே மாமிகிட்ட? ஏற்கனவே டாக்டர் ச்செஸ்ட ப்ரொட்டக்ட் பண்ணனும்னு சொல்லியிருக்காரே!'

'மாஆஆமி.... கம்பளிப் போர்வை சட்டை இருக்கோ நம்மாத்துல?'

காற்றின் மூலமாகவே சமையல் உள்ளுக்கு அனுப்பிய கேள்வி.  பதிலும் அப்படியே அங்கிருந்து.

'எல்லாம் அந்த ட்ரங்க் பெட்டில இருக்கும்னு நெனைக்கிறேன்.  நீ மச்சு மேல ஏற வேண்டாம்.  பாலாஜி வரட்டும்.'

என்ன பெரிய மச்சு?  ஆம்பளப் பசங்கதான் ஏறணுமா என்ன?  இதோ ஏறியாச்சு.  எடுத்தாச்சு.

'பூச்சி பட்டு இருக்கலாம்.  கொல்ல பக்கம் வெய்யில்ல கொடியில போட்டுட்டு வருவோம்.'

உதறு உதறி கொடியில் போட்டுட்டு திரும்பினால் கருப்பனின் மணியோசை.

'படவா, இன்னிக்கு என்ன டிஸ்டர்ப் பண்ணாத.  ஒன்னோட பாஸ் வரார்.  எனக்கு நிறைய வேல இருக்கு.  உன்ன கொஞ்சிண்டே இருக்க முடியாது.  கார்த்தால போட்ட பருத்திக் கொட்டைய மூக்கு முட்ட முடிச்சாச்சோன்னோ?  வாய மூடிண்டு இருக்கனும்.   மணிய மணிய ஆட்டிண்டு இருந்தே, கழுத்துலேந்து கழட்டிபுடுவேன் தெரிஞ்சுக்கோ.'

உள்ளே வருகிறாள்.  மீண்டும் ஒரு மேற்பார்வை மாமாவுக்காக செய்துவரும் ஏற்பாடுகளை 

'நீடாமங்கலம் போய் மாமாக்கு ஸ்லிப்பர் வாங்கணும்.  ஆத்துல அதப் போட்டுண்டு நடக்கட்டும்.  ரெட் ஆக்ஸைட் ஃப்ளோர்ல வெறும் காலோட நடக்க வேண்டாம் கொஞ்ச நாளைக்கு.'

'இங்க வேணா ரெண்டு தூணுக்கு நடுவுல ஒரு கொடி கட்டிடுவோமா?  அவசரத்துக்கு மாமா பனியன் துண்ட போட்டு எடுத்துக்கலாமே?'

யோசித்து யோசித்து ஒவ்வொன்றாக செய்கிறாள்.

'தலைப்பா கட்டிக்க ஒரு துண்டு.  கை கால் துடைக்க ஒரு துண்டு.  தோள்பட்டைல போட்டுக்க ஒரு துண்டு. ஃபர்ஸ்ட் க்லாஸ்.'

தனக்குத் தானே ஒரு ஷொட்டு.

'தொட்டி முத்தத்தெல்லாம் ப்ளீச்சிங் பவுடர் போட்டு அலம்பி விடணும்.  பாசி படிஞ்சு இருந்தது நேத்திக்கு.  மாமா வாய் கொப்பளிக்க வந்தா சறுக்கி விழுந்துடக் கூடாது.'

'அம்மா ஆஆ .... சொன்னேனே உன் கிட்ட.  ஜவ்வரிசி பாயசமும் ஜவ்வரிசி கருடமும் மாமாக்கு. மறந்துடாத.'

'எத்தன தடவ டி சொல்லுவ.  எங்க அண்ணா சீக்கிரம் வந்துட்டா தேவல.  இவள சமாளிக்க முடியல.  மன்னி சொன்னது சரி தான் போல இருக்கு.  அண்ணா என்ன பாடு படப்போறாரோ?'

மனதுக்குள் ஒரு குட்டி சந்தோஷம்.  அண்ணா பாவம்தான்.  இவ பேச்ச கேட்டுண்டு அண்ணா இருந்தா அப்ப பாவமில்ல.

'இத்தனை நேரம் கிளம்பியிருப்பாளா ஆஸ்பத்திரியிலேந்து ?  மணி பத்துக்கு மேல ஆகறதே.'  சீதாவுக்கும் டென்ஷன் தான்.

'எனக்கு என்னம்மா தெரியும்?  உன்ன மாதிரிதான நானும் இங்க இருக்கேன்.  ஒன்பது மணிக்கு டாக்டர் பார்த்துருப்பார்.  ஃபார்மாலிடிஸ் முடிஞ்சு அநேகமா பத்தரைக்கு கிளம்பி பன்னண்டு குள்ள வரணும்.'

சரியாக பன்னண்டரை.  வில்லு வண்டி அரசமரத்தடி கிட்ட நின்று கொண்டிருந்தது.  சபேஸய்யர் வில்லு வண்டியில் இருந்த படியே கல்யாணி அம்மன் கோவில் தரிசனம்.  நன்றாக வண்டியின் பின் பாலாஜியோடு நடந்து கொண்டிருந்த சந்தானம் ஆத்து வாசலில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே முதலில் கிளம்பி விடுகிறான்.

'சந்தானம்.... அப்பா வந்தாச்சா? பாலாஜி எங்கே?  செளகர்யமா வந்தேளா?'

'அரை மணி முன்னாடி வந்திருக்கலாம் கீதா.  வல்லத்துக்கு போனது தப்பா போச்சு.  அந்த தணிகாசல முதலியார் கிட்டேந்து தப்பிச்சு கார் எடுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து.'

'சாவியை கொடுத்தாச்சோண்ணோ?'

'ஆச்சு கீதா.  ஒரே டயர்டு.  காப்பி கொடு எனக்கு முதல்ல.'

'வெயிலா இருக்கேடா.  மோர் எடுத்துண்டு வரேனே.'

'அதெல்லாம் உன் பேச்ச கேட்கற ரெண்டு பேர் பின்னாடி வராங்க பார்.  அவாகிட்ட கொடு.  நீ எதக் கொடுத்தாலும் மறு பேச்சு பேசாம குடிப்பாங்க.  எனக்கு காப்பி தான் வேணும்.'

கொல்லைப்பக்கம் நின்று பேசிக் கொண்டிருந்த சீதாவும் ஞானமும் பேச்சுக் குரல்கள் கேட்டு உள்ளே வருகிறார்கள்.

'அம்மா.  இந்த தடியனுக்கு உப்பு காப்பி ஒண்ணு போடும் மா.  அதுக்குள்ள மாமாக்கு ஆரத்தி ஏற்பாடு பண்ணிட்டு வரேன்.  மாமாக்கு திருஷ்டி போகணும்.'

'அண்ணா வந்தாச்சா?'

'அத்தை.  எப்ப வந்தேள்? எனக்கு  மொதல்ல உங்க ராட்சசி பொண்ணு கொடுக்க சொன்ன காப்பிய கொடுங்கோ.'

'ஏய் சந்தானம்.  கோச்சுக்காதடா.  அண்ணாவ பார்த்து அஞ்சு வருஷம் ஆகறது டா.  அவர் உள்ள வந்தோன்ன ரெண்டு காப்பியா தரேன்டா.'

அவனும் ஞானத்தோடு வாசலுக்கு வருகிறான்.

'கீதா, ஒரு ஸ்டூல் கொண்டாயேன்.  சீக்கிரம்.  அப்பா வண்டிலேந்து தரை இறங்கறது சிரமமா இருக்கும்.'

ஸ்டூல் வருவதற்குள் அக்ரஹாரத் தலைகள் பத்துக்கு குறையில்லாமல் வில்லு வண்டிக்கு அருகில் வந்தாச்சு.

'மாமா.... எப்படி இருக்கேள்?'

'நன்னா தேவலாமா?'

'நன்னாயிடுவேள்.  கவலப் படாதீங்கோ.  அப்புறம் சாயரக்ஷையா வந்து பார்க்கறோம்.  ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ?'

எல்லோரிடத்தும் கை அசைப்பு. புன்னகை.

'பாவம்.  துரும்பா எளச்சுட்டார்.'

ஸ்டூலைப் போட்டு அவர் வண்டியிலிருந்து இறங்க வசதி செய்கிறார்கள்.

'மாமா.  சித்த நில்லுங்கோ.  ஆரத்தி எடுக்க சொல்றேன்.'

'இது வேறையா? நான் என்ன இந்தாத்து மாப்பிள்ளையா என்ன? எனக்கு எதுக்கு?'

'எதுவும் சொல்லப் படாது.  பேசாம கிழக்கு பார்க்க நிக்கணும்.  சொல்லிட்டேன்.'

ஏற்கனவே சொல்லி வைத்திருந்த அக்ரஹாரத்து விசாலி மாமி ஆரத்தி எடுக்கிறாள். 

அப்போது இதை பார்த்துக் கொண்டிருந்த சந்தானம் பாலாஜியிடம், 'நம்ம பூவனூர் வில்லேஜ் ஹெட் நிலமைய பார்த்தியா.  இனிமே மன்னார்குடி பூதகி சொல்றத தான் உன் அப்பா கேக்கணும்.  கிழக்க பார்த்து நில்லுங்கோன்னா நிக்கணும்.  மேற்க பார்த்து நில்லுன்னா நிக்கனும்.'

'ஏய்.  ரயிலு.... காதுல விழுந்தது நீ சொன்னது. ஆர்த்தி முடியட்டும். பஞ்சாயத்த கூட்டறேன்.'

'சந்தானம்.  என்னடா உன்ன ரயிலுங்கறா?'

'அது ஒரு சோக கதை டா.  அப்பறம் சொல்றேன்.'

மாமாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவருடைய bபெட்டில் உட்கார வைத்து விட்டு ஃபேன் ஸ்விச்சை தட்டுகிறாள்.

ஒரு ஓரத்தில் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்த சீதாவை சபேஸய்யர் பார்க்கிறார்.

'வா.... சீதா... எப்ப வந்த?  அண்ணா மன்னி மேல இருந்த கோபம் எல்லாம் போச்சோன்னோ?'

பெரிதாக அழ ஆரம்பிக்கிறாள் சீதா.  சந்தானம் சமாதானப் படுத்துகிறான்.

'அத்தை... மாமா ஆஸ்பத்திரியிலேந்து இப்பதான வந்திருக்கார்.  அழுது அவர் மனச சங்கடப்படுத்தாதீங்கோ.  அதான் சரியா போயிடுத்தே.'

ஞானம் சபேஸய்யர் அருகில் வருகிறாள்.

'அன்னா, எப்படி இருக்கேள்?'

'அதான் வந்துட்டேனே மருமா புண்ணியத்துல.'

'மாமா, என்ன சாப்டறேள் மொதல்ல  காப்பியா, பாலா, இல்ல மோரா ?  சித்த பொருத்து சாப்படலாம்.'

கீதாவின் கேள்விக்கு, 'சரி.  காப்பி கொடு.'

'சந்தானம், உங்க ஆத்துக்கு போயிடாத.  நீயும் எங்களோட சாப்ட்டுட்டு அப்பறமா போகலாம்.'

'எனக்கு முதல்ல காப்பி உண்டா இல்லையா?'

'கோச்சிக்காத தடியா.  உனக்கு இந்தாத்துல இல்லன்னு யாராவது சொல்வாளா?

சீதா, ஞானம், மற்றும் பாலாஜி சபேஸய்யரை சூழ்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க சமையல் உள்ளுக்கு அவசரமாக செல்கிறாள் கீதா.

பாலை அடுப்பில் வைத்துவிட்டு அம்மாவிடமும் சொல்லி விட்டு ஏதோ ஞாபகம் வந்து வாசலில் இருக்கும் சிவலிங்கத்தைப் பார்க்கிறாள்.

'அய்யர் கொண்டு வந்த ஜாமான்லாம் திண்ணைல வெச்சிருக்கேன்.  நான் கெளம்பறேன் தங்கச்சி. முதல்ல அய்யர கவனி.  வூட்டுக்கு போய் சாட்டுட்டு நம்ம வயலுக்கு போறேன்.  பேச்சி அங்குட்டுதான் இருக்கு.'

'இங்கேயே சாப்டலாமே சிவலிங்கம்.'

'வேணாம் புள்ள.  ஒனக்கு எம்புட்டோ வேல இருக்கும்.  நீ உள்ளார போய் வேலைய பாரு.'

உள்ளே செல்ல திரும்பும் போது ஒரு குரல்.  கூப்பிட்டவர் சிவானந்த மாமா.  பூவனூர் போஸ்ட் மாஸ்டர்.

'கீதா, ஆத்துக்கு லெட்டர் வந்துருக்கு பாலாஜி பேர்ல .  போஸ்ட்மேன் இன்னிக்கு லீவு.  அதான் நானே லஞ்சுக்கு போகும்போது கொடுத்துடலாம்னு கொண்டு வந்தேன்.

'ரொம்ப த்தேங்கஸ் மாமா.  கொடுத்துடறேன்.'

இன்லேண்ட் லெட்டர்.  முன்னால் பாலாஜி பெயர்.  பின்னால் என்னவோ பத்ம விஜயம்னு எழுதியிருந்தது.

கடிதத்தை பாலாஜியிடம் கொடுத்து விட்டு சமையல் உள்ளுக்கு போய்க் கொண்டிருந்த சமயத்தில், பாலாஜி கடிதத்தை அவசரமாக படித்து விட்டு தன் அப்பாவிடம், 'அப்பா பத்ம விஜயம் மாமா கடுதாசு போட்டுருக்கார்.  எனக்கு ரிஸல்ட் வந்துடுத்தாம்.  எனக்கு எண்பத்து மூணு பர்ஸண்ட்டுனு காலேஜில சொன்னாளாம்.'

'வெரி குட்.  எப்ப கிளம்பணும் மெட்ராஸுக்கு?

'சொல்றேம்பா. நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ.  அப்பறம் பேசலாம் இதப் பத்தி'  சொல்லி விட்டு நமஸ்காரம் பண்ணுகிறான் அம்மாவையும் அப்பாவோடு உட்கார வைத்து.

பிறகு அத்தைக்கு விஷயத்தை சொல்லி நமஸ்காரம்.

'சந்தானம்.  எய்ட்டி த்ரீ பர்ஸெண்ட்டுடா.'

'கங்க்ராட்ஸ்.  சமையல் உள்ள போய் மன்னை மைந்திகிட்ட சொல்லிட்டு வா.'

சமையல் உள்ளுக்குப் போகிறான்.

'கீதா, நான் டிகிரி முடிச்சுட்டேன். எண்பத்து மூணு பர்ஸண்டாம்.'

'ஓ.  க்ரேட்.  கங்கிராட்ஸ்.  இன்னிக்கு அப்பா ஆத்துக்கு  வந்ததும் உன் ரிஸல்ட் வந்தது ....  வாட் எ கோயின்ஸிடன்ஸ்.  இந்தா மொதல்ல இந்த சர்க்கரைய சாப்பிடு.  எல்லையே இல்லாத சந்தோஷமா இருக்கு.'

வந்த ஆனந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டே டப்பாவை எடுத்து ஒரு ஸ்பூன் சர்க்கரையை அவன் வாயில் அவளே ஊட்டுகிறாள்.

'ரொம்ப பெருமையா இருக்கு பாலாஜி.  சாயந்திரம் சாமுண்டிய ஒண்ணா போய் பார்க்கலாம்.  இப்ப இந்த டப்பாவ எடுத்துண்டு போய் எல்லாருக்கும் மொதல்ல சர்க்கரைய கொடு.  ஊர்க்காராளுக்கெல்லாம் ஏதாவது யோசிச்சு நாளைக்கு ஸ்வீட் ஏற்பாடு பண்ணலாம்.'

'முதல்ல உனக்கு.'

'நான் எங்கேயும் போகமாட்டேன். முதல்ல பெரியவாளுக்கும் சந்தானத்துக்கும் கொடு.'

சர்க்கரை டப்பாவோடு பாலாஜியும் காப்பியோடு கீதாவும் சமையலறையிலிருந்து வருகிறார்கள்.

'தடியா யூவர் காப்பி.  நம்மாத்துல சாப்டுட்டு தான் போகணும்.  நோ எக்ஸ்யூஸ் என்ன?'

'அழுதையா கீதா.'

'போடா.  அது ஒண்ணுமில்லேடா.  பாலாஜி டிகிரி முடிச்சத சொன்னோன்ன கொஞ்சம் எமோஷன் ஆயிட்டேன்.'

'ஏய்... ஏய்.... அரக்கி..... அப்ப அதானா.'

'பல்ல உடப்பேன். ச்சீ போடா.'

இளமைக்குப் புரியாத இளமையின் சங்கேதம் இருந்துடப் போகிறதா என்ன?

சற்று நேரமாக சபேஸய்யரின் நோயைப் பற்றியே பேசிக் கொண்டிருந்த குடும்பம் இப்போது சர்க்கரைச் செய்தியில் சந்தோஷத்துக் கொண்டிருந்தது.

தொடரும்.....

No comments:

Post a Comment