"கடவுளின் குரல்" - உம்மாச்சிதாத்தா
08 /07 /2020 குமுதம் இதழிலிருந்து..
"பாலாஜியை தரிசிக்கச் சொன்ன பரமாசார்யா!""
மகாபெரியவரின் பரமபக்தர்களுள் ஒருவரான லக்ஷ்மணன் என்பவர், ஒருசமயம் மகானை தரிசிக்க மனைவியுடன் புறப்பட்டார். அவர்கள் சென்றபோது ஆந்திராவில் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார் மகான். அவரை தரிசித்துவிட்டு, அன்று இரவு ஊர் திரும்பிவிடுவதாக அவரது திட்டம்.
ஆனால் ஆந்திரா சென்று மகானை அவர் தரிசித்தபோது, கொஞ்சமும் எதிர்பாராத விதமாக, "நீ இன்னும் ரெண்டு மூணு நாள் இங்கேயே தங்கி இரு. நான் உத்தரவு தந்ததும் புறப்படலாம்!" என்றார் மகாபெரியவா. பிரமாசார்யாரின் உத்தரவை மீறி பதில் பேச முடியுமா? மடத்தின் முகாமிலேயே தங்கினார்கள் அந்தத் தம்பதியர்.
இரண்டு மூன்று நான்கு என்று நாட்கள் நகர்ந்ததே தவிர, மகான் உத்தரவு தரவே இல்லை. இவர்களோ அணிந்து வந்திருந்த துணிக்கு மாற்றுத் துணிகூட இல்லாத நிலையில் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அவர்களை அழைத்தார் மகான்.
"இன்னைக்கு சாயங்காலமா புறப்படுங்கோ...!" சொன்ன மகான், "அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்! இங்கேயிருந்து நேரா உங்க ஊருக்குப் போக வேண்டாம். திருப்பதிக்குப் போய் ஆனந்தமா பாலாஜியை தரிசனம் பண்ணிட்டுப் போங்கோ!" என்று சொல்லி ஆசிர்வதிக்க, திடுக்கிட்டுப் போனார் லக்ஷ்மணன். காரணம், அப்போதெல்லாம், திட்டமிட்டுத் திருப்பதி சென்றாலே பெருமாளை தரிசிக்க வரிசையில் நாள் கணக்காக காத்திருக்க வேண்டும். அதனாலேயே தன் மனைவி பலமுறை திருப்பதி செல்ல வேண்டும் என்று கேட்டபோதும் அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார் அவர். இப்படி திடீரென்று போனால், சொல்லவே வேண்டாம்! என்ன செய்வது? ஆனாலும் மகான் ஆணையைத் தட்ட முடியாமல், திருப்பதிக்குச் சென்றார்கள் அவர்கள். அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
ஏதோ ஒரு காரணத்தால் ஆந்திரா முழுக்க வாகன ஓட்டுநர்கள் ஸ்ட்ரைக் செய்ததில், கீழ்த்திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி செல்ல வாகனங்களே ஓடவில்லை. அதோடு, இரவு நேரம் நெருங்கிவிட்டதால், நடந்து மலை ஏறுபவர்களும் இல்லை.
திரும்பிச் செல்லலாம் என்றாலோ பேருந்துகள் அனைத்துமே ஸ்ட்ரைக் ஓடாது என்று சொல்லி விட்டார்கள். அந்த ராத்திரி நேரத்தில் என்ன செய்வது? எங்கே போவது? என்று புரியாமல் தவித்தார்கள் அவர்கள். நேரம் ஆக ஆக பக்தர் பரிதவிக்க, அவரது டென்ஷனைத் தவிர்க்கும் விதமாக, அவர் மனைவி, "நம்மை பெருமாள் தரிசனம் செய்யச் சொன்னவர் பெரியவா. அவரே இதுக்கும் வழி செய்வார்! நீங்க பதட்டப்படாதீங்க!" என்று சொல்லவும் அவர்கள் அருகே ஒரு கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
காரில் இருந்தவர்கள், "பெருமாளை தரிசிக்க வந்தீர்களா? பஸ் எதுவும் கிடையாதே...இந்த நேரத்தில் என்ன செய்வீர்கள்? சரி, எங்களோடு வாருங்கள்!" என்று அழைக்க பரமசந்தோஷத்தோடு புறப்பட்டார்கள், லக்ஷ்மணனும் அவர் மனைவியும். காரில் வந்தவர்கள், தேவஸ்தானத்தில் ஏதோ பொறுப்பில் இருப்பவரின் உறவினர்கள் என்பதால், அவர்களோடு சென்ற இவர்களுக்கும் விசேஷ தரிசனம் கிடைத்தது.
பேருந்து ஸ்ட்ரைக் காரணமாக கூட்டமும் குறைவாகவே இருந்ததால், அவசரமும் ஜருகண்டியும் இல்லாமல், வேங்கடவன் முன் சில நிமிடங்கள் நிற்கவும் முடிந்தது. அப்போது "பகவானை ஆனந்தமா தரிசனம் பண்ணிக்குங்கோ!" என்று பட்டாச்சாரியார் சொன்ன வார்த்தை பரமாசார்யாளின் குரலாகவே அவர்களுக்குக் கேட்டது.
திருப்பதி செல்ல வேண்டும் என்ற தன் மனைவியின் பலகால ஏக்கத்தைத் தீர்க்கவே, தங்களை முகாமிலேயே தங்க வைத்து மகான் இப்படி ஒரு லீலையை நிகழ்த்தியிருக்கிறார் என்பதும் புரிந்தது அவருக்கு.
ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
No comments:
Post a Comment