Saturday, December 4, 2021

உறவுபோட்டமுடிச்சு_53

உறவுபோட்டமுடிச்சு_53

பிறந்த வீட்டில் சீதா காலடி வைத்து சில வருடங்கள் ஓடி விட்டன.  ஒரு சின்ன மனஸ்தாபம்.  சில நாட்கள் கழித்தாவது வந்து பேசி தீர்த்திருக்கலாம். 

'தப்பெல்லாம் முழுக்க முழுக்க என்னுதுதான்.'

'பாலாஜிக்கு கீதாவ முடிக்கலாம்னு மனசுல வெச்சிண்டு இங்க வர்ரதா இருந்தா இங்க நீ வரவே வேண்டாம்னு மன்னி அப்படி முகத்துக்கு நேரா கேட்டது சரியில்ல தான்.  அவா புள்ள.  அவாளுக்கு உரிமை இருக்கு.'

'நான் மனசுல பட்டத சட்டுனு கேட்டிருக்கவும் கூடாது அன்னிக்கு.  அஞ்சு வருஷம் முன்னாடி என்ன வயசு ரெண்டுக்கும்?  கல்யாணம் பண்ற வயசா அப்ப ரெண்டுக்கும்?  ஏன் அவசரப் பட்டேன்னே தெரியல.'

'ரெண்டும் ஒண்ணுக் கொண்ணு அவ்வளவு பாசமா அன்பா       பழகிண்டு வந்ததுங்களேன்னு ஒரு நப்பாசை.'

'அண்ணாவாவது எனக்கு பதமா எடுத்து சொல்லி புரிய வெச்சிருக்கலாம்.'

திண்ணைய தாண்டி உள்ளே போகறதுக்குள்ளேயே அந்த நாள் ஞாபகம்.

'மன்னிக்கு கோபம் போயிருக்கும்.  ஆனா முகம் மாறியிருக்குமான்னு தான் யோசனையா இருக்கு.'

அஞ்சு வருஷம் வந்து போயிண்டு நிக்கற அளவுக்கு அன்னிக்கு ஒண்ணும் பெரிசா நடக்கவில்லை.

'இந்த வரன் இல்லைனு சொல்றத அண்ணா மன்னி சிரிச்சிண்டு சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் எடுத்திண்டிருக்க மாட்டேன்.'

'என்னம்மா.... ஏன் தயங்கி தயங்கி நிக்கற.  வாம்மா உள்ள.'

கீதாவின் பேச்சுக் குரல் சமையல் உள்ளில் இருக்கும் ஞானத்தின் காதுகளில் விழுகிறது.  வருகிறாள்.

'மன்னி சௌக்யமா?  எப்படி இருக்கேள்?

'அதான் பாக்கறையே... ஒன்ன ஒரு மாதிரி பகவான் புரட்டி போட்ட மாதிரி எங்கள இன்னிக்கு வெச்சிருக்கான்.  வேணுங்கறது பட்டுட்டேன் இந்த ரெண்டு மாசத்துல. அவர் உசுரோட இருந்தாலே போதுங்கற அளவுக்கு மனச தேத்திண்டு அவர் கட்டிய தாலிய உத்து உத்து பார்த்துண்டு.... யாருக்குமே இந்த கொடும வேண்டாம்டி.'

'வருத்த படாதேள் மன்னி.  ஏதோ சோதன காலம்.  சரியாயிடும்.'

ஞானத்தின் கையைப் பற்றிக் கொண்டு சீதா சொல்லும்போதே கொட்டி விட்டது கண்ணீர்.

'குடும்பத்துல கஷ்டம் இல்லாத வரைக்கும் எல்லா திமிரும் இருக்கு எல்லாருக்கும்.  பகவான் கொஞ்சம் சந்தோஷத்த அசச்சுட்டான்னா எல்லோரும் வந்துண்டு போயிண்டு இருக்கணும்னு மனசு அல்லாடறது.'

'என்ன மன்னி இப்படி ஒடிஞ்சு போறேளே.  அதான் வந்துட்டேனே.  உங்க செல்லக் குட்டி கீதா இருக்கா.  நான் இருக்கேன்.  பாலாஜி இருக்கான்.'

'கீதான்னோண்ண சொல்லனும்னு தோணறது.  கீது செல்வம் மாத்திரம் எங்களோட இல்லாம இருந்திருந்தா இந்தாத்துல என்ன நடந்திருக்கும்னே தெரியாது.  ஏதோ கல்யாணியா பார்த்துதான் அவள அனுப்பி எங்க மூணு பேருக்குமே பலம் கொடுத்துருக்கா.  பணம் காசு எத்தன இருந்தாலும் மனுஷா இல்லைனா ஒருத்தரும் ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்லடி.  ரெண்டு மாசமா கத்துண்ட பாடம் டி இது.'

'நீங்க தான் மன்னி யாரும் உங்களோட இல்லைனு நெனைக்கிறேள்.  தூரத்துல இருந்தாலும் உங்க பக்கத்துல தான் மன்னி இருக்கோம்.'

'சரி.  இந்தாத்து கஷ்டத்த தான் பேசிண்டே இருக்கப் போறோமே.  நீ எப்படி இருக்க.  அத சொல்லு.  அஞ்சு வருஷத்துல இப்படி ஒடம்பெல்லாம் சிறுத்து கன்னம் ஒட்டி மரப்பாச்சியாட்டம் போயிட்டியே.  உன்ன இப்படி உங்க அண்ணா பார்த்தா ஓன்னு அழுதுடுவார்.'

'என்ன மன்னி பண்றது.  அம்போன்னு நிராயுதபாணியா விட்டுட்டு போயிட்டார் அவர்.  பொண்ண கர சேர்க்கணுமே.  முடிஞ்ச அளவுக்கு உழைக்கிறேன்.'

'உன் பொண்ணுக்கு என்னடி கொறச்சல்?  தங்கம்னா தங்கம் அவ.  எந்த குடும்பத்துக்கு கீதா வாக்கப் பட்டாலும் இவ ஆட்சி தான் அங்க.  இந்த ஒரு மாசத்திலேயே இங்க இவ பேச்சு படிதான் நடக்கறது.  மாட்ட கவனிக்கறதாகட்டும், வயல கவனிக்கறதாகட்டும்...'

'என்ன வயல கவனிக்கறாளா?'

'அது தெரியாதா உனக்கு?  ஒன்னோட அண்ணாவோட வயக்காட்டெல்லாம் அவதான் பார்த்துக்கறா.  அவ வெச்சதுதான் சட்டம் இந்த பூவனூர்ல இப்போ.'

'ஓ.  அந்த அளவுக்கு நீங்க எடம் கொடுத்துருக்கேளா?'

'நாங்க எங்க கொடுக்கறது.  நான் பார்த்துக்கறேன்னு இங்க வந்தாளான்னோ? அதுக்கப்பறம் இங்க யாருக்கும் எந்த வேலையும் கிடையாது.'

'மன்னி, மன்னார்குடியில அவ வடி கட்டின சோம்பேறி.  நீங்க சொல்றது என் பொண்ணப் பத்தியான்னு சந்தேகமா இருக்கு.'

'நான் சொல்றது வாஸ்தவம் தான்.  நீ நாளைலேந்து பார்க்கத்தான போற.  உங்க பட்டாமணி அண்ணா கீதா சொல்றதுக்கெல்லாம் வலி காணற அளவுக்கு மண்டைய ஆட்டப்போறத நீயே பாரு.'

கீதாவின் பேச்சை ஞானம் பேசிப் பேசி அலுக்கவில்லை.  கேட்டுக் கொண்டிருந்த சீதாவின் பெருமிதம் ஓய்ந்த பாடும் இல்லை.

இவர்கள் தனியாக மனம் விட்டு பேசிக் கொண்டிருக்கட்டும் என்று வாசலுக்கு சென்று திண்ணையில் உட்கார்ந்திருந்த கீதா கூட போரடித்து உள்ளே வருகிறாள்.

'என்னம்மா.  காபி கலந்து உன் பக்கத்துல வெச்சு எத்தன நாழி ஆகறது.  போ... நீயே போய் சுட வெச்சு குடி.'

'பார்த்தியா சீதா.  இப்படித்தான் இங்க இவ அதிகாரம் கொடி கட்டிப் பறக்கறது.'

'மாமி.  ஒவரா போட்டுக் கொடுக்காதீங்கோ.  என்னவோ எனக்கு எல்லாரும் இங்க பயப்படற மாதிரிதான்.  அம்மா, மத்தியான பாகற்கா கொழும்பு நிறைய இருக்கு.  சாதம் வெடிச்சுடறேன்.   போதுமோன்னோ?'

'கொழம்புக்கு தொட்டுக்க ஒண்ணும் இல்லையே டி?'

'மாமி, உங்களுக்காக அரிசி அப்பளம் பண்ணி எடுத்துண்டு வந்திருக்கா அம்மா.  கட்ட பிரிச்சுட வேண்டியதுதான்.'

'கஷ்டப்பட்டு இட்டுட்டு வித்து காசாக்காம கனத்த காரியமா இங்க தூக்கிண்டு வந்தியாக்கும்'

'அம்மா, அரிசிய களஞ்சு போட்டுடறையா?  நான் உஷாவாத்து வரைக்கும் போய் இந்த வார விகடன் வாங்கிண்டு வந்துடறேன்.  ரெண்டு வாரமா படிக்கல.'

'சிக்கிரம் வா.  ஒண்ணா சாப்டணும்.'

அவள் போன பின்பு சீதாவும் ஞானமும் சமையல் அறைக்கு சென்று பேச்சை தொடர்கிறார்கள்.

'உன் கிட்ட ஒண்ணு சொல்லுவேன் சீதா.  சிரிக்க கூடாது.'

'என்ன மன்னி.  சொல்லுங்கோ.  தாரளமா சொல்லுங்கோ.'

'என்னடா, அஞ்சு வருஷம் முந்தி இது விஷயமாத்தான மனஸ்தாபம் வந்துதுன்னு நெனைக்க கூடாது.  நான் சொல்லப் போறத மனசுலேயே வெச்சிக்கணும்.'

'சொல்லுங்கோ மன்னி.  நிச்சயம் நான் இந்த தடவ சண்ட போட மாட்டேன்.'

'ஒண்ணுமில்ல.  அன்னிக்கு கூடாதுன்னேன்.  இன்னிக்கு என்னமோ முடிச்சுடலாம்னு தோணறது.'

'நீங்க என்ன சொல்ல வரேள் மன்னி.'

'அதான் .... கீதாவுக்கு நீ எந்த வரனும் பார்க்க வேண்டாம்.  நம்ம பாலாஜிக்கே பார்த்துடலாம்'

ஒரு கணம் ஆச்சர்யத்தில் திகைத்து நின்றாள் சீதா.

'அன்னிக்கு சிறு வயசு கீதாவுக்கு.  ஒண்ணும் தீர்மானிக்க முடியல.  இன்னிக்கு கீதாவோட சமத்து சாமர்த்தியத்தெல்லாம் பார்க்கற போது பாலாஜிக்கு ஏத்தவ இவதான்னு மனசுல விழறது.'

உடம்பை கிள்ளிப் பார்த்துக் கொள்ளாத குறை சீதாவுக்கு.  சந்தோஷத்தில் பேச்சு கூட வரவில்லை.

'நாங்க ரொம்ப கொடுத்து வெச்சிருக்கோம் மன்னி.'

அழ ஆரம்பித்த சீதாவை அணைத்துக் கொள்கிறாள் ஞானாம்பாள்.

'பார்க்க லக்ஷணமா இருக்கா.  நம்மாத்துல பழகின பொண்ணு.  அவனுக்கும் பிடிச்சிருக்குன்னு தான் தோணறது.  உங்க அண்ணா வரட்டும்.  அவர் மனசுலயும் என்ன இருக்குன்னு தெரிஞ்சிண்டு கீதா கிட்ட நானே கேட்கறேன்.  அது வரைக்கும் அந்த தடிச்சி கிட்ட சொல்லாத.  அவ கிட்ட நிறைய பேசணும்.'

'மன்னி, இன்னிக்கு எனக்கு மனசு நெரஞ்சு இருக்கு.  அப்பா இல்லாம கொழுந்தைய வளர்க்கறோமேன்னு எப்ப பார்த்தாலும் இவளப் பத்தின கவலை தான் மன்னி.'

'ஒரு மாசம் முன்னாடி இந்த குடும்பம் உங்க அண்ணா TB கவலையில இடிஞ்சு போய் உட்காந்திருந்தது.  வந்தாடி உன் பொண்ணு.  எல்லாருக்கும் தைரியம் கொடுத்து எல்லாத்தையும் தன் தலையில போட்டுண்டு எல்லாரையும் சிரிக்க வெச்சிண்டு.  இவளோட குணத்தெல்லாம் பார்க்கும் போது பாலாஜி தான் கொடுத்து வெச்சிருக்கணும்.  எனக்கு தான் இப்படி தோணறதுன்னா அக்ரஹாரத்துல ஒண்ணு போல அவா ரெண்டு பேர் கல்யாணத்த தான் நெனச்சிண்டிருக்கா.'

'சொல்ல சொல்ல பெருமையா இருக்கு மன்னி'

'நான் கீதாவ வேண்டாம்னு சொன்னாலும் பூவனூர்ல இருக்கறவா இவா கல்யாணத்த நடத்தாம விட மாட்டா.  அப்படி ஒரு அபிமானம் அவாளுக்கு இவ மேல .  நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்.  நானே தான் கீதாட்ட என் வாயால சொல்லுவேன்.  அது வரைக்கும் மூச்சு விடப்படாது.  அப்பறம் எனக்கு கெட்ட கோபம் வரும்.'

'சரி மன்னி.  ப்ராமிஸா சொல்ல மாட்டேன்.'

'கொஞ்சம் பட்டு பட்டுன்னு பேசரா.  கொஞ்சம் குறும்புத்தனமும் இருக்கு அவளுக்கு.  இவள பார்க்கும் போதெல்லாம் நாமளும் ஒரு பொண்ண பெத்துருக்கலாமோன்னு உன் மேல கூட பொறாமையா வர்றது.  குறும்புத்தனம் ஒரு பேரனையே பேத்தியையோ பெத்துக் கொடுக்கற வரைக்கும் இருந்தா நல்லது தான.  இல்லையா?'

இருவரும் சிரிக்கிறார்கள் பெரிதாக,  'மன்னியா இப்படி?  பகவானே கனவா இதெல்லாம் எனக்கு காமிக்கலையே?'

ஏழை மனம்.  அச்சம் இருக்கத்தானே செய்யும்.

விகடனோடு உள்ளே வருகிறாள் கீதா.

'யப்பா... உங்க ரெண்டு பேர் சிரிப்பு சத்தம் உஷாவாத்துல கேட்டுது.'

'பாலாஜி இத்தனை நேரம் செங்கிப் பட்டி போயிருப்பானோன்னோ?'

'யாருக்கு தெரியும்?  ஆம்பள பசங்கள நம்பவே முடியாது.  நாளைக்கு தான டிஸ்சார்ஜுனு தஞ்சாவூர்ல படம் பார்த்துட்டு போனாலும் போவான்.'

'என்னடி பாலாஜிய அவன் இவன்னு மரியாதை இல்லாம?'

'அத விடு சீதா... சின்ன வயசுலேந்து அண்ணா தங்கையா பழகறாளான்னோ.  மரியாதையெல்லாம் முன்ன பின்ன தான் இருக்கும்.  இதுக்கே இப்படி அவள கோச்சிக்கறையே.  பாலாஜிய எவ்வளவு அடா புடான்னு கூப்புடுவா தெரியுமா? குத்துக் கல்லாட்டம் பெத்த தாய வெச்சுண்டே லூசுன்னு கூட கூப்டுவா.  என்ன பண்றது உனக்காக பொறுத்துப்பேன்.'

ஏற்கனவே எல்லா விஷயங்களையும் பேசிவிட்ட சீதாவும் ஞானமும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். இவர்களின் சிரிப்பின் அர்த்தம். புரியாததால் கீதாவுக்கு சற்று கோபம்.

'மாமி, நானும் அப்பேலேந்து பார்த்துண்டு வரேன்.  அம்மாகிட்ட எதையாவது சொல்லி திட்டு வாங்க வைக்க ட்ரை பண்றேள்.'

'எங்க அம்மா.. என்னோட செல்ல அம்மா.'

சீதாவின் பின்னாலிருந்து ஒரு கட்டு.

'போதும் அசடே.  பூவனூர் வந்து ரொம்ப கொழுப்பேறியிருக்கு உனக்கு.'

தொடரும்..

No comments:

Post a Comment