உறவுபோட்டமுடிச்சு_49
மாமாவுடன் சேர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து விட்டு, 'மாமா அந்தாத்து வரைக்கும் போயிட்டு ஒண்ணு ரெண்டு துணிமணிகள தோச்சு காயப் போட்டுட்டு வந்துட்டுமா? நாளைக்கு கார்த்தாலக்குள்ள காத்துல காஞ்சிருக்கும். டெய்ஸி ஸிஸ்டர் கிட்ட சொல்லிட்டு போறேன் உங்கள நான் வர வரைக்கும் பார்த்துக்க சொல்லி.'
சொல்லிவிட்டு பாலாஜி தங்கியிருந்த தணிகாசலம் வீட்டிற்கு வருகிறாள். உள்ளே நுழையும்போதே பாலாஜி நினைவுகள்.
'நான் உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா?'
அன்று அவன் இப்படி ஆரம்பத்திலிருந்து நினைவுகள் ரீவைண்ட் ஆகிறது.
'அன்னிக்கு எனக்கு என்ன ஆச்சு?'
அன்றைய தினம் கிடைக்காத பதில் இன்று கிடைத்து விடுமா என்ன? பருவத்தின் மயக்கத்திற்கும் வெட்கத்திற்கும் காரணங்கள் யாரிடம்தான் இருந்தன?
அன்று அவனுக்கு முதுகைக் காட்டி திரும்பி நின்று கொண்டு தடுமாறியதை நினைத்து சிரிப்பு.
சித்திரத் தூணை ஒரு கையால் , கெட்டியாக பிடித்து தொங்கிக் கொண்டு ஒரு சுற்று சுற்றுகிறாள்.
தனிமையில் செய்யும் காதல் ஸ சேஷ்டைகளுக்கும் ஒரு சுகம் உண்டு. அது வெட்கத்தையையும் கொடுக்கும் வேதனையையும் கொடுக்கும். அர்த்தமுள்ள நினைவுகளுக்கு அர்த்தமற்ற சிரிப்புகளும் சாக்ஷியாக இருக்கும்.
'மாமா தனியா இருப்பாளே?'
'அதான் டெய்ஸி இருப்பாளே.'
பருவத் தனிமையை ரசித்துக் கொண்டிருக்கும் போது மாமா குறுக்கே வந்தால் இந்த பதில் தான் கொஞ்ச நேரத்திற்கு.
'மாமி.... நீங்க மாத்திரம் ஊம் சொல்லாம இருங்கோ..நான் பொல்லாதவளா ஆகறேனா இல்லையா பாருங்கோ?'
சிந்தனைகளின் குறுக்கே மாமாதான் வரணுமா என்ன? வந்த மாமிக்கு மனசால ஒரு டோஸ் கொடுத்து ஒரு சிரிப்பு.
'தனிமையிலே இனிமை காண முடியுமா?....'
ஹம்மிங்கோடு கிணத்தடியில் துணிகளைத் தோய்த்து கொடியில் தொங்கவிட்டு பாலாஜி படுக்கும் கட்டிலில் உட்காருகிறாள்.
எதிரே உள்ள ஹேங்கரில் பாலாஜியுடைய பச்சை கலர் சட்டை தொங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ அவனே எதிரில் நிற்பதைப் போன்று ஒரு நினைப்பு.
'இந்த பச்ச சட்டைல நீ எடுப்பா இருக்க பாலாஜி. லுக்கிங் ஸ்மார்ட்.'
இல்லாத பாலாஜியுடன் ஒரு ஸ்பரிஸம் உணர்வோடு. தடுக்க யார் இருக்கிறார்கள்?
உணர்வுகள் உச்ச சந்தோஷங்களைக் கொடுத்துக் கொண்டுருந்தாலும் யாரும் அதே நிலையை தொடர முடியாதே. திரும்பவும் ஸ்பெஷல் வார்டுக்கு வருகிறாள்.
'கொஞ்சம் வார்டு பாயை கூப்படறீயா கீதா. கொல்லப் பக்கம் போணும் போல இருக்கு.'
ஏற்பாடு செய்துவிட்டு ரிஸப்ஷனில் உட்காருகிறாள்.
'எப்படியும் இருபது நிமிஷமாவது ஆகும் மாமாவுக்கு?'
மாமா சிந்தனைகள் இப்போது. நேற்று அவளுக்கு மாமா சொன்ன அறிவுரைகளோடு துவக்குகிறாள்.
'என்னமோ மாமா சொன்னாரே? லேண்ட் ஸீலிங் பத்தி? ஏதோ உழைக்கறவாளுக்கு நெலம் சொந்தம்னு சட்டம் அது இதுன்னு பேச்சு வாக்குல சொன்னாரே. ஏதோ அதிகாரிகள் இவர் முகத்துக்காக ஃபைல கையில எடுக்கலைனு. அப்படின்னா மாமா நெலத்துக்கு ஏதாவது பிரச்சனையா?'
'சட்டம்னா பேப்பர்லலாம் விலாவாரியா வந்துருக்குமே? ஆஆஆமாம்... எனக்கு ஏதாவது இண்டரெஸ்ட் இருந்திருந்தா தான ஆர்வமா படிச்சிருப்பேன்? மாமாவுக்கு கொஞ்சம் தெம்பு வந்தேண்ண கேட்டு தெரிஞ்சுக்கலாம்.'
'அவா நன்னா இருக்கா இவா நன்னா இருக்காத்து சொல்றோமே தவிர அவாவாளுக்குன்னு ஆயிரம் பிரச்சனை இருக்கு. பாலாஜி படிக்கணும், பாஸ் பண்ணனும், நல்ல உத்யோகத்துல உட்காரணும், நெலப் பிரச்சனை, உடம்பு பிரச்சனை, போதாக் கொறைக்கு எங்க பிரச்சன.... மாமா பாடு நம்ம கஷ்டங்கள விட ஜாஸ்தி மாதிரி தெரியறதே.'
'மாமா ஏன் பெரியப்பாவ நான் பார்த்து வேலை வாங்கிக்கறதுல குறியா இருக்கா? பெரியம்மா எங்கள அவமானப் படுத்தறதையும் புரிஞ்சிருக்கா. அப்படி இருந்தும் ஏன் என்ன போய் அவா கிட்ட போய் கெஞ்சி வேலை வாங்கிக்க சொல்றா? அதான் புரியல.'
யோசித்துக் கொண்டிருக்கும் போதே வார்டு பாய் வருகிறான்.
'அக்கா, ஐயா உங்கள கூப்டறாங்க.'
வார்டுக்குள் வருகிறாள். மாமா கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்.
'கீதா.... நீ.... சாப்டியா?'
'உங்களுக்கு பசிக்கறதா மாமா? எனக்கு சித்த நாழி போலாம்?'
'அப்ப சரி... சித்த பொறுத்து .... ஒண்ணாவே .... சாப்படலாம். கீதா இன்னிக்கு ... உன்னோட பேசிண்டிருந்ததுல .... நேரம் போனதே .... தெரியல.'
'எனக்கும்தான் மாமா.'
'எனக்கு என்னமோ ..... இனிமே பூவனூர்ல ..... இருக்க முடியுமான்னு ...... சந்தேகமா இருக்கு.'
'ஏன் மாமா இப்படி சொல்றேள்?'
'நான் கொஞ்ச நாழி ..... முன்னாடி ..... ஒரு சட்டத்த பத்தி..... சொன்னேனேன்னோ ? அதப் பத்திதான்.... இத்தனை நாழி .... யோசிச்சிண்டு இருந்தேன். அது படி .... பதினஞ்சு ஏக்கராக்கு ...... மேல ...... விவசாயம்...... பண்ண முடியாது ... போல இருக்கு. அதுக்கு மேல .... உள்ள .... நிலத்த...அரசாங்கத்துக்கு ......
திருப்பி கொடுக்கனுமாம்... நம்ம கிட்டேந்து ..... வாங்கி ..... ஏழை விவசாயிகளுக்கு.....பிரிச்சு.... அவா ..... கொடுப்பாளாம்.'
'ஏன் மாமா? இத கோர்டுல கேஸ போட்டு எதுக்க முடியாதா?'
'சட்டமா வந்துட்டதால...... கோர்ட்டுக்கு போனா...... ஜெயிக்காதுன்னு தான் ... தோணறது. விளச்சல் அப்போ ..... போயிண்டிருந்ததால ..... நாங்கள்லாம் ...... சேர்ந்து அதிகாரிகள் ...... நடவடிக்கை எடுக்காம ...... பார்த்துண்டிருக்கோம்.'
பிறகு அந்த சட்டத்தைப் பற்றி விவரித்து கூறுகிறார் பெரும் சிரமத்துடன்.
மாமா சொன்னவற்றை கேட்டு மலைத்தே போனாள் கீதா.
'இது தான் காரணமா. என்னை வெச்சாவது இந்த தடவையும் நிலத்த சும்மா போடாம விவசாயம் பார்க்கணும்னு நெனச்சது?'
எவ்வளவோ கேள்விகள் அவள் மனதில் எழுகிறது.
'மாமா எல்லாக் கவலைகளையும் போட்டுண்டு தேறிண்டு வர உடம்பையும் கெடுத்துக்கப் போறா?'
இப்படி நினைத்தவுடன் கீதாவால் அவரோடு தொடர மனம் வரவில்லை.
'மாமா. ஒண்ணும் ஆகாது மாமா உங்க நெலத்துக்கு. அமைதியா இருங்கோ. டிஸ்சார்ஜ் ஆனோண்ண ஒவ்வெண்ணா பார்க்கலாம். உங்க ஃப்ரெண்ட் முதலியாருக்கும் உங்கள மாதிரி பிரச்சனை இருக்குமோன்னோ? அவர் கிட்டயேயும் பேசி முடிவு பண்ணலாம் மாமா.'
நல்ல வேளை அப்போது வார்டுக்கு நைட் ஷிஃப்ட் ஸிஸ்டர் கலைச் செல்வி நுழைகிறாள்.
'பேஷண்ட் சாப்டுட்டாரா? ஊசி போடணும். சாப்டோன்ன சொல்றீங்களா?'
சொல்லிவிட்டு நர்ஸ் கிளம்பியவுடன் மாமாவின் சாப்பாட்டுககான ஏற்பாடுகளை துவங்குகிறாள்.
தொடரும்...
No comments:
Post a Comment