Saturday, December 4, 2021

உறவுபோட்டமுடிச்சு_50

உறவுபோட்டமுடிச்சு_50

ஒருபுறம் கீதாவின் ஆத்மார்த்த    சேவைகள் சபேஸய்யரை அதி விரைவில் குணப்படுத்திக் கொண்டிருந்தன.  மற்றொரு புறம் சபேஸய்யரின் அனுபவ பரிமாற்றங்கள் கீதாவை பலப்படுத்திக் கொண்டுருந்தன.

ஐந்தாறு நாட்களிலேயே சபேஸய்யர் தானாக நடக்க ஆரம்பிக்கிறார்.  மூச்சிரைப்பு வெகுவாக குறைந்து விட்டது.  இருமல் இல்லை.  சளி இல்லை.  தன் காலைக் கடன் களைத் தானே கவனித்துக் கொள்கிறார்.  சரியாக சொல்லவேண்டுமானால் டாக்டரின் ஒரு வார்த்தைக்காக அவருடைய டிஸ்சார்ஜ் காத்திருக்கிறது.

அந்த குறுகிய நாட்களிலேயே அந்த சானடோரியமே கீதாவை விரும்ப ஆரம்பித்து விட்டது.  'கீதா' 'கீதாக்கா' 'கீதாச் செல்லம்' 'வில்லேஜ் வீராங்கனை' 'பூவனூர் புலி'... இதில் ஏதாவது ஒன்றினால் யாராவது இவளை கூப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

கீதா மாமாவை முழு நேரமாக கவனித்துக் கொண்டதிலிருந்து பத்தாவது நாள்.  அன்று காலை மாமாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடைப்பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தாள்.  அங்கு வந்த டாக்டர் பசுபதி அதை சிறிது நேரம் வார்டுக்கு வாசலிலேயே நின்று கொண்டு கவனிக்கிறார்.

'எக்ஸலெண்ட் ராதா.'

'நான் ஒண்ணும் ராதா இல்ல.  கீதா.'

'சரி.  ஏதோ ஒரு 'தா'.  உங்க அங்கிள் கிட்டத்தட்ட நார்மலாகிட்டார்.  ரெண்டாவது ஸெட் ஆஃப் ரிப்போர்ட்ஸ்லேயும் டிஃபரென்ஸ் இல்ல.  நாளைக்கு டிஸ்ச்சார்ஜ் பண்ணிடலாம்.  ரெளண்ட்ஸ் முடிஞ்சோண்ண சொல்லி அனுப்பறேன்.  ஆத்துல எப்படி அவர கவனிச்சுக்கணும்னு சொல்லித் தரேன்.  உன் மேல இருக்கற நம்பிக்கைல தான் இந்த டிஸ்சார்ஜ்.  எங்களோட கேர் தர்ட்டி பர்ஸன்டுனா மீதி உன்னோட டெடிகேட்டட் கேர் தான் அவர கவனிச்சிண்டிருக்கு.'

'இனிமே தொற்றெல்லாம் இருக்காதே.'

'மோஸ்ட்லி .... எஸ்.  ஆனா  பீரியாடிகல் ரெவ்யூ அவசியம். அதோட சளி பிடிக்காம பார்த்துக்கணும்.  டில் ஐ ஸே, நோ தலைக் குளியல்.  பேர் பாடியோட அவர் இருக்கவே கூடாது.  ஏற்கனவே சொன்னேன் இல்லையா .... எ நெக்ளிஜிபிள் போர்ஷன் லங்கஸ்ல பாதிக்கப்பட்டிருக்கு.  ஆக்டிவிடிய  ஜாஸ்தி பண்ணிக்காம மூச்சுப் பயிற்சிய விடாம வேளா வேளைக்கு மருந்த சாட்டுண்டு இருந்தார்னா நத்திங் டு ஒர்ரி.  அதான் நீ இருக்கியே.'

'டாக்டர் நான் மன்னார்குடியில இருக்கேனே.  நானும் வேலைக்கெல்லாம் போகணுமே.'

சிரிக்கிறார் டாக்டர் பசுபதி.  

'ஆமாம்.... வேர் இஸ் தி லக்கி பாய்?  நைஸா உன் கிட்ட அப்பாவ தள்ளிட்டு கம்பி நீட்டிட்டானா பாலாஜி?

கீதாவிடமிருந்து பதில் வருவதற்குள் இன்னொரு பேஷண்டுக்கான அவசர வேலையில் கிளம்பி விடுகிறார் டாக்டர் பசுபதி.

கீதாவுக்கு பெருத்த சந்தோஷம். 'எஸ், ஐ டிட் இட்.  மாமா இஸ் ஃபைன்.  அடடா, டிஸ்சார்ஜுக்கு பணம் இல்லையே.  பாலாஜி வேற இல்லையே.  வேற வழியில்ல. மாமா கிட்ட சொல்லிட்டு பூவனூர் கிளம்பிட வேண்டியது தான்.  நான் அங்க போயிட்டு பாலாஜிய இங்க அனுப்பிச்சிடுவோம்.  இனிமே டிஸ்சார்ஜ் பண்ணி அழச்சிண்டு வர்ரது அவன் பாடு.'

மனசு முழுவதும் சந்தோஷ பூரிப்போடு மாமாவிடம் வருகிறாள்.

'மாமா.... கைய கொடுங்கோ.  நாளைக்கு நீங்க டிஸ்சார்ஜ்.  டாக்டர் சொல்லிட்டார்.'

'அப்படியா?'  மாமா ஆச்சர்யமாக கேட்கும்போதே முகத்தில் ஒரு அபரிமிதமான மகிழ்ச்சி.  பற்றிக் கொண்ட கீதாவின் கரத்தை கண்ணுக்கருகில் கொண்டு செல்கிறார்.  தன்னையும் அறியாமல் வரும் ஒரு த்தேங்கஸ் கிவிங்.

'மாமா.... என்ன இது?  நான் ஒண்ணும பண்ணல.  அப்படியே இருந்தாலும் என்னோட கடமை.  எத்தனையோ உங்களுக்கு செய்யணும்.  என்னோட சாமுண்டி கைவிடல்.'

'என் கல்யாணி அம்மனும் தான்.'

'சரி.  இருக்கட்டுமே.  என் சாமுண்டி சொல்லி உங்க கல்யாணி பக்கத்துல இருந்து கவனிச்சிண்டா.  போதுமா?'

'சரி சரி.... கோச்சிக்காத.  உன் சாமுண்டி தான்.  அதுவும் நீ கட்டி விட்டயே இந்த சாமுண்டி ரக்ஷை.  அது தான் உடம்ப நன்னாக்கித்து.'

'நாளைக்கு நீங்க டிஸ்சார்ஜோன்னோ.  மத்யானமா நான் பூவனூர் கிளம்பிப் போய் மாமிக்கு இந்த சந்தோஷமான சமாசாரத்த சொல்லிட்டு பாலாஜிய இங்க அனுப்பறேன்.  நீங்க இன்னிக்கு மாத்திரம் மத்யானத்துலேந்து தனியாதான் உங்கள கவனிச்சிக்கணும்.  ராத்திரிக்குள்ள பாலாஜி வந்துடுவான். டெய்ஸி கிட்டேயும் மீனாட்சி கிட்டேயும் சொல்லிட்டும் போறேன் உங்கள பார்த்துக்க சொல்லி.'

'சரிம்மா.  நான் ஜாக்ரதையா இருக்கேன்.  நீ போயிட்டு வா.  என்ன பத்தி கவலப் படாம சிளம்பு.'

ஹாஸ்பிடலில் எல்லோரிடத்தும் சொல்லி விட்டு கிளம்புகிறாள் பூவனூருக்கு.

ஆத்துக்குள் வருகிறாள்.  பாலாஜி இல்லை.  

'மாஆஆஆ....மீஈஈ..'

மாமி இவள் சந்தோஷ நடனத்தோடு கூடிய நடையைப் பார்த்து விட்டு சிரித்துக்கொண்டே சமயல் அறையிலிருந்து வருகிறாள்.

மாமியை அப்படியே கட்டிக்கொண்டு ஒரு அரை ஸர்கிள்.

ஏய்.... விடு .... விடு... வலிக்கறது டீ.  என்ன ஆச்சு உனக்கு?'

'இறுக்கத்தை தளர்த்தி விட்டு, 'மாமா நாளைக்கு டிஸ்சார்ஜ்..... டொட்டொடைண்....'

மாமியின் முகத்தில் சந்தோஷத்தோடு, 'ஏய் .... சித்த .... புரியும்படியா சொல்லு.'

'சொல்றேன் ... சொல்றேன்.  சர்க்கரைய உங்க வாயில போட்டுட்டு சொல்றேன்.  உங்க ஆத்துக்காரருக்கு நூறு வயசுன்னு டாக்டர் ஸர்டிஃபிகேட்டோட நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்றேன்னு செல்லிட்டா.  இப்ப சந்தோஷமா?  எங்க உங்க செல்ல புத்திரன்?'

'ஒரு பட்டாளம் வந்து ரேடியோ கேட்டுண்டிருந்தவன அழிச்சாட்டியம் பண்ணி அழச்சிண்டு போச்சு. பக்கத்தாத்து மணி ஆத்துல கேரம் போர்டு ஆடறத்துக்குன்னு பேசிண்டுதுக.  அது இருக்கட்டும்.  அவர தனியா விட்டுட்டு வந்துட்டியே இப்படி?'

'மாமாக்கு இப்ப யார் உதவியும் வேண்டாம்.  மாமாகிட்ட சொல்லிட்டுதான் வந்திருக்கேன்.  ஆத்துக்கு போய் மாமிகிட்ட சொல்லிட்டு பாலாஜிய கையோட அனுப்பறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன் மாமி.'

'எல்லாம் கல்யாணி அம்மன் அனுக்ரஹம் தான்.'

'சரி மாமி.  பயணத்துல டயர்டா இருக்கு மாமி.  ஒரு காப்பி கிடைக்குமா உங்க கையால?'

'அதுக்குள்ள மொகத்த அலம்பி தலைய வாரிக்கோ.  ராப்பிச்சை காரியாட்டம் இருக்க நீ இப்போ. கண்ணாடில போய் பாரு.  நான் சொல்லவே வேண்டாம்.'

கண்ணாடியில் மாமி சொன்னது சரியாக இருக்கிறது.  கை கால்கள் அலம்பி முகத்தில் தண்ணீரை விட்டு குளிர்ச்சியாக்கி அங்கிருந்த டர்க்கி டவலை எடுத்து ஒத்தி ஒத்தி ஈரத்தை எடுக்கிறாள்.

அந்த டர்க்கி டவல் ஏற்கனவே சற்று ஈரமாகவே இருந்தது.  'பாலாஜி குளிச்சிட்டு சித்த முன்னாடி ஒணத்தியிருப்பானோ?'

காப்பிக்காக வெயிட்டிங்.  பாலாஜி வருகிறான்.

'வாட் எ ஸர்ப்ரைஸ் கீதா!  என்ன திடும்னு?'

'பாலாஜி .... அப்பா நாளைக்கு டிஸ்சார்ஜ்.'

'இஸ் இட்?  க்ரேட் கீதா.  யாரோ சொன்னா நீ வந்துருக்கேன்னு.  ஐ டிடின்ட் பிலீவ்.'

பத்து நாட்களாக மாமாவின் முன்னேற்றங்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறாள் இடையில் வந்த காப்பியை சுவைத்துக் கொண்டு.

'அஞ்சு மணிக்குள்ள கிளம்பு.  கையில பணம் இருக்கோன்னோ?  ஹெல்ப்புக்கு தடியன கூப்ட்டுக்கோ.'

'அப்பறம் கீதா.  மன்னார்குடி போயிருந்தேன்.  அநேகமா அத்தை இன்னிக்கு சாயந்திரமா பூவனூர் வரேன்னு சொல்லியிருக்கா.'

'சாதாரணமா தான பேசினே?'

'நம்பிக்கை இல்லயா என் மேல?'

'அப்படி இல்ல பாலாஜி.  வாய் தவறி கூட இந்த சமயத்துல நம்ம பேச்சு வந்துடக் கூடாது.'

'டோண்ட் ஒர்ரி மை டியர் ஹனி'

'அய்யே... அசடு வழியறது.'

'ஏய்... உனக்கும்தான்.  தொடச்சுக்கோ.'

தொடரும்.....

No comments:

Post a Comment