உறவுபோட்டமுடிச்சு_52
ஆத்துக்கு வருகிறாள். அம்மா இன்னமும் வரவில்லை. ஆர்வம் ஒரு புறம் அவள் வருகைக்காக. ரொம்ப நாள் பேச்சுகள் இருவரிடத்தும் ஸ்டாக் இருக்குமே!!
'அம்மா, மாமா என்ன கேட்டார் தெரியுமா என்கிட்ட?'
'இப்படி ஆரம்பிச்சு அம்மா கிட்ட சொல்ல ஆசைதான். ஆனா மாமா யார் கிட்டேயும் நான் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாரே. நேரம் வரும் போது சொல்றேன். சரியா?'
'செங்கிப் பட்டிலே உன் வாலுப் பையன் என்ன பண்ணான் தெரியுமா?'
'ஸாரிம்மா. இதையும் சொல்ல முடியாது உன் கிட்ட. ஸ்ட்ரிக்ட்லி பர்ஸனல். உன் பொண்ணும் லேசு பட்டவ இல்ல.... அன்னிக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா என் முதுக பின்னி எடுத்துடுவ. ஐ ஆம் ஸாரிம்மா. நீ என் மேல வெச்சிண்டிருக்கற நம்பிக்கைக்கு நான் ஒர்த் இல்ல. என்ன மன்னிச்சுடும்மா.'
இளமை பொங்கியதையும் இதயம் சிந்தியதையும் எந்தப் பருவத்தால் தான் வெளிப்படையாக சொல்ல முடியும்?
பின்னாளில் விஷயம் தெரிந்து தன்னிடம் கீதா மறைத்தாளே என்று அம்மா அதிர்ச்சி ஆகும் போது? தன்னையும் அறியாமல் ஒரு வருத்தம் கீதாவிடம்.
'எனக்காகவே வாழறவ. அவகிட்ட போய் ..?'
'எப்படி எடுத்துக் கொள்வாள்ங்கறது இருக்கட்டும். எப்படி சொல்றதுங்கறதே எனக்கு பிரச்சனையா இருக்கும் போல இருக்கே.'
'மாமாவே தான சொன்னார். அம்மாகிட்ட கூட சொல்லாதேன்னு. பின்னாடி அம்மாக்கு தெரிஞ்சா மாமா மேல பழிய போட்டுட வேண்டியது தான்.'
'இந்த ரெண்டையும் விட்டுட்டு அம்மா கூட பேச நிறைய இருக்கே....அந்த சானடோரியம் பத்தி.. ஸ்பெஷல் வார்டு பத்தி....டாக்டர்கள் பத்தி,... மீனாட்சி பத்தி.... டெய்ஸி பத்தி....பெரியம்மா வந்தது பத்தி.. மறந்துட்டேனே .... விவசாயம் கத்துக்கறதப் பத்தி... ஏர் புடிச்சேனே.... அதப் பத்தி... சீக்கிரம் வாம்மா.. நிறைய இருக்கு. மன்னார்குடி கதைகள்லாம் நாளைக்குத் தான்.'
இந்த மாலை அவளுக்கு bபோர் அடித்துக் கொண்டிருந்தது. வாசலுக்கும் ஹாலுக்கும் நடை.
'வருவாடி சீதா. எதுக்கு குட்டி போட்ட பூன மாதிரி போயிட்டு போயிட்டு வந்திண்டிருக்க. சீதாக்கு ஆம் தெரியாதா என்ன? உனக்கு முன்னாடியே இந்த ஊர்ல பொறந்த வளர்ந்தவ. ஆறு மணிக்கு தான பஸ் பிடிக்கப்போவதா சொல்லியிருக்கா? வருவா. அலஞ்சிண்டே இருக்காத.'
'மாமி, கருப்பன் சத்தத்தையே காணுமே. நானும் வந்ததுலேந்து பிஸியா இருந்துட்டேன். போய் பார்த்துட்டு வந்துடறேன்.'
அவசரமாக கொல்லைப் பக்கம் போகிறாள். இவளைப் பார்த்தவுடன் வைக்கோலை அசை போட்டுக் கொண்டிருந்த கருப்பன் எழுந்து கொண்டு திமிருகிறான். கழுத்து மணி ஓசை காதைப் பிளக்கிறது. பெருமூச்சுகளும் தலையாட்டுதலும் கூடிக் கொண்டே போகிறது.
பத்து நாட்களுக்கு பிறகு பார்ப்பதால் இந்த ரியாக்ஷன்.
'என்னடா.... என்னடா... கோபமா என் மேல... அதான் வந்துட்டேனேன்னோ ? கூல்.... கூல்.....'
அவன் விடவில்லை. அவளுடைய இடுப்புப் பகுதி புடவையை இழுக்க முயற்சிக்கிறான்.
'என்ன இது? புதுசு புதுசா விளையாட்டு? ஒரு குட் ந்யூஸ் தெரியுமோ? மாமா நாளைக்கு ஆத்துக்கு வரப் போறாரே. வந்தோண்ண செல்லத்த கட்டிண்டு கொஞ்சுவாராம். அவருக்கு உடம்பு சரியானோண்ண உன்னோட டெய்லி விளையாடுவாராம். சரியா. எனக்கு இன்னிக்கு என்னோட அம்மா வரா. நிறைய அவளோட பேசணும். நாளைக்கு வரட்டா?'
கருப்பனுக்கு டாட்டா காண்பித்து விட்டு மாமியிடம் வருகிறாள்.
'மாமி கல்யாணி அம்மன் கோவிலுக்கு போய் விளக்கேத்திட்டு வந்துடறேன். மாமாக்காக வேண்டிண்டேனே. பத்து நாள் விட்டுப் போச்சு வேற'
'சீக்கிரம் வந்துடணும். சீதா வந்துடப் போறா. அதுக்குள்ள வந்துடு'
விட்டுப்போன நாட்ளையும் கணக்கிட்டு பனிரெண்டு அகல் விளக்குகள், திரிநூல்கள்,எண்ணெய் சகிதம் கிளம்பியாச்சு.
'உங்க மாமாவுக்கு உடம்பு தேவலாம்னு கேள்விப் பட்டேன். கேழ்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உன்னத்தான் மாமி மெச்சிண்டே இருக்காளாமே. ஊர் முழுக்க ஒன்ன பத்திதான் பேச்சா இருக்கு.'
சோமா குருக்கள் இவள் ஒவ்வொரு விளக்காக ஏற்றிக்கொண்டிருந்தபோது கீதா அருகில் வந்து சொன்னார்.
'நான் என்ன மாமா செஞ்சேன்? எல்லாம் அம்பாள் அனுக்ரஹம் மாமா'
'இந்தா. இந்த சம்பங்கி மாலை. கார்த்தால அம்பாளுக்கு சாத்தினது. எங்க ஊர் பொண்ணா அம்பாள் ஏத்துண்டு இந்த மாலைய அவ கொடுத்ததா நெனைச்சிக்கோ. கல்யாணி மாலை கல்யாண மாலையாக்கும். சீக்கிரம் விவாஹ ப்ராப்தி ரஸ்து.'
கல்யாணி அம்மன் மாலை அன்று அவளுக்கு கிடைத்ததை விட்டுப் போன தினசரி விளக்கு பிரார்த்தனைக்கு கிடைத்த அம்பாளின் மன்னிப்பாக அவள் மனம் பெரிதாக ஏற்றது.
வாசலுக்கு வரும்போது இருபதடி முன்னால் அம்மா.
'அம்ம்ம்ம்.....மா?'
வெகு நாட்களுக்குப் பிறகு கேட்கும் கன்றின் குரல் கேட்காமல் போய்விடுமா என்ன?
'ஏய் .... மொள்ள வா. என்ன அவசரம். விழுந்துடப் போற. பார்த்து பார்த்து.'
அம்மாவின் கன்னத்தைப் பிச்சு ஒரு இச். திருப்தி இல்லை. இன்னொரு இச். அம்மாவின் கையில் இருந்த மஞ்சப்பையை வாங்கிக் கொள்கிறாள்.'
'என்னம்மா இந்த கனம் கனக்கறது?'
'அது ஒண்ணுமில்லடி - அரிசி ஒரு எரணூறும் உளுந்து ஒரு எரநூறும் கொண்டு வந்தேன். மன்னிக்கு நம்மாத்து அரிசி அப்பளம்னா அப்படி ஒரு உசுரு. மாமா இந்த வாரத்துலேயே ஆத்துக்கு வந்துடுவான்னு பாலாஜி சொன்னான். அதனால அவருக்கு பிடிக்குமேன்னு ஜவ்வரிசி வடாமும் எடுத்துண்டு வந்தேன் டி.'
பிறரைப் பார்க்க வரும்போது பழங்களோ இனிப்புகளோ வாங்கி வருவது சகஜம். இவள் என்ன அன்போடு தன் உழைப்பையும் மூட்டை கட்டிக் கொண்டு வருகிறாளே?
'அம்மா, மாமா நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகி ஆத்துக்கு வரா.'
'நெஜமாவா சொல்ற. இப்பத்தான் வர வழியில சாமுண்டி கிட்ட ஒரு குரல் அழுதுட்டு வந்தேன். யதேச்சயா நாளைக்கே டிஸ்சார்ஜ் ஆகணும்னு வேண்டிண்டு வந்தேன். நீ இப்ப டிஸசார்ஜுனு சொன்னேன்ன உடம்பெல்லாம் புல்லரிகறது டி.'
அவா அவா பிரார்த்தனைக்கு 'ஜீ பூம்பா' நம்பிக்கை வருவதை நாம தடுக்க முடியுமா என்ன?
தொடரும்..
No comments:
Post a Comment