உறவுபோட்டமுடிச்சு_51
கொஞ்சம் எக்ஸைட்டடத்தான் இருந்தாள் கீதா.
'கையில இருக்கற பணம் பத்துமோனோ பாலாஜி?'
'அட்மிஷன் போதே அட்வான்ஸ் நிறைய ப்பே பண்ணிட்டேன். இருந்தாலும் அஞ்சு எடுத்துண்டு போறேன்.'
'செங்கிப்பட்டி ஆத்து சாவிய என்ன பண்ணப்போற?'
'அந்த தாஜ்மஹால் சாவிய கேட்கறையா? ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. என்ன பண்றது? வர வழியில காரை வல்லத்துல நிறுத்தி தணிகாசலம் வீட கண்டுபிடிச்சு த்தேங்க்ஸ் சொல்லிட்டு கொடுத்துட்டு வரேன்.'
முதலில் 'தாஜ்மஹால்' புரியவில்லை. பிறகு சிரிப்பு.
'அஞ்சாறு வருஷம் தாங்க மாட்ட போல இருக்கே?'
'அதான் நானும் சொல்றேன். அப்பா வந்ததோண்ண.....'
'அப்பா சொன்னாலும் வேல வெட்டி இல்லாதவன கட்டிண்டு நான கஷ்டப் படமாட்டேம்ப்பா. உட்டா பேசிண்டே போவ. முதல்ல நடைய கட்டு. சந்தானம் வரானானோ?'
'நீ சொன்னதா சொன்னோண்ண பயந்துண்டு வேட்டி பனியனோட கிளம்பிட்டான். உன் பேர சொன்னாலே நடுங்கறானே. என்ன விஷயம்.'
'நடுங்குவான். நடுங்குவான். ஏன் நடுங்க மாட்டான்? அப்பறம் அதப் பத்தி சொல்றேன். அவன் கிட்ட கேட்காத.'
'ஆஸ்பிடல்ல இருக்கறவாளுக்கு ஏதாவது செய்யனுமா?'
'வார்டு பாய்ஸ் அண்ட் ஸ்கேவன்ஜர்களுக்கு வேணா கொடு. உன் அருமை தங்கை மீனாட்சி, டெய்ஸி இவாளுக்கெல்லாம் பணம் கொடுத்தா நன்னா இருக்காது. யோசிச்சு வைக்கறேன். நெக்ஸ்ட் ரெவ்யூ போகும்போது ஏதாவது பண்ணலாம்.'
'வேற ஒண்ணும் இல்லையே?'
'வார்டுலேயும் அந்தாத்துலேயும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா பார்த்துட்டு ஏதாவது பொருள விட்டுருக்கியான்னு ஒரு ரவுண்ட் பாரு.'
'சரி. வேற ஒண்ணும் இல்லையே?'
'அலங்காம குலுங்காம ட்ரைவர கார ஒட்டிண்டு வரச் சொல்லு. மாமாக்கு உடம்பு வலிக்காம பதிவிசா பார்த்து .... என்ன? போகும் போதே தஞ்சாவூர்ல காருக்கு ஏற்பாடு பண்ணிட்டு போங்கோ.'
'சரி. வேற ஒண்ணும் இல்லையே?' இந்த முறை தன் சிரிப்பில் சங்கேதத்தை திறக்கிறான்.
'அது சரி. உடம்பு அட அடான்னு வரதாக்கும். நேரம் ஆகறது பார். நீ அந்த பக்கம் போனோண்ணதான் வயலுக்குப் போய் எந்த அளவுக்கு வேல போயிருக்குன்னு பார்த்துட்டு வரணும்.'
'அத்த வருவா சொன்னேன்ல. அத்த வரும்போது ஆத்துல இரு. ஆறு மணி வாக்கில மன்னார்குடில பஸ் ஏறுவான்னு சொன்னா'
'ஓகே பாலாஜி. அமமா கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு தைரியம் சொல்லிட்டு போ. சந்தோஷப் படுவா.'
சின்னச் சின்ன விஷயங்களைக் கூட மறக்காமல் எப்படித்தான் இந்த பெண்கள் ஞாபகப் படுத்துகிறார்களோ?
'போறச்ச ஜன்னலோரம் பஸ்ல உட்கார்ந்தா ரோடோர கருவேலி மரம் கண்ணுல குத்திடப் போகறது. ஜாக்ரதை.'
'திரும்பவும் ஆரம்பத்துலேந்தா கீதா. அழுதுடுவேன்.'
'அத விட்டேன் இத விட்டேன்னு வந்து சொல்லுவியோன்னோ அப்ப வெச்சுக்கறேன் உன்ன.'
'கல்யாணம் பண்ணிண்டா போதும் என்னை? வெச்சிக்கல்லாம் வேண்டாம்.'
'போடா... எப்பப் பார்த்தாலும்....'
சிரித்துக் கொண்டே வாசலுக்கு வருகிறாள். சந்தானம் இவளைப் பார்த்து தன் நடையை ஒட்டமாக மாற்றுகிறான்.
'சும்மா நடிக்காத தடியா? இன்னிக்கு எத்தன ரயில் விட்ட?'
'ஒண்ணே ஒண்ணு தான் கீதா. ப்ராமிஸ். அது கூட எக்ஸ்ப்ரஸ் வேகத்துல உன் கண்ணுல மாட்டிட கூடாதேன்னு.'
'ஞாபகம் இருக்கோண்ணோ? ஒரே மாசம் தான்.'
அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு மாமியிடம் சொல்லிவிட்டு வயல் பக்கம் கிளம்புகிறாள்.
சிவலிங்கம் மாத்திரம் வயலை ஒட்டியுள்ள அரச மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறான் கையில் தானா பீனா பீடியோடு. இவளைப் பார்த்தவுடன் கையில் இருந்ததை கீழே போட்டுவிட்டு காற்றில் பறந்ததை கையால் விரட்டிக் கொண்டிருந்தான்.
'என்ன பீடியா? அய்யாவுக்கு தெரியுமா?'
தலையைச் சொறிந்தான் தெரியும் என்பதற்காக.
'இனிமே பூவனூர்ல யாராவது பீடி சிகரட் அடிச்சா ஃபைன் கட்டணும். எல்லாம் உனக்கு பேச்சி கொடுக்கற செல்லம்.'
'கீதாம்மா? அய்யரு எப்படி இருக்காக?
'பரவாயில்ல சிவலிங்கம். நாளைக்கு ஆத்துக்கு வரார். கூட்டிண்டு வர பாலாஜி போயிருக்கான். இப்பத்தான் நான் வந்து சொல்லி போறான். பாலாஜி கூட சந்தானம் தடியனும் போறான்.'
'அய்யர அழச்சிண்டு வர பாலத்தடிக்கு வில்லு வண்டி போகணுமுல்ல?'
'ஐடியா இல்ல. வர்ர நேரம் தெரியல. எப்படியும் மதியானத்துக்கு மேல ஆயிடும். பாலத்தடி வேண்டாம். பெரிய கோவில் வரைக்கும் தான கார் வரும். அங்கேந்து ஆம் வந்தா போதும். நாளைக்கு மதியத்துக்கு மேல எங்கேயும் போகாத.'
'சரி புள்ள. சந்தானம் தம்பி எப்படியும் வூட்டுக்கு வந்து என்ன கூப்புடும். பத்திரமா அய்யர வூட்டாண்ட கொண்டு சேக்கறது என் பொறுப்பு.'
'எப்படி போயிகிட்டு இருக்கு வேலையெல்லாம்.'
'நீயே பாரேன் புள்ள. கையில இருந்த இயற்கை உரம் எல்லாத்தையும் போட்டு உழுதாச்சு. தண்ணியும் பாச்சியாச்சு. நீ வந்து நல்ல நாளா பார்த்து வித தூவிட்டா போதும்.'
'நெல்லு மணி முதலியார் வாங்கி வெச்சிருப்பார் இல்ல?'
'நான் ஒரு வாட்டி கேட்டுட்டேன். நீயும் கேட்டுடு.'
'மாமா ஆத்துக்கு மொதல்ல வந்துடட்டும். முதலியார போய் பார்க்கறேன்'.
'பம்ப் செட் மோட்டாருக்கு எண்ணெயெல்லாம் இருக்கா. கண்டிஷன்ல பெல்ட் இருக்கா? எப்ப பார்த்த? நீயே பார். எவ்வளவு தூசு? தொடச்சுட்டு வூட்டுக்கு போ.'
பத்து வேலி நிலத்தையும் சுற்றி சுற்றி பார்க்கிறாள். வரப்பிலே இரண்டு மூன்று முட்கள் காலில் ஏறுகிறது.
'ஏன் தங்கச்சி, செருப்பு போட்டு கிட்டு வரலாமுல்ல?'
'உங்களுக்கு ஒரு சட்டம். எனக்கு ஒரு சட்டமா சிவலிங்கம்? யாராவது படியளக்கற பூமா தேவிய செருப்பு காலோட மிதிப்பாளா? முள்ளு உங்களுக்கு குத்தும்போது அத எடுத்து வரப்ப தாண்டி ஓரமா போடலாமோன்னோ? எங்க கேக்கறீங்க. சில சமயம் தூக்கி கிடாசி வயலுக்குள்ளேயே போடறீங்க. பீடி, சிகரட், வெத்தல, சீவல், புகையில, காசு வெச்சு ஆடு புலி ஆட்டம், சீட்டு கட்டு....இன்னும் என்ன பாக்கி இருக்கு சொல்லு? எல்லாருக்கும் நீ தான லீடர் ?'
'சரி கீதா, பயலுவ கிட்ட சொல்றேன்.'
'இந்த பத்து நாளும் பாலாஜி வந்து பாத்துதா நெலத்த?'
'பார்த்துது தங்கச்சி. பேச்சி தம்பிக்காக கூழ் எடுத்தாரும். சாப்ட்டுட்டு ஒரு மணி நேரம் இருந்துட்டுதான் போகும்.'
'சரி சிவலிங்கம். நான் கிளம்பறேன். எங்க அம்மா மன்னார் குடியிலேந்து வராங்களாம். நானும் அம்மாவப் பார்த்து ரொம்ப நாளாச்சு இல்லையா? கிளம்பறேன். அப்புறம் நாளைக்கு நீ தான் பார்த்துக்கணும். முடிஞ்சாதான் வருவேன் வயலுக்கு.'
'நல்லது புள்ள'
ஆத்துக்கு திரும்பும் வழியில் கண்ணில் பட்ட அக்ரஹாரத்தினரிடம் மாமாவின் உடல் நிலை மற்றும் டிஸ்சார்ஜ் பற்றி சுருக்கமாக சொல்லிக் கொண்டு வருகிறாள்.
தொடரும்.....
No comments:
Post a Comment